மிதிவண்டி…

– சிவராம மதுசூதன்

பொன்னூர் என்ற கிராமத்தில் ஆறுமுகம் என்று ஒருவர் இருந்தார். அவர் தன் மனைவி மற்றும் மகள் ஆகியோருடன் அந்த கிராமத்தில் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் ஏழை.

சில வருஷங்கள் முன்பு சொந்தமாக நிலம் வைத்து விவசாயம் பார்த்து வந்தவர், ஆறுமுகம். வானம் பார்த்த பூமி என்பதால் நிறைய விவசாயக் கடன்,  ஒரு கட்டத்தில் வாங்கிய கடனை கட்ட முடியாததாலும், விவசாயம் செழிப்பில்லாததாலும், வாங்கிய கடனுக்காக தன் நிலத்தை விற்று கடனை அடைத்தார், ஆறுமுகம்.

ஆறுமுகத்திற்கு விவசாயத்தை தவிர வேறு எந்த வேலையும் தெரியாது.

அதனால், ஆறுமுகம் எப்போதும், எந்த நேரத்திலும், கிடைத்த வேலை செய்யும் ஒரு கூலி தொழிலாளியாக, தன் வாழ்க்கையை நடத்தி கொண்டு இருந்தார். ஆனால் அந்த வேலையை செய்ய, தினமும் கிராமத்தில் இருந்து  பதினைந்து கிலோமீட்டர் அடுத்து உள்ள டவுன்க்கு  நடந்தே செல்வார், ஆறுமுகம். அவர் காலில் செருப்பு இல்லாமல் நடப்பார்.

ஆறுமுகத்திற்கு வாழ்க்கையில் இவ்வளவு கஷ்டம் இருந்தாலும்,  அவருக்கு ஆறுதலாக இருப்பது,  வள்ளியம்மை. ஆம், ஆறுமுகத்தின் மகள் தான் அவள். பொன்னூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில்,  ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள். வள்ளியம்மைக்கு அப்பா ஆறுமுகம் என்றாள் கொள்ளப்பிரியம். தினந்தோறும் ஆறுமுகம் இரவு நேரத்தில் வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வரும்வரை, தூங்காமல் அம்மாவுடன்  காத்துக் கொண்டு இருப்பாள், வள்ளியம்மை.

கலைப்புடன் வரும் ஆறுமுகத்திற்கு, வள்ளியம்மையை பார்த்தவுடன்  அவருக்குள் ஒரு புதிய ஆற்றல் பிறக்கும். சற்று நேரத்தில் அந்த கலைப்பு பறந்து செல்லும்.

ஆறுமுகம் மகள் வள்ளியம்மையை தூக்கிக் கொண்டு வீட்டிற்குள் நுழைந்தார்.

அப்பா இன்னைக்கு எங்க பள்ளிக்கூடத்துல என்று, தன் பள்ளியில் அன்று நடந்த நிகழ்வுகளை பட்டியலிட்டாள், வள்ளியம்மை.

தன் மகளின் அழகிய பேச்சாலும் அழகான சிரிப்பாலும் மெய் மறந்து போனார் ஆறுமுகம்.

ஒவ்வொரு அப்பாவிற்கும் தன் மகள் தானே இந்த உலகின் பேரழகி?!

இப்படி அப்பா, மகள் இருவரும் பேசிக் கொண்டு இருந்ததால்  நேரம் வேகமாக கடந்தது.

ஆறுமுகம் மனைவி மாரியம்மாளை அழைத்து, உணவு எடுத்துக் வைக்குமாறு சொல்ல, மூவரும் இணைந்து சாப்பிட்டனர்.

சாப்பிட்டு கொண்டிருக்கையில் வள்ளியம்மை, அப்பாவின் மடியில் தூங்கிவிட்டாள். அவளை தலையணைக் கொண்டு தூங்க வைத்து விட்டு, இருவரும் தூங்கினர்.

நேரம் இரவு பொழுதைக் கடந்துச் சென்றது.

நள்ளிரவில் மாரியம்மாள் அரைத் தூக்கத்தில், தன் பக்கத்தில் இருந்த கணவனைக் காணவில்லை என்று விழித்தாள். கணவன் ஆறுமுகம் வாசலில் உட்கார்ந்து கொண்டு இருந்தார்.

ஆறுமுகம் அருகில் சென்று, என்னங்க, நடுசாமத்துல இப்படி திண்ணையில உட்கார்ந்து இருக்கீங்க, வாங்க, உள்ள வந்து படுங்க என்று அழைத்தாள் மாரியம்மாள்.

நீ தூங்கு, எனக்கு தூக்கம் வரல, என்றார் ஆறுமுகம். 

