அயல்நாட்டு அகதி…

– பெ. ஆனந்த்

மாடசாமி தன் தலையில் துண்டைப் போட்டுக்கொண்டு, தூரத்தில் ஏதோ பார்த்துக்கொண்டு, தன் கண்களில் வரும் கண்ணீரை சிந்தியபடி,  தனது  பேரனுக்காக காத்திருக்கிறார்.

“மாடசாமி கண்ணிலிருந்து வரும் கண்ணீர்தான், அந்த நிலத்தில் இருக்கும் குறைந்தபட்ச  ஈரம்”. அந்த அளவிற்கு நீரின்றி மாறியது, மாடசாமி நிலம். ஊர் மக்கள் எல்லாம் தனது தலையிலும், இடையிலும், சில வாகனங்களிலும் பொருட்களை ஏற்றிக்கொண்டும், சுமந்து கொண்டும், ஊரை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.

சில மக்கள் கண்ணீர் சிந்தியபடி, ஒரு சிலர் தலையில் அடித்துக் கொண்டு, இன்னும் சிலர் “தனது ஊரின் தாய்மண்ணை ஒரு பிடி எடுத்துக்கொண்டும்” அழுதுக்கொண்டே வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்.  மாடசாமி மட்டும் அங்கே அமர்ந்தபடி  இருந்தார்.

நாங்க ஒரு பத்து பேர்… வெவ்வேறு ஊரில் இருந்து, போராட்டத்திற்காக மாடசாமி இருக்கும் ஊருக்கு வந்தோம். ஆனால் அங்கு நிலைமை வேறு. இனி இங்குப் போராட்டம் செய்யும் அளவிற்கு ஒன்றுமில்லை, மக்கள் எல்லோரும் வெளியேறிவிட்டனர், மாடசாமியைத் தவிர.

நாங்கள் மாடசாமியிடம், நீங்கள் மட்டும் இங்கே இருந்து, தனியா என்னப் பண்ண போறீங்க? பெரியவரே! எனக் கேட்டோம். அதற்கு மாடசாமி, தம்பி! உங்களுக்குத் தெரியுமா?

இந்த ஊர் தமிழ்நாட்டுல யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை. காரணம், கடைகோடியில், மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் இருக்கிற ஒரு சின்ன கிராமம். இங்கு மொத்தமே ஆயிரம் பேர்தான் இருக்கிறோம். பெரும்பாலானோர் கொஞ்சம் கொஞ்சமாய் நகரத்திற்குப் போய்விட்டனர்.

“இதுதான் எங்க மண்… எப்படி விட்டுட்டு போகிறது,”

சில ஆண்டுகளுக்கு முன்பு….

எங்க ஊர் “இந்த தாய்” எவ்வளவு அள்ளி அள்ளிக்  கொடுப்பாள் தெரியுமா? எங்கும் பச்சைப்பசேல் என்று; காணும் காட்சியெல்லாம் கண்களுக்கு இனிமை தரும்… அப்படி இருக்கும். முப்போகமும் குறைவே இல்லாத அளவிற்கு தானியமும், நாங்க என்ன விதைத்தோமோ, அப்படியே மடிநெறியக் கூட்டி அள்ளிக் கொடுப்பா.

ஒருபோதும் பஞ்சத்துல தவிக்க விட்டதில்ல  தெரியுமா?… பட்டுப்போய் நிற்கிற இத்தனை மரமும் எப்படி இருந்தது தெரியுமா? தம்பி,

“இந்த நிலம்  எங்களை ஒருபோதும் கைவிட்டதில்ல,” வயிறு நிறைய சோறுக் கிடைக்க ஆதாரமா இருப்பா. அப்போ நாங்க பட்டினி என்னும் வார்த்தை தெரியாம இருந்தோம். “இந்த தாய் எங்களை ஒருபோதும் தவிக்க விட்டதில்ல”.

அப்படி இருந்த இந்த நிலத்தை காவு கொடுக்க, ஒரு நாள் 10 கார் ஊருக்குள்ள வந்தது. எங்களை எல்லாம் கூப்பிட்டு, நாங்க இதோ கொடிவீரன் பாறை பக்கத்துல “பூச்சிக்கொல்லி ரசாயன தொழிற்சாலை” கட்டப் போவதாகவும், அந்த தொழிற்சாலைக்காக அருகில் உள்ள நிலங்களை தரும்படி கேட்டு வந்துள்ளோம் எனக் கூறினர்.

நாங்க யாருமே ஒத்துக்கொள்ளவில்லை… அவங்க திரும்பிப் போய் விட்டனர். அதன் பின் மீண்டும் ஒருநாள், கையில் நிறைய பணத்துடன் வந்தனர். இம்முறை எங்களைத் தெருத்தெருவாக தனியாக சந்தித்தனர். சிலர் அவர்கள் வைத்தப் பணத்தை வாங்கி விட்டனர். பெரும்பாலும் அவர்கள் எதிர்பார்த்த  நிலங்கள், அவர்களுக்குக் கிடைத்துவிட்டன.

நான் தான், இன்னிக்கு நாம நிலத்தைவிட்டுக் கொடுத்துட்டா,

நாளைக்கு நம் தலைமுறை அழிந்துபோகும், அதெல்லாம் முடியாது” எனத் தொழிற்சாலை கட்டக்கூடாது என்று முடிவெடுத்து, ஊர் மக்களை ஒன்று திரட்டிப், போராட்டம் நடத்த முடிவெடுத்தோம். ஆனால் எங்களை ஒரு பொருட்டாகக் கருதவில்லை. அதன்பின் சாலையில் போராட்டம் நடத்த முடிவு எடுத்தோம்.

காவல் நிலையத்திலிருந்து போலீசார் வந்து எங்களைத் தடுத்து, கைது செய்தனர். அதற்கெல்லாம் அஞ்சாமல் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டோம். அப்பொழுது சமரசப் பேச்சுவார்த்தை நடத்தி, எங்கள் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்தார்கள். அப்படியே சில நாட்கள் அமைதியாக இருந்தோம். திடீரென்று தொழிற்சாலைக் கட்டுவதற்கு வேலையை ஆரம்பித்தனர். போலீசார் உதவியுடன் தொழிற்சாலை வேலையைத் தொடங்கினர்.

நாங்களெல்லாம் “அரை நிர்வாணமாக” நடந்து, வட்டாட்சியர் அலுவலகம் சென்றோம், தர்ணா போராட்டத்தில்  ஈடுபட்டோம். ஆனால் எங்கக் கூட யாரும் பேச்சுவார்த்தை கூட நடத்த முன்வரவில்லை. அந்தத் தர்ணாவை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். அதன்பின், அந்த தொழிற்சாலை ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வின் மருமகனுக்கு சொந்தமானது எனத் தெரியவந்தது.

ஊரில் யாரும் போராட்டத்தை முன்னெடுக்க வரவில்லை. காரணம், ஆளும் கட்சி எம்.எல்.ஏ. நிறைய மக்களை விலைக்கு வாங்கி விட்டார். பெரும்பாலும் விலைக்குப் போனவர்கள் கிராமத்தை விட்டு நகரத்திற்கு சென்று விட்டனர். “சிலரது வாய் பணத்தை கவ்விக்கொண்டது.” இன்னும் சிலர், தங்கள் பிள்ளைகளுக்காக தொழிற்சாலையில் வேலை கேட்டு வாங்கிக்கொண்டு, நகரத்துக்குப் போய் சென்றுவிட்டனர். ஒரு சிலர் மட்டும், தொடர்ந்து எங்களுடன் போராட்டம் நடத்தினார்கள்.

அப்புறம் சென்னைக்கு சென்று வழக்கறிஞர் பாரதியிடம், அவர் கைப்பிடித்து மெட்ராஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். அவங்கத் தரப்பு, சட்டத்தில் உள்ள ஓட்டையை சரியாக அடைத்து விட்டனர். நீதிமன்றம் சில நிபந்தனைகளுடன் தீர்ப்பு வழங்கி, தொழிற்சாலைக்கு அனுமதி கொடுத்தது. அதன்பின் தொழிற்சாலை இயங்க தொடங்கியது.

நாங்க கத்தி கத்தி, தொண்டை தண்ணி போனது. பெரும்பாலும் மக்கள் நிலத்தை விற்றுவிட்டு நகரத்திற்கு குடிபெயர்ந்து போய்விட்டனர். மீதி இருக்கிற ஆயிரம் பேர் மட்டும், ஆங்காங்கே வாழ்ந்து கொண்டிருந்தோம். நாதியில்லாமல் கொஞ்சம் கொஞ்சமாக ஊர்  நிலம்  மாசு அடைந்தது, “தொழிற்சாலைகளிலிருந்து வரும் கழிவு நீர்  எங்கள் நிலத்தில் உள்ள வளங்களை அழித்துவிட்டது.”

நிலைமை எல்லாம்  மோசமாக  மாறிவிட்டது. ரசாயனக் காற்று மரத்தையும் மக்களையும் கொஞ்சம் கொஞ்சமாக கொன்றுவிட்டது.  மக்களுக்கு பெயர் தெரியாத தோல் நோய் வர ஆரம்பித்துவிட்டது. ஒருநாள், வயது முதியவர்கள் 15 பேர் திடீரென்று இறந்துவிட்டனர். அன்றுதான் தமிழ்நாடு முழுவதும் இந்த ஊரை திரும்பிப் பார்த்தது.

அதற்கு முன்பே, இந்த நிலத்தையும்தொழிற்சாலை நிறுவனம்நாசம்செய்துவிட்டனர். ஒரு கட்டத்தில் என்னால் பொறுக்க முடியவில்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க போராட்டம் அறிவித்து, நம் கதிர்வேல் மகன் முனியன் தீக்குளித்தான். அப்போதுதான்  தமிழ்நாட்டுக்கே எங்க ஊர் இருக்கிறது தெரியவந்தது.

முனியன் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டதால், அவன் குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது.

அப்புறம் சில நாள், தொழிற்சாலையை மூடி வைத்துவிட்டு, தன் விளையாட்டைக் காட்டியது. இப்போது தொழிற்சாலை ஓடுகிறது. சில ஆண்டுகள் கழித்து, நிறைய பேர் நோய்வாய்ப்பட்டு கடுமையான பாதிப்பு அடைந்து இறந்து போய்விட்டனர். பாரதி தம்பி ஊருக்கு வந்தார். பார்த்துட்டு, மெட்ராஸ் ஐகோர்ட்டில் பொதுநல வழக்குப் போட்டார். அதன்பின்  நிலங்கள் எல்லாம் பெரிதும் பாதிப்படைந்து விட்டதாகவும், இனி இங்கு மக்கள் உயிர் வாழ முடியாது என்றும்,  உடனடியாக நீதிமன்றத்தில் குழு அமைத்து பரிந்துரை செய்ய வேண்டும் என வாதாடினார், அதனடிப்படையில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது.

தமிழக அரசும், தொழிற்சாலை நிறுவனமும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு வேறு இடத்தில் வீடு கட்டித்தர வேண்டும். அவர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துத்தர வேண்டும் என தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில், மக்கள் அனைவருக்கும்  இடம் மாற்ற ஏற்பாடு செய்து கொடுத்தப்பின்,  இருப்பிடத்தை நோக்கி இன்று போய்க்கொண்டு உள்ளனர். மாற்றத்திற்கு, மக்கள் எல்லோரும் ஊரைக் காலி செய்து விட்டுப் போய்விட்டனர்.

“தம்பி நான் என் தாயின் வயிற்றிலிருந்து முதன்முதலாக வெளியே வந்ததும், என் கால் மோதியது, இந்த மண்ணில்தான்”.

“நான் சுவாசித்த காற்று, இந்த மண்ணுடையது”.

நான் முதல்ல “நடந்த அடி” இந்த மண்ணில்தான், முதன் முதல்  “துள்ளிக் குதித்து” விளையாடியதும், இந்த மண்ணில்தான்.

இங்கே எல்லாம் சகதியுமாய்  “வெயிலோடு உறவாடியது”, இந்த மண்ணில்தான்.

எனக்கு நினைவு நாள் முதல் இன்று எனக்கு 60 வயது. என் அப்பன் , அவனுடைய அப்பன் எனத் “தலைமுறை தலைமுறையாக” வளர்ந்த இந்த மண்ணை விட்டு, எங்கே போவது?

இந்த மண்ணோட வாட, எங்க போனாலும் என்னைத்  துரத்தும்”.

நான் என்ன பண்ணுவேன்? “உயிர இங்கேயே விட்டுட்டு, உடலைத் தூக்கிக்கொண்டு போ”! என்கிறாய்…

தம்பி அதோ! அதோ! அந்த பனைமரத்தில் ஏறி நுங்கு வெட்டி  தின்றதை எப்படி மறக்க முடியும். அந்த குட்டையில் மீன் பிடிக்க, நாள் முழுக்க கால்கடுக்க காத்திருந்ததை எப்படி மறக்க முடியும்?

அதோ! அதோ! மாரியம்மன் கோயில் இருக்கே! அங்க தான் முதன்முதல அஞ்சலையப் பார்த்தேன். அங்கத்தான் எனக்கு கல்யாணம் ஆனது. அதெப்படி மறந்துப்போக முடியும். “இந்த மண்ணுல எத்தனையோ இடத்தில் ரத்தம் சிந்தி இருக்கு. இப்பக்கூட நுகர்ந்து பாருங்க, வாடை அடிக்கும்.”

ஆடி தொடங்கி அஸ்திவார எல்லாமே இங்கிருக்கு. இத விட்டுட்டு எங்கப் போக சொல்ற?

அதோ !அந்த மணல் மேடுதான் எங்கம்மாவை புதைத்த இடம். அந்த மண் வீடு பக்கத்தில், என் ஐயனும் புதைத்த இடம். இத விட்டுட்டு எங்க போக  சொல்ற ? ஒருவேளை… பக்கத்துல இருக்கிற  இடத்தில் என்னை புதைத்துவிடு தம்பி, என அழுதார், நான் எங்கே போவேன்? போனாலும் என் உசுரு இங்கேயே சுத்துமே. நான் என்ன பண்ணுவேன்? சொல்லுங்க! தம்பி!…..

கடைசியாக மாடசாமி பெரியவரை, “உயிரும் சதையும்” இருக்கிற  இந்த நிலத்திலேயே அவரை விட்டுவிட்டு போகலாம் என முடிவெடுத்தோம். அதன்பின்  எங்களால் பேச முடியவில்லை. இயல்பாக இருக்க முடியலை. ஆனாலும், எங்களால் எதுவும் செய்ய முடியல. எல்லாம் கைய மீறி போச்சு. யார நம்பி இருக்கிறோமோ… அவங்க நம்பல “அகதியாக” ஆக்கிட்டாங்க என சொல்லிக்கொண்டே இருந்தார்.

மனிதனை மனிதன்  சுரண்டி சாப்பிடுறான் தம்பி” எனக் கடைசியாக சொன்னார். அதுக்குள்ளே, அவரது பேரன் வந்துவிட்டான். தன் கையிலிருந்த சிலப் பொருட்களை கொடுத்து விட்டு, நீ இங்கேயே இருந்து சாகும் என்று சொல்லிவிட்டு போய்விட்டான், “தம்பி முதல்ல பூமிக்கு வரும் பொழுது என்னை தாங்கியது இந்த  மண்ணுதான். செத்தாலும் இந்த மண்ணில்தான்”.

நீங்க போய் வாங்க! உங்களுக்கு எனது நன்றி! என சொல்லிவிட்டார்.

உடனே ஒரு ஃபோன் வந்தது. ஹலோ! நாங்க தஞ்சாவூர்ல இருந்து பேசுறேன் பா. இங்கு “மீத்தேன்” எடுக்க போறாங்களாம். மக்களெல்லாம் போராட்டத்தில் கலந்துக்கப் போறாங்க. நீங்க  எங்கே இருக்கிறீங்க  ஜெயராஜ்? முதல்ல ஃபேஸ்புக், வாட்ஸ்அப், டுவிட்டர்ல, எல்லாம் சமூக வலைத்தளத்திலும், மாடசாமி பேசிய வீடியோவை உடனே பரப்பு.

இனி நம்ம மண்ணுல ஒரு விவசாயிகள் கூட ஏமாறக்கூடாது. ஐ.பி.எல். பார்க்கிற கூட்டத்தையும், சினிமா பத்தி பேசுற இளைஞர்களையும், வெட்டி அரசியல், சாதி, மதம், இன அரசியல் செய்கிற எல்லாத்தையும் உடனே வரச் சொல்.!

“நிலம் தான் நமது முதல் அரசியல்”. “நிலத்தையும் நீரையும் விட்டுவிட்டால் நாம் எல்லோரும் ஒரு நாளில் அகதியாக வாழவேண்டிய நிலை வந்துவிடும்”. அனைவரையும் வரச்சொல்! போராட்டக் களத்திற்கு! என ஃபோனை துண்டித்தான்…

குறிப்பு

இந்த சிறுகதை, தமிழகத்தில் பெரும்பாலும் மக்களின் வாழ்வாதாரத்தை சூறையாடிக்கொண்டும், அபகரித்துக்கொண்டும் நிலங்களையும், நீர்நிலைகளையும் கொள்ளையடிக்கும் கும்பல் மற்றும் அவர்களுக்கு எதிராக, கற்பனையுடன் எழுதப்பட்ட சிறுகதை. இக்கதையில் எந்த  இடத்திலும்  உண்மைச் சம்பவத்தை பற்றி எழுதப்படவில்லை. இவை அனைத்தும் கற்பனையே! ஆனால், எதிர்காலத்தில் இவை உண்மையாவதற்கு நிறைய வாய்ப்பு இருக்கு என்பதுதான் நிதர்சனம்.

– கதைப் படிக்கலாம் – 32

இதையும் படியுங்கள்நெருஞ்சி முள்

Exit mobile version