தரிசனம்…

– எழில்மொழி

“பத்தரை மணிக்குள்ள அர்ச்சகர் வரச் சொன்னாரு… இப்ப புறப்பட்டா சரியா இருக்குங்க…” என்று சொன்ன செல்வி தயாராக இருந்தாள். அவளுக்குக் கோயிலுக்குப் போவது என்றாலே ஏதோ ஒரு புத்துணர்ச்சி வந்துவிடுகிறது. பளிச்சென்றிருந்த அவள் முகத்துக்கு பளபளக்கும் நீளமான பொட்டு கச்சிதமாய் அழகாய் இருந்தது. அடிக்கடி உதட்டு ஓரத்தில் கசியும் புன்னகையும், கன்னச் சுழிப்பும், வானத்தையே பெயர்த்து எடுத்து ஒட்ட வைத்துக்கொண்ட மாதிரி நீலவண்ணத்தில் சிறுசிறு பூக்கள் இறைத்த புடவையும்…

“நான் இன்னும் தயாராகலயே…” என்றேன். உடன் புறப்பட முடியும் என்று தோன்றவில்லை. இன்று மாலைக்குள் கல்யாண மண்டபத்துக்கு ரெண்டு லோடு தண்ணீர் குப்பிகளை அனுப்பியாக வேண்டும். ஆனால் தண்ணீரின் சுவை எனக்கு திருப்தியாக இல்லை. கொஞ்சம் உப்பு இருப்பதுp போலவே நாக்கு சொல்கிறது.

“இந்த தண்ணிய கொஞ்சம் குடிச்சுப் பாரேன்…” என்றேன் செல்வியிடம்.

“கொஞ்சம் ‘சப்’ புன்னு இருக்குங்க… சுவையில்ல…” அப்படியானால் வடிகட்டும் இடத்தில் ஏதோ குறையிருக்க வேண்டும். பத்து பேருக்கு மேல் வேலை செய்துக் கொண்டிருந்தனர். தினமும் ஆயிரம் குப்பிகளாவது தண்ணீர் நிரப்பியாக வேண்டும். அப்போதுதான் மின்சாரம், இவர்களின் சம்பளம் இவற்றை ஈடு செய்ய முடியும்.

ஆயிரம் குப்பிகள் சுவையான தண்ணீர் தயாரிக்க ஐயாயிரம் குப்பிகள் தண்ணீரை நிலத்திலிருந்து உறிஞ்ச வேண்டுமாய் இருக்கிறது. மீதியாகும் உப்புநிறைந்த நாலாயிரம் குப்பி தண்ணீரை இன்னொரு இடத்தில் பெரிதாய் தொட்டி கட்டி, மீண்டும் மண்ணுக்குள் போகச்செய்து, மீண்டும் உறிஞ்சி, ஏதோ… போய்க் கொண்டிருக்கிறது தொழில். ஆனால் தண்ணீரின் சுவை கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து வருவதை உணர முடிகிறது. மழைத் தண்ணீரை சேகரிக்கும் தொட்டியும் பெரிதாய் இருக்கிறது. ஆனாலும்….

“அண்ணே… இந்த ஃபில்டர்ல தண்ணி வர்ற வேகம் குறையுது .” அதை சரி செய்வதற்குள் அரைமணி கடந்திருந்தது.

“போலாங்களா…” என்றாள் மீண்டும் செல்வி.

“இன்னொரு நாள் போலாமே… செல்வி… இன்னிக்கு ரெண்டு லோடு அனுப்பியாகனும்…”

“இன்னிக்கே போனாதாங்க… பரவால்ல… கெளம்புங்க…” என்றபடி நாட்காட்டியைப் பார்த்தாள் செல்வி. அதில் ஏதோ ஒரு குறி இட்டிருந்தது. முக்கியமான நாளாக இருக்க வேண்டும்.

தண்ணிரை விற்பது உடன்பாடாய் இல்லை. வேறு ஏதாவது தொழிலுக்கு மாறிவிடலாம் என்பது அடிக்கடி மனதில் தோன்றி மறைகிறது.

“சரியா வர்லண்ணே… மோட்டார்ல ஏதோ பிரச்சனை போல…”

மீண்டும் அதே இடத்தில் பிரச்சனை. பத்தாவதுக்குப் பிறகு படித்த படிப்பு மோட்டார் பற்றியது. இந்தப் படிப்பு இன்று வரை தொழிலில் ஏற்படும் எந்திரம் தொடர்பான வேலைகள் அனைத்தையும் நானே பார்த்துக்கொள்ள பெரிதும் உதவுகிறது.

