– தமிழ் கார்த்தி

மின்விசிறியின் “டடக்…, டடக்” சத்தத்தில் சற்றுக் குறைவாகவே கைபேசியில் அழைப்பு ஒலி எழுந்தது. கண்களை மூடியவாறு நானும் கைபேசியை வைத்த இடத்தில் தடவினேன். வைத்த இடத்தில் கைபேசி இல்லை.
ஒரு பதட்டத்தில் கைபேசி கட்டிலில் இருந்து கீழே விழுந்து விட்டதோ என எண்ணி கண்விழித்துத் தேடினேன். அந்த அழைப்பையும் தவறவிட்டேன்.
அருகில் உள்ள மேசையில் இருந்து என் தலையணைக்கு அடியில் கைபேசி இருந்ததைக் கவனித்தேன்.
யார்? என்ற கேள்வியோடு கைபேசியை திறந்தேன்.
அது… பாலுதான் என்னை அழைத்திருக்கிறான். பாலு என் பால்ய சினேகிதன். சில மாதங்களுக்கு முன்னர் பேசியது. இன்று மீண்டும் அழைத்திருக்கிறான். ஏனோ என்று தெரியவில்லை.
திருப்பி அழைக்க என் கைபேசியில் சரியான திட்டமும் இல்லை. மீண்டும் அழைப்பான் என்று காத்திருந்தேன். சில மணித்துளிகள் கழித்து மீண்டும் தொடர்புக் கொண்டான். நான் கழிவறையில் இருந்ததால் மீண்டும் தவறவிட்டேன்.
அம்மாவிடம் பாலு ஊருக்கு வந்திருக்கிறானா என கேட்டேன். அம்மா தெரியவில்லை என்றாள்.
என் மனம், என்னவாக இருக்கும் என்ற எண்ணத்தில் இருந்து மீள்வதாக இல்லை.
ஒருவழியாக உணவு உண்டு முடித்துவிட்டு கையை சுத்தம் செய்து கொண்டிருக்க, அழைப்பு மணி அடித்தது.
எடுத்து, “ஹலோ” என்றேன்.
ஏன்டா, ஃபோன் எடுக்கமாட்டியா என கத்தினான் பாலு.
நீ ஃபர்ஸ்ட் டைம் கால் பண்ணும்போது தூங்கிட்டு இருந்தேன்.
செகண்ட் டைம் கால் பண்ணும்போது ரெஸ்ட் ரூமில இருந்தேன். திரும்பி கூப்பிடலாம்னு பார்த்தா, மொபைல்ல பேலன்ஸ் இல்ல என தெரிவித்தேன்.
சரி விடு, 11.30 க்கு பாஸ்போட் வெரிஃபிகேஷன்க்கு நான் போலீஸ் ஸ்டேஷன் போகணும், நீயும் துணைக்கு வா, போய்ட்டு வந்துருவோம் என்றான் பாலு.
நானும், சரி ஓகே பாலு என சொல்லி, இப்போது எங்கே இருக்கிறாய் என கேட்டறிந்து அங்குச் சென்றேன்.
காவல் நிலையம் இதுவரையில் நான் கால்தடம் பதித்திடாத இடம். முரட்டு மீசை, கட்டான உடல், காக்கி சட்டை, என சற்று மனம் பதறியது.
எது நடந்தாலும் நடக்கட்டும் என, நாங்கள் இருவரும் அரை மணி நேரத்திற்கு முன்னதாகவே சென்றுவிட்டோம்.
பாலