– முனைவர் பொன்.கௌசல்யா
தனியார் நிறுவனத்தில் சேல்ஸ் ஆபீஸராக இருக்கும் ரகுநாதன், தனக்குக் கொடுக்கப்பட்ட விற்பனை இலக்கைத் தொட கடுமையாக உழைத்தான்.
அன்று அசதி காரணமாய், மாலை ஆறரை மணிக்கே வீடு திரும்பினான். தளர் நடையுடன் அவன் வீட்டினுள் நுழைந்தவுடன், தபாலில் வந்திருந்த கடிதத்தை அவனிடம் நீட்டினாள் சுதா. அவன் தர்ம பத்தினி. கடிதம் ஏற்கனவே பிரிக்கப்பட்டிருப்பதைக் கண்ணுற்றவன், தலையைத் தூக்கி, அவளைப் பார்க்க “நான்தான் பிரிச்சுப் படிச்சேன்!…இப்ப என்ன?” அவளே வாக்குமூலம் தந்தாள். ஊறிய சினத்தை உதட்டுப் புன்னகையால் மென்று விட்டு, கடிதத்தை படிக்க ஆரம்பித்தான்.
அவன் ஒரு வரி கூடப் படித்திருக்க மாட்டான்,
“த பாருங்க!…அப்பனையும் ஆத்தாளையும் முழுங்கிட்டு, ஆறுமாசமா தனியாளா கிராமத்துல கெடந்த உங்க அண்ணன் மகன் தனபாலுக்கு, திடீர்ன்னு உங்க பாசம் பொத்துக்கிச்சாம்!…நம்மையெல்லாம் பார்க்க வர்றானாம்..!…அனாதைச் சனியன்….வந்து என்னத்தைக் கேட்கப் போகுதோ?… “ஐயாயிரம் குடு…பத்தாயிரம் குடு”ன்னு கேட்கப் போகுதோ?… இல்லை…. “அங்க தனியா இருந்து பார்த்துட்டேன்…முடியலை..அதனால இங்கியே எனக்கு ஒரு வேலை பார்த்துக் கொடுங்க சித்தப்பா…நான் இனி ஆயுசு பூராவும் இங்கியே ஒட்டிக்கறேன்”ன்னு அடைக்கலம் கேட்கப் போகுதோ தெரியலையே!” மூச்சு விடாமல் பொரிந்தாள் சுதா.
வேகமாய்த் திரும்பி “கொஞ்சம் கடிதத்தைப் படிக்க விடறியா?” என்றான் பற்களைக் கடித்துக் கொண்டு.
“படிங்க…நானா வேணாங்கறேன்?…ஏதோ நான் படிச்சிட்டதால விவரத்தைச் சொன்னேன், அவ்வளவுதான்!…அதுக்குப் போய் “சிடு..சிடு”ங்கறீங்களே?” சொல்லுவதை எப்போதுமே ஒரு அபிநயத்தோடு சொல்வது, சுதாவின் வழக்கம். அதனால் தனக்குள் ஏற்படும் கோபத்தை, சத்தமில்லாமல் விழுங்கிக் கொள்வது, ரகுநாதனின் பழக்கம்.
கடிதம் முழுவதையும் படித்து முடித்தவன் யோசனையுடன் மேவாயைத் தடவ,
“இங்க பாருங்க….எதையும் யோசிக்கவே வேண்டாம்!…இந்த ஒரு விஷயத்திலாவது, புத்திசாலித்தனமா நான் சொல்றதைக் கேட்டு நடந்துக்கங்க!” அபிநய சுந்தரி ஆடினாள்.
“நீ என்னதான் சொல்ல வர்றே..சுதா?” சன்னக் குரலில் கேட்டான்.
அவன் அருகில் மிக நெருங்கி வந்து, “புதன்கிழமைதானே வர்றதாதானே எழுதியிருக்கான்?…நீங்க செவ்வாய்க்கிழமையே கிளம்பி பழனி போயிடுங்க!…ஏன்னா…? நீங்க இங்க இருந்தாத்தானே எதையாவது கேட்பான்…நீங்களும் மறுத்துப் பேச தைரியம் இல்லாம “சரி..சரி”ன்னு சொல்லித் தொலைப்பீங்க!..அதனால நீங்க இங்க இருக்கவே வேண்டாம்…நான் அவன் வந்ததும், நீங்க வேண்டுதல் நிறைவேத்தறதுக்காக, கோவிலுக்குப் போயிட்டதா சொல்லிட்டு “நானும் எங்கம்மா வீட்டுக்குக் கௌம்பிட்டிருக்கேன்”ன்னு சொல்லிட்டு, கிளம்பற மாதிரி பாவ்லா பண்றேன்!…வந்த பயல் அப்படியே திரும்பிப் போயிடட்டும்!”
இதுநாள் வரையில், இதுப் போன்ற ஒரு கள்ளத்தனத்தை மனதால் நினைத்துக் கூடப் பார்த்திராத ரகுநாதன் தயங்கினான்.
“சரி..ஏதோ டீஸண்டா திருப்பியனுப்பறதுக்கு யோசனை சொன்னேன்…உங்களுக்கு அது பிடிக்கலை போலிருக்கு… அதான் தயங்கறீங்க!…அப்ப வேற வழியில்லை…நானே அவனை நேருக்கு நேரே பேசித் துரத்தியடிக்க வேண்டியதுதான்!” தலையை மேலும், கீழும் ஆட்டியபடி சொன்னாள் சுதா.
பின் விளைவுகளை யோசிக்காமல் எதையும் செய்யக் கூடியவள் சுதா, என்பதை உணர்ந்திருந்த ரகுநாதன் “ஓ.கே.சுதா நீ சொல்ற மாதிரியே நான் பழனி போயிடறேன்!…நீயும் அவன் வந்ததும் உங்கம்மா வீட்டுக்குப் போறேன்!னு சொல்லிக் கிளம்பிடு!” என்று சொன்னவன், மெல்ல அவளருகில் வந்து, “சுதா….அவனை ரொம்ப மரியாதைக் குறைவா நடத்திடாதே…பாவம்!”என்றான் கெஞ்சலாய்.
“சரி…சரி” என்றாள் அவளும். மனசுக்குள், “ஏதோ இந்த மட்டிலாவது ஒப்புக் கொண்டாரே, இதுவே பெரிய விஷயம்!” என நினைத்துக் கொண்டாள்.
திட்டப்படியே, ரகுநாதன் செவ்வாய் இரவு கிளம்பி பழனி நோக்கிப் பயணித்தான். பஸ்ஸில் போகும் போதெல்லாம் மனசு உறுத்திக் கொண்டேயிருந்தது. “நான் செய்வது நியாயமா?…பொண்டாட்டி பேச்சைக் கேட்டுக்கிட்டு..அண்ணன் மகனை இப்படி அவமதிக்கிறேனே…இது தப்பல்லவா?”
“தப்பேயில்லை!…இன்னிக்கு இதைச் செய்யலேன்னா…நாளைக்கு இதை நெனச்சே வருத்தப்பட வேண்டியிருக்கும்!” மனதின் இன்னொரு மூலையிலிருந்து அவன் செயலுக்கு ஆதரவும் ஒலித்தது.
அதிகாலை வேளையில் பழனியை அடைந்தவன், ஒரு சத்திரத்தில் அறை எடுத்து, குளியல் வேலைகளை முடித்துக் கொண்டு, மலை ஏறத் துவங்கினான்.
“பழம் நீயப்பா…ஞானப் பழம் நீயப்பா!…தமிழ் ஞானப் பழம் நீயப்பா” கே.பி.சுந்தராம்பாள் குரலும், “கந்தன் காலடியை வணங்கினால்…கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே!” டி.எம்.சவுந்தர்ராஜன் குரலும், சி.டி.க்கள் விற்பனை செய்யப்படும் கடைகளிலிருந்து வழியெங்கும் முழங்கின
ஆங்காங்கே குரங்குகள் குறுக்கும் நெடுக்கும் ஓடின.
மலை மேலே, கோவிலில் கூட்டம் குறைவாகவே இருக்க, சாமி தரிசனம் எளிதாகவே கிடைத்தது, ரகுநாதனுக்கு. “அப்பனே…முருகா…எப்படியாவது வரப் போற உத்தியோக உயர்வுப் பட்டியல்ல எனக்கு “மேனேஜர்”ங்கற பதவி வர, நீதான்ப்பா அருள் புரியணும்!” பக்திப் பரவசத்துடன் வேண்டிக் கொண்டான்.
தரிசனத்தை முடித்து விட்டு, கோவிலையும் வலம் வந்து விட்டு, பிரசாதக் கடைக்குச் சென்று, பிரசாதங்களையும் வாங்கிக் கொண்டு, படிக்கட்டு வழியாக மலையிலிருந்து இறங்கத் துவங்கிய போது, செல்போன் ஒலித்தது. எடுத்துப் பார்த்தான். சுதா தான் அழைத்திருந்தாள். “இவ எதுக்குக் கூப்பிடறா…?”
யோசனையுடன், “என்ன சுதா?” மெல்லிய குரலில் கேட்டான்.
“ஏங்க…சாமி தரிசனமெல்லாம் முடிஞ்சுதா?” சுதாவின் குரலில் ஒருவித உற்சாகமும், சந்தோஷமும் தெரிய,
“ம்ம்…ஆச்சு…ஆச்சு!…அது செரி…அங்கே என்னாச்சு?..அவன் வந்துட்டானா?…நாம பேசின மாதிரியே பேசித் திருப்பியனுப்பிட்டியா?” திருட்டுத்தனம் வழிந்தது ரகுநாதனின் குரலில்.
“அவரு காலையிலேயே வந்திட்டார்!… சாப்பிட்டுட்டு ரெஸ்ட் எடுத்திட்டிருக்கார்” என்றாள்.
“என்னது….அவரா?…ஏய்…என்னாச்சு உனக்கு? திடீர்ன்னு அவனுக்கு மரியாதையெல்லாம் குடுக்கறே?…எப்பவும் “அவன்…இவன்…அனாதைச் சனியன்”னுதான் சொல்லுவே…இப்ப என்னாச்சு?..ஓகே..ஓகே…இப்ப அவன் உன் எதிர்ல இருக்கான்…அப்படித்தானே?” கேட்டான் ரகுநாதன்.
“அவரு அங்க ஹால்ல உட்கார்ந்து டி.வி.பார்த்திட்டிருக்கார்!”
“என்னது…ஹால்ல உட்கார்ந்து… டி.வி.பார்த்திட்டிருக்கானா?.. எதுக்குடி அவனை இன்னும் உட்கார வெச்சிருக்கே?… “எங்கம்மா வீட்டுக்குப் போறேன்!”ன்னு சொல்லி அவனைக் கிளப்ப வேண்டியதுதானே?” ரகுநாதன் சற்றுக் கோபமாகவே கேட்க,
“ஆமாம்…நாம அப்படித்தான் பேசினோம்!…ஆனா….இப்ப விஷயம் வேற மாதிரி ஆயிடுச்சு!” சொல்லி விட்டு சுதா நிறுத்த,
“வேற மாதிரின்னா என்னடி அர்த்தம்?…புரியுற மாதிரி சொல்லுடி!” கடுப்படித்தான்.
“அதையெல்லாம் போன்ல சொல்லிட்டிருக்க முடியாது…நீங்க நேர்ல வாங்க பேசிக்கலாம்!” என்று சாதாரணமாகச் சொன்னவள், திடீரென்று தொணியை மாற்றிக் கொண்டு, “தரிசனமெல்லாம்…முடிஞ்சுதல்ல?…அப்புறமென்ன…உடனே பொறப்பட்டு வர வேண்டியதுதானே?” பரபரத்தாள் சுதா.
“வேண்டாம்…அவன் கிளம்பட்டும்…அவன் போனதும் வர்றேன்!”
“அவரு இப்போதைக்குப் போக மாட்டாருங்க!….நீங்க வந்ததும் உங்களைப் பார்த்துப் பேசிட்டுத்தான் போவாரு!…ஏதோ முக்கியமான விஷயம் பேசணுமாம் உங்ககிட்டே!” “கிசு…கிசு” குரலில் சொன்னாள் சுதா.
“என்ன முக்கியமான விஷயம் பேசப் போறான்?…நீ சொன்ன மாதிரி அஞ்சாயிரமோ… பத்தாயிரமோ… கைமாத்துக் கேட்பான்… இல்லாட்டி “எனக்கொரு வேலை பார்த்துக் குடுங்க சித்தப்பா!.. நான் உங்களோடவே இருந்துக்கறேன்”ன்னு சொல்லுவான்!… அதெல்லாம் வம்பு… அவன் போன பின்னாடியே நான் வர்றேன்!” பிடிவாதம் பிடித்தான் ரகுநாதன்.