உடன் சரி செய்தே ஆக வேண்டும். இல்லாவிட்டால் மாலைக்குள் கல்யாண மண்டபத்துக்கு தண்ணீர் குப்பிகளை அனுப்ப முடியாது. ஒரு முறை சரியாக அனுப்பாவிட்டால், அடுத்தமுறை வேறு ஆள் கைக்கு ஆர்டர் போய்விடும்.

செல்வியின் முகத்தில் சலனமேதும் இல்லை. மோட்டார் கிட்டத்தட்ட இருபது அடிக்குக் கீழே இருந்தது. மேல் சட்டையையும், கால் சட்டையையும் கழற்றி விட்டு, “ரெண்டு பேரால மேல இழுக்க முடியாதுண்ணே…” இன்னும் ரெண்டு பேராக சேர்ந்து மேலே இழுக்க… வர மறுத்தது. எங்காவது இடையில் கல் மாட்டியிருக்க வேண்டும். கொஞ்ச நேரப் போராட்டத்துக்குப் பிறகு மேலே வந்த மோட்டாரை பிரிக்க… உள்ளே இருக்கும் அதன் அமைப்பு, மனதுக்குள் வரைபடமாய் ஓடிற்று.

அதற்குக் காரணம் பி.டி… சார்… தான். பழனித்தங்கம் என்ற அவரின் முழுமையான பெயர் அதிகமாய் நினைவுக்கு வருவதில்லை. மற்றபடி பி.டி… சார்… என்பது நினைவில் வராத நாள் இல்லை.

டிப்ளமோ படிக்கும் போது மோட்டாரின் அமைப்பும், சீராக்கமும் அவரால் கற்றுத்தரப்பட்டது. மாதம் ஒருமுறை, இழுக்கும், உறிஞ்சும், தள்ளும், சுத்தமாக்கும் எல்லா எந்திரங்களின் மோட்டார்களையும் நானே செலவின்றிப் பராமரிக்க முடிவதே இத்தொழிலின் ஆதாரம். எந்த ஒரு மோட்டாரின் அமைப்பையும் சில நிமிடங்களில் கரும்பலகையில் வரைந்து பி.டி… சாரால் விளக்க முடியும். அவர் வரைந்தப் படத்தை கரும்பலகையில் இருந்து அழிக்கவே மனம் வராது. எப்போதும் வண்ணச் சுண்ணக் கட்டிகளை பயன்படுத்தி படம் வரைவது பி.டி… சாரின் பழக்கம். அந்த வண்ணங்களும் மனதில் ஆணி அடித்தாற் போல் இருக்கின்றன.

அரைமணியில் முடியும் என்று நினைத்த வேலை, ஒரு மணிக்கும் மேல் ஆயிற்று. அதன் பின்னர் மோட்டாரின் இயக்கம் சீராய் தெளிவாய் இருந்தது.

“போலாமா…” என்றேன் செல்வியின் மௌனம் அவளின் கோபத்தை உணர்த்திற்று.

சின்னதாய் ஒரு குன்றின் மேல் கோயில் அமைந்திருந்தது. கொஞ்சம் படிக்கட்டுகளில் ஏற வேண்டி இருந்தது. அதிகமாய் ரயில்கள் வராத ரயில்நிலையம் ஒன்று குன்றை ஒட்டியிருந்தது. எங்கோ தொலைதூரமாய்ப் போக வேண்டிய சரக்கு ரயில் ஒன்று சோம்பலாய்ப் போய்க் கொண்டிருக்க…

அதைப் பார்த்தபடியே படி ஏறிக் கொண்டிருந்தோம். மணி பத்தரைக்கு மேல் இருக்கும். மெதுவாய் சுழன்ற காற்று செல்வியின் கூந்தலை சிலுப்பிக் கொண்டிருந்தது. அதிலிருந்து வழிந்த வியர்வைத் துளியொன்று அவளின் நுனிமூக்கில் வழிய…

“கோவமா…” என்றேன்.

“இல்ல…” என்ற செல்வியின் தொனியில் நிறைய கோபம் இருந்தது. முகூர்த்த நாள் என்பதால் கோயிலில் கூட்டம் அதிகமிருந்தது. மண்டபத்தைக் கடந்து கருவறைக்குள் நுழைந்தோம்.