வாங்க என்று கூறி, ஆறுமுகத்தின் முன் போய் நின்று, முகத்தை பார்த்தாள் மாரியம்மாள்.

ஆறுமுகத்தின் கண்கள் கலங்கி இருந்தன, அதைப் பார்த்து மாரியம்மாள் பதறியப்படி, என்னங்க என்னாச்சு? என்று கேள்வி எழுப்பினாள்.

ஒன்றுமில்ல என்றார் ஆறுமுகம்.

ஆறுமுகத்தின் அந்த பதில், மாரியம்மாளுக்கு மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியது.

அப்போது, மாரியம்மாள் ஆறுமுகத்தின் கால்களைப் பார்த்தாள்.

ஆறுமுகத்தின் கால்களில், புண்களும் வெட்டுகளும் இருந்தன. புண்களில் இருந்து இரத்தம் சிந்தியது. அதைப் பார்த்ததும், தன்னை அறியாமல் மாரியம்மாள் கண்களில் கண்ணீர் வழிந்தது.

என்னங்க, உங்களுக்கு இரண்டு கால்களிலும் இப்படி புண்களும், வெட்டுகளும் இருக்கு. இதையா எங்கிட்ட இருந்து மறைச்சீங்க என்றாள், மாரியம்மாள்.

கால் புண்களினால் பாதிக்கப்பட்டது என்று உனக்குத் தெரிந்தால், நீ கஷ்டபடுவ, அதான் உன்கிட்ட சொல்லல என்று, அழுதவாறு சொன்னார் ஆறுமுகம்.

சரி அழாதிங்க, நான் போய் உங்களுக்கு மருந்து எடுத்துட்டு வர்றேன் என்றாள் மாரியம்மாள்.

புண்களுக்கு மருந்து போட்டவாறு ஆறுமுகத்திடம் பேசினாள்.

நீங்களும் எத்தனை நாளைக்கு தான் இப்படி நடந்து வேலைக்கு போய்ட்டு வருவீங்க. அதுவும் பதினைந்து கிலோமீட்டர். யார்கிட்டயாவது ஒரு பழைய சைக்கிள் இருந்தா வாங்கிக்க வேண்டியதுதானே? என்றாள் மாரியம்மாள்

நான் வாங்குற சம்பளமே நம்ம குடும்பத்துக்கு, வள்ளியம்மை படிப்பு, வேற கடனுக்குனு சரியாப் போகுது. இதுல செருப்பு கூட வாங்க முடியாது. இதுல எங்க நான் சைக்கிள் வாங்குறது? என்றார்.

என் தலையில தான் கடவுள் இப்படி எழுதிட்டாரு. எல்லாம் தலை எழுத்து படிதானே நடக்கும், என்று வேதனையுடன் கூறிக்கொண்டு, திண்னையில் படுத்துவிட்டார் ஆறுமுகம்.

மருந்தை‌ எடுத்துக்கொண்டு உள்ளே சென்று தூங்கினாள், மாரியம்மாள்.

தனது பெற்றோர்கள் பேசியதை கேட்டுக் கொண்டபடி படுத்திருந்தாள், வள்ளியம்மை. தன் அப்பாவின் கஷ்டத்தைக் கேட்டு கண் கலங்கினாள், அப்பாவி சிறுமி. அந்த நொடியில் அவளது தூக்கம் கலைந்தது 

இரவுப் பொழுது முழுவதும், தன் அப்பா புண்களால் படும் வேதனையையும், கஷ்டங்களையும் நினைத்து அழுதுக்கொண்டே இருந்தாள் வள்ளியம்மை.

பொழுது விடிந்ததும், மறுநாள் காலையில் பள்ளிக்கு செல்லும் வழியில், இரவு தன் வீட்டில் நடந்த நிகழ்வுகள் அவ்வபோது நினைவுக்கு வந்தது. அந்த நிகழ்வால், வள்ளியம்மை கண்கள் தன்னை அறியாமல் கலங்கியது.

அப்பா கால்ல புண் இருக்குறதால வேலைக்கு போக ரொம்ப கஷ்டபடுறாங்க. அப்பாவோட இந்த கஷ்டத்தைப் போக்கனும் என்று முடிவு செய்தாள், வள்ளியம்மை.

அவளது நல்ல நேரம். அன்று வகுப்பில் ஒரு அறிவிப்பு வந்தது. அதில் அடுத்த வாரம், பக்கத்து ஊரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், மாணவர்களுக்கு ஒரு போட்டி நடைபெறுகிறது. அந்தப் போட்டியில் வெற்றி பெறும் போட்டியாளர்களுக்கு பரிசுகள் உண்டு. போட்டியில் கலந்து கொள்ள ஆர்வமாக இருப்பவர்கள், பெயர்களை ஆசிரியரிடம் கொடுங்கள் என்றார், தலைமை ஆசிரியர்.

