– தமிழினி
யாரோ காலிங் பெல்லை அழுத்திய சத்தம் கேட்டது. தீவிரமாக கணினியில் ஏதோ வேலை செய்துக்கொண்டிருந்த மணி, கவனம் சிதறி திரும்பிப் பார்த்தான். மீண்டும் காலிங் பெல் அழுத்தப்பட்டது. “எங்கப் போனீங்க எல்லாரும்? இந்த வீட்டில கதவ திறக்கக் கூட ஆள் இல்லையா?” என்று சலித்துக் கொண்டவாரே போய் கதவை திறந்தான். வாரம் ஒரு முறை வந்து இருபது ரூபாய் பணம் வாங்கும் கூர்க்கா நின்றுக்கொண்டிருந்தான். “ஒரு நிமிஷம் இருப்பா” என்றவாறே உள்ளே சென்று பணத்தை எடுத்து வந்து அவன் கையில் திணித்தான். தான் எவ்வளவு பணம் எடுத்து வந்தோம் என்பதைக் கூட அவன் கவனிக்கவில்லை.
அம்மா, தங்கை எங்கப் போனாங்க..? ஏன் வீடே இப்படி அமைதியா இருக்கு..? என்று நினைத்தவாறு சமையல் அறைக்குள் நுழையும் போதுதான், அம்மாவும் தங்கையும் அருகில் உள்ள கடைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றது ஞாபகத்திற்கு வந்தது. ‘சே… என்ன எந்திரத்தனமா மாறிட்டோம்’ என்று தன்னைத்தானே நொந்தவாறு கணினி முன்பு சென்றமர்ந்தான்.
கணினித்திரையில் இருந்த சிறிய கடிகாரம் ஒன்று, மணி மாலை ஏழு என்பதை கூறியது. அதைப்பார்த்த பின்புதான், தான் ஆறு மணி நேரமாக கணினியே கதி என்று இருந்தது தெரிந்தது. மீண்டும் கணினித்திரையைப் பார்க்க சலிப்புத் தட்டியது. ஆனாலும், அவனால் அதைச் செய்யாமல் இருக்க முடியாது. ஏனென்றால், அவனுடைய பணி அப்படி.
டிங்…. என்று அவன் அலைபேசியில் வந்து விழுந்த குறுஞ்செய்தி அவனுடைய கவனத்தை மீண்டும் திசைதிருப்பியது. எடுத்துப்பார்த்த பொழுது மணி பன்னிரண்டு. நேரம் போனதே தெரியவில்லை. அருகில் அவனுடைய அம்மா அவனுக்காக வைத்திருந்த ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட உணவு பிரிக்கப்படாமல் கிடந்தது. அவனுடைய ஆஃபீஸ் நண்பன் ரவி அனுப்பியிருந்த செய்தி கண்ணில் பட்டது. திறந்து படித்தப்பொழுது, சிறிது கலவரப்பட்டு போனான்.
“டேய் மணி, நம் ஆஃபீஸ்ல ஆட்குறைப்பு நடவடிக்கை எடுக்குறாங்களாம். இந்த மாச டார்கெட்ட முடிக்காத எல்லாருமே நீக்கப்படுவார்கள்னு பேசிக்கிறாங்க. எதுக்கும் கொஞ்சம் கவனமாய் இரு. நாளை, முதல் வேலையாக ஆஃபீஸ்க்கு போன ஒடனே டீம் லீடர பார்த்து இதைப் பத்தி பேசிடுவோம் – ரவி”
ஆஹா… இது என்ன புது தலைவலி… இந்த ஆறு மாசமா தான் ஒரு நல்ல சம்பளத்துல வேலை கிடைச்சுதுனு நிம்மதியா இருந்தா… அந்த நிம்மதிய கெடுக்கறதுக்குனே இப்படி செய்தி வருதே… என்று தன் நிலையை எண்ணி நொந்துக்கொண்டான். அதன்பின்பு அவனுக்குச் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் எழவில்லை. கண்கள் சோர்ந்து விட்டமையால் அதற்கு மேலும் தன்னால் கணினித் திரையை பார்க்க முடியாது என்று மூடி வைத்து விட்டான். அப்படியே நெடுஞ்சாண்கிடையாக படுக்கையில் சாய்ந்தான்.
நினைவுகள் பின்னோக்கி ஓடின. மணியும் ரவியும் வேலை செய்வது ஒரு பன்னாட்டு நிறுவனத்தில். கல்லூரியில் இருக்கும் போதிலிருந்தே ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கிவிட வேண்டும் என்பது மணியின் கனவாக இருந்தது. அது நிறைவேறவே ஆறு ஆண்டுகள் ஆகிவிட்டது.
அவன் படித்தக் கல்லூரியில் கேம்பஸ் இன்டர்வியூ இல்லையாதலால், கல்லூரி முடித்து வெளியே வந்தப் பின்பு தனியே வேலை தேடினான். ஒரு வருடமாக எந்த நிறுவனத்திலும் வேலை கிடைக்காமல் அலைந்தப் பிறகு, ஒரு சிறிய சாஃப்ட்வேர் கம்பெனியில் கடைநிலை ஊழியராக வேலைக்குச் சேர்ந்தான். ஆயினும், தான் நினைத்து வைத்திருந்த அந்த நிறுவனத்தில் கண்டிப்பாக சேர்ந்துவிட வேண்டும் என்ற அணையாத வேட்கையோடு ஐந்து வருடமாக அலைந்துத் திரிந்து எவ்வாறோ வேலையை பெற்றுவிட்டான்.
ஆறு மாதமாக நன்றாகத்தான் சென்றுக் கொண்டிருந்தது. அவன் இந்த நிறுவனத்திற்கு வேலைக்குச் சேர்ந்த அன்று, தன்னுடைய கனவு பலித்தது என்று நினைத்து மகிழ்ந்தான். ஆனால், அந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. மிகப்பெரிய பன்னாட்டு நிறுவனம்… ஆதலால் எந்நேரமும் வேலை இருந்துக்கொண்டே இருந்தது. இருபத்துநான்கு மணி நேரத்தில், தூங்கும் ஆறு மணி நேரம் போக மீதமிருந்த பதினெட்டு மணி நேரம் கணினியிலும், அலைபேசியிலுமே கழிந்தது.
கைநிறைய சம்பளத்தை பார்த்தவுடன், வீட்டில் இருந்தவர்களுக்கு தலைகால் புரியவில்லை. மிடில் கிளாஸ் என்ற நிலையிலிருந்து அப்பர் மிடில் கிளாஸ் என்ற நிலைக்கு மாறும்பொழுது என்னவெல்லாம் நிகழுமோ, அனைத்தும் இவன் வீட்டிலும் நிகழ்ந்தது. அழகான பெரிய வீட்டில் கிராமத்திலிருந்த அவனுடைய அம்மாவும், தங்கையும், மாத தவணையில் ஒரு வீட்டினை நகரத்தின் மத்தியில் வாங்கிக் குடிபெயர வேண்டும் என்று கட்டாயப் படுத்தியதால், ஒரு சின்ன அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டினை வாங்கி குடியேறிவிட்டார்கள். கிராமத்திலிருந்த அவர்களின் வீடும் நிலமும் கேட்பாரற்று கிடந்தது. புது வீட்டிற்குள் அவசியமான பொருள்களைத் தவிர, மிச்சமிருந்த அனைத்து இடமும் ஆடம்பரமான பொருட்களால் நிரம்பி வழிந்தது.
மாதத் தவணை போட்டு பல பொருட்கள் வாங்கியமையால், இவனுடைய சம்பளம் மாதமாதம் தண்ணீரைப் போன்று செலவாகிவிட்டது. ஆஹா… தண்ணீர் என்று கூறியவுடன் தான் ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. இலவசமாக வரும் குடிநீரை குடித்தால் தங்களின் ஸ்டேட்டஸுக்கு இழுக்கு என்று நினைத்து தண்ணீருக்கு என்றே பிரத்தியேகமாக ஒரு கணிசமான தொகை மாதாமாதம் செலவிடப்படுகிறது. நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டதால், கேன்களில் அடைக்கப்பட்டு குடிநீர் என்ற பெயரில் விற்கப்படும் கேன் தண்ணீரே குளிப்பதற்கு, குடிப்பதற்கு என அனைத்து உபயோகத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது.
அடுத்த இரு மாதங்களில் தங்கையின் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. அதற்காக வேண்டி, கடந்த மூன்று மாதமாக கடை கடையாக ஏறி இறங்குகிறார்கள் அம்மாவும், பிள்ளையும். அச்சோ… இந்த நிலையில் என் வேலை பறிபோனால் நான் என்ன செய்வேன்? என் நிலை என்னவாகும் என்று நினைத்தவாறு புரண்டு புரண்டு படுத்தான், மணி.
அவன் அறையில் இருந்த ஏ.சி.-யைப் பார்க்கும்பொழுது அவனுக்கு கோபம் கோபமாக வந்தது. சேமிப்பு என்று எதுவும் அவன் கையில் இந்த ஆறு மாதத்தில் இல்லை. இத்தனைக்கும் அவன் பெறும் சம்பளம், பழைய வேலையில் அவன் பெற்றுக் கொண்டு இருந்த சம்பளத்தை விட ஐந்து மடங்கு அதிகம். ஆயினும் மாத தவணை என்ற பெயரில் பொருட்களை வாங்கிக் கொட்டியமையால், சேமிப்பு என்ற ஒன்றே இந்த ஆறு மாதத்தில் இல்லாமல் போனது.
தன் பொறுப்பற்ற தங்கையின் மீதும். தாயின் மீதும் கோபம் கோபமாக வந்தது. தன் அப்பாவை நினைத்துப் பார்த்தான். எளிமையின் உருவம் அவர். மணி பத்து வயதாக இருக்கும்போதே அவன் அப்பா தவறிவிட்டார். ஆயினும், அவருடைய பல சிந்தனைகள் அவனுள்ளே ஒட்டிக்கொண்டது. அப்பாவின் சேமிப்பு பழக்கம், தேவையற்ற பொருட்களை வாங்காதிருப்பது, அளவான உணவு போன்றவை இந்த நகர வாழ்க்கையிலும் அவனை விட்டுப் போகவில்லை. ஆனால், தங்கையும் அம்மாவும் அவனுக்கு நேர் எதிர். ஆடம்பர விரும்பிகள். தேவையற்ற பொருட்களை வாங்கிக் குவித்து, இன்று வீடு முழுவதும் பொருட்களால் நிறைந்து இருக்கிறது.
ஏ.சி. ஓடிக் கொண்டிருந்தது. ஆயினும் அவனுக்கு வியர்த்தது. தூக்கமும் வரவில்லை. எழுந்து சிறிது நேரம் நடந்துவிட்டு சிறிது தண்ணீர் குடித்துவிட்டு வந்துப் படுத்துக்கொண்டான். தீர்க்கமான தனது முடிவை தனது மனதிற்குள்ளே மீண்டும் சொல்லிப் பார்த்துக் கொண்டான். பின் நிம்மதியாக உறங்கிப்போனான்.
காலை எழுந்து எந்த பரபரப்பும் இல்லாமல் அமைதியாக ஆஃபீசுக்கு கிளம்பினான்.
“என்னடா என்னைக்கும் விட இன்னிக்கு ரொம்ப அமைதியா போற… டெய்லி நீயும் டென்ஷனாகி, எங்களையும் டென்ஷனா ஆக்கிட்டுல்ல போவ….” என்ற அம்மாவை பார்த்து புன்முறுவலை பதிலாக கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.
ஆட்குறைப்பு நடவடிக்கை பற்றிய தகவல் ஆஃபீஸில் காட்டுத்தீ போல் பரவிக் கொண்டிருந்தது. எல்லாத் திசையிலும் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர். மணி மட்டும் எந்தக் கவலையும் இல்லாமல் அமைதியாக தன் இடத்திற்கு சென்று அமர்ந்தான். பின்னாலிருந்து வந்து மணியின் தோளைத் தொட்ட ரவி, “உனக்கு என்னடா நீ எல்லா டார்கெட்டையும் கரெக்டான நேரத்தில் முடிச்சு குடுத்தர்ற… நீ இதப் பத்தி கவலை படத் தேவையில்ல தான்…” என்றவனை பார்த்து புன்முறுவலை பதிலாக அளித்தான் மணி.
பின் நிதானமாக ஒரு வெள்ளைத் தாளை எடுத்து, ஏதோ எழுத ஆரம்பித்தான். எழுதி முடித்தப் பின்பு அதை நான்காக மடித்து ஒரு என்வலப் கவரில் போட்டு, மேனேஜரின் அறையை நோக்கி நடந்தான்.
அறைக்குள் நுழைந்த மணியை பார்த்த மேனேஜர் “வா மணி… என்ன விஷயம்..? ஆட்குறைப்பு நடவடிக்கை பற்றி எதுவும் பேச வந்திருக்கியா…? அதப் பத்தி நீ எதுவுமே கவலைப்பட தேவையில்லை. இந்தக் கலவரத்திலயும் உனக்கு ஒரு நல்ல செய்தி இருக்கு. உன்னைய டீம் லீடராக புரமோட் பண்ண சொல்லி ஆர்டர் வந்துருக்கு. அடுத்தப் ப்ராஜக்ட்காண புது டீமுக்கு நீதான் டீம் லீடர். அது மட்டும் இல்ல… ஒவ்வொரு ப்ராஜெக்ட் முடிச்சுக் குடுக்கும் போதும், ஒரு ஆன்சைட் ப்ரோக்ராமுக்கான வாய்ப்பு உனக்கு இருக்கு….” என்ற அவருக்கு புன்முறுவலை பதிலாக அளித்துவிட்டு, தன் கையிலிருந்த என்வலப் கவரை அவரிடம் நீட்டினான்.
“என்னப்பா இது… எதுவும் வீட்ல விசேஷமா..? உன் தங்கச்சிக்கு கூட இன்னும் ரெண்டு மாசம் இருக்கே கல்யாணத்துக்கு… அதுக்குள்ள பத்திரிகையா…?” என்றவாறு கவரை பிரித்துப் பார்த்த அவர்… அதிர்ந்து போனார்.
“என்ன மணி இது… ராஜினாமா கடிதம்… இந்த வேலைக்காக நீ எவ்ளோ கஷ்டப்பட்டனு உனக்கு தெரியும்ல… எதுவா இருந்தாலும் யோசிச்சு முடிவு எடுப்பா… இப்ப இருக்கற சூழல்ல வேலை போய்விடுமோனு பயந்துட்டு இருக்கப் பல பேருக்கு மத்தியில், உனக்கு பதவி உயர்வு கிடைக்குது… இன்னும் பல சலுகைகள் கிடைக்குது… இப்ப இப்படி ஒரு முடிவா..?”
“சார்… எனக்கு உங்க மேலயோ, இந்த கம்பெனி மேலயோ எந்த வருத்தமும் இல்லை. ஆனா நான் அளவான சம்பளம் வாங்கிட்டு இருந்தப்ப வாழ்ந்த நிறைவான வாழ்க்கையை எங்கேயோ தொலைச்சிட்டேன். அதைத் திரும்ப மீட்டெடுப்பதற்காகத்தான் இந்த நடவடிக்கை. அந்தக் காலத்துல நேரடியா மக்கள அடிமைப்படுத்தினாங்க… இப்ப இருக்கிறது மார்டன் அடிமைத்தனம் சார். உங்களுடைய அன்பான அறிவுரைக்கு நன்றி சார்…” என்றவாறு எழுந்துப் போனான்.
தான் அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்ற தெளிவான சிந்தனையோடு, மிக மகிழ்ச்சியாக அறையிலிருந்து வெளியேறினான். இன்னும் மூன்று மாதத்தில் இந்த இடத்தை விட்டுச் சென்று விடுவோம் என்ற மகிழ்ச்சியோடு தன் இருக்கையில் வந்தமர்ந்தான்.
ஆட்குறைப்பு நடவடிக்கை பற்றி பேசிக்கொண்டிருந்த ஆஃபீஸ், இப்பொழுது மணியின் ராஜினாமாவை பற்றி பேசிக் கொண்டிருந்தது. வேடிக்கையான மனிதர்கள்… இந்த மனுஷங்களுக்கு ஏதாவது ஒரு விஷயம் வேணும் பேசுவதற்கு… என்று நினைத்தவாறு தன் மனதிற்குள் சிரித்துக்கொண்டான் மணி.
– கதைப் படிக்கலாம் – 96
இதையும் படியுங்கள் : அப்பா