“ஏன் லேட்டாயிடுத்து…? நா ஒம்பதரைக்குள்ள வரச் சொன்னேனே.”

“இல்ல சாமி… கொஞ்சம் வேல…”

“பரவால்ல விடுங்கோ… இன்னும் கொஞ்ச நாழில இன்னோர் அபிஷேகம் இருக்கு… அதோட சேத்து செஞ்சிடலாம்…”

“அர்ச்சனையெல்லாம் யாரு பேருக்கு…?”

“வழக்கம் போல பெருமாள் பேருக்கே செஞ்சிடுங்க… சாமி…” செல்விக்கும் அர்ச்சகருக்கும் இடையிலான உரையாடலில் நான் மௌனமாய் இருந்தேன்.

சங்கு அவ்வப்போது ஒலிக்க, சேகண்டி ஒலித்தப்படியே இருந்தது. சீரான, பிசிறற்ற வெண்கல ஓசை மனதை சுண்டிற்று. மெல்லக் கண்மூடித் திறந்தேன். கூட்டம் மிக அதிகமாய் இருந்தது. புதிதாய் திருமணம் செய்துக் கொண்டு, நிறைய பேர் வந்திருந்தனர்.

இது போல ஒரு முகூர்த்த நாளில் சில வருடங்களுக்கு முன் செல்வியைக் கைபிடித்த வேளை நினைவிலாடிற்று. அன்று செல்வி அணிந்திருந்த புதுப்புடவையின் வாசனை இன்னும் நாசியில் இருக்கிறது. அப்போது பி.டி. சாரும் வந்திருந்தார். காலில் விழப்போன என்னை தடுத்து நிறுத்தி, கை குலுக்கி, “நல்லா இரு…” என்றதும் நினைவிலாடிற்று. நன்றாகவே இருக்கிறேன்.

ஆயினும் தண்ணீர் விற்பதில் மனம் கூசுகிறது. விதை நெல்லை விற்பது போல், தண்ணீர் குப்பிகளை நிரப்பும்போது குப்பிகளோடு சேர்த்து மனமும் கனத்துப் போகிறது. மாதம் ஒருமுறை பெருமாளின் தரிசனத்துக்கு வந்து, பெருமாளின் மேல் தண்ணீரும், இளநீரும், சந்தனமும், பன்னீரும் ஊற்ற ஊற்ற பெரிய துளையிட்டு, பெரிய குழாய் வைத்து உறிஞ்சி விற்ற நீரையெல்லாம், மீண்டும் பூமியின் மடியில் ஊற்றிய நிறைவு.

ஆனால் அது சில மணி நேரம்தான். மீண்டும் தண்ணீரைக் குப்பிகளில் அடைக்கும் தருணங்களில் மனம் கனத்துப் போகிறது.

எங்களோடு சேர்த்து அபிஷேகம் செய்யக் கொடுத்தவர்கள் தூரத்தில் இருந்து வந்திருக்க வேண்டும். நிறைய பேர் வந்திருந்தார்கள். அவர்கள் உள்ளே பெருமாளுக்கு மிக அருகில் அமர்ந்துக் கொள்ள…

“நாம இங்கயே உக்காரலாம்…” என்றாள் செல்வி. நின்ற இடத்திலேயே நாங்கள் அமர்ந்துக் கொண்டோம். இடையில் சாமி கும்பிட வந்தவர்கள் வரிசைப் போய்க் கொண்டிருந்தது. உட்கார்ந்திருந்த எனக்கு முன்னால் போய்க் கொண்டிருந்தவர்களின் கால்களைத் தவிர வேறு எதுவும் தெரியவில்லை.

வழக்கமாய் கோயிலுக்குள் நுழைந்ததும், கருடனின் மேல் அமர்ந்திருக்கும் ஊர்வலம் போகும் பெருமாளும், அதன் பின்னர் கருவறைப் பெருமாளின் வெவ்வேறு கோலங்களிலான காட்சியும், அதன் பின்னர் நீராட்டும்…..

இன்று எதுவும் தெரியவில்லை. மனம் தத்தளித்தது. என்னை விட செல்வியின் முகத்தில் அதிகத் தவிப்பிருந்தது. திடீரென வரிசை நகராது நின்று போயிற்று. சங்கும், சேகண்டியும் கலந்து ஒலிக்க….

“எழுந்துக்கலாமாங்க…” என்றாள் செல்வி. எழமுடியாது கும்பல் தடுத்தது.

