கோழியக் காணோம்…

– சி. கண்ணன்
hen
kozhi
chicken
cock

ஏலேய்… தூமைச்சீலை, எப்படிடா தூங்குன, கூடையில கவுத்திருந்த கோழியை தூக்கிட்டுப் போனதக் கூட பாக்கமா… அப்பன மாதிரியே… ஆக்கங்கெட்ட கூகையா இருக்கானே! ன்னு கத்தி, வௌக்கமாத்த எடுத்து வீதியில் வந்து நின்னா கச்சம்மா.

பால் எடுக்கிற சின்ன மாயன், சிட்டுப்பிள்ளை கொட்டத்துக்குp போயி இரண்டு மாட்டுப் பால பீய்ச்சிட்டு, கழுவன் டீ கடையில் மூணு லிட்டர ஊத்திட்டு நின்னான்.

எப்பவும் சின்ன மாயன் பேச்சி வீட்டுல மூணு மாட்டுப் பாலைப் பீய்ச்சிட்டு, பஞ்சம்மா வீட்டுக்கு வந்து மாட்டுப் பாலை பீய்ச்சிட்டு, பவுனுத்தாயி வீட்டுக்குப் போயி, கொடிராசா தோட்டத்துக்குப் போகும் போதுதான் பொழுது விடியும். இன்னைக்கு இருக்கிறதப் பாத்தா, மாயன் பஞ்சம்மா வீட்டுக்குப் போறதுக்கு முன்னாடியே பொழுது விடிஞ்சிரும்.

வௌக்கமாத்தோட தூர ஒரு சேர தொடையில் வச்சு சரி செஞ்சிக்கிட்டு, கச்சம்மா, கோழியை களவாண்டவன,  தொவட்டிக்கிட்டே அடிக்கனுமுன்னா.

காளியாட்டம் ஆடுறது கச்சம்மாவுக்கு புதுசு இல்லை. நல்லா தெரிஞ்சவன் கச்சம்மா வீட்டுல கைவச்சுருக்க மாட்டான். யார் செஞ்ச வேலையா இருக்குமுன்னு பெரியமாயன், டீ கிளாச கடிச்சிக்கிட்டே யோசனை பண்ணிக்கிட்டுருந்தார்.

பேச்சி கொண்டைய அள்ளிச் சொருகி வீதிக்கு வந்து, “மதினி நம்ம தெரு நாய் கூட கொலைக்கல, இதைச் செஞ்ச எடுபட்ட பய இங்கனகுள்ளத்தான் இருக்கனும்“, இப்படியே விட்டா இன்னைக்கு இது… நாளைக்கு இதவிட பெரிசான்னு பேச்சி எடுத்துக்கொடுக்க, கச்சம்மா, காதுல கேட்க முடியாததையெல்லாம், வாய் கூசாமா, மட்டு மரியாத பாக்கமா பேசுனா. இன்னைக்கு அக்கம் பக்கம் இருந்தவங்க அத்தனைப் பேரையும் கச்சம்மா சத்தமே எழுப்பிவிட்டுச்சு…

கோழியோட வேலையை கச்சம்மா கச்சிதமா செஞ்சிக்கிட்டே இருந்தா… நிறுத்துற மாதிரி தெரியலை.

டீ கடையிலிருந்த பெரியமாயன், இவப் பேச்ச இப்படியே விட்டிக்கிட்டிருந்தா எப்படி? விசுக்குன்னு எந்திருச்சு, நாலு எட்டுல, கச்சம்மா கொட்டத்துக்கு வந்தார். கரகரன்னு செருமி “வீட்டுக்கு போமா” என்றார். எந்த சில்லரைப்பயன்னு பாத்து, தட்டி வைப்போம்.

இல்லண்ணே… அப்டியெல்லாம் லேசுல விடமுடியாதுண்ணே… ”ஏழையக் கண்டா மோழையும் பாயும், எரும மாட்டக் கண்டா பசுமாடும் ஏறுங்ற கணக்கா” ஏம் வீட்டு கோழியை கைவச்சவனை சும்மா விட முடியாது.  நான் ஒன்னும் அம்புட்டு அவத்தை இல்லை. கண்டுபிடிச்சேன், ஏம் வீட்டு தலைவாசப் பக்கம் கூட தலைவச்சு படுக்க விடமாட்டேன்.

சரிம்மா, ஒன்னையப்பத்தி எல்லாம் தெரியும்… ஓம் மருமகன் நைட்டு வேலைக்குப் போயிட்டு திரும்புற நேரம், இப்படி பேசிக்கிட்டுருந்தா, நல்லாவா இருக்கும், போம்மா, பார்த்துக்கலாம்…

சேலையையும் உள்பாவடையும் சேர்த்து, இன்னும் கொஞ்சம் மேல எடுத்து சொருகுனா கச்சம்மா. மூக்கை சாக்கடப் பக்கமா சிந்திட்டு, யாரு வந்தா என்னா? நான் களவாண்ட மாதிரி பேசுறண்ணே… பெரியமாயன் பக்கம் சண்டைக்குப் போக ஆரம்பிக்க, கச்சம்மா மகன் அருண், மூஞ்சிய கழுவிக்கிட்டு, வீதிக்கு வந்து, “மாமன், நின்னு, ஒன்னைய மதிச்சு சொல்லும் போது அவர் கூட சண்டை போட்டுக்கிட்டு… போமா” என்றான். கச்சம்மா காதில் வாங்குவது போல் தெரியவில்லை.

அருணுக்கு கல்யாணம் முடிக்கிற வயசு. சொந்தம் பந்தம் ஒட்டு உறவுல யாரும் பொண்ணு தர்றமாதிரி தெரியலை. எல்லாம் கச்சம்மா வாய்க்கு பயந்துதான். அவபாட்டுக்கு கூறு இல்லமா பேசுவா… இதுதான் கச்சம்மா வாங்கியிருக்கிற பேரு.

கச்சம்மா கூட பொறந்தவக இரண்டு அண்ணே, இரண்டு தம்பி. நாலுபேரு கூட பொறந்தவ, நாலுபேரு கூட பொறந்தவன்னு பெருமை பேசுவா… அதே போல பேச்சும் அதிகமாக பேசுவா… இன்னைக்கு அவ வாய்க்கு யாரு பூட்டு போடுவான்னு தெரு ஜனமே எதிர்பார்த்து, அவ வாயைப் பார்த்து நிக்குது.

எதிர்த்தாப்புல இருந்து, எதிர்ப்பேச்சே இல்லாம, கச்சம்மா இவ்வளவு அலசல் ஏன்னுதான் தெரியாம பெரியமாயன் விழிப்பிதுங்கி நிக்கிறாரு.

“மாமா, அம்மா அது பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கட்டும், நீ வீட்டுக்கு போ” ன்னான் அருண். அது இல்லை மருமகனே, அசிங்கமா இருக்குல, அது அம்மாவுக்கு தெரியனமுல்ல, நீ… கூட கூட பேச்சுக் கொடுக்காம, அதுவா பேசி அடங்கட்டும் என்றான் அருண்.

பெரியமாயனுக்கு மனசு கேக்கல, ஏம்மா… இப்படி… மனசு வருந்தி கேட்க, ண்ணே… நீ பேசாம போயிரு… அப்பறம் வேற மாதிரி…? என்னம்மான்னு பெரியமாயன் எகிற, ஓடி வந்து அருண், வா மாமான்னு வீட்டுக்கு இழுத்திட்டுப் போனான்.

வேலப்பர் கோவில் மலைக்கு மேலேயிருந்து சூரியன் செவ செவன்னு எந்திரிச்சு வருது… கச்சம்மா பேச்சுக்கு எந்திரிக்காத ஜனம், விடியலுக்கு எந்திருச்சு வெளியில் வந்தார்கள். வெயில்பட்டு, புல்லின் மேலிருந்து பனித்துளியும் விலகத் தொடங்கியது. ஆனாலும், கச்சம்மா கச்சேரியை முடிக்கவில்லை. எதிர்பாட்டே இல்லாமல் இவ்வளவு நேரம் எப்படி? பேச்சியும் யோசிக்கத் தொடங்கினாள்.

மதினி, போய் வீட்டு வேலையைப் பாரு, காலைக் கஞ்சியை குடிச்சிட்டு, போலீசுக்கிட்ட கேசு குடுப்போம் என்றாள், பேச்சி.

அருண், “ஏய்ந் அத்தை 500 ருவாக்குக் கூட போகாத கோழிக்கு, 5000 ருவா செலவு செய்யனுமா”, ஏற இறங்கப் பார்த்துச் சொன்னான். அது இல்ல அருணு, சும்மா விடக்கூடாதில்ல…

போராடிப்பார்த்த அருண், என்னோம்மோ, செய்-ன்னு கம்மாய்க்கு புறப்பட்டுட்டான். வேப்பங்குச்சியை ஒடித்து, நல்லா மென்னு, பல்லு விளக்கிட்டே, கம்மாக்குள்ள ஒதுங்கி ஒக்காந்தான். பக்கத்துப் பள்ளத்திலிருந்து, பழனி “மாப்ள விசயம் தெரியுமா”ன்னா.

என்னடா, மாப்ள கோழியத் தூக்கனுது தொடதொட பெருமாள்? இல்லை களத்து வீட்டு கோபாலா? ன்னு திருப்பிக் கேட்டான் அருண்.

போட மாப்ள, அத்தை, கோழியக் காணோமுன்னா கத்திக்கிட்டுக் கிடக்கு, நீ… கூறுகெட்டவந்தாண்டா, ஆவணி பொறக்கவும் உங்க பெரிய மாமன் மகள பொன்னுகேக்கனுமுன்னு சொல்லி வச்சிருந்துச்சு, தெரியுமில்ல… தெரியுமுன்னான் அருண்.

நேத்து ராத்திரியே ஒம் மாமன் மக ரவியோட திருப்பூருக்கு போயிட்டா. பால் பீச்ச வந்த சின்னமாயன் விசயத்த சொன்னதிலிருந்து ஒங்க அம்மா, ஆங்காரப்பட்டு, ஜாடையா வம்பிக்கிழுத்திக்கிட்டு இருக்கு. வெளிய வந்தா விடிவு வந்துருமுன்னு ஒங்கம்மா நினைக்குதுன்னு நினைக்கிறேன்னு பழனி முடித்தான்.

கால் கழுவிவிட்டு, வீட்டுக்குப் போன அருண், “எம்மா, ஒரு விசயம், என்ன? என்று கடுகடுத்துப் பார்த்தாள் கச்சம்மா. வந்து, என இழுத்து, இன்னைக்கு பொண்ணுப் பார்க்க தாமரைக்குளம் போகணும்மா” என்றான். என்னடா சொல்ற? என்றாள் கச்சம்மா. நமக்கு அவங்க முறைதான், இதுவரைக்கும் சம்மந்தம் இல்லை, இனிமே வச்சிக்கிட்டா என்ன? என்றான் அருண்.

பிள்ளை பேரு நதியா, ஏங்கூடதான் படிச்சிச்சு, உனக்கு ஞாபகமிருக்கா… நீ, காலேஜ்-க்கு வந்தப்ப, வராண்டாவுல உக்காந்து பேசிக்கிட்டு இருக்கும் போது, நான் மாமனப் பத்திக் குறைசொல்ல, ஏலேய், நீ… முறிச்சி முறிச்சி அழுகிறேன்னு, கிணறுவெட்ட தெக்குச்சீமைக்குப் போனவன், அங்கிருந்து வந்துக் கயிறு போட்டு தூக்கி வளர்த்தவன், அவன இப்படி பேசிறுயே வஞ்சயில்ல, அப்ப வந்து, இந்த அழுகை விசயத்தை உங்கிட்ட விசாரிச்சப் பிள்ளைதான்.

ம்.. நினைவிருக்கு… நல்ல பிள்ளைதான், அப்ப பார்த்தப்பா நல்ல வசதியான வீட்டுப் பிள்ளைமாதிரி இருந்துச்சே… நமக்குத் தருவாங்களா?

எம்மா… உங்கிட்ட பேசுன அன்னைக்கே, அந்தப்பிள்ளைக்கு உன்னப் பிடிச்சுப் போச்சாம், போனா, கச்சம்மாவுக்கு மருமகளா போறதுதான் சொல்லிருச்சாம்.

ஆவணி பொறந்திருச்சு, போய் பேசிட்டு ஐப்பசி முத மூகூர்த்த்த்திலேயே கல்யாணம் வச்சுக்கலாமுன்னு நீ சொன்னா, அவங்க கேட்டுக்கிருவாங்க. அப்பா எட்டரை பஸ்சுல வந்துருவாரு, நீ மாமன்கிட்ட சொல்லிட்டு, நாலுபேரையும் கூப்பிட்டு வா, போயிட்டு வந்துரலாம்.

– கதைப் படிக்கலாம் – 124

இதையும் படியுங்கள் : “திக்கிய மௌனங்கள்”

Exit mobile version