ஒரு கதை சொல்லட்டுமா…

– க. விவேக்

பாரத நாட்டின் தலைநகரமான டெல்லி, மிக நாகரிகமான ஊர்தான். டெல்லி அருகில் உள்ள மாநகரம் குருகான (குறுகிராம் என பேர் மாற்றப்பட்டது). அங்கு உள்ள ஒரு சின்ன கிராமம் மண்டிகாவ்ன் (கிராமம்). மிகp பழமையான கிராமம் தான். ஆனாலும், தலைநகரத்தின் வாசம் பட்டிருந்ததினால் கொஞ்சம் நகரம் போல் இருந்தது.

அந்த ஊருக்கு ஒரு தனியார் வேலை விஷயமாக ஆறுமாதம் போயிருந்தேன். அங்கே எனக்கு ஒரு தனி காரும், அதற்கு ஒரு தனி டிரைவரும் கொடுத்திருந்தார்கள். என் டிரைவர் ஓர், இரு நாளில் என் நல்ல நண்பன் போல் ஆகிவிட்டான். தினமும் அவன் மட்டும் தனியாய் தான் என்னை பிக்கப் செய்ய வருவான். நல்ல ஜிம் பாடியா தான் இருந்தான். பாக்க ஒரு இருபத்தி எட்டு வயது ஆள் போல் இருந்தான். ஆனால், அவனுக்கு இருபத்தி இரண்டு வயது தான் ஆகிறது என்று சொன்னான். சின்னப் பையன் என்று நினைத்தேன். பிறகு பேசியதில் தெரிந்தது, அவன் பையன் இல்லை ஒரு ஆம்பளை என்று. ஆம் பையன் என்றால் கல்யாணம் ஆகாதவன் தானே, அப்போ அவன் ஆம்பளைதான்.

அவங்க ஊரு பழக்கப்படி ஒரு ஆணிற்கு இருபத்தி இரண்டு வயதுக்குள் திருமணம் நடந்தாகணுமாம். அப்போ பெண்ணிற்கு என்று ஆவலுடன் கேட்டேன். அவன் சொன்ன பதில் என்னை பிரமிப்படைய வைத்தது. பதினைந்தில் இருந்து பதினெட்டு வயதுக்குள் திருமணம் ஆகிவிடுமாம். ஒருவேலை அப்படி குறிப்பிட்ட வயதுக்குள் திருமணம் ஆகாவிட்டால், என்றுமே திருமணம் ஆகாதாம். நான் சொன்னேன்… ஏன் உங்க ஊரு மக்கள் வேற ஊரில் சம்பந்தம் செய்யலாம்ல… அதற்கு அவன் சொன்னான், அவங்க ஊருல காதலோ அல்ல வேறு ஊரு சம்பந்தம் செய்தாலோ… அப்படி செய்தவர்களின் குடும்பத்தை கொன்று விடுவார்களாம். அப்போது எனக்குப் புரிந்தது… இந்த ஊர்மக்கள் முட்டாள் இல்லை, என்றும்… எதிலும்… அரசாங்கத்தின் கட்டளைகளை மதிக்காத, முரட்டு மிருகங்கள்.

ஒருவாரம் நல்லா தான் போச்சு. அப்பறம் அந்த ஒருநாள் அவன் என்னை பிக்கப் செய்ய வந்தபோது, நான் என்றும் போல் குனிந்த தலையுடன் பின்சீட்டில் ஏறி உட்கார்ந்தேன். திடீரென்று ஒரு வித்யாசமான குரலில் ‘நமஸ்தேசார்’ என்று ஒருசத்தம் முன்சீட்டில் இருந்துக் கேட்டது. மிக நிச்சயமாக அது அந்த டிரைவரின் குரல் இல்லை என்று தீர்மானித்து, தலைநிமிர்ந்து முன்சீட்டைப் பார்த்தேன். அது வேறு ஒரு மனிதன், அவனும் ஜிம்பாடி தான். அவன் தலையில் கட்டுப் போட்டு இருந்தது நன்றாகத் தெரிந்தது. திகைத்துப் போன நான் சற்று தாமதித்து, ஒரு மரியாதைக்காக பதிலுக்கு நமஸ்தே சொன்னேன். தமிழன் பண்பாடு அல்லவா. அவன் தன் பெயர் விமல் என்று, தன்னை என்னிடம் அறிமுகம் செய்துக்கொண்டான்.