“அபிஷேகம் ஆரம்பிச்சறலாமா?” என்றக் குரலோடு அர்ச்சகரின் கை ஒரு தட்டை நீட்டிற்று. நானும் செல்வியும் தட்டைத் தொட்டு வணங்க…

“ம்… ஆரம்பிச்சுறலாம்…” என்றபடி, அர்ச்சகரின் கை உள்ளே போயிற்று. சந்தனமும், பன்னீரும், இளநீரும், வெள்ளிச் செம்பில் போவதும் வருவதுமாக இருக்க… கருவறைப் பெருமாளின் சந்தனமும் வழிந்தோடிய பாதங்கள் மட்டும் நின்றிருந்தவர்களின் கால்களின் இடுக்கில் தெரிந்தது.

சற்று நேரத்தில் பெருமாளின் பாதங்களும் இழுத்து விடப்பட்ட திரைக்குள் மறைந்துப் போக… திரை விலக இன்னும் அரை மணி நேரமாவது ஆகும். கூட்டம் கொஞ்சம் குறைய… எழ முடிந்தது. ஆனால், பயனில்லாது திரை மறைத்தது.

இயல்பாகத் திரும்பி வெளியே போய்க் கொண்டிருந்த வரிசையைப் பார்க்க… ஒரு முகம். என்னை ஈர்த்தது. அது… அது… பி.டி. சார் போலவே இருக்க… அவர்… அவரேதான்.

காலையில் நினைத்தவரை இப்போது பார்க்க முடியும் என்பது எனக்கு நம்ப முடியாமல் இருந்தது. நான் இருந்த இடம் கம்பிச் சிறைக்குள் இருக்க… பி.டி. சாரின் முதுகும், பக்கவாட்டு முகமும் மட்டுமே எனக்குத் தெரிந்தது.

“செல்வி… இரு வந்துர்றேன்…” என்றபடி கம்பிகளில் இருந்து வெளியே வந்து, பி.டி. சாரைக் கண்டுப்பிடித்து…

“சார்…  நல்லா இருக்கீங்களா…”

“எங்கிட்ட படிச்ச பையன்னு தெரியுது… ஆனா பேர் தெரியலியேப்பா…”

பெயரையும் படித்த வருடத்தையும் சொல்லி, என்னுடைய திருமணத்துக்கு இதே கோயிலுக்கு அவர் வந்ததையும் சொல்ல,  அவர் முகம் மகிழ்ந்து, ஒளிர்ந்தது. சற்றுமுன் பெருமாள் சந்நிதியில் கொடுத்த சந்தனத்தை வித்தியாசமாய் நீளவாக்கில் வைத்திருந்தார்.

எப்போதும் போல் வகிடற்ற தூக்கி வாரிய தலைமுடி முழுக்க நரைமுடி நிறைந்து வழிந்தது. அவரின் குரலில் சிறிதும் பிசிறில்லை. அவர் பேசியக் குறைவான வார்த்தைகளில் நிறைந்து இருந்த பெருமையும், கனிவும், என்னை என்னவோ செய்ய…. நீட்டி நெடும்கிடையாய்…

“அடடே… என்னாப்பா இது… நல்லா இரு…” என்று அவர் தடுப்பதற்குள், அவரின் பாதங்களில் விழுந்தேன். மண்டபத்தில் இருந்தக் கூட்டம் எங்களை வேடிக்கைப் பார்க்க, பக்தர்களின் உற்சாகக் குரலிடையே, உள்ளிருந்து சங்கும், சேகண்டியும் உச்சமாய் ஒலித்தது. அபிஷேகம் முடிந்து திரை விலகியிருக்க வேண்டும்.

திரை விலகி சாமந்திப் பூச்சூடிய துளசிமணம் கமழும் பெருமாளின் தரிசனம் அனைவருக்கும் கிடைத்திருக்க வேண்டும்.

முகத்தில் புன்னகை ஒளிர பழனித்தங்கம் சாரின் ஒரு கையில் சங்கு ஒலிக்க, மறு கையில் சக்கரம் சுழன்றது. எனக்கும் தரிசனம் கிடைத்த நிறைவில் என் மனம் பொங்கிற்று.

-நிறைந்தது-

– கதைப் படிக்கலாம் – 54

இதையும் படியுங்கள்இட்லியைத் துரத்திய பாட்டி!!

Exit mobile version