“வெட்டிப் பேச்சு பேசாம, சீக்கிரம் வந்து சேர்ற வழியைப் பாருங்க!” சிடு…சிடுத்தாள் சுதா.
“சரி…சரி…உடனே கிளம்பி வர்றேன்!… நான் வந்து சேர எப்படியும் ராத்திரி ஒன்பதுக்கும் மேல ஆயிடும்!”
“பரவாயில்லை வாங்க!…அவரு இன்னிக்கு தங்கிட்டு, நாளைக்கு ஊருக்குப் போகட்டும்” என்று சொல்லும் போது, சுதாவின் குரலில் கோபம் கொஞ்சமும் இல்லாதது, ரகுநாதனுக்கு மேலும் ஆச்சரியத்தைக் கொடுத்தது.
இணைப்பைத் துண்டித்த ரகுநாதன் குழப்பத்தில் ஆழ்ந்தான். “என்னாச்சு இவளுக்கு?… நேத்திக்குப் பேசும் போது என் அண்ணன் மகனை கண்டபடி திட்டித் தீர்த்தாள்… இன்னிக்கு அவனை “அவரு… இவரு”ன்னு தூக்கி வெச்சுப் பேசறா!… வர்றவனை வாசல் கதவோட திருப்பியனுப்ப எனக்குத் திட்டம் போட்டுக் குடுத்தவ, இப்ப “அவரு ஒரு நாள் தங்கிட்டு நாளைக்குப் போகட்டும்”ன்னு வெகு அக்கறையா சொல்லுறாளே?… ஏன் அவளிடம் இந்த திடீர் மாற்றம்?”
யோசனையுடன் பழனி பஸ் ஸ்டாண்டிற்குள் நுழைந்தவன், கிளம்பத் தயாராய் நின்று கொண்டிருந்த பஸ்ஸில் ஓடிப் போய் ஏறி, ஜன்னலோர இருக்கையில் அமர்ந்து கொண்டான். பஸ் கிளம்பியதும், தூரத்தில் தெரிந்த பழனி மலையைப் பார்த்து, கன்னத்தில் போட்டுக் கொண்டான்.
இரவு ஒன்பதே முக்கால் மணி வாக்கில், வீட்டிற்குள் நுழைந்த ரகுநாதனை, எதிர் கொண்டு வரவேற்றான் அவன் அண்ணன் மகன் தனபால். “எப்படியிருக்கீங்க சித்தப்பா… கோவில்ல கூட்டமா?… சாமி தரிசனமெல்லாம் திவ்வியமா ஆச்சா?”
“ம்…ஆச்சுப்பா!…. அது சரி… நீ எப்படியிருக்கே?… கொஞ்சம் இளைச்சிட்ட மாதிரித் தெரியறியே!… .சாப்பிட்டியா?… அப்புறம்…. ஊர்ல ஏதாவது விசேஷமுண்டா?” மூச்சு விடாமல் கேட்டான் ரகுநாதன்.
“ம்ம்…நான் சாப்பிட்டாச்சு சித்தப்பா!… நீங்க போய் சாப்பிட்டுட்டு வாங்க சித்தப்பா, அப்புறம் பேசுவோம்!… ஊர்ல நிறைய விசேஷமிருக்கு” என்றான் தனபால்.
அசுவாரஸியமாய், எதையோ அள்ளி, வயிற்றுக்குள் தள்ளி விட்டு, தனபாலிடம் வந்த ரகுநாதன், “இங்க ரொம்ப புழுக்கமா இருக்கும்… மொட்டை மாடிக்குப் போயிடலாம்!” என்று சொல்லி, படிக்கட்டை நோக்கிச் செல்ல, தனபாலும் பின் தொடர்ந்தான்.
“சித்தப்பா…ஊர்ல… மேக்காலத் தெருவுல அந்தக் கடைசி வீட்டுல, ஒரு கெழவி பல வருஷமா சாகாம இழுத்திட்டே கிடந்ததே, ஞாபகமிருக்கா உங்களுக்கு?”
“லேசா ஞாபகமிருக்கு!… அதுக்கென்ன இப்ப?… செத்திடுச்சா?” கேட்டான் ரகுநாதன்.
“ஆமாம் சித்தப்பா… கெழவி பதினஞ்சு நாளைக்கு முன்னாடி மண்டையைப் போட்டுடுச்சு!… அது ஒத்தைக் கிழவியானதினால…. அதோட காரியங்களையெல்லாம் ஊர்க்காரங்களே ஊர்ப் பொதுச் செலவுல செஞ்சு முடிச்ச பிறகு… சொந்தப் பந்தம்னு யாருமே இல்லாத அந்த அனாதைக் கெழவியோட வீட்டை, பஞ்சாயத்துக்காரங்களும்… ஊர்ப் பெரிய தனக்காரங்களும் சோதனை போட்டாங்க!… அப்ப உள்ளார கெழவியோட தகரப் பொட்டியில் இருந்த பத்திரங்களையெல்லாம் எடுத்துப் படிச்சுப் பார்த்தாங்க!… அப்படிப் படிச்சப்பத்தான் எல்லோருக்கும் அந்த விஷயமே தெரிய வந்தது…!”
“எந்த விஷயம்?” ஆர்வமாய்க் கேட்டான் ரகுநாதன்.
“கெழவி தான் குடியிருந்த வீட்டையும்… மலையடிவாரத்துல தான் வாங்கிப் போட்டிருந்த பத்து ஏக்கர் நெலத்தையும் தாத்தா… வையாபுரி முதலியார் பேருக்கு எழுதி வெச்சிட்டுப் போயிருந்த விஷயம்!” இரண்டு கைகளையும் விரித்துக் காட்டி, புன்னகையுடன் சொன்னான் தனபால்.
குழப்ப முகத்துடன், விழியிமைக்காமல் அவனையே பார்த்தபடியே நின்றிருந்தான் ரகுநாதன்.
“முறைப்படி பார்க்கும் போது, இன்னிக்கு தேதில அந்தச் சொத்துக்களுக்கு வாரிசு ரெண்டே பேரு!… ஒண்ணு நீங்க… இன்னொன்னு நான்!… ஆனா, நம்மூர்ப் பஞ்சாயத்துல என்ன சொன்னாங்க.. “காலங்காலமா இருக்கற ஊர்ச்சட்டம் என்னன்னா?…. இந்த ஊர்ல இருக்கற பூர்வீக சொத்துக்கு பாத்தியதை உள்ளவங்க… இப்பவும் இதே ஊர்ல இருந்து பொழைச்சாத்தான் அவங்களோட பாத்தியதை செல்லுபடியாகும்!… சொத்தும் அவங்களுக்கு உரிமை வரும்!… இந்த ஊர்ல இல்லாம வேற எங்காவது வெளியூர்களுக்குப் போயி… அங்கியே தங்கிட்டாங்கன்னா… அவங்க பாத்தியதையும்… உரிமையும் ரத்தாயிடும்!”னு சொன்னாங்க!”
“ஓ…” யோசனையுடன் மேலும் கீழும் தலையாட்டினான் ரகுநாதன்.
“ஆனாலும் பங்காளிகளா இருக்கறவங்க மனமுவந்து… பிரியப்பட்டு… அவங்களுக்கும் ஏதோ கொஞ்சம் பங்கு தரலாம்னு சொன்னாங்கன்னா… அதை பஞ்சாயத்து தடுக்காது…. தாராளமாக் குடுக்கலாம்!”ன்னும் சொன்னாங்க!…. அவ்வளவுதான் அதை நான் “கப்பு”ன்னு பிடிச்சுக்கிட்டேன்!”
விஷயம் மேலோட்டமாய்ப் புரிய வர, ரகுநாதனின் விழியோரம் லேசாய் நீர்க்கசிவு ஆரம்பித்தது. “சரி…அப்புறம்?” கேட்டான்.
“நான் உங்களை விட்டுத் தருவேனா சித்தப்பா?…. உங்களுக்கும் பங்கு தந்தே ஆகணும்-ங்குற என்னோட விருப்பத்தை, பஞ்சாயத்துல உரக்கச் சொல்லி… மொத்த சொத்தையும் ரெண்டு பங்காப் போடச் சொல்லி… உங்க பங்குக்கான பத்திரங்களைக் கையோட தயார் பண்ணிக் கொண்டு வந்திருக்கேன் சித்தப்பா!…” என்றபடி, உள் அறைக்குள் சென்று, தான் கொண்டு வந்திருந்த பிளாஸ்டிக் பேக்கிலிருந்து, முத்திரைத்தாளில் எழுதப்பட்டிருந்த சில பத்திரங்களைக் கொண்டு வந்து, ரகுநாதனிடம் நீட்டினான் தனபால்.
“இந்தாங்க சித்தப்பா!…. உங்களை நேர்ல சந்திச்சு… இதை உங்க கைல கொடுத்திட்டுப் போகணும்னுதான், நீங்க வர்ற வரைக்கும் காத்திட்டிருந்தேன்!… அப்பாடா…. இப்பத்தான் எனக்கு நிம்மதி!…” சற்றும் சுயநலக் கலப்பில்லாமல் அவன் பேசிய விதம், ரகுநாதனை வெட்கப்பட வைத்தது. வேதனைப் பட வைத்தது. எதுவோ அவன் சுயத்தை லேசாய் உரசிப் பார்த்தது.
அவன் மனம் நீர் வயல் போல் நெகிழ்ந்து போனது. “இன்றைய தேதியில் எனக்காக அவன் கொண்டு வந்த அந்தப் பாதிச் சொத்தின் மதிப்பே, கிட்டத்தட்ட ஒண்ணே கால் கோடி ரூபாய் தேறும்… கிராமத்து நிகழ்வுகளை இவன் என்னிடம் சொல்லாமலே விட்டிருந்தாக் கூட, எனக்குத் தெரிய வர வாய்ப்பேயில்லை!…. அப்படியே தெரிய வந்தாலும், ஊர்ச்சட்டப்படி நான் பாத்தியதை கொண்டாட உரிமையும் இல்லை!… ஆனா அதையெல்லாம் மறைக்காமல்… என்னை விட்டுக் குடுக்காமல் எனக்காகப் பேசி… எனக்கொரு பங்கை வாங்கிக் கொண்டு வந்திருக்கான்னா… இவன்…. எப்பேர்ப்பட்ட மனசுக்காரன்… இவனைத் தவிர்க்கவா நான் பழனிக்கு ஓடினேன்?… முருகா!…” குற்ற உணர்வுடன் திரும்பி சுதாவைப் பார்த்தான், ரகுநாதன். அவளோ எந்த உணர்ச்சியும் இல்லாமல், வழக்கம் போலவே இருந்தாள்.
“பாவிப் பெண்ணே!… “அஞ்சாயிரம் குடு… பத்தாயிரம் குடுன்னு கேப்பான்”ன்னு சொன்னியே… சர்வ சாதாரணமா, ஒண்ணேகால் கோடி ரூபாய்ச் சொத்தை, அள்ளி வீசிட்டுப் போறான்டி இவன்!” மனதிற்குள் தழுதழுத்தான் ரகுநாதன்.
“பத்திரங்களையெல்லாம் எதுக்கும் ஒரு தரம் நல்லாப் படிச்சுப் பார்த்திடுங்க சித்தப்பா!… ஏதாச்சும் எழுத்துப் பிழை கீது இருந்தா சொல்லுங்க…. மாத்தி எழுதிடலாம்!”
“சரி” என்று வெறுமனே தலையாட்டினான் ரகுநாதன்.
“அப்புறம்…. பத்திரங்களை எடுத்து பத்திரமா பீரோவுல வெச்சுக்கங்க சித்தப்பா… நான் தூங்கப் போறேன்! காலைல நேரத்துல எந்திரிச்சு, மொத பஸ்ஸூக்குக் கௌம்பணும்!” சொல்லி விட்டு, அந்த தனபால் எழுந்து நடக்க, கண்களில் நீர் மல்க அவனைப் பார்த்தான் ரகுநாதன். “பயலே உன்னைய மாதிரி ஆளுங்க இன்னமும் இந்த பூமில இருக்கத்தாண்டா மழை மண்ணை எட்டிப் பார்க்குது!”
– கதைப் படிக்கலாம் – 6
இதையும் படியுங்கள் : கானல் மொழி…