மலையடிவாரம்

– எஸ். அருள் துரை
mountain
hills

சென்னை பக்கம்.

பக்கம் என்றால் ஏறத்தாள எண்பது கிலோமீட்டர் தூரம். ஆங்காங்கே எறும்பு புற்றுகள்போல் மலைகள் புடைசூழ, நடுவே அம்சமாய் யாருக்கும் எந்ததொரு தொந்தரவையும் கொடுக்காமல், சகஜோதியாய் வாழ்ந்துக் கொண்டிருந்தது அந்தக் கிராமம்.

கொடைக்கானல், உதகைமண்டலம் போல, குளுகுளு காற்று வீசவில்லையென்றாலும் அப்படியொரு சுத்தமானக் காற்றை சுவாசித்துக்கொண்டிருந்தது அந்தக் கிராமம்.

சென்னை பக்கம்தான் இந்தக் கிராமம் என்றாலும், ஏதோ ஆயிரம் கிலோமீட்டருக்கு அப்பால் இருப்பதுபோல், எந்ததொரு வாகனச் சத்தத்தையும் உள்வாங்காமல் பயணித்துக்கொண்டிருந்தது அந்தக் கிராமம்.

ராமசாமி. இவருடைய அன்றாட உழைப்பினால் இந்தக் கிராமம் எப்படி பசுமையாய் உருவானது என்று சொல்வதை பலர் கேட்கும்போது, அப்படி ஏளனமாய் சிரித்து “அது எப்படி? பச்சைபசேலென மலைபுடைசூழ காடு இருக்க, இவர் எப்படி தன்னுடைய முயற்சியில் ஊரையே சோலையாய் வைத்திருக்கிறார் என்று சொல்கிறீர்கள்?” ஆளாளுக்கு சிரித்தவண்ணம் நம்பாமல் கேள்விகளைப் படரவிட்டவண்ணம் சென்றுக்கொண்டிருந்தனர்.

உடைந்துப்போன கற்களால் நாத்தாய் படர்ந்துகிடந்தக் காட்டை, சோலைவனமாக மாற்றியக் கதை, மலை உச்சியில் ஒய்யாரமாய் வளர்ந்து பல பறவைகளின் சரணாலயமாக வாழ்ந்த அந்த மரத்திற்கு நன்றாகத் தெரியும், ராமசாமி எவ்வளவு கஷ்டத்திற்கிடையில் தன்னுடையக் காய்ந்தக் கிராமத்தை சோலைவனமாக மாற்றினார் என்று.

ஊரில் பலர் “இந்த அத்தாயக் காய்ந்து கிடக்கும் காட்டில் நம்மால் வாழமுடியாது” என குடும்பம் குடும்பமாக வெளியேறி சென்னையில் குடியேற, ராமசாமி தன்னுடைய மனைவியோடு ஒரு குடிசையில் இருந்துக்கொண்டு, கொஞ்சம் கொஞ்சமாக சிதறிக்கிடந்த கற்களை ஓரங்கட்டிவிட்டு மரங்களை நட ஆரம்பித்தார்.

“வெயிலு மண்டையப் பொளக்குது. இப்ப எதுக்கு போய்க்கிட்டு? பேசாம வெயிலு கொறஞ்சவுடனே போக வேண்டியதுதானே?” தன்னுடையக் குடிசையின் வெளியே பனைமரம்போல் ஒய்யாரமாய் கருகருவென வெரும் உடம்போடு நின்றுகொண்டு தலைப்பா கட்டிக்கொண்டிருக்கும்போது ராமசாமியைப் பார்த்துக்கேட்டாள், மனைவி பார்வதியம்மாள்.

“இப்படியெல்லாம் வெயிலப்பாத்தா, இந்த சண்டாள வெயிலு நம்ம தலையவே பொசிக்கிரும்மா. நேரங்காலம் பாக்காம சட்டுபுட்டுனு செஞ்சாத்தான், நாம இருக்கும்போதே பாத்துட்டு போவலாம்” எனச் சொல்லிக்கொண்டே நடையைக்கட்டினார்.

“என்னத்தப் பெரு…சா பாக்கப் போரியலோ” மனசுக்குள்ளே பெரிய இழுவையோடு வார்த்தைகள் தெறித்து விழ சொல்லிக் கொண்டிருந்தாள் பார்வதியம்மாள்.

காலை பதினோரு மணிக்கு மொட்ட வெயிலில் சென்றவர், மாலை ஐந்து மணிக்கு வெயில் தாழ்ந்திருந்த நேரத்தில் வந்து “அப்பா…டா” என உஷ்ணக்காற்றை ஊதி வெளியில் விட்டுக்கொண்டு, சாணத்தால் மொழுகியிருந்த தன்னுடைய குடிசைத் திண்ணையில் வந்து அமர்ந்தார்.

