கூத்து…. என் குலத்தொழில்

– பாமதிநாராயணன்

செல்வமும், விமலாவும் அத்தை மகன், மாமன் மகள் என்ற உறவின் அடிப்படையில் பெரியவர்கள் விருப்பப்படி தம்பதிகளானாலும், இருவருமே ஒருவரையொருவர் காதலித்து மணந்தவர்கள் தாம்.

அவன் அப்பா ஒரு கூத்துக் கலைஞராக இருந்தவர். சிறு வயதிலிருந்தே அப்பாவுடன் தானும் போய் சின்ன சின்ன வேஷங்கள் கட்டி நடித்ததில், அவன் மனசில் கூத்துக் கலை மீது,   ஒரு தனி ஈடுபாடு வந்துவிட்டது. தாத்தா, அப்பா எல்லோரும்   போற்றி வளர்த்த அந்தக் குலத்தொழிலைத் தானும் விடக்கூடாது   என்று மனதில் ஒரு இலக்கு வைத்துக்கொண்டு, வேஷம் கட்டி   நடித்து, நடித்து தனக்கென ஒரு முத்திரை பதித்துக் கொண்டான்.

அவனுக்கு விமலா மேலும், விமலாவுக்கு அவன் மேலும்  கொள்ளைக் காதல்.

விமலாவுக்கு அவன் விவசாயம் பார்ப்பதும்… கூத்துக்கு வேஷம் கட்டுவதும் இரண்டுமே பிடிக்கவில்லை. இந்த இரண்டையும் அவனை விட்டுவிடச் சொல்லணும். டவுனுக்குப் போய் ஆபீஸ் வேலை பார்க்கச் சொல்லலாம். நாம சொன்னா கேக்காமயா இருப்பாரு.

கல்யாணம் முடிந்து இரண்டு வாரம் இருக்கும். குலதெய்வ பூஜை,   படையல், நேர்த்திக் கடன்….. என்று எல்லா வழிபாடுகள்… உறவினர் வீட்டு விருந்துகள்.. எல்லா ஆரவாரங்களும் முடிந்து ஓய்வாக  இருந்த தனிமையான நேரத்தில், விமலா தன் ஆசைக் கணவனிடம்  தன் உள்ளக் கிடக்கையை வெளியிட்டாள்.

“ஏங்க… நாம எதுக்கு கிராமத்திலே இருக்கணும். நீங்க ஏதாவது டவுனில் ஆபீஸ் வேலை தேடிக் கொள்ளுங்கள்..” புது மனைவிக்குரிய வெட்கம், தயக்கம் சூழக் கேட்டாள்.

மனைவி ஸ்தானம் தான் புதுசு.. மற்றப்படி விமலாவுக்கு அவனைப் பற்றி எல்லாம் தெரியுமே. இருந்தும் ஏன் இப்படி கேட்கணும்.. புதுக் கணவனுக்குப் புரியவில்லை.

“ஏம்மா அப்படிச் சொல்றே.. ரெண்டு பேருக்குமே கிராம வாழ்க்கை பழக்கம் தானே..”

“பழக்கம்தான்… ஆனால் எனக்கு நகரத்திலே வசிக்கணும்னு சின்ன வயசிலிருந்தே ரொம்ப ஆசை..”

“நீ இதுக்கு முன்னாடி சொன்னதே இல்லையே. அப்படி ஆசையாயிருந்தா.. உங்கப்பாக்கிட்டே சொல்லி டவுன் மாப்பிள்ளையா கட்டியிருக்கலாமில்ல..” சிரித்துக்கொண்டே செல்வம் கேட்கவும்,

“அச்சச்சோ… என்ன வார்த்தை பேசறீங்க… நான் பிறந்ததிலிருந்தே நம்ம ரெண்டு பேருக்கும் முடிச்சு போட்டுட்டாங்களே  பெரியவங்க. அப்பத்திலிருந்தே நாம புருஷன் பெண்டாட்டிதானேங்க. நீங்க இப்ப ஏன் இப்படி பேசணும்..” விமலா அழுது விடுவாள் போலிருந்தது…

“அட போம்மா.. நான் சும்மா விளையாட்டுக்கு சொன்னாக்கா… நீ  சொல்றமாதிரி நாம சிறு வயசிலேர்ந்து அந்த நினைப்புல தானே இருக்கோம்.” அவள் முதுகில் தட்டிக்கொடுத்து சமாதானப்படுத்திய  செல்வம், என்னைப் பத்தி உனக்கு நல்லாத் தெரியுமே.. விமலா..  இதுவரைலே நீ என்கிட்டே கூட இப்படிச் சொன்னதே இல்லையே..

“உங்ககிட்டே பயமாயிருந்தது. இப்பத்தான் எனக்கு உரிமை  கிடைச்சூடுத்தே. அதான் தைரியமா கேட்கிறேன்”. நாம    நகரத்துக்குப் போயிட்டோம்னா, நீங்க விவசாயம் பார்க்கிறேன்னு  நாள் முச்சூடும் வெயில், மழைனு பாக்காம வயக்காட்டிலேயே  அல்லாட வேண்டாம். சொகுசா மின் விசிறிக்கடியில் நாற்காலியில் உட்கார்ந்து வேலைப் பார்க்கலாம். அப்புறம் இந்தக் கூத்து, வேஷம் கட்டறது எல்லாத்தையும் விட்டுடுங்கோ. நீங்கப் படிச்ச படிப்புக்கு   இதெல்லாம் கேவலமில்லையா.

“விமலா.. நீ புரியாமல் ஏதேதோ சொல்கிறாய்.. இந்தியாவின்  முதுகெலும்பு விவசாயம் தான். விவசாயிகளின் உழைப்பால் எத்தனை உயிர்கள் பசியாறுகின்றன. சரி விடு…. அடுத்து நான் கூத்துலே வேஷம் கட்டக்கூடாதுனு சொல்றே…. ஏன் உனக்கு  இப்படியெல்லாம் சிந்தனை ஓடுது. விவசாயம் என் மூச்சுன்னா… கூத்துக்கலை என் உடம்புடன் பிறந்தது. என் உடம்பு முழுக்க ஓடும்  ரத்தம் தெரியுமா.. எங்கக் குடும்ப ரத்தச் சொத்து.”  

“கூத்து நம்ப நாட்டு புராதனக் கலையாகும். ஏற்கெனவே அந்தக் கலையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா அழிஞ்சுட்டு வருது. எங்களைப் போன்ற இளம் கலைஞர்கள் அதை அப்படி அழியவிட மாட்டோம். அந்தக் கலை மேலும் வளர பாடுபடுவோம். நீ என் அன்பு மனைவி… உன்னால் எனக்கு அனுகூலமாக இருக்கப் பிடிக்காவிட்டால் பரவாயில்லை. ஆனால் இந்த ரெண்டையும்   செய்யக்கூடாது என்று என்னை தயவு செய்து தடுக்காதேம்மா.  மற்றபடி நீ என்ன சொன்னாலும் கேட்கிறேன்.. செய்கிறேன்..” என்று நீளமாக பேசி முடித்த கணவனிடம், விமலாவால் என்ன மறுமொழி சொல்ல முடியும்..

சரி போ.. போகப் போகத்தான் இவரை சரிபண்ண முடியும். இப்போதைக்கு விட்டுத் தான் பிடிக்கணும். மாலை…. விமலா… சூப்பரா காபி போட்டுக்கொண்டு வா.. இரண்டு பேரும் சேர்ந்தே குடிக்கலாம். குஷாலாகப் பேசிக்கொண்டே டபரா, டம்பளர்களை எடுத்து சமையல் மேடையில் வைத்தான் செல்வம்.

“செல்வம்… வீட்லே இருக்கியாப்பா..” வாசலில் யாரோ கூப்பிடும்  சத்தம்.”

“விமலா, பகவதி அம்மன் கோயில் தர்மகர்த்தா வந்திருக்கிறார்.  அவருக்கும் சேர்த்து காபி எடுத்துட்டு வா.” மனைவிக்கு  ஆணையிட்டவன், அவசரமாக  ஓடினான்.

“வாங்கய்யா. நீங்களே என்னைத் தேடி வந்திருக்கீங்களே. என்ன விஷயமோ.. சொல்லி விட்டிருந்தா, நானே வந்திருப்பேனே”‘

“ஏம்பா. புதுசா கல்யாணமானவன் நீ. பெஞ்சாதியோட சந்தோசமா நாலு இடம் போக வரவே உனக்கு நேரம் பத்தாது. அடுத்த வாரம்   நம்ம கோயில் பூமிதி திருவிழா வருதே.. ராத்திரிக்கு மகாபாரதம் கூத்து இருக்கே. பாரதம்னாலே நீ தானே கர்ணன் வேஷம் கட்டுவே..  இந்த தடவை நீ வருவியா.. என்ன பண்ணுவியோன்னு ஒரே யோஜனை. உன்னோட வேஷங்களை நீ தான் கட்டணும்னு  ஜனங்க ஒரே பிடிவாதம். நீ எந்த வேஷம் கட்டினாலும், அந்தப் பாத்திரமாவே  மாறிடறேயே. இந்த முறை நீ வரணுமேன்னு   யோசனையாவே இருந்தது. நாள் நெருங்கிகிட்டே இருக்கே. அதான்   புறப்பட்டு வந்துட்டேன்.”

“ரொம்ப சந்தோசம் ஐயா… நான் போய் வேஷம் கட்ட வராம இருப்பேனா. கண்டிப்பா நாளையிலிருந்து ஒத்திகைக்கே  வரேன்.” என்று ஒப்புக்கொண்டான்.

“ஒரு நிமிஷம் ஐயா. காபி சாப்பிடுங்கள்” என்று சொல்லிவிட்டு..  ஏன் இன்னும் விமலா எடுத்திட்டு வரலை…. என்ற யோசனையோடு உள்ளே சென்றான்.

உள்ளே… மூக்கிலே வேத்துவிட்ருச்சு போல வந்துட்டாங்க..  கூத்துன்னும்…. வேஷம்னும்.. விமலா கடுப்புடன் முனகிக் கொண்டிருந்தது… செல்வத்துக்கு நன்றாகவே காதில் விழுந்தது…. அவளுக்கு கூத்தின் மேல் இருந்த துவேஷமும் புரிந்தது.  கண்டுக்காமல் தயாராக இருந்தக் காபியை மட்டும் எடுத்துக் கொண்டு சமையலறையை விட்டு வெளியேறினான்.

அன்றிலிருந்து அவன் வேஷம் கட்டுகிற தினங்களில் எல்லாம்  விமலா மூஞ்சியைத் தூக்கி வைத்துக்கொண்டு கணவனை  நோகடிப்பாள். செல்வம் எதையும் பொருட்படுத்தாமல் அமைதியாக   தன் வேலையைப் பார்த்துக்கொள்வான்.

ஐந்து ஆண்டுகள் ஓடி விட்டன. ஆஸ்திக்கொரு ஆண், ஆசைக்கொரு பெண் என இரண்டு குழந்தைகள். விமலாவும் செல்வமும் எல்லாவற்றிலும் ஒற்றுமையாக வாழ்ந்தாலும் கூத்து விஷயத்தில் மட்டும் அவர்களுடைய ஒத்துழையாமை குணம்  அப்படியே இருந்தது.

அதிலும் ராமாயணக் கூத்தில் செல்வம் தான் அனுமார் வேடம்  கட்டுவான். அது விமலாவுக்கு ரொம்ப ரொம்ப பிடிக்காது. குரங்கு மாதிரி மூஞ்சியை வைத்துக்கொண்டு வாய்பக்கம் பூரா சிகப்பு சாயத்தைப் பூசிண்டு, போதாக்குறைக்கு பின்னாடிப் பக்கம் நீளமா வாலு வேறே வெச்சுக்கணுமாம்.. பாக்க சகிக்காது…  சே… ன்னு புலம்புவாள். கோபத்தை பாத்திரங்களில் காட்டுவாள்.

அந்த வருடம் திரௌபதியம்மன் திருவிழாவுக்கு… ஊரில் பெரிய திருவிழா…. செல்வம், விமலாவின் வீட்டில் எல்லாரையும் வரச்சொல்லி அழைத்திருந்தான். விமலாவின் பெற்றோர்களுக்கு  ஏதோ காரணத்தினால் வர முடியவில்லை. விமலாவின் தங்கை கமலாவை மட்டும் அனுப்பி வைத்தனர்.

