குப்பைத்தீவு!!

– மௌலி

அது ஏதோ ஒரு பெருங்கடல்… வானமும் பெருங்கடலும் ஒரு சேர ஒரு நீல முட்டுச்சந்துப் போல இருந்தது. அங்கே ஒருவன் தத்தளித்துக் கொண்டிருந்தான் (அவன் யார்? எந்த ஊர்? எந்த இனம்? எந்த மதம்? இதெல்லாம் நமக்கெதற்க்கு. அடையாளங்களின் சுமை அதிகமானால் கடலில் மூழ்கி விடுவோமென்று அவன் அதை கடலிலே விட்டுவிட்டான் போலும்). கடலில் தத்தளித்தவன் ஒரு வழியாக சுதாரித்து நீந்த ஆரம்பித்தான். தொலைவில் ஒரு தீவு தெரிய, அதை நோக்கி நீந்தினான்.

அவன் தீவை நீந்தி அடைந்தான், பெருமூச்சு விட்டு நிலந்தில் சாய்ந்தான். பிறகு எழுந்து தீவை சுற்றும் முற்றும் பார்த்தான், வெறும் நெகிழியே (பிளாஸ்டிக்)  சூழ்ந்திருந்தது.

அப்போதுதான் உணர்ந்தான், “இது இயற்க்கையின் இலட்சியத்தால் உருவான தீவில்லை, மனிதர்களின் அலட்சியத்தால் செயற்கையாக உருவான ஒரு குப்பைத்தீவு”.

அவன் அந்த தீவை சுற்ற ஆரம்பித்தான், அதை சுற்றி முடிக்க முடியாது, ஏனென்றால் அதன் பரப்பளவு எவ்வளவு தெரியுமா? (அது தெரிந்தால் நிலபிரபுத்துவ, நில ஆக்கிரமிப்பு கூட்டங்கள் அங்கேயும் சென்று விடுமோ!?). கப்பல் ஏதேனும் வருகிறதா என்று கடலை பார்த்தவாறே நடையை தளர்த்தினான். “திரும்பிப் போய் மட்டும் அங்க என்ன பண்றது? இந்த மனுசப் பயலுங்க கூட”, என்று சலிப்புக் கொட்டி நகர்ந்தான்.

{அந்த குப்பைத்தீவு எந்தப் பெருங்கடலில், எந்த நாட்டின் கடல் எல்லையில் இருந்தது என்பது எனக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால் உலகில் உள்ள ஐந்து பெருங்கடலில், மூன்றில் மிகப் பெரிய குப்பைத்தீவுகள் மனிதர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. அந்த தீவுகள் அளவில் ஈரான், மங்கோலியாவை ஒத்தது மற்றும் மூன்று பிரான்ஸை ஒத்தது.}

அந்த தீவில் இருந்த குப்பைகளை பல விதமாக பிரிக்க முடிந்தது. பயன்படுத்தியது, பாதி உபயோகித்தது, புத்தம் புதியது, மருத்துவக் கழிவுகள், உலோக பாகங்கள், உணவு கழிவுகள் இன்னும் என்னென்னவோ இருந்தது… எல்லாவற்றையும் பார்த்தவாறே நடந்தான் அவன். வெயில் அவன் தலையை பிளக்க தொலைவாக நடந்தான். இறுதியாக ஒரு குடை அவன் கண்ணில் பட்டது. அதை சென்று ஆரவாரமாக எடுத்தான் அவன், குடையை விரித்து பார்த்தான் எந்த பாதிப்பும் இல்லாமல் இருந்தது. இரட்டிப்பு மகிழ்ச்சியோடு நடையை தொடர்ந்தான், சாப்பிட ஏதாவது கிடைக்குமா என்று.

ஒரு நெடிய தேடலுக்குப் பின், உணவு குப்பைகள், கழிவுகள் இருந்த ஒரு இடத்தை அடைந்தான். பல அழுகிப்போன பழங்கள், கெட்டுப்போன இறைச்சிகள், அடைக்கபட்ட உணவுகளின் நெகிழி பைகள். இவை அனைத்தும் சேர்ந்து ஒரு துர்நாற்றத்தை வீசியது.

“இவ்வளவு நாள் மனிதர்கள் நடுவே சுவாசிசாச்சு, இது என்ன கடினமா?”, என்றவாறு குப்பைகளை கிளற ஆரம்பித்தான்.

