– வி. லோகேஷ்
‘கிரிங் கிரிங்… கிரிங் கிரிங்..’ ஷண்முகியின் ஆழ்ந்த தூக்கத்தினை அந்த மேசையின் மேல் இருந்த அலாரத்தினால் அசைக்க முடியவில்லை. நேற்று இரவு தன் மகளான மலர்விழியிடம் அவள் மேற்கொண்ட கடும் வாக்குவாதத்தினால் ஏற்பட்ட அசதியே, அவளை இன்னும் தூங்க அனுமதித்துள்ளது. சிறிது நேரத்தில் அலாரம் அடங்க, மலர்விழி தன் மெல்லிய கைகளை அவள் தோல்பட்டைமேல் வைத்து சிறிது குலுக்க அசந்துப் போய் எழுந்தாள் ஷண்முகி.
‘அம்மா போய் சமையல் வேலையெல்லாம் ஆரம்பி, ஆஃபீஸுக்கு போகணும்’ கட்டளையிட்டாள் மலர். அசந்து எழுந்தவள் அவள் கூறியதைக் கேட்டதும் பிடிவாதமாக தூக்கத்திற்கு சென்றாள்.
‘அம்மா எந்திரி’ ஆணையிட்டாள் மலர். ‘உன் முடிவை மாத்திக்கிட்டியா?’ ஷண்முகி படுத்த நிலையிலே அவளை வினவினாள்.
‘அததான் நேத்தே சொல்லிட்டேனே, எனக்குக் கல்யாணம் வேண்டாம். இன்னும் நல்லா சம்பாரிக்கணும்’ சொல்லியவள், கூந்தலை ஒரு சுருட்டு சுருட்டி கொண்டையாக்கி, குளியல் அறையினை நோக்கிச் சென்றாள்.
அவள் வார்த்தைகள் ஷண்முகியை ஆவேசபடுத்தியது. ‘கடைசிவரை கல்யாணமே பண்ணிக்கமாட்ட, இதுதான் உன் முடிவு.’
குளியல் அறைக்குள் சென்றவள், ‘அம்மா, நான் இன்னும் சம்பாரிக்கணும், நான்தான் நேற்றே சொன்னேன்ல, போய் ஆகுற வேளைய பாருமா.’
பிடிவாதம், அப்படி ஒரு பிடிவாதம். கடந்த ஒரு வருடமாக கல்யாண விவகாரத்தில் ஷண்முகியை அவமதிக்கிறாள். சிறுவயதிலேயே மலர் அப்பாவை இழந்ததால், கடும் ஏழ்மையினை சந்திக்க நேரிட்டது. ஏழ்மை, உடலளவு மட்டுமின்றி, மனதளவும் மலரை பாதித்தது. இருப்பினும் பொறுப்புடன் படித்த மலர், ஒரு நல்ல வேலை பெற்று சம்பாதிக்கவும் ஆரம்பித்தாள்.
சிறு வயதிலிருந்து பண வாசனை தெரியாத மலருக்கு, பணம் சம்பாரிக்க ஆரம்பித்ததும், பணத்தின் மேல் ஒரு வகை காதலும் ஆரம்பித்தது. அன்றிலிருந்து அவள் பணத்தினை வெறிகொண்டு நேசிக்க ஆரம்பித்தாள். மரியாதை, மதிப்பு, மகிழ்ச்சி, மானம் என அனைத்தும் பணம் என்று நினைக்க ஆரம்பித்தாள். பணம் சம்பாரிக்க கல்யாணம் தடையாகி விடுமோ என்று எண்ணி, கல்யாணத்தை நிராகரிக்கிறாள். ஷண்முகிக்கு இதுவே மன வருத்தம் தருகிறது. தன் மகளை எப்படியாவது திருமண கோலத்தில் பார்த்திட ஏங்குகிறாள். ஆனால், மலரோ அதனை புரிந்துக்கொள்ளாமல் தன் தாயை காயப்படுதுகிறாள்.
சட்டுபுட்டென்று கிளம்பிய மலர், வழக்கமாக ஷண்முகியிடம் போடும் கல்யாணச் சண்டையினை முடித்து, மெயின் ரோட்டிற்கு வருவதற்குள் மணி ஏழரை ஆகிவிட்டது.
அந்தச் சிறியதொரு வாகன நடமாட்டம் மட்டும் இல்லையெனில், அந்தச் சாலை மௌனத்தினையே தனது இருப்பிடமாகக் கொண்டு இருந்திருக்கும். ரோட்டின் இரு பக்கமும் இருந்த நடைப்பாதையினை தெருநாய்கள் தங்களது இருப்பிடமாகக் கொண்டிருந்தனர். கை கடிகாரத்தினைப் பார்த்து ‘டைம் ஆகிடிச்சே’ என்று வருந்தி, நெற்றியில் வடியும் வேர்வையினை துடைத்து விறுவிறுவென நடைபோட்டாள் மலர்.
