– ப்ரியா பாண்டீஸ்

“ஜானகி, பிள்ளைங்களுக்கு இன்னைக்கு ஸ்பெஷல் கிளாஸ் வச்சிருக்கேன். சாயங்காலம் அப்புவையும், அச்சுவையும் பஸ்ல வரச் சொல்லி நீயே போய் கூட்டிட்டு வந்திரு” என்றவாறு செருப்பை மாட்டி பள்ளிக்கூடம் கிளம்பினார் மாசிலாமணி.
“சரிங்க… வண்டிய பாத்து ஓட்டிட்டுப்போங்க, பக்கத்து தெருல நல்ல தண்ணி பைப்ல, சாக்கடை கலந்துடுச்சுன்னு தோண்டி போட்டுருக்காங்களாம் மாமி சொன்னாங்க”…
“இதுவேறயா, அப்பக் கேன் தண்ணி கொண்டாரா சொல்றேன். அதையே பிள்ளைகளுக்கு சுட வச்சுக் குடு” என்றுவிட்டு ஆக்ட்டிவாவை ஸ்டார்ட் செய்தார்.
வெளி கேட்டை மூடிவிட்டு உள் வந்த ஜானகி, படுக்கையறையை எட்டி, “அப்பு, அச்சு எழுந்திறீங்க, வேன் வந்துரும், தெனோ ஓடி ஓடி கடைசியா போய் ஏற வேண்டியது. அந்தக் கண்டக்டர் பையன் சீக்கிரமா வந்தா என்னம்மான்றான். இன்னும் குளிச்சு சாப்பிட்டு கிளம்பணும்” என இருவரையும் இழுத்து உக்கார வைக்க, “இன்னும் கொஞ்ச நேரம்மா” என ஒன்றையொன்று முந்திக்கொண்டு மறுபடியும் படுக்க… “காலையிலேயே அம்மாவ கோவப்படுத்தாதீங்க” என்றுவிட்டு அவர்களது யூனிஃபார்ம், மற்றும் சிதறிக்கிடந்த புத்தகங்களை பேக்கில் எடுத்து டைம்டேபிள் பார்த்து வைத்துவிட்டு, லஞ்ச் பேக்கையும் எடுத்து வைத்துவிட்டு வர, அப்பொழுதும் இரண்டும் தூங்கிக்கொண்டு தான் இருந்தது. “என்ட்ட அடி வாங்கி எந்திச்சா தான் பொழுதே விடியுமா ரெண்டு பேருக்கும்” என முனங்கிக்கொண்டே வந்தவர், இருவர் முதுகிலும் இரண்டு அடிபோட்டு எழுப்பி கட்டிலை விட்டும் இறக்கி நிறுத்திய பின்பே, சிணுங்கி கொண்டு அரை கண்ணை திறந்து பார்த்தனர் அபரஜித், அச்சுதா இருவரும்.
“ரெண்டு பேரும் பெரிய கிளாஸ் போயிட்டீங்க, இன்னமும் பொறுப்பு மட்டும் வரல. தினமும் எல்லா வேலையும் பாத்து உங்களோடயும் போராட வேண்டியிருக்கு, முடியல என்னால”. “சரி உடனே ஆரம்பிக்காதீங்க. இன்னைக்கு நாங்களே குளிச்சுக்கிறோம். நீங்க போய் சாப்பாட எடுத்து வைங்க” அபரஜித் சொல்ல. “நீ குளிக்கிற லட்சணம் தான் தெரியுமே, காதுல போடற சோப்பு நொரைய கொண்டாந்து காட்டுவியே, வா சீக்கிரம், உன்ன குளிப்பாட்டிட்டு அவளை குளிப்பாட்டணும்” என ஹீட்டரை ஆன் செய்ய, “வேணான்னு சொன்னா கேளுங்களேம்மா, அவள வேணுனா குளுப்பாட்டுங்க, எனக்கு குளிக்கத் தெரியும்” என துண்டை எடுத்துக்கொண்டு குளியலறை புகுந்துவிட்டான். “டேய் அச்சு, பிரஷ்ஷ எடுத்துக் குடுத்திட்டு போடா” என ஜானகி கதவைத் தட்ட, வெளியில் தூக்கி எறிந்துவிட்டு வேகமாய் சாத்திக் கொண்டான், ஜானகி உள் நுழைந்து விடுவாரோ என்றெண்ணி.
“தெனமும் அவன் இத தானம்மா சொல்லுறான், சளிக்காம நீங்களும் ஏன் கேக்கீங்க”. “தெனோ கேட்டாலும் சோப்பு நொரை போக மாட்டேங்கிதே” என சிரித்துக் கொண்டவர், “வா நீ அந்த பாத்ரூம்ல குளி, லேட்டாகுது” என யூனிஃபார்மையும் எடுத்துக்கொண்டு அவளையும் இழுத்துச் சென்றார்.
அடுத்த வேலையெல்லாம் வேகமாய் முடிய, இருவருக்கும் சாப்பாட்டை ஊட்டி, பேக்கை மாட்டிவிட்டு, ஷூ சாக்ஸையும் மாட்டிவிட்டு, தானும் செருப்பை மாட்டிக்கொண்டு கதவை சாத்தி கிளம்ப, அவர் மகன் அடுத்தப் பஞ்சாயத்தை ஆரம்பித்தான். “நீங்க எங்கக் கிளம்பிட்டீங்க, இந்த தெரு முக்கு தானேம்மா… நாங்களே போயிடுறோம்”, “அடுத்து இதா, ஏன்டா சிடு சிடுனே எப்பயும் பேசுற, ஸ்கூல் கிளம்பயில சிரிச்சிட்டுப் போ, அப்போதான் படிப்பு மண்டைல ஏறும்” ஜானகி சொல்ல.
“சொன்னா கேளுங்கம்மா நீங்க வர வேணான்னா வேணா”. “இந்த ஸ்கூல் சேந்ததுல இருந்து உன் நடவெடிக்க ஒன்னும் சரி இல்ல. அப்பாட்ட சொல்லுறேன் இரு”. “நீங்க முதல்ல என்ன சின்னப் பிள்ளை மாறி ட்ரீட் பண்றத நிறுத்துங்க. இந்த முக்குல போய் பஸ் ஏற தெரியாமலா இருக்கோம். இரண்டு பேரா தான போறோம்… அதெல்லாம் போயிருவோம், வா அச்சு” என உடன்பிறப்பை இழுத்துக்கொண்டு வெளி கேட் வரை சென்றவன், “பின்னாடியே வந்து வேவு பாக்குற வேல வேணா” என்றான் சேர்த்து.
“சரிடா நா உன் பின்னால வரல, ராசு கடைல சாமான் வாங்கணு, நா அங்க வர வாரேன். நீங்கப் பாத்து போங்க”. ஆறாம் கிளாஸ் போயிட்டா இவன்லா பெரிய மனுஷனாம் என முணங்கிக்கொண்டு கேட்டை இழுத்து சாத்தினார். “நீங்க நினச்சத தான செய்வீங்க, ச்சை… நிம்மதியா ஒருநாளும் கிளம்பி போக முடில” பிடித்திருந்த தமக்கையின் கையை உதறிவிட்டு விறுவிறுவென நடந்துவிட்டான்.
“இந்த வயசுலயே இவனுக்கு எம்புட்டு கோவம் வருது” என்றார் ஜானகி சிரித்துக்கொண்டு. “அவன் பேசுறதெல்லாம் கேட்டு நீங்க சிரிக்ககுறதனால தான் அவன் அப்படி பேசிட்டு போறான்” என்றாள் அச்சு பெரிய மனுசியாய். “நீகூட தான் பெரிய மனுசியாட்டம் பேசுற, நாந்தான் உங்கள சின்னப் பிள்ளையாவே பாக்கிறேனோ என்னவோ? ஆனாலும் உங்கள தனியா அனுப்ப மனசு கேக்க மாட்டேங்குதேடி.
சரி அப்பா சாயங்காலம் வர லேட்டாகும், ரெண்டு பேரும் பஸ்லேயே வந்துருங்க இன்னைக்கு” பேசிக்கொண்டே பஸ் நிறுத்தம் வர. அங்கு ஏற்கெனவே சில பெற்றோர்களும், பிள்ளைகளும் காத்து நின்றனர். அதில் அபரஜித் தன் வகுப்பு தோழர்களுடன் இவர்கள் யாரோ என்பதுபோல் நின்றுக்கொண்டான்.
ஜானகி இருவரையும் பஸ் ஏத்தி அனுப்பிவிட்டு வீடு வந்து மற்ற வேலைகளை பார்த்துக் கொண்டிருக்க, கேன் போடுபவர் வந்து, கேன் போட்டுவிட்டு சென்றார். மதியம் 2.30 மணி அளவில், நல்ல உறக்கத்தில் இருந்த ஜானகி காது பக்கத்தில் வைத்திருந்த மொபைலின் சத்தத்தில் கொஞ்சம் திடுக்கிட்டு தான் எழுந்தார்.
பின் தன்னை அமைதிப்படுத்திகொண்டு மொபைலை எடுக்கப்போக, அது கட்டாகிவிட்டிருந்தது. முகத்தை கழுவி விட்டு வந்து தெளிவாகவே பார்த்தார், அது அச்சு, அப்புவின் கிளாஸ் மிஸ் எண், கொஞ்சம் பதட்டம் வந்துவிட்டிருந்தது. வேகமாக அந்த எண்ணிற்கு டயல் செய்ய, அந்தப் பக்கம் “அபரஜித், அச்சுதா பேரண்ட் தானே” என… “ஆமா என்னாச்சு…. ஏதும் பிரச்சனையா? பிள்ளைங்களுக்கு ஏதுமில்லையே?” என்றார் படபடப்புடன்.
“கொஞ்சம் அமைதியாகுங்கம்மா, ஒரு பிரச்சனையும் இல்ல, இன்னைக்கு பேரெண்ட்ஸ் மீட்டிங் இருந்தது… ஏன் வரல? எப்போ வர்றீங்கன்னு கேக்க தான் ஃபோன் பண்ணேன்”. “பேரெண்ட்ஸ் மீட்டிங்கா?” என்று யோசித்தவர், சமாளித்து “மறந்துட்டேன்னு நினைக்கிறேன், நாளைக்குக் கண்டிப்பா வரேன் மேடம்” என. “ஓ.கே. மேடம்” என வைத்துவிட்டார்.
4 மணி ஆகவும், பஸ் வரும் டைம் சரி பார்த்து, பிள்ளைகளை அழைத்து வர கிளம்பிவிட்டார். பஸ் வந்து நிற்க, இருவரும் இறங்க பேக்கை வாங்க கை நீட்ட, குடுக்க மாட்டேன் என்பது போல் கண்டுக்காமல் இறங்கி நடந்துவிட்டான் அபரஜித்… அச்சுதா அம்மாவின் கையில் பேக்கை குடுத்துவிட்டு இறங்க, “ஏன்ம்மா இப்டி உர்ர்ன்னு வாரான்” என ஜானகி கேக்க, “மிஸ் திட்டிட்டாங்கம்மா”. “எதுக்கு?”, “அது வந்தும்மா” என அவள் குனிந்துக் கொள்ள, “சரி வா வீட்ல போய் பேசிக்கலாம்”.
வீட்டுக்கு வந்ததும், எல்லாத்தையும் வேவாரிக்கு வாசலில் வீசி எறியப்பட்டிருந்த அப்புவின் திங்க்ஸை, “ஏன்டா வந்ததும் எனக்கு வேல வைக்கணுமா” என்றவாறு அம்மாவும் பொண்ணுமாக ஒதுக்கி எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் செல்ல, இரவு வரை அமைதியே நீடித்தது. “என்ன இன்னைக்கு, டி.வி.யும் அலறல, அடிதடி சண்டையும் இல்ல, அமைதியா இருக்கு”. 8 மணிக்கு மாசிலாமணி வந்தவர் உடை மாற்றிக்கொண்டே விசாரிக்க. “மிஸ் திட்டிட்டாங்களாம்… அதனால ஒரே கோவம்”, “ஏனாம்? இவங்க என்ன பண்ணாங்களாம்”. “தெரில நீங்களே கேளுங்க”.
இரவு சாப்பாட்டின் போது, “ஸ்கூல்ல என்ன பண்ணீங்க?”. “ஒன்னும் பண்ணலப்பா” அச்சு சொல்ல, அப்புவை பார்த்துக்கொண்டே. “பின்ன எதுக்கு மிஸ் திட்டினாங்க”, மறுபடியும் அச்சு தலை குனிந்துக்கொள்ள. மாசிலாமணி திரும்பி ஜானகியை பார்க்க, அவர் கண்ணை காட்ட. அதன்பின் அங்கு பேச்சில்லை.
மறுநாள் என்றும் போல் எல்லாம் நடக்க, கூடவே மாசிலாமணியும், ஜானகியும் கிளம்பினர். அதுவரை அமைதியாக கிளம்பிய இருவரும், ஆட்டோவில் போகலாம் என இருவரையும் மெதுவாக சாப்பிட சொல்லவும், “அப்ப இன்னைக்கு ஸ்கூல் போலயா? எங்கப்பா போறோம்” அச்சு கேக்க, “ஸ்கூலுக்குத் தான், நாங்களும் வர்றோம், சேர்ந்து போலாம்”, அச்சு திரும்பி அப்புவை பார்க்க… அவனோ முறைத்து “எதுக்கு வர்றீங்க” “பேரெண்ட்ஸ் மீட்டிங் நேத்து நடந்ததாம், நேத்து வர முடில… அதான் இன்னைக்கு வர்றோம்”.
“சாரிப்பா” அச்சு சொல்ல, “அத எப்டி சமாளிக்கணும்னு எனக்கு தெரியும், நீங்க ஒன்னும் வர வேணாம்” என அபரஜித் சொல்ல. “உனக்கு என்ன தான்டா பிரச்சனை, மார்க் கம்மியா எடுத்துட்டியா? நெக்ஸ்ட் டைம் பாத்துக்கலாம், அதுக்காக ஸ்கூலுக்கு வராம இருக்கிறது எங்களுக்கு மரியாதை இல்ல. விடு அப்பா வரேன்ல, நா பாத்துக்கிறேன், மிஸ்ட்ட நா பேசிக்கிறேன்” என.
“ஐயோ என் பிரச்சனை மார்க் இல்ல. நீங்க, நீங்க ரெண்டு பேரும்”, “நாங்களா?”, “ஆமா, நீங்க எனக்கு அம்மா, அப்பா மாறி இல்ல. தாத்தா, பாட்டி மாறி இருக்கீங்க… என் ஃபிரண்ட்ஸ் ஓட அம்மா, அப்பாலா அங்கிள் ஆண்ட்டினு கூப்பிட்ற மாறி இருக்காங்க… நீங்க அப்டி இல்ல, அதனால உங்கள அவங்க முன்னாடி வர வேணான்னு சொல்லுறேன்… பழைய ஸ்கூல்லையும் இதுதான் பிரச்னை. அதுக்கு தான் ஸ்கூல் மாறினேன், நீங்க வேல பாக்குற ஸ்கூல்ல அதுக்கு தான் சேர மாட்டேன்னு பட்டினி கிடந்து இங்க சேர்ந்தேன், அடி வாங்கினாலும் பரவால்ல, நானே பாத்துக்குறேன், நீங்க ஸ்கூலுக்கு வர தேவயில்ல”.
“சாரிப்பா, எனக்கு இதெல்லாம் தெரியாது, பேரெண்ட்ஸ் மீட்டிங்ன்னு வீட்ல சொன்னா வீட்டுக்கே வராம எங்கயாவது போயிருவேன்னு சொன்னான்ப்பா… அதான் சொல்லல” என்றாள் அச்சு.
“ரெண்டுபேரையும் பஸ் ஏத்தி விட்டுட்டு வரேன் ஜானகி” என அமைதியாகவே எழுந்தார் மாசிலாமணி. ஜானகியிடம் எந்த மாற்றமும் இல்லை, பையனின் பேச்சில் அவருக்கு என்ன பேசுவதென்றே மறந்துவிட்டிருந்தார்.
தவியாய் தவித்து கல்யாணத்திற்கு பின் 11 வருடம் கழித்து, 41 வயதில் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த இரட்டைப் பிள்ளைகள். எத்தனை கோவில், எத்தனை ஹாஸ்பிடல், “என்னமா இன்னும் விசேஷம் இல்லையா? பிள்ளைங்கள கூட்டிட்டு வரலையா? எத்தன பிள்ளைங்க? எந்தக் கிளாஸ் படிக்கிறாங்க?” போன்ற எத்தனை கேள்விகள், அந்த 11 வருடத்தில் கடந்து வந்தார்கள், எல்லாம் இன்று பயத்தை தந்தது.
இறுதியாக டெஸ்ட் டியூப் மூலமே இரட்டைப் பிள்ளைகளாக இவர்கள் இருவரும் பிறந்தனர். அதன்பின்பும் குழந்தைகளோடு குழந்தைகளாக விளையாட இருவரும் தங்களது வயதை பாராது விழுந்துப் புரண்டனர். ஆனால் இன்று அவனுக்கு இவர்களை பெற்றவர்கள் என மற்றவர்களிடம் அறிமுகப்படுத்த பிடிக்கவில்லையாம்… தங்களைப் புரிய வைத்தாலும் புரிந்துக் கொள்ளும் வயதும் அவனுக்கில்லை.
அவனுக்கு பருவ வயதில், தானாகவே புரிந்துக்கொண்டால் பரவாயில்லை, இல்லாமல் இதே வெறுப்பாக தங்கிவிட்டால்??
இது பிற்காலத்தில் அபரஜித்தை எப்படி மாற்றுமென்பது குழந்தைப் பாக்கியம் தந்த பரந்தாமனுக்கே வெளிச்சம்…
– கதைப் படிக்கலாம் – 74
இதையும் படியுங்கள் : “சண்முகா கேட்டரிங் சர்வீஸ்”