ஒரு நெகிழிப்பையில் ஏதோ தட்டுபட்டது, அதை ஆவலாக எடுத்துப் பிரித்தான். உள்ளே ஒரு பாதி தர்ப்பூசணி பழம் இருந்தது, அதன் மீது உண்ட பழத்தின் விதைகள் துப்பியிருந்தது. உடன் ஒரு மாம்பழம் புதியதாக இருந்தது. இதை பார்த்ததிலே அவனின் பாதி பசியாறியது. பையை நன்கு உதறினான், ஒரு எலுமிச்சை பழம் இருந்தது, அதை எடுத்து தன் கால் சட்டை பையில போட்டுக் கொண்டு நடந்தான்.

அந்தப் பாதி தர்பூசணியையும், மாம்பழத்தையும் கடல் தண்ணீரில் கழுவி உண்ண ஆரம்பித்தான். சாப்பிடும் போது எண்ண ஓட்டங்கள் எங்கெங்கோ ஓடியது. எப்படி இங்கிருந்து தப்பிப்பது? கப்பல்கள் ஏதாவது வருமா? ஏதாவது மேல பறக்கும் விமானம் நம்மள பார்த்தா தேவல என்றவாரெல்லாம் எண்ணிக் கொண்டே பழங்களை உண்டு முடித்தான். குடிநீருக்கு என்ன செய்வதென்ற எண்ணம் அப்போது தான் தோன்றியது. கடல்நீரை அள்ளி பருகினான். பின்பு தன்னை தானே திட்டிக் கொண்டான். சரி ஏதாவது குடிநீர் குப்பி கிடைக்கிறதா என்ற எண்ணம் தோன்றி நடக்க ஆரம்பித்தான். தீவின் ஒரு இடத்தில் கண்ணாடி குப்பிகள் குவியலாகக் கண்டான் (உடன் பல நெகிழி குப்பிகளும் இருந்தன). எடுத்து பார்த்தப் பொழுது எல்லாமே வெற்றிடமே கொண்டிருந்தன.

“தண்ணீர் யாரின் மூலதனம்? எல்லோருக்கும் பொது தான அது? அதை ஏன் குப்பியில போட்டு அடைச்சி விக்கனும்? அதையே ஏன் கடலில் போட்டு குப்பையை குவிக்கனும்”, என்னவோ போய் தொலையுது என்றவாறு தேடுதல் வேட்டையில் தீவிரமானான். பாதிக் குடித்து வீசிய சோடா குப்பி ஒன்று இருந்தது, ஏதோ உலக கோப்பையை வென்ற மகிழ்ச்சியோடு தாகத்தைப் போக்கினான். பிற்கால தேவைக்காக குடிப்பதை பாதியிலே நிறுத்தினான்.

தண்ணிரிலே சில நாட்களாக தள்ளாடிய அவன், அசதியில் சிறிது இளைப்பார எண்ணினான். குடையை விரித்து வைத்துவிட்டு, அதன் அடியில் படுத்தான். சிறிது நேரம் கழித்து ஒரு ரோந்து கப்பல் தீவை நோக்கி வந்தது. எந்தக் காரணமும் கேட்காமல் அதிலிருந்தவர்கள், அவனை நோக்கி துப்பாக்கியால் சுட்டார்கள். அவனும் தப்பிப்பதற்காக ஓடினான், ஆனால் அந்த தீவில் எங்கேப் போய் பதுங்குவது. அதனால் ஓடுவதை தொடர்ந்தான், கப்பலும் அவனை விடுவதாய் இல்லை. அவனுடனே அதுவும் நகர்ந்தது. இறுதியாக கப்பலில் இருந்த ஒருவன், அவன் நெற்றியை குறி வைத்து சுட்டான். அலறியடித்துக் கொண்டு எழுந்தான் அவன் கனவிலிருந்து.

“பகல் தூக்கத்திலிருந்து பாதியில் எழுந்திருக்கிற வலி இருக்கே”, என்று சலித்துக் கொண்டே எழுந்து நின்றான்.

சாலையின் நடுவே இருக்கும் சிறுசிறு பள்ளங்கள் போலே, தீவின் நடுவே சிறுசிறு பள்ளங்கள் இருந்தன. அதனுள் பார்த்தால் மீன் குஞ்சு கூட்டம் மேய்ந்துக் கொண்டிருந்தன. அந்தப் பள்ளத்தினுள் தன் கால்களை வைத்து மீன் குஞ்சுகளின் கடியை ரசித்தான். சூரியன் இருந்த திசை சிவப்பை கக்குவதை வைத்து அது மேற்கு என அறிந்தான். பிறகு அவன் வைத்திருந்த சோடாவில் எலுமிச்சை பழத்தைப் பிழிந்து பருகத் தயாரானான்.