கால்களை நடைபோடச் செய்தவள், மூளையை சிந்தனைப்போடச் செய்தாள். ‘இவ்வளவு காலமா உழைத்து, இப்பத்தான் ஒரு மிடில் கிளாஸ் ரேஞ்சுக்கு வந்திருக்கோம். இன்னும் நல்லா சம்பாரிச்சாதான், எல்லார் முன்னாடியும் தலை நிமிர்ந்து வாழ முடியும். அது புரியாம நம்ப அம்மா, ஏன் காசு பின்னாடி அலையற, இருக்குறத வச்சு சந்தோஷமா இருக்கலாம்னு அட்வைஸ் பண்ணி சாகடிக்குறாங்க. இது போதாது என்று கல்யாணம் வேற பண்ணிக்கோன்னு சொல்லி டார்ச்சர் பண்றாங்க ச்ச…, போன மாசம் ஆஃபீஸுல, மன்த்லி டார்கெட்ட இருபதே நாள்ல முடிச்சிட்டேன். இந்த மாசம் ஒரு பதினஞ்சே நாள்ல முடிச்சாதான் ப்ரமோஷன் கிடைகும்னு நான் ஒரு ஐடியால இருந்தா, கல்யாணம் பண்ணிக்கோ, பணத்துக்குப் பின்னாடி அலையாதனு நச்சரிகுறாங்க’, என்றெல்லாம் பல சிந்தனையில் இருந்தவளை, பின் இருந்து வந்த அந்த நாயின் குரைச்சல் சத்தம், சிந்தனைகளை சிதறச் செய்தது. பதட்டத்துடன் திரும்பினாள் மலர்.
கருப்பு வெள்ளை நிறங்களை உடுத்தியிருந்த அந்த நாய்க்குட்டியினை எதிர்கொண்டாள் மலர். நாயின் அருகில் இருந்தச் சின்ன பாத்திரத்தில் இருந்த பால் தட்டிவிடப்பட்டிருந்தது. நாய், மீண்டும் குரைத்தது. மலர் மீண்டும் அதிர்ந்தாள். உடனே ரோட்டின் மறுமுனையில் இருந்து ஓடி வந்தாள் அந்தச் சிறுமி. வந்தவள் ‘ஏய், அமைதியா இரு’ நாயை கண்டிக்க, நாய் பம்மிப் பதுங்கியது. ஒழுங்காய் வாரப்படாத முடி, கை, கால் மற்றும் முகத்தினில் படிந்திருந்த மணல் தூசிகள், அழுக்கான ஆடை, என அனைத்தும் அவளை ஒரு பக்கா ஏழ்மை சிறுமியாக காண்பித்தது. அவளின் தோற்றங்கள், மலருக்கு தனது ஏழ்மை பருவங்களை நினைவூட்டியது. இருப்பினும் ஏழ்மை பிடிக்காததால் உடனே அந்த நினைவுகளை சிதறடித்தாள்.
நாயினை அடக்கிய சிறுமி மலரைப் பார்த்ததும், ‘அக்கா, நீங்களா’ என்று தெரிந்தவரிடம் பேசுவதுப்போல் பேசினாள்.
திகைத்த மலர், ‘ஏய் பொண்ணே, என்னை உனக்கு தெரியுமா??..’ வினவினாள் மலர்.
‘ம்ம்.. தெரியுமே உங்கள தினமும் காத்தால இந்த ரோட்டுல பார்ப்பேன்.’
அவளது மழலைக் குரலில் வெளிவந்த பதில் மலரை கவர்ந்து இழுத்தது. தன்னை மறந்து அவளிடம் பேச்சுக் கொடுத்தாள். ‘இந்த ரோட்டுல நிறையப்பேரு போறாங்க, வராங்க, என்ன மட்டும் எப்படி ஞாபகம் வச்சிருக்க?’
‘அதுவா..’ முதலில் தயங்கியவள், பின் தொடர்ந்தாள், ‘எல்லாரும் அவங்கபாட்னு போயிடுவாங்க, நீங்க மட்டும் தான் அப்பப்ப.. என் நாய்க்குட்டிக்கு வச்சப் பால…, கால்ல தட்டிட்டு போய்டுவீங்க.’
குழம்பினாள் மலர். ‘நானா??.. என்னம்மா சொல்லுற… எனக்கு அது மாதிரி ஞாபகமே இல்லையே.’