தலைமை ஆசிரியர் சொல்வதைக் கேட்ட வள்ளியம்மை, டீச்சர் என்ன பரிசு கொடுப்பாங்க? என்று கேட்டாள். உடனே மாணவர்கள் அனைவரும் கலகலவென சிரித்தனர். 

உடனே தலைமை ஆசிரியர், வள்ளியம்மையை தனியாக அழைத்து பேசினார். தன் வீட்டில் நடந்த நிகழ்வுகளை தலைமை ஆசிரியரிடம் சொன்னாள்.

டீச்சர், போட்டியில் வெற்றி பெற்றா, சைக்கிள் பரிசாக கிடைக்குமா?  என்றெல்லாம் கேட்டாள்.

சைக்கிள் கிடைச்சா எங்க அப்பா வேலைக்கு போவாங்க என்றாள்.

டீச்சர், கட்டுரைப் போட்டியில் என் பெயரை சேர்த்து கொள்ளுங்கள் என்று, தன் பெயரை ஆசிரியரிடம் சொன்னாள் வள்ளியம்மை.

நாட்கள் கடந்தன. போட்டி நடக்கும் பள்ளிக்கு, போட்டியில் கலந்து கொள்பவர்கள் அனைவரும் சென்றார்கள். இவர்களைப் போல் அனைத்து பள்ளிகளிலும் இருந்து மாணவர்கள் வந்தனர்.

வள்ளியம்மைக்கு மனதில் ஒரு அச்சம் ஏற்பட்டது. இருந்தாலும், அப்பாவிற்காக போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. போட்டிகள் ஆரம்பமாகின. ஒவ்வொரு மாணவர்களுக்கும், ஒவ்வொரு தலைப்புகள் கொடுக்கப்பட்டது.

வள்ளியம்மைக்கு ஒரு தலைப்பு கொடுத்தார்கள். அதில், இயற்கை வளங்கள் பற்றிய தலைப்பு. அனைவரும் தலைப்பிற்கு ஏற்றவாறு எழுத ஆரம்பித்தார்கள். போட்டிகளும் முடிவுக்கு வந்தன. வள்ளியம்மை இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொண்டாள். எப்படியாவது போட்டியில் வெற்றி பெற்ற வேண்டும் என்பதே, அந்த பிராத்தனையாகும்.

போட்டி முடிவுகள், மாலை அறிவித்தார்கள். போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் உண்டு. முதல் இரண்டு இடங்களை வென்ற மாணவர்களுக்கு விலையுயர்ந்த பரிசுப் பொருட்கள் உள்ளன.

இரண்டாம் பரிசு:  கைக்கடிகாரம்

முதல் பரிசு: சைக்கிள் என்று அறிவித்தார்கள்.

மாணவர்கள் பெயர் பட்டியலை வாசிக்க, ஒவ்வொரு மாணவர்களும் பரிசைப் பெற்றுக்கொண்டார்கள்.

மொத்தம் நாற்பது வெற்றியாளர்கள். வள்ளியம்மை, எப்படியாவது அந்த முதல் பரிசு பெற வேண்டும் என்று, கடவுளிடம் வேண்டினாள்.

முதல் மற்றும் இரண்டாம் பரிசுக்கானப் பெயரை வாசிக்க, அந்த முதல் பரிசு, வேறு பள்ளி மாணவி தட்டிச் சென்றாள்.

வள்ளியம்மைக்கு முகம் வாடியது. அவள் அழ ஆரம்பித்தாள். இதை கண்ட தலைமை ஆசிரியர், வள்ளியம்மையை சமாதானம் செய்தார். இரண்டாம் பரிசு பெற்றுக்கொண்டு பள்ளிக்கு திரும்பினாள். மறுநாள் காலையில் பள்ளிக்கு சென்றாள் வள்ளியம்மை.

தலைமை ஆசிரியர், பள்ளியில் உள்ள மாணவர்கள் முன் வள்ளியம்மையை பாராட்டி, அவளுக்குக் கிடைக்காமல் போன, முதல் பரிசான சைக்கிளை, பள்ளி மாணவர்கள் முன் கொடுத்தார், தலைமை ஆசிரியர். தனக்குப் பாராட்டும், பரிசும் கிடைத்தது என்பதைவிட, தன் அப்பாவிற்கு சைக்கிள் கிடைத்தது என்று எண்ணி, பேரானந்தம் அடைந்தாள் வள்ளியம்மை.

கதைப் படிக்கலாம் – 2

இதையும் படியுங்கள்கங்கை எந்தன் கண்ணுக்குள்!

Exit mobile version