அப்படியொரு நிம்மதி அவருக்கு.

“ஒரு சொட்டு தண்ணியும் குடிக்காம, மதியமும் சாப்புடாம மனுஷன் இப்படியா போயி திருஞ்சுட்டு வருவிய?” பார்வதியம்மாள் முகத்தை சுளித்துக்கொண்டு கேட்க, “அப்படி….யே போனேன் நேரமாயிப்போச்சு” என மலையைப் பார்த்து கையைக்காட்டி சொன்னார்.

“நானும் தொண்ட தண்ணிப்போகக் கத்துனே, ஒரு சத்தமுமா கேக்கல?”

“ஒத்த எழவும் கேட்டுத் தொலையலேயே. நான்தான் சின்னப் புள்ளைக்கு சொல்றது மாதிரி சொல்லிட்டுத்தானே போனேன். நீ எதுக்குக் கத்துன?”

“வேற எதுக்குத் தேடப்போறேன்? சாப்பிடக் காணாமேன்னுதான் தேடுனேன்”

“அதுக்குத்தானா?”

“எங்க அப்படி போனிய, கேக்குறதுகூட கேக்காத அளவுக்கு?”

“நாளு மரச் செடிகள புடிங்கிட்டு வந்து கொளத்தச் சுத்தி நட்டு வைக்கலாமேன்னு போனேன். போனாக்கும், அங்க எல்லாமே பூவரசமாத்தான் இருந்துச்சு. கொஞ்ச தூரம் போயி பாக்கலாம்னு பாத்தேன். அடுத்த மலையே வந்துருச்சு. அங்க நாளு வாகை, புங்கை, வேப்ப மரங்களா புடிங்கிட்டு வந்து, கொளத்த சுத்தி நட்டுவச்சுட்டு வாறேன்”

“அங்க வந்து இப்ப யாரு இருக்கப்போறா நட்டு வச்சுருக்கிய?”

“ஏதோ நம்மால முடிஞ்சத பண்ணுவோமே. நாளைக்கு யாரு வந்தாலும் வரலையினாலும் நாளு மரமாவது சந்தோசமா வாழும்ல”

“இப்படியே ஊருக்கு ஊருக்குன்னு இல்லாம, நமக்குன்னு ஏதாவது பண்றதையும் கொஞ்சம் பாருங்க”

பார்வதியம்மாள் சொல்றதை பெருசா எடுத்துக்காமல், நேரம் காலம் பாக்காமல், மரத்தை நட்டு தண்ணீர் ஊற்றி வளர்த்து வந்தார்.

எட்டு வருடங்கள். பொதி சுமக்கும் கோவேரிக்கழுதைபோல் தண்ணீரை சுமந்து; கட்டெறும்புபோல் கரடுமுரடான காடுகளைக் கடந்து; செம்மறியாடுபோல் யாருடைய தூற்றலையும் மனதில் ஏற்றுக்கொள்ளாமல் தலையைக் குனிந்துகொண்டே வேலைசெய்து; உடம்பெல்லாம் காயத்தோடு மாடாய் உழைத்ததன்
விளைவு… காலப்போக்கில் பசுமை போத்திய கம்பளிபோல சோலைவனமாகக் காட்சியளித்தது.

வெப்பக் காற்றை கக்கிக்கொண்டு வரும் சூரியன்கூட அந்தக் கிராமத்தின்முன் மண்டியிட்டு, வெப்பத்தை வாபஸ் வாங்கிக்கொண்டு இதமானக் காற்றை புன்முறுவலோடு படரவிட்டு சென்றுக்கொண்டிருந்தது.

ஆண்டுக்கு ஒருமுறைமட்டும் முனீஸ்வரன் கோவில் திருவிழாவிற்காக வேண்டா வெறுப்போடு வந்துச்செல்லும் ஊர்மக்கள், அந்த வருடம் திருவிழாவிற்காக வந்தவர்கள் அவ்வளவு அக்களிப்பில் அகமகிழ்ந்தார்கள்.

அந்த வருடம் முதல் ஒவ்வொரு வீடாக புதுப்பிக்கப்பட்டு, சென்னை சென்றவர்கள் திரும்ப வந்து தங்க ஆரம்பித்தார்கள்.

ராமசாமியை ஊரே கொண்டாடிக் கொண்டிருந்ததை அவரின் மனைவி அப்படி ரசித்துக்கொண்டும், பெருமைப்பட்டுக்கொண்டும் இருந்தாள்.