‘அது ஏன்னா.. நீங்கத் தினமும் வேகமா, எதையோ யோச்சிக்கிட்டே, நடந்து வருவீங்களா, அதனால நீங்க பால் கிண்ணத்த தட்டி விட்டதக்கூட கவனிக்காம போயிடுவீங்க. அப்பறம், இத்தன நாளா என் நாய் உங்களப் பாத்து குரைக்கல, இன்னிக்குத்தான் டென்ஷன் ஆகி குரைச்சிருக்கு.’ பேசி முடித்த சிறுமி, நாய் தரையில் கொட்டியிருக்கும் பாலினை நக்குவதைப் பார்த்து, நாயின் தலையில் மெல்லமாக தட்டி, ‘எத்தன தடவ சொல்லியிருக்கேன், தரையில கொட்டுனத சாப்பிடக்கூடாதுனு’, என்று கண்டித்து, ‘இரு இந்த அக்காக்கூட பேசி முடிச்சதும் உனக்கு பால் கொண்டு வரேன்.’ என்று அன்பாய் கூறினாள்.
இந்நிகழ்வினை ரசனையுடன் பார்த்தாள் மலர். ‘அப்பறம் என்னக்கா..’ என்று சிறுமி ஏறிட, உடனே தன் ஹாண்ட்பேக்கில் இருந்து ஒரு ஐம்பது ரூபாய்த் தாளினை எடுத்து, அந்த சிறுமி முன் நீட்டினாள்.
‘அக்கா எதுக்குக் காசு.., எனக்கு வேண்டாம்.’
‘ஏன் வேண்டாம்?, நான் இத்தன நாளா எத்தன தடவ பால தட்டி வீணாக்கிருப்பேன், அதுக்கு தான் இந்தக் காசு, வச்சிக்கோ.’ மலர் அந்த சிறுமிக்கு விளக்கம் கூறினாள்.
‘வேண்டாம்கா, எங்க அம்மாக்கு தெரிஞ்சா திட்டுவாங்க.’ அந்த சிறுமியின் விளக்கம் மலரை ஆச்சரியம் அடையச்செய்தது. ‘சரிக்கா, நான் போறேன், நாளைக்குப் பார்க்கலாம்’ என்றவள், நாய்க்குட்டியினை மடியில் வைத்துக்கொண்டு ரோட்டின் மறுமுனைக்குச் சென்றாள்.
சிறுமி சென்றாலும், அவளின் நினைவுகள் மலரின் மனதினை விட்டு நீங்கவில்லை. அதுவரை விறுவிறுவென நடைபோட்டவள் பொறுமையை பழகத் தொடங்கினாள். அதுவரை மூளை மூலம் சிந்தித்தவள், மனம் மூலம் யோசிக்க ஆரம்பித்தாள்.
‘ச்ச.. இத்தன நாளா பணம் பணம்னு அலஞ்ச, நம்பள சுத்தி நடக்குற நிகழ்வுகள, அதுவும், நம்பலால மத்தவங்க எப்படி பாதிக்கப்படுறாங்க, என்பதையே கவனிக்காம விட்டுட்டோமே.’ வருந்தினாள் மலர்.
‘அந்தச் சின்ன பொண்ணு, பார்க்கவே ஏழ்மையா தெரியுறா, இருந்தாலும் தான் வளக்குற நாய்க்கு பால் எல்லாம் கொடுத்து நல்லா பத்திரமா பார்த்துக்கொள்கிறாள்.’ வியந்தாள் மலர். ‘எல்லாத்துக்கும் மேல, நான் குடுத்த காசையும் வாங்காம, ஏன்னு கேட்டா, அம்மா திட்டுவாங்கணு சொல்லுறா. அந்தச் சின்ன பொண்ணே அவங்க அம்மா பேச்சைக் கேட்டு நடந்துக்கும் போது, இவ்வளவு வளர்ந்த நான் எங்க அம்மா பேச்சைக் கேட்டு நடந்துக்க மாட்றேனே, ச்ச…’ உணர்ந்தால் மலர்.
இம்முறை அலைபேசி கூப்பிட்டு அவள் மனச்சிந்தனைகளை கலைத்தது. அலைப்பேசியினை அட்டென்ட் செய்து காதின் மேல் வைத்தாள். மறுமுனையில் ஷண்முகி, ‘ஹலோ.. மலர்,’ என்று ஆரம்பிக்க, மலர், உறுதியுடனும், நம்பிக்கையுடனும் ‘அம்மா, நீ சொல்லுறத நான் கேட்குறேன். நான் கல்யாணம் பண்ணிக்கிறேன். இனிமேலும் பணத்துக்குப் பின்னாடி அலையமாட்டேன்.’ கேட்ட ஷண்முகி வியப்பில் உறைந்தாள்.
– கதைப் படிக்கலாம் – 123
இதையும் படியுங்கள் : கோழியக் காணோம்…