“கொஞ்சம் உப்பிருந்தால் நல்லா இருக்குமே?”, என எண்ணினான்

இங்கே உப்பிற்கா பஞ்சம், என்று கடல் நீரை ஒரு மூடியில் அள்ளி அந்த சோடா குப்பியுள் ஊற்றி குளுக்கினான். அது எலுமிச்சை சோடா போல இல்லையென்றாலும், அவனை திருப்தி செய்யும் அளவிற்க்கு போதுமானதாக இருந்தது. அதை குடித்துக் கொண்டே, மீன் கடியை ரசித்துக் கொண்டே, சூரியன் மறைவதை ரசித்தான்.

சூரியன் மறைய, இருள் சூழ, அவனுள் பயம் சூழ்ந்தது. திடீரென்று உயிர் பிழைக்க வேண்டும், நிலத்திற்க்கு செல்ல வேண்டும் போன்ற ஆசைகள் எழுந்தன.

“காலையிலிருந்து இந்த ஆசைகள் இல்லையே? ஒரு வேளை மதியம் ஆப்பிளை கடித்ததால் இந்த எண்ணங்கள் தோன்றுகின்றனவா?”, என்றெல்லாம் யோசித்தான்.

எங்கும் செல்ல முடியாமல் அந்த இருளிலேப் படுத்திருந்தான்.

காலைக்கும் நண்பகலுக்கும் நடுவே கண் விழித்தான் அவன். வெயிலின் தாக்கம் பெரிதாக இல்லை, கருமேகங்கள் சூழ தொடங்கியிருந்தன. உணவு தேட புறப்பட்டபோது, தூறல் போட்டது மேகம். அந்த சிறு துளிகளை நாவால் பிடித்தான். “போதவில்லை இன்னும் தூறு, இன்னும் தூறு”, என்று மேகங்களுக்கு கட்டளை பிறப்பித்தான். மேகம் அவன் சொல் கேட்டு வேகத்தை அதிகப்படுத்தியது.

நனையாமல் இருக்க குடையை விரித்தான். மேகத்திற்க்கு மறுக்கட்டளை போடாடததால், மேகம் தன் வேகத்தை பெருக்கிக் கொண்டே சென்றது. உடன் தன் நண்பன் காற்றையும் அழைத்து வந்தது. ஒரு பெரும் காற்று அவனை தீவை விட்டு தூக்கி எறிந்தது. அவன் பாராசூட்டில் பறப்பதைப் போல பறந்தான். பறந்துக் கடலில் விழுந்தான். தீவை விட்டு விலகிச் சென்றுக்கொண்டே இருந்தான்… காற்று, மழை கடல்நீரும் அவனை அள்ளோல படுத்தின. ஏதோ ஒரு உடைந்த கப்பலின் பாகத்தை பற்றிக்கொண்டான். அந்தப் பாகத்தை அவன் விடவேயில்லை. இரண்டு நாட்கள் அதை பிடித்தவாறே மிதந்தான் அந்தப் பெருங்கடலில்.

தொலைவில் ஒரு கப்பல் தென்பட்டது. அது அவனை நோக்கியவாரே வந்தது, அது ஆழ்கடலில் மீன் பிடிக்கும் மீனவக் கப்பல். அதிலிருந்து குதித்த சில மீனவர்கள், அவனை தூக்கி கப்பலில் போட்டனர். நீர் சொட்ட சொட்ட அமர்ந்திருந்தான்.

“அந்த மீனவர்கள், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்?, இந்த கப்பல் எந்த நாட்டிற்க்கு போய் சேறும்?”.

“தெரியவில்லையே!”

“இப்படி ஒரு குப்பைத்தீவு இருப்பதை எந்த நாட்டிடம் சொல்லுவது?, எந்த நாடு இதற்கு பொறுப்பேற்க்கும்? எந்த நாடு இதை தீர்த்து வைக்கும்?, யாரிடம் போய் சொல்லுவது?”.

“ம்ம்ம் வளங்கள் இருந்தால் ஒருவர் மாற்றி ஒருவர் உரிமை கொண்டாடியிருப்பார்! இது குப்பைகள் தானே. ஒருவர் மாற்றி ஒருவர் பழிதான் போடுவார்.

– கதைப் படிக்கலாம் – 57

இதையும் படியுங்கள் : ஒரு கதை சொல்லட்டுமா…

Exit mobile version