அன்று விழாவின் கடைசி நாள். ராமாயணக் கூத்து. செல்வம் தான் அனுமார் வேஷம் கட்டுவான்.. வழக்கம்போல் விமலா கடுப்புக்   கவசம் அணிந்திருந்தாள். கூத்து மாலை ஆறு மணிக்குத் தான்  ஆரம்பமாகும். செல்வம் காலையிலேயே கிளம்பிப் போய்விட்டான்.

“அக்கா நீயும் நானும் கூத்துப் பார்க்கப் போலாமாக்கா.” கமலா மாலையில் விமலாவிடம் கேட்டதற்கு”

என்னடி தெரியாத மாதிரி கேக்கறே… அந்த மனுஷனோட இந்த விவகாரம் எனக்கு சுத்தமா பிடிக்காதுன்னு உனக்குத் தெரியாதா. நானெல்லாம் வரமாட்டேன். வெடுக்கென்று மறுத்துவிட்டாள்.

“அப்போ நான் மட்டும் போயிட்டுவரேனே.. தெருவே போறாங்களே.. அவங்களோட திரும்பி வந்துடுவேன்..” கமலாவும் விடாமல்  கேட்டாள்.

“சரி…சரி… ஜாக்ரதையாகப் போயிட்டு வா.” என்று தங்கையை  அனுப்பினாள் விமலா.

வயசுப் பெண்ணைத் தனியே அனுப்பியிருக்கோமே…. மனதில்  கொஞ்சம் குற்றவுணர்ச்சி உறுத்த. கூத்து முடியும் நேரம்.. வாசலில் வந்து எட்டி எட்டிப் பார்க்கத் தொடங்கினாள் விமலா.

“இன்னைக்கு கூத்து ரொம்ப சூப்பரில்லே… அனுமார் வேஷம்.. நிஜம் அனுமார் மாதிரியே நம்ப செல்வத்துக்கு அவ்வளவு பொருத்தமாயிருந்தது….

தெருவாசிகள் ஒருவருக்கொருவர் பேசிக்கொண்டே அவரவர்கள்  வீடுகளுக்குச் சென்றனர். அவர்களுடன் கமலாவைக் காணோம்… விமலாவுக்கு பகீரென்றது.. ஐயோ… தங்கைக்கு என்ன ஆச்சோ.. அவளைத்தனியா அனுப்பியிருக்கக் கூடாதோ… வயிற்றில் புளிகரைக்கத் தொடங்கியது. அப்பா, அம்மாக்கு என்ன பதில் சொல்வேன். அடி வயிற்றில் பயப்பந்து உருண்டது… வீம்பு பார்க்காமல் நானும் கூடப் போயிருக்கணுமோ…. வாசலுக்கும் உள்ளுக்குமாய் நடையாய் நடந்தாள். நேரமாக ஆக பயமும் பதட்டமும் கட்டுப்படுத்த முடியாமல் போக, பூஜையறையில்  நின்றுக் கண்களை மூடி பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.

அரை மணி நேரம் கடந்திருக்கும். வாசலில் செல்வத்தின் பைக் சத்தம்… ஐயோ…. இவர் வேறே வந்துட்டாரே.. வேஷம் கட்டுறன்னிக்கெல்லாம் ரொம்ப நேரமாகுமே.. வேஷத்தெல்லாம் கலைச்சுட்டு அங்கேயே சாப்பிட்டு, அரட்டை அடிச்சுட்டு ஏறக்குறைய விடியற்காலம் ஆகிடுமே. இன்னைக்குன்னு சீக்கிரமே… இவரிட்ட தங்கையை காணோம்னு எப்படி சொல்றது… நடுங்கிக்கொண்டே வாசலுக்கு வந்தவளுக்கு… ஆச்சரியம் காத்திருந்தது.

அனுமார் வேஷத்துடன் வண்டியில் செல்வம்… பின்னாடி அமர்ந்திருந்த கமலா இறங்கி… அக்கானு அழுதுக்கொண்டே ஓடி  வந்து விமலாவை கட்டிக்கொண்டாள்… அக்கா.. கூத்து முடிஞ்சதும்   நம்ப தெருவுக்காரங்களைக் கண்டுபிடிக்க முடியலை. தனியாவே வந்திட்டிருந்தேனா… அதாங்க்கா தப்பாயிடிச்சு. மாமாவாலதான்  இன்னைக்கு என் வாழ்க்கைப் பறிபோகாம நிலைச்சுது.. மாமா  .. நீங்கதான் மாமா என் தெய்வம்.. நீங்க செஞ்ச இந்த உதவியை  நான் மறக்கவே மாட்டேன். இன்னும் என்னென்னவோ சொல்லி அரற்றினாள்.

“விமலா, இன்னிக்கு எனக்கு இந்த வேஷத்துக்கு ஏகப்பட்ட பாராட்டுக்கள். என் மனைவி ஒருநாள் கூட கூத்துப்பார்க்க வருவதில்லை. இன்று ஒரு நாளாவது நாமே வீட்டுக்குப்போய், என் வேஷத்தைக் காட்டிவிட்டு வரலாம் என்று திடீரென்று எனக்குத் தோன்றிய ஆசையில், கூத்து முடிந்ததும் அப்படியே கிளம்பினேன்.

வாழைத்தோப்புக்கு அருகில் வரும்போது.. தனியாக நடந்துக் கொண்டிருந்த நம்ப கமலாவைப் பார்த்து… இவள் ஏன் இங்கு இந்த நேரத்தில்… நான் குழப்பத்துடன் யோசிக்கும்போதே தோப்புக்குள்ளிருந்து இரண்டு ஆட்கள் வந்து கமலாவை இழுத்துச் சென்றனர்.

பதறினாள் விமலா.

உன்னாட்டம் தான் நானும் பதறிப்போய் வண்டியை வேகமாக செலுத்தி தோப்புக்கு முன்பு நிறுத்திவிட்டு உள்ளே விரைந்து  ஓடினேன்.

“ஆமாக்கா… அந்தச் சமயம்… அந்த ரெண்டு பேரும் கத்தியை காட்டி…” இந்த பாரு. இப்போ நாங்க சொல்றபடி எங்க ஆசைக்கு ஒத்துக்கிட்டு, எங்களோட சந்தோஷமாயிருந்தீன்னா… எல்லாம் முடிஞ்சப் பிறகு நாங்களே உன்னைப் பத்திரமா உங்க வீட்டு வாசலில் கொண்டுப்போய் விட்டுடுவோம்… ஏதாச்சும் மொடக்கடி செஞ்சியானா.. பாத்தியா எங்க கையிலே என்ன இருக்குன்னு..      என்னை மிரட்டிக்கிட்டு இருந்தாங்க.. மாமாவைப் பார்த்ததும்  ரெண்டு பேரும்….. அய்யய்யோ… அனுமாருடானு கத்திக்கொண்டே   நடுங்கிப்போய் அங்கிருந்து ஓடியே போயிட்டாங்க….” அழுதுக் கொண்டே நடந்ததை விளக்கினாள் கமலா.

அம்மாடி ஆத்தா.. கணவன் மட்டும் கமலாவைப் பார்க்காதிருந்தால்… அதுவும் கட்டிய வேஷத்துடனேயே.. குலை நடுங்கிற்று விமலாவுக்கு. நடந்திருக்கக்கூடிய விளைவின் விபரீதம் புரிபட புரிபட… பொட்டில் அறைந்தாற்போல் புத்தியில் ஒரு உண்மை உறைத்தது.

கணவனின் கலை சமர்ப்பணத்தை.. கொஞ்சமும் மதிக்காமல்… அவரின் எந்த வேஷத்தைக் கேவலமாய் பேசிக் கரித்துக்   கொட்டினேனோ… அது தானே இன்று உடலும் உள்ளமும் ஒன்றி ஒரு செயல் செய்யும்போது, அதற்கு ஒரு உன்னத சக்தி நிச்சயம்  உண்டு.

சடாரென்று “அந்த ரௌடிப் பசங்களுக்கு மட்டுமில்லிங்க.. எனக்கும் நீங்கள் அனுமாராத்தான் தெரிகிறீங்க.” கண்கள் அருவியாய் நீரைக்கொட்ட கணவனின் கால்களில் விழுந்தாள், விமலா.

– கதைப் படிக்கலாம் – 78

இதையும் படியுங்கள் : சம்பிரதாயம்

Exit mobile version