ஹலோ நா ஆடு பேசுறேன்!!

– நித்தியானந்தம் செல்வராஜ்

ஒரு ஆடு தனது பிறப்பு முதல் இறப்பு வரை…

தன் வாழ்நாளில், தான் அடைந்த இன்ப துன்பங்களை கூறுமாறு வடிவமைக்கப்பட்ட, ஒரு கற்பனைக் கதை …

ஆட்டுச்சந்தையில் அழுக்கு ஆடை உடுத்திய என் எஜமான், என்னை விலைபேசி விற்கக் காத்துக்கொண்டிருந்தார்..

ஆடம்பரமாய் அங்கு வந்த ஒருவர், என் எஜமானிடம்… என்ன விலை? ஆடு நல்ல ஆடா?… எனக் கேள்வி கேட்டு, அடித்து விலைபேசி வாங்கிச் சென்றார், என் எஜமானிடம் இருந்து என்னைப் பிரித்து..

பழைய எஜமானின் வீட்டைத் துறந்து, புதிய எஜமான் வீட்டை அடைந்தேன்…

அங்கு என்னை வரவேற்க்க வீட்டு வாசலில் வீற்றிருந்த மழலைச் செல்வங்கள், என்னிடம் கொஞ்சி விளையாடின.

எஜமானின் மனைவியோ, என்னை சுத்தம் செய்து… எனக்கு பொட்டு வைத்து… அழகுபடுத்தி… நான் வசிக்க, எனக்கு ஒரு இடத்தையும் தயார் செய்து, அங்கு ஒரு கயிற்றால் கட்டிப்போட்டார்..

என் புதிய எஜமான், எனக்கு உண்ணக் குறையே வைக்கவில்லை…

காடுகளில் அலைந்துத் திரிந்து, என் பழைய எஜமானின் அதட்டலோடு, வழிதெறியா என் பழைய எஜமானின் குரல் கேட்டு சுற்றித்திரிந்த எனக்கு, இங்கு சிறிது கழுத்து நிமிர்ந்து பார்த்தாலே, அனுதினமும் அகத்திக்கீரையை புசிக்க உணவாக அளித்தார், நான் எங்கும் அலையாமல், நின்ற இடத்திலே புசித்து, வயிறாற உண்ண..

அது மட்டும் எனக்கு கிடைத்தது இல்லாது..

நித்தமும், எஜமானின் மனைவி என்னை சுத்திகரிப்பதோடும்… நன்றாக என்னை அலங்கரித்து… என் நெற்றியில் திலகம் இட்டு… பராமரித்து பேணி காத்தார்..

நித்தமும் எஜமானின் குழந்தைகள், நான் எழுப்பும் ஓசையை என்னிடம் கூறி கூறி விளையாடின.. அனுதினமும் என்னை ஆரத்தழுவி, ஏதேதோ பேசி, என் மீது மிகுந்தப் பாசத்துடன்..

அத்துணை மகிழ்ச்சி என்னுள்ளே… நான் என் பழைய எஜமானிடம் இருந்து, வருந்தி வந்து சேர்ந்த இடம் சரியானதே என்று நினைத்து மகிழ்ந்திருந்தேன்..

இவையெல்லாம் கிடைக்கப்பெற்ற யான், என் இறுதியும் இறுதியில் இயற்கையாகவே நிகழும் என எண்ணியிருந்தேன்..

மாறாக…,

திடீரென்று, என் எஜமானின் வீட்டு சொந்தங்கள், படைசூழ வந்தன..

அவர்களும் என்னை ஆரத்தழுவி, தனது பாசத்தை வெளிப்படுத்தினர்.

அவர்களும், நான் உண்டு என் வயிறு நிரம்ப அகத்திக்கீறையை தன் கரங்களால் ஊட்டி, நான் என் குடல் செரித்து இட்ட மலத்தையும் கூசாமல் எடுத்து, நான் இருந்த இடத்தை சுத்திகரித்து, என்னை பராமரித்துப் பார்த்துக்கொண்டனர்..

இவ்வளவு அன்பா என்மீது?…

இவ்வளவு பாசமா என் மீது?…

இவ்வளவு பற்றா என்னை பேணிக் காப்பதில்?…

என எண்ணி நான் திழைத்திருந்த போது…

வீட்டிற்க்கு வந்த சொந்தங்களும், என் எஜமான் மற்றும் மனைவி, மழலை குழந்தைகளும், ஒரு சேர ஒரு பெரிய வாகனத்தில் ஏற, என்னையும் ஏற்றி சென்றனர்… என்றும் இல்லாது போல், இன்று அலங்கரித்து..