அவன் என்னிடம் சற்றும் தாமதிக்காமல், காதலைப் பற்றி என்ன நினைக்குறீர்கள் என்று கேட்டான். யார் என்றே தெரியாத ஒருவன் என்னிடம் திடீரென்று காதலை பற்றிக் கேட்பதை எண்ணி மௌனமாக இருந்தேன். அப்போது என் டிரைவர், அது அவர் மாமா தான் என்று சொன்னான். காதலில் எனக்கு அனுபவம் இல்லை. அதனால் எதுவும் சொல்வதற்கு இல்லை என்று சொன்னேன்.

மீண்டும் விமல் என்னிடம் “ஒரு கதை சொல்லட்டுமா” சார் என்று கேட்டான். ஒரு வேண்டா வெறுப்புடன்… சரி சொல்லுங்க என்றேன். அவன் அவங்கப் பக்கத்து கிராமத்துப் பெண்ணை காதலிக்குரானாம். அந்தப் பெண்ணின் பெயர் கரீனா… ரொம்ப அழகா இருப்பாளாம். ஆம், காதலி என்றும் காதலனுக்கு அழகுதானே. அந்த கரீனா வீட்டுக்கு பெண் கேட்டுப் போனானாம். அப்போ தான் அந்தத் தலையில் கட்டுபோடும்படி அடித்து விரட்டினார்களாம், அந்தப் பெண் வீட்டார்கள்.

அப்போது நான் இது ஒரு சாதாரண காதல் கதை என்று நினைத்தேன். மீண்டும் அவன் சொன்னான் கரீனா ஒரு விதவை. அவளுக்கு ஒரு கைக்குழந்தை இருக்காம். அவளுக்கு இருபத்தி ஐந்து வயது தான் இருக்குமாம். நான் ஒரு நிமிஷம் அந்த மாமாவை என் இதயத்தின் உயரத்துக்கு கொண்டுச் சென்றேன். ஆஹா! என்ன ஒரு மனசு, கைம்பெண்ணை மறுமணம் செய்வதற்கு. அதுவும் இந்த மாறி ஒரு கிராமத்து மனுஷனுக்கு, இப்படி ஒரு உயர்வான மனசு என்று நினைத்தேன்.

கார் சற்று தூரம் சென்றது, மௌனம் சூழ்ந்துக் கொண்டது. கொஞ்சம் நேரம் கழித்து விமல் சொன்னான்… இல்லை சொன்னாரு (பெரிய மனசுக்காரருக்கு மரியாதை தானா வரும்). அவரு இன்னும் அந்த பெண்ணை காதலிக்குறாராம், அந்த பெண்ணும் இவரை காதலிக்குதாம். அவங்க ரெண்டு பேருக் கிராமத்துக்கும் நீண்டக்கால பகை இருக்காம். அவள் இல்லாவிட்டால் இவன் செத்துப் போய் விடுவானாம்.

கார் இன்னும் ஐந்து நிமிடத்தில் என் ஆபீஸ் போய்விடும் போல் இருந்தது. அப்போது என் தலையில் இடிவிழும் செய்தி சொன்னான், அந்த டிரைவர். விமலுக்கு ஏற்கெனவே திருமணம் ஆகிவிட்டதாம். நடுவில் விமல் தனக்கு ஐந்து குழந்தைகள் என்று சொல்லி விட்டு மௌனமானான். கொஞ்சம் நேரம் கழித்து அவன் சொன்னான், அவன் காதல் விஷயம் அவன் முதல் மனைவிக்கு தெரியுமாம். அவன் சொத்துக்களில் பாதியை அவன் அவள் ஐந்து பிள்ளைகளுக்கும் எழுதி வைத்தானாம். அவன் கள்ளக்காதலுக்கு ஒரு நியாயம் போல்.

எனக்கு விமல் மீது கோபம் வந்தது. அவனுக்கு என் இதயத்தில் இடம் கொடுத்ததை நினைத்து எனக்கு வெட்கமாக இருந்தது. சில நேரங்களில் சில மனிதர்கள் அவர் அவர் விருப்பத்தின்படி தான் இன்னொருவர் இருக்கணும்னு நினைக்குறாங்க… அப்படி இராவிட்டால் தன்னை அறியாமல் இன்னொருவர் மேல் கோபம் வரத்தான் செய்யும்.

என்னால் இந்தக் காதல் கதையை இல்லை… கள்ளக்காதல் கதையை கேட்டுவிட்டு ஆபிஸில் வேலை செய்ய முடியவில்லை. திரும்பவும் மாலையில் அந்த டிரைவர் என்னை பிக்கப் செய்ய ஆபீஸ் வந்தான். நான் வண்டி ஏறி உட்கார்ந்து, அவனிடம் ஒன்றும் பேசாமல் இருந்தேன். அவன் மாமா வரவில்லை. கார் சற்று நகர்ந்தது.

அவன் ஐந்து நிமிடம் கழித்து என்னிடம் கேட்டான், சார் நீங்க என் மாமாவை ரொம்பத் தவறா நினைச்சுட்டீங்க. அவருக்கு பதினெட்டு  வயதில் கல்யாணம் ஆனது. அவர் அண்ணண் மனைவியை தான் கல்யாணம் செய்தார். ஆம் அவர் அண்ணியை தான் கல்யாணம் செய்தார். அவரோட அண்ணன் ஒரு விபத்தில் மரணித்தாராம். அந்த அண்ணி அப்போது இருபத்தி இரண்டு வயதில் நான்கு குழந்தைகளுடன் விதவையாக இருந்தாங்களாம். அப்போது எனக்கு ஞாபகம் வந்தது… விமல் அவனுக்கு ஐந்து பிள்ளைகள் என்று பெருந்தன்மையாக சொன்னது.

அவங்க ஊரு சம்பிரதாயப்படி, அந்த அண்ணியை விமல் பதினெட்டு வயதில் பெரியவர்கள் மற்றும் சொந்தக்காரர்களின் வற்புறுத்தலால், அவன் சம்மதம் இன்றி திருமணம் செய்தானாம். பிறகு அந்த டிரைவர் அவன் கதையை சொன்னான், அவனுக்கு இருபத்தியிரண்டு வயதில் திருமணம் ஆனதாம். அவன் மனைவிக்கு பதினாறு வயதுதான் ஆகுதாம். அதனால் அவள் அவுங்க அம்மா வீட்டில் இருக்கிறாளாம். பதினெட்டு வயதில் தான் அந்தப் பெண் இவன் வீட்டிற்கு அனுப்பப்படுவாளாம்.

இப்போ உங்க மாமா எங்கே இருக்காரு என்று கேட்டேன். டிரைவர் சொன்னான் அவரு இப்போ கரீனா வீட்டிற்குப் போய் இருக்காரு. அவங்க இருவரும் இன்று ஊரை விட்டு ஓடப்போறாங்களாம். டிரைவர் என்னிடம் திரும்பவும் கேட்டான், “ஏன் சார் எங்க ஊர் மக்களுக்கு அவங்க விருப்பப்படி திருமணம் செய்வதற்கு உரிமை இல்லையா. நாங்கள் சபிக்கப்பட்டவர்களா. எங்கள் ஊரை காப்பாத்துவதற்கு யாரும் இல்லையா. நான் அவனிடம் கேட்டேன்… ஏன் உங்க ஊரில் இந்திய சட்டத்தின்படி திருமண வயதுக்குப் பிறகு திருமணம் செய்யலாம்ல. அதற்கு அவன் சொன்னான், அவங்க ஊர்ல இளைஞர்கள் அதுக்குறித்து புரட்சியோ அல்ல போராட்டம்னு ஏதாச்சும் செய்தாலோ, அவர்கள் கொல்லப்படுவார்களாம். அது ஒரு பயங்கரமான கிராமமாம்.

நானும் அதை உணர்ந்தேன், விமலின் உடலை நடுரோட்டில் கொன்றுப் போட்டிருந்தார்கள், அவங்க ஊரு பெரியவர்கள். ஆம், அது மிக மர்மம் கலந்த பயங்கரமான கிராமம் தான்.

– கதைப் படிக்கலாம் – 58

இதையும் படியுங்கள் : வைரஸ் செக்!!

Exit mobile version