அப்பா

– ரா. கனிகா

காலை நேரம்…. கனிமொழி, அப்பா… அப்பா… என்றபடி ஓடி வந்தாள்.  தோட்டத்தில் களையெடுத்துக்கொண்டிருந்த அப்பா, என்ன பாப்பா? இவ்வளவு வேகமாக ஓடி வர? கனிமொழி சற்று மூச்சு வாங்கி நின்றபின், அப்பா… அப்பா… சீக்கிரமா வாங்க… அக்காவும், மாமாவும் வந்திருப்பதாக கூறி அப்பாவை இழுத்துச் சென்றாள். 

அப்பா வீட்டிற்குள் நுழைந்ததும் வந்தவர்களை முகமலர்ச்சியுடன் வரவேற்றார். பிறகு அம்மாவை அவர்களுக்கு டீ எடுத்து வர சொன்னார். அக்கா கீதா, அவள் எடுத்து வந்திருந்த பையிலிருந்து அப்பாவுக்கு வேட்டி மற்றும் சட்டையும், அம்மாவுக்கு புடவை, கனிமொழிக்கு ஒரு அழகான உடையும், ஒரு பேனாவும் பரிசளித்தாள்.

அப்பா… உனக்கு ஏன் கீதா வீண் சிரமம்?  என்றார். அப்பா நான் உங்களுக்கும், அம்மாவுக்கும், அப்புறம் என் செல்ல தங்கை கனிமொழிக்காகவும்… நான் வாங்கித் தராமல் வேறு யார் வாங்கித்தர முடியும் என்று கனிமொழியுடன் செல்லமாக விளையாடிக்கொண்டே கூறினாள். கனிமொழி, மாமா சந்துருவிடம் சென்று, மாமா பாப்பாவை அழைத்து வரவில்லையா? என்று ஆசையாகக் கேட்டாள்.

அதற்கு சந்துரு, இல்லை பாப்பா. அவள் பாட்டியுடன் சென்றுவிட்டதால் அழைத்து வர இயலவில்லை என்றார். கனிமொழி ஏமாற்றத்துடன் சோர்ந்துப் போனாள்.

அதைக் கவனித்த அக்கா, கவலைப்படாதே… மாலை நாம் இருவரும் சென்று பாப்பாவை அழைத்து வரலாம் என்று கூறினாள்.

அம்மா, இருவரும் இரண்டு நாட்கள் இங்கு தங்கிச் செல்லுமாறு அன்புக் கட்டளையிட்டாள். அம்மாவின் சொல்லுக்கு இருவரும் சம்மதம் தெரிவித்தனர்.

ஆனால் சந்துரு, அத்தை எனக்கு உப்பு தொழிற்சாலையில் கொஞ்சம் வேலை இருக்கு. அதனால் நான் கீதாவை மட்டும் இங்கு விட்டுச் செல்கிறேன். நீங்கள் என்னை தப்பாக ஏதும் நினைத்துவிட வேண்டாம் என வருத்ததுடன் கூறினார்.

பரவாயில்லை மாப்பிள்ளை… என்று அவரின் வேலை பளுவை புரிந்துக்கொண்டாள். பிறகு அனைவருக்கும் காலை உணவு தயாரானது. சந்துருவுக்கு அத்தை சமையலென்றால் மிகவும் இஷ்டம். அதனால், தன்னை மறந்து ரசித்து சாப்பிட்டுக் கொண்டிருந்தான். அனைவரும் அதைக் கண்டு மகிழ்ந்தனர்.

உணவு முடித்துவிட்டு கூடி குழுவாக அமர்ந்து பேசிக் கொண்டிருக்கையில்… கீதா, என்னப்பா வந்ததிலிருந்து அண்ணனும், அண்ணியும் கண்ணில் படவே இல்லையே? அச்சச்சோ அண்ணனுக்கும், அண்ணிக்கும் நான் புத்தாடை எடுத்து வரவில்லையே, என்னிடம் கோபித்துக்கொள்ளப் போறாங்க என்று அப்பாவிடம் புலம்பித் தள்ளினாள்.

அப்போது டக்…. டக் என்று கதவை தட்டும் சத்தம் கேட்டது. கனிமொழி சென்று பார்த்தாள். வெளியில் மளிகை பொருட்களை சுமந்தபடி அண்ணன் கிருஷ்ணணும், அண்ணி உமாவும் நின்றுக் கொண்டிருந்தனர். வாங்கி வந்தப் பொருட்களை அப்பா வாங்கிக்கொண்டு சமையலறையில் வைத்தார்.

இருவரும் கை, கால்களை கழுவிவிட்டு வீட்டிற்குள் வந்ததும், தங்கையும், அவள் கணவரும் வந்திருப்பதை அறிந்தக் கிருஷ்ணன், எப்போது வந்தீங்க கீதா என்று விசாரித்தான். காலையில் தான் அண்ணா வந்தோம் என்றாள் கீதா. அண்ணா நாங்கள் உனக்கும், அண்ணிக்கும் புதுத்தாடை எடுத்து வரவில்லை. என்னை மன்னித்து விடு அண்ணா என்று சோகமாக தன் வருத்தத்தை தெரிவித்தாள். கிருஷ்ணன் பரவாயில்லை மா என்று சமாதானம் செய்தான்.

கிருஷ்ணனும், உமாவும் உணவு முடித்துவிட்டு, அவர்களுடன் சென்று குழுவில் இணைந்துக் கொண்டனர். அப்போது உமா, கீதாவிடம்… கீதா, நாம் இப்படி மகிழ்ச்சியாக ஒன்றாக அமர்ந்து உரையாடுதல் எவ்வளவு மகிழ்ச்சியாக உள்ளது என்றாள். ஆமாம் அண்ணி, அதேப்போல் நாம் ஒரு சுற்றுலா போய் வந்தால் நன்றாக இருக்கும் என்றாள்.

உமா உடனடியாக கிருஷ்ணனிடம் சென்று… ஏங்க, கீதா சொல்வது போல், நாம் அனைவரும் ஒரு சுற்றுலா போய் வந்தால் நன்றாக தானே இருக்கும், போவோமா? என்றாள். அப்போது சந்துரு குறுக்கிட்டு நானும் வரலாமா? என்று கிண்டலாக கேட்டான். நீங்க இல்லாமலா என்றாள் உமா. இவர்கள் சுற்றுலா பற்றி பேசிக்கொண்டிருப்பதை கேட்டுக்கொண்டிருந்த அம்மா, நாம் எல்லாரும் குடும்பச் சுற்றுலா செல்ல லாரியைத் தான் எடுக்கணும் என்று காமெடியாக கூறினார்.

இப்படி அனைவரும் சந்தோஷமான ஒரு உரையாடலோடு போய் கொண்டிருந்தது. அப்போது சந்துருவிற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. தொலைபேசியின் மறுமுனையில் பேசியது சந்துருவின் உப்பு உலர்த்தும் சிறு தொழிற்சாலையில் பணிபுரியும் வேலையாள் தான்…

அண்ணா உப்பை உலர்த்த போடப்பட்டிருந்த இடத்தில், பயங்கரமாக காற்றடித்ததில் மேலிருந்த கூரை பறந்து போய்விட்டது. எப்படியும் அதைச் சரி செய்ய இரண்டு வாரங்கள் ஆகும் போல என்றான். அதற்குள் மழை வந்தால் உப்பு எல்லாம் கரைந்து வீணாகிவிடும். அதற்குப் பின் ஒரு மாதம் நமக்கு வியாபாரம் நின்றுப்போகும் நிலை வந்திடும்… பெரும் நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகும்… அதனால் இப்போதைக்கு மழை வரக் கூடாதுனு வேண்டிக்கோங்க என்று தன் கவலையை கொட்டிவிட்டு தொலைபேசியை துண்டித்தான்.

இதைக் கேட்ட சந்துரு ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உரைந்து விட்டான். பிறகு சோகத்துடன் வீட்டிலிருந்தவர்களிடம் நடந்ததை கூறினான். அனைவரும் மழை வரக்கூடாதுனு வேண்டிக்கோங்க என்று தன் வருத்தத்தை வெளிப்படுத்தினான். கீதா சந்துருவை சமாதானம் பண்ண முயற்சித்தாள். கிருஷ்ணன், உமாவை பார்த்தான். உமா மிகவும் சோகத்துடன் காணப்பட்டாள்.

அதைக் கவனித்த அப்பா, கீதா மற்றும் சந்துருவை விட கவலை உங்களிடம் தெரிகிறதே… என்ன விஷயம் என்று விசாரித்தார்.

அதற்கு கிருஷ்ணன், அப்பா நான் உங்களிடம் ஒரு விஷயத்தை மறைத்து விட்டேன், நான் விவசாயம் செய்து வருவது உங்களுக்கு தெரியும் தானே. இரண்டு வாரங்களுக்கு முன்பு நானும், உமாவும் நம் விவசாய நிலத்தில் பயிர்களை நட்டு வைத்தோம். ஆனால் ஆற்றிலும் நீர் இல்லை, மழையும் பெய்யவில்லை. அதனால் பயிர்கள் இன்னும் முளைக்காமல் இருக்கிறது. இன்னும் இரண்டு வாரங்களில் மழை மட்டும் வரவில்லையென்றால் பயிர்கள் அனைத்தும் வீணாகிவிடும். அதனால் நமக்குக் கடனாக பணத்தை கொடுத்தவர்களுக்கு அந்த பணத்தைத் திருப்பி தர முடியாமல் போய்விடும். பிறகு அவர் நம் வீட்டை அபகரித்துக் கொள்வார்கள் என்று கலங்கியபடி நிலவரத்தைக் கூறினான். 

என்னிடம் இதை முதலிலேயே ஏன் தெரிவிக்கவில்லை என்று அப்பா கோபமடைந்தார். இல்லை அப்பா நீங்கள் இதை நினைத்து வருத்தமடைவீர்கள் என்று தான் மறைத்து விட்டேன் என்றான்.  இங்கு நடப்பதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த அம்மா, ஏன் கடவுளே எங்களுக்கு மட்டும் இப்படி சோதனைகள், நாங்கள் உனக்கு என்ன துரோகம் செய்தோம் என சுவரில் சாய்ந்தபடி அழுதுக் கொண்டிருந்தாள்.

அப்போது அப்பா ஆழ்ந்த சிந்தனையில் முழ்கிப் போனார். ஒரு பக்கம் மாப்பிள்ளைக்கு மழை வந்தால் ஆபத்து… ஆனால், மகனுக்கு மழை வர வேண்டும்… என்னதான் செய்வது? என்று யோசித்தபடி அமைதியாக அமர்ந்திருந்தார்.

இப்படியாக சிறிது நேரம் சென்ற பிறகு ஒரு முடிவு கிடைத்தது போல் தெளிவு பெற்றவர், வருத்தத்துடன் குழப்பத்தில் ஆழ்ந்த நால்வரையும் அப்பா வெளியே அழைத்துச் சென்றார்.

அப்பா என்ன கூறியிருப்பார் சொல்லுங்கள்……

சரி நானே சொல்கிறேன். நால்வரையும் அழைத்து சென்று அப்பா, மிகவும் கவனமாக கேளுங்கள். மாப்பிள்ளை நினைத்தபடி மழை பொழியாவிட்டால் என்று தொடங்கும் முன்பு, கிருஷ்ணன் அவசரத்தில் கோபடைந்து அப்பா என்று கத்திவிட்டான்.  பொறுமையாக நான் சொல்வதை கேள் என்று அப்பா தொடர்ந்தார்,

நான்கு பேரும் அப்பாவின் பதிலுக்கு காத்திருந்தனர். அப்பா மாப்பிள்ளையின் முகத்தை பார்த்தப்படி, நீங்கள் நினைத்தபடி மழை பொழியாவிட்டால், உங்களுக்கு கிடைக்கும் லாபத்தை கிருஷ்ணனிடம் பகிர்ந்துக் கொள்ளுங்கள். மழை பொழிந்து கிருஷ்ணனின் விவசாயத்தில் லாபம் கிடைத்தால் உங்களிடம் பகிர்ந்துக்கொள்வான், என்று கூறிவிட்டு… என்ன சரிதானே என கிருஷ்ணனிடம் அப்பா கேட்ட போது, சரி அப்பா… நான் நிச்சயம் பகிர்ந்துக்கொள்வேன் என்று தன் சம்மதத்தை தெரிவித்தான். 

அனைவரும் அப்பாவின் இந்த யோசனைக்கு ஒப்புதல் தெரிவித்தனர். இரண்டு வாரங்கள் கடந்ததும், நல்ல மழை. அதனால் கிருஷ்ணனின் விவசாயத்தால் அதிக லாபம் பெற்றான். அதைக்கொண்டு அவனின் கடனை அடைத்தது போக, அப்பா கூறியபடி மாப்பிள்ளையிடம் தன் லாபத்தை பகிர்ந்துக் கொண்டான். 

அப்பாவின் யோசனையின்படி அனைவரும் நடந்துக்கொண்டதால் திரும்பவும் மகிழ்ச்சி அவர்களிடம் நிறைந்தது. எல்லாம் சரியான மகிழ்ச்சியில், கீதாவின் ஆசைப்படி அனைவரும் குடும்பச் சுற்றுலாவுக்குச் சென்றனர்.

– கதைப் படிக்கலாம் – 97

இதையும் படியுங்கள் : நீரில் கரையும் பூக்கள்

Exit mobile version