– ஸ்ரீநிவாஸ் பிரபு

மாவட்ட ஆட்சியாளரின் அலுவலக வளாகத்தின் முதல் மாடியில் இருந்த கூட்ட அரங்கம் முழுவதுமாய் குளிரூட்டப்பட்டிருந்தது. அதையும் மீறி அசோக் ராஜனுக்கு வியர்த்தது. அவன் நினைத்தது ஒன்று நடந்தது ஒன்றாக இருந்தது.
வருவாய்த்துறை சார்பாக டி.ஆர்.ஓ. நடத்திய சிறப்புக் கூட்டம். அதில் டி.ஆர்.ஓ. எழுப்பிய கேள்விக்கு அசோக்ராஜன் அருகில் அமர்ந்திருந்த நண்பன் தியாகு பிரமாதமாய் சொன்னப் பதில் கேட்டு, உணர்ச்சி வசப்பட்டு ‘சபாஷ்‘ என்று கைதட்டி விட்டான் அவ்வளவுதான்.
கூட்டத்தில் கலந்துக் கொண்ட அனைவரும் பேசாமல் அமைதியாய் இருந்தபோது அசோக்ராஜன் மட்டும் கைதட்டியது டி.ஆர்.ஓ.க்கு பெருத்த கோபத்தை ஏற்படுத்தியது. கையில் வைத்திருந்த பேனாவை கீழே போட்ட படி, “யாரு… யாரு கைதட்டினது? இது என்ன பொலிட்டிக்கல் மீட்டிங்கா, இல்லை ஹியூமர் க்ளப்பா? என்ன நினைச்சிட்டிருக்கீங்க?” என்றார் கடுமையான குரலில். சூழ்நிலையையே தலை கீழாய் மாறிப்போனது போலிருந்தது.
அசோக் ராஜன் வியர்த்துப் போனான். சூழ்நிலையின் இறுக்கம் இயல்பாகும் என்று எண்ணி கைதட்டியது தவறாகிப்போனது. பெரிய தப்பு பண்ணிட்டோம் என்று உள்ளுக்குள் புழுங்கினான். ஏற்கனவே அமைதியாக இருந்த சபை இப்போது மரண அமைதியானது. இரண்டு மூன்று பெண்கள் தலை குனிந்தபடி சத்தமில்லாமல் சிரித்தார்கள். எல்லோரும் அசோக் ராஜனையே குறுகுறுப்பாக பார்த்தார்கள். அது யூ டேபிளிலில் நடுநாயமாய் அமர்ந்திருந்த டி.ஆர்.ஓ.க்கு அசோக்ராஜன் அமர்ந்திருந்த பகுதியை அடையாளம் காட்டியது.
“யாரு… யாரு கைதட்டினது?” என்றார் டி.ஆர்.ஓ. மீண்டும்.
அசோக் ராஜன் நடுக்கத்தோடு எழுந்து நின்றான். “ஏன்யா இது ஹை லெவல் மீட்டிங் தெரியுமில்ல? கை தட்டி விசில் அடிக்கிற?”
“இ….இ…. இல்லைங்கய்யா…, தியாகு சொன்னது?”
“தியாகு சொன்னா கை தட்டீடுவீங்களா? இதோ தாமஸ் சொன்னா டான்ஸ் ஆடுவீங்களா? இந்தம்மா சொன்னா குட்டி கரணம் போடுவீங்களா?”
அசோக் ராஜன் தலை குனிந்தபடி பேசாமல் நின்றான்.
“நான் கேள்வி கேட்கறேன், அவர் பதில் சொல்றாரு, இடையில ஆமோதிக்க நீங்க யாருங்க? அப்படின்னா நான் எதுக்கு இங்க உட்கார்ந்திருக்கறேன்? வாங்களேன் வந்து என் சீட்ல வந்து உட்காருங்க…. நீங்க மீட்டிங்க நடத்துங்க. ஹை லெவல் மீட்டிங்னா சீரியஸா இருக்கணுங்க…. விளையாட்டு எல்லாம் ஆபீசுக்கு வெளியில புரியுதா?”
“புரியுதுங்க….” என்று சொல்லாமல் தலையசைத்தான்
“எவ்வளவு ப்ரஷரோட வேலை பார்க்கறோம்? இந்த மீட்டிங்கோட மினிட்ஸ்ஸ சாயந்திரம் மூணு மணிக்குள்ள செக்ரடேரியட்டுக்கு ஈமெயில் அனுப்பனும். இடையில கைதட்டி ஆரவாரம் செஞ்சா என்ன அர்த்தம். இதையும் மினிட்ஸ் ஆப் த மீட்டிங்ல ரெக்கார்டு பண்ணிடவா… சொல்லுங்க”
“சாரிங் சார்”
“ஆமா இத ஒன்னை கத்து வெச்சுக்கங்க… ஆன்னா ஊன்னா சாரி, சாரி, வாங்குற சம்பளத்துக்கு பொறுப்பா வேலை பாருங்க. சந்தக்கடையாட்டம் நடந்துக்காதிங்க”
“மன்னிச்சுக்குங்க சார்”
“நீங்க….. எலந்தமேடு தானே?” என்றார்.
“ஆமாங்கய்யா”
“இப்படி விளையாட்டுத்தனமா நடந்துக்கிறதா இருந்தா, வராதீங்க. சார்ஜஸ் போட்டாத்தான் திருந்துவீங்க, இவரோட பி.டி.ஓ. யாரு?”
“சார்” என்றபடி கைதூக்கி எழுந்து நின்றார் உமாகாந்தன்.
அசோக் ராஜன் உடனடியாக பணிவாக, “சார் வெரி சாரி சார், வெரி சாரி சார், இனிமே இப்படி நடக்காது சார், தெரியாம பண்ணீட்டேன் சார், பெரிய மனசு பண்ணி மன்னிச்சிடுங்க ப்ளீஸ் சார்…. ப்ளீஸ் சார்..” என்றான் தழுதழுத்த குரலில் கை குவித்தபடி.
டி.ஆர்.ஓ. எதுவோ பேச வந்துப் பேசாமல் இருந்தார். தன் டேபிள் மீதிருந்த கண்ணாடி டம்ளரின் மூடியை நீங்கி தண்ணீரைக் குடித்தார். சற்று சாய்ந்து அமர்ந்து, ஆழமாய் பார்த்துவிட்டு, நின்றுக் கொண்டிருந்த அசோக் ராஜனையும், பி.டி.ஓ. உமாகாந்தனையும் கைகளை அசைத்து அமரச் சொன்னார். அப்போதும் இருவரும் நின்று கொண்டே இருக்க, “சிட் டவுன்‘ என்றார் கோபமாக.
நாற்காலிகள் சப்தமிட உட்கார்ந்தார்கள்.
மீட்டிங் முடியும் வரை அசோக் ராஜன் ஒரு வார்த்தை பேசவில்லை.
அசோக் ராஜனுக்கு வீட்டிற்கு போக மனமே வரவில்லை.
மாவட்ட ஆட்சியாளர் அலுவலக வளாகத்தின் பக்கவாட்டில் இருந்த மரங்களுக்கு இடையே போடப்பட்டிருந்த சிமெண்ட் பெஞ்சில் அமர்ந்திருந்தான்.
மரத்தில் சப்தமிட்டபடி இருந்தது பறவைகள். கீச்சுக் குரலில் பேசிய பறவைகளைப் பார்த்தப்போது, ஒரு பறவை இன்னொரு பறவையைத் திட்டுவது போலவே இருந்தது.
ஒரு காய்ந்த இலையை எடுத்து உருட்டிக் கொண்டே, இதுவரை யார் யார் எல்லாம் தன்னை திட்டியிருக்கிறார்கள் என்று யோசித்தான்.
யோசனை விதவிதமாய் விரிந்து பல முகங்களைக் காட்டியது.
யோசனையை அறுப்பது போல், மொபைல் Priya Pappa Calling… என்று ஒலித்தது. அதை உயிர்பித்து, “சொல்லு கண்ணு, முதல் நாள் காலேஜ் எப்படி இருந்திச்சு?” என்றான் தளர்வான குரலில் சாய்ந்து அமர்ந்தபடி.
“சூப்பருங்கப்பா… காலேஜ்ல எல்லா பிள்ளைகளும் நல்லா ஃப்ரெண்டா பழகறாங்கப்பா…. ரெண்டு மேடம் வந்தாங்க, என்னை எந்த ஸ்கூலு, என்ன மார்க்குன்னு எல்லாம் கேட்டாங்க. போல்டா பேசறே ப்ரியான்னு சொன்னாங்கப்பா”
“குட், அப்படித்தான் பேசணும்”
“என்னப்பா உடம்பு சரியில்லையா? ஏன் குரலு ஒரு மாதிரி இருக்கு?”
ப்ரியா கேட்டதும் அசோக் ராஜனுக்கு அழுகை வருவது போலிருந்தது. அம்மாவைப் போலவே இருக்கிறாள் மகள். குரலில் சிறு பிசிறு தென்பட்டாலும், இப்படித்தான் அம்மா உடனே என்ன சரியில்லையா தம்பி என்பாள். அம்மாவுக்கு பின் மகள் கேட்கிறாள்.
“அதெல்லாம் ஒண்ணு இல்லை கண்ணு” என்றான் முகத்தைத் துடைத்துக் கொண்டபடி
“பின்ன ஏன் டல் அடிக்கறிங்க? ஆபீஸ்ல ஒர்க் ஒவரா? வீட்டுக்கு கிளம்பலையா?”
அசோக் ராஜனுக்கு மனதை அழுத்திக் கொண்டிருக்கும் பாரத்தை சொல்லவா வேண்டாமா என்று இருந்தது. யாரிடமாவது சொன்னால் பாரத்தை இறக்கி வைத்தது போலிருக்கும் என்று பட்டது.
“அது ஒண்ணுமில்ல பாப்பா, இன்னிக்கு ஆபீஸ்ல ஒரு சின்ன பிரச்சனை, அதுல அப்பாவ ஆபீஸர் வெஞ்சு போட்டாரு. அதான் கிளம்பாம உட்கார்ந்திருக்கறேன்”
“ஏன்?”
நடந்ததை ஒப்பித்தான்
“கைதட்டி சிரிச்சதுக்கெல்லாமா திட்டுவாங்க?”
“கவர்மெண்ட் ஆஃபீஸ்னாலே அப்படித்தான் கண்ணு”
“உண்மையா நடந்துக்க கூடாதாங்கப்பா? உணர்ச்சிகளை ரியலா காட்டக்கூடாதா?” என்றாள்.
அசோக் ராஜனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“அம்மா வீட்ல இல்லையா?”
“இருக்காங்க. இப்பத்தான் கோயிலுக்கு போயிட்டு வந்தாங்க. இதோ தர்றேன். அம்மா அப்பா லைன்ல” என்றபடி அம்மாவிடம் தந்தாள்.
“பேசறத கேட்டேங்க. இதுக்கெல்லாமா மருகுவாக? விடுங்க நடந்தது நடந்துப் போச்சு. பேசாம எல்லாத்தையும் மறந்திட்டு வீட்டுக்கு கிளம்பி வாங்க. தண்ணி பருப்பு கடைஞ்சு, வரக்கொத்துமல்லி துவையல் செஞ்சிருக்கேன். சாப்பிட்டுட்டு நல்லா ரெஸ்ட் எடுங்க… எல்லாம் சரியா போயிடும், காலைல ப்ரெஷா ஆகிடுவீங்க வாங்க” என்றாள் மனைவி ராணி.
“ம்ம்ம்…” என்றபடி செல்லை அணைக்க எடுத்தவன், நேரத்தைப் பார்த்து சற்று நிறுத்தினான்.
மறுமுனையில் செல் தொடர்பு அறுபடாமல் தொடர்பின் துடிப்பு ஓடிக் கொண்டே இருந்தது.
‘எத்தனை முறை சொன்னாலும் இவ கேட்கவே மாட்டா பெரிய மகாராணி’ என்று மனதுள் சொல்லியபடி மொபைலை காதில் வைத்தான்
“பாவம்மா அப்பா… ஆபீஸ்ல ரொம்ப டென்ஷனாயிருக்காரு, டல்லா பேசறார்” என்று ப்ரியா, ராணியிடம் சொல்வது கேட்டது. அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்று கேட்கத்துவங்கினான்.
ராணி சொல்லிச் சொன்னாள், “ம்ம்… நீதான் மெச்சிக்கணும். உனக்கு உங்கப்பாவைப் பத்தி தெரியாது. வீட்ல தனியா இருக்கும்போது என்னை என்ன பேச்சு பேசறாரு தெரியுமா? வாய்க்கு வந்ததுதான் வார்த்தை. நான் ஏதாவது தெரியாம செஞ்சுட்டாலோ, பேசிட்டாலோ காது கொண்டு கேட்க முடியாதமாதிரி திட்டு திட்டுறாரு. கல்யாணம் ஆனதிலிருந்து ஒரு நாள் கூட என்னை அவரு திட்டாம இருந்ததே இல்லை. இன்னிக்கு அவரைத் திட்ட ஒருத்தரு வந்திருக்கிறாருல்ல… திட்டினா பதில் பேச முடியாதமாணிக்கு, அவர் ஆபீஸ்ல ஒருத்தர் இருக்காருல்ல? பெரிய அதிகாரிங்ககிட்ட ஏச்சும் பேச்சும் வாங்கினாத்தான், எதுத்துப் பேச முடியாம வீட்ல இருக்கிற பொம்பளைங்க மனசு என்னப் பாடு படுங்கிறது புரியும். அவரு வீட்டுக்கு வரட்டும், அவரை எப்படி சமாதானப்படுத்தறதுன்னு எனக்குத் தெரியும்” என்று ராணி பொங்கியபடி சொன்னது தெளிவாகக் கேட்டது.
எழுந்துச் செல்ல மனமில்லாதவனாக அசோக் ராஜன், ராணியிடம் மானசீகமாய் மன்னிப்புக் கேட்டபடி மொபைலையே பார்த்துக் கொண்டிருந்தான்.
– கதைப் படிக்கலாம் – 77
இதையும் படியுங்கள் : கூத்து…. என் குலத்தொழில்