என்னை விட்டுச்செல்ல மனம் இல்லாத காரணத்தினால், மற்றும் என்னை பாசத்துடன் பார்த்துக்கொள்ள ஆள் இல்லாமையால், என என் மனதில் எண்ணியிருந்தேன்..

பின்புதான் தெரிந்தது,… என்னை அழைத்துச் சென்றது, என் மீது உள்ள பாசத்தோடு இல்லை..

என்னை பல கூறாக்கி படையல் போட்டு… நா ருசிக்க உண்ண என்று…

வாகனம் நின்றது ஒரு கோவிலில்..

சொந்தபந்தம் இறங்கியது கீழே..

நானும் இறங்கினேன்… என் எஜமான் மழலைக் குழந்தை, என்னை அன்போடு அழைத்துச்செல்ல…

கோவிலில் திருவிழா… எங்குப் பார்த்தாலும் மக்கள் அலைமோதும் கூட்டமும்..

என்னைப்போல் அறுபடக் காத்துக் கொண்டிருக்கும், என் இனத்தின் கூட்டமும்..

நானும் என் இனத்துடன் சேர்த்து நிற்க வைக்கப்பட்டேன்.. என் எஜமானால்..

சிறிது நேரத்தில், என் எஜமானும், எஜமானின் சொந்த பந்தங்களும் மறைந்துவிட்டனர், என் கண்முன்னே!

நான் சுற்றி முற்றி பார்க்க காணவில்லை..

சிறிது நேரத்தில், என் எஜமான் என் கண்முன்னே மழித்த மீசையுடனும், மொட்டையடித்த தலையுடனும், சந்தனம் பூசியவாறே!..

மழலை குழந்தைகளும் ஒரு சேர..

அப்போதுதான் தெரிந்தது எனக்கு…

எஜமான் தன் வேண்டுதலை நிறைவேற்ற, தன் தலைமுடியை காணிக்கையாகவும்… என் தலையை காணிக்கையாகவும் அளிக்க… இறைவனிடம் வேண்டியிருக்கிறார் என்று..

ஆரவாரம் சூழ்ந்த கோவிலின் வாசலில் என்னை நிறுத்தி, என்னை பராமரித்து அலங்கரித்த எஜமானின் மனைவி..

எனக்கு மாலை அணிவித்தும், மஞ்சள் நீர் ஊற்றியும், என் தலை அறுபட, என் தலையசைவை சம்மதமாக எதிர்நோக்கி காத்திருந்தனர்.

அசைத்து விட்டேன் தலையை..

வானுயர தூக்கியிருந்த அறுவாள் தாங்கிய கை, கன நேரத்தில் என் தலையை தனியே பறக்கவிட்டது, என் இரத்தம் தெறிக்க…

அறுபட்டுக் கிடக்கிறேன் நான்!…

துடி துடித்து… இரத்தம் வடிய கிடக்கிறேன் நான்!…

அசைவின்றி நிற்கிறார்! ஏதும் அறியாதது போல் என் எஜமான், தன் சொந்தங்கள் படை சூழ…

மழலை குழந்தைகளோ, கண்மூடி நான் அறுபட்டு துடிப்பதைக் காணாது..

சொந்தபந்தங்களோ, என்னைப் பலக் கூறுகளாய் அறுத்துப்  போட்டுவிட்டு, ஒன்றாய் அமர்ந்து பல கதைகளைக் கதைத்து பேசிக்கொண்டிருந்தனர்… நான்  நெருப்பில் வைத்த சட்டியில், நன்றாய் அவியும் வரை.. 

எனக்குப் பசியாற உணவளித்த கரத்தினால், என்னை ஆசையுடன் தூக்கி வாயில் போட்டு உண்டனர், அதிக ருசிகண்டு… தனது வயிறு நிரம்ப…

மழலைக் குழந்தைகளும், என்னை மென்று விழுங்கியது… அதீத ருசி கண்டு…

அதிக அன்பளித்தாய், பராமரித்தாய்…

அறுபட்டு, அவிந்து வாழை இலையில்…

நறுமணம் வீச உன் விருந்தினருக்கே…

என்னை விருந்தாக்கி படைத்தாய்..

– கதைப் படிக்கலாம் – 14

இதையும் படியுங்கள் : தர்மம் வெல்லும்!

Exit mobile version