எங்கப் பார்த்தாலும் பொட்டல்காடாய் காட்சியளித்த அந்த ஊர், காலப்போக்கில் பலர் விரும்பி உலாவரும் ஊராய் உருவானது.

சென்னையில் தூவிவிட்டு வரும் வருணபகவான், இந்த ஊரை நெருங்கையில் அப்படியொரு ஆனந்தக் கொண்டாட்டத்தில், நின்று பெய்து எல்லோரையும் அக்களிப்பில் மிதக்கவைத்துச் செல்ல ஆரம்பித்தது.

அந்த ஊரே அப்படியொரு சோலைவனமாக காட்சியளித்துக் கொண்டிருந்தது. விதவிதமான பயறுவகைகள் பயிரிடப்பட்டன. விவசாயம் செழிக்க ஆரம்பித்தது. ஊரே அப்படியொரு சந்தோசத்தில் மிதந்துக் கொண்டிருந்தது.

பத்து ஆண்டுகள் கடந்திருந்த சமயம்.

வெள்ளையும் சொல்லையும் மெதுவாக மோப்பம் பிடிக்க, விதவிதமான வெள்ளை கார்கள் விசிட் அடிக்க ஆரம்பித்தன. அந்த ஊரை உரசிக்கொண்டும் மலையை வட்டமடித்துக்கொண்டும் செல்வதைப் பார்த்த ஊர்மக்கள், எதுவும் தெரியாமல் அச்சத்தில் ஆழ்ந்திருந்த நாட்கள் அவை.

அடுத்த இருவாரங்களில் மஞ்சள் நிறத்தை உடம்பெல்லாம் பூசிக்கொண்டு, மூன்று காண்டாமிருகங்கள் போல் கம்பீரமாய் மலையை முத்தமிட ஆரம்பித்தன.

மலைக்கு கொடுத்த முத்தம், தனது குடிசைமீது விழுந்த பெரிய பாறாங்கல் போல் இருந்தது ராமசாமிக்கு.

பேதலுச்சுப்போய், பதறியடித்துக்கொண்டு வெளியில் ஓடிவந்தார்.

“என்ன சித்தப்பா நெஞ்சுல கைய வச்சுக்கிட்டு ஓடி வர்றிய?” எதிரே இருந்த ஓட்டுவீட்டு முருகன், தன்னுடைய சிமெண்ட் திண்ணையில் உட்கார்ந்துக்கொண்டு கேட்டான்.

“ஏதோ பெரிய சத்தம் கேட்டுச்சு! அதாம்பா பயந்துபோயி வெளியில வந்தேன்”

“சத்தமா?” எனக் கேட்டுக்கொண்டே கொக்கு தன்னுடையக் கழுத்தை உயர்த்தி பார்ப்பதுபோல் கிழக்கும் மேற்குமாகப் பார்த்துவிட்டு, “இன்னக்கி மலைக்கு வண்டி வருதுன்னு சொன்னாக. ஒருவேளை அந்த சத்தமாக்கூட இருக்கலாம்”

“என்னது வண்டியா? என்ன வண்டி?”

“அதா… நம்ம எம்.எல்.ஏ. வோட ஜே.சி.பி.”

“என்னடா சொல்ற? ஜே.சி.பி.யா?”

“ஆமா சித்தப்பா. ஒங்களுக்கு தெரியாதா?”

“தெரியாதப்பா” குரலில் அப்படியொரு அப்பாவித்தனம் பரவிக் கிடக்கச் சொன்னார்.

“கிழிஞ்சது கிருஷ்ணகிரி. ரொம்ப நாளா இந்த மலைய நோண்டப் போறாகன்னு பேசிக்கிட்டு இருந்தாகளே. அப்பக் கூடவா தெரியல?

“அரச பொரசலா பேசிக்கிட்டாக. இங்க எங்க வந்து மலைய வெட்டப்போறாங்கன்னு இருந்தேன்”

“இன்னையில இருந்து வெட்ட ஆரம்புச்சுட்டாக” சொல்லிக்கொண்டே வெளியில் நடக்க ஆரம்பிச்சுட்டான்.

ராமசாமிக்கு அந்தத் தருணம் முதல் நிம்மதியே இல்லை.

“மலைய வெட்டுனாக்க மரங்கள் போகும்; பள்ளம் பள்ளமா வெட்டுவாங்க; அங்க வெட்டுற மல அப்படியே ஊரே தூசியாக் கெடக்கும்; ஊருப்பட்ட லாரிகள வந்துக் குமிஞ்சு இந்தக் காட்டையே நாஸ்தி ஆக்குவாங்க; இப்பத்தான் கொஞ்சம் விவசாயம் செய்றோம்… இப்படி லாரிக வந்துப் போச்சுனாக்கும், இருக்குற பயலுகளும் விவசாயமும் வேணா ஒரு மயிரும் வேணாம்னு ஊரவிட்டே ஓடிப்போயிருவானுக; அப்பப்ப வர்ற மழையும் இல்லாம போயிரும்” தனக்குள் அப்படியொரு ஆதங்கம் பொங்க, தன்னுடைய மனதோடு பேசிக்கொண்டிருந்தார்.

வழிதெரியாமல் விழி பிதுங்கி சாவதுபோல் இருந்தது அவருக்கு. ஊரில் பலரிடம் சொல்லியும் “அது பெரிய அரசியல் தலைவருடைய சம்மந்தி காண்ட்ராக்ட். நாமக் கேட்டாலும் எதுவும் நடக்காது. மலைய தரைமட்டமா ஆக்குறது வரைக்கும் விடமாட்டாங்க” ஆளாளுக்கு பல்வேறு காரணங்களைச் சொல்லிக்கொண்டு இருந்தார்கள்.

ஒருமாதம் கடந்தது. ஏதோ ரயில்வண்டி பல பெட்டிகளை கோர்த்துக்கொண்டு தண்டவாளத்தில் ஓடாமல் மண்சாலையில் ஓடுவதுபோல் தொடர்ந்து டாரஸ் லாரிகளாக மண்ணை இறைத்து தூசி மண்டலத்திற்குள் சீறிப்பாய்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தது.

டாரஸ் லாரி மோதி இரண்டுபேர் அதே இடத்தில் இறந்தும், “குடித்துவிட்டு பைக் ஓட்டிவந்து லாரியில் விழுந்துவிட்டார்” என்று காரணம் சொல்லி, வெளியில் சொல்லவிடாமல் மூடிமறைக்கப்பட்டது.

ஆளாளுக்கு ஆஸ்துமா வந்து இரவு பகல் பாராமல் இருமிக்கொண்டே இருந்தார்கள். நோயாளிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்தவண்ணம் இருந்தன.

“இதற்குமேல் சும்மா இருந்தால் நான் ஒரு மனுஷனே கிடையாது” என்று சொல்லிக்கொண்டு, தன்னுடைய தெருவில் வசித்த நான்கு பேரிடம் மனசுவிட்டு தன்னுடைய ஆதங்கத்தைக் கொட்டினார்.

“ஏம்பா சின்ராசு, எப்படியிருந்த ஊரு… இப்ப இப்படி கெட்டு சீரழியுதே என்னான்னு கேக்க மாட்டியா?”

“வாயத் தெறந்தாலே கொன்னுருவேன்னு பயமுறுத்துறாங்க மாமா”

“அதுக்குன்னு நாமல்லாம் சீக்கிரம் செத்துப்போவனுமா என்ன?”

“இதுதான் நம்ம தலைவிதின்னு போகவேண்டியதா மாமா”

“ரெண்டு நாள்ல கிராமசபை வருதுல்ல, அதுல ஒரு தீர்மானத்தைப் போட்டுக் கொடுப்போம்” ராமசாமி சொல்ல “அதெல்லாம் போட மாட்டாங்க மாமா”
“நா போடச் சொல்றேன் பாரு” எனச் சொல்லிக்கொண்டே வீட்டிற்கு வந்தார். அவர் சொல்லிவரும்போது “இவருக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலையெல்லாம்?” நின்றுக் கொண்டிருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள்.

ராமசாமிக்கு அந்த இரவு முழுவதும் தூக்கமே இல்லை. புறண்டு புறண்டு படுத்து இரவைக் கடந்துக் கொண்டிருந்தார்.

அதிகாலை நான்குமணிபோல், சேவல் கூவும் சத்தம் கேட்பதற்கு முன்னமே எழுந்து, பஞ்சாயத்து தலைவரிடம் பேச பக்கத்து ஊருக்கு கிளம்பிவிட்டார்.

போகும் வழியில் சாலை மிகவும் மோசமாகி, தூசி புடைசூழ புகை மண்டலமாக காட்சியளித்தது.

சாலையோரத்தில் சென்றுக் கொண்டிருந்தவரை ஓரங்கட்டி தூக்கி வீசியது அந்த டாரஸ் லாரி.

அந்த நாள், ஊரே மையான அமைதியில் ஆழ்ந்திருக்க, லாரிகள் கூக்குரல்விட்டுக்கொண்டு லாங் ஒலிப்பானை ஓங்கி ஒலித்தவண்ணம் சென்றுக் கொண்டிருந்தன.

– கதைப் படிக்கலாம் – 160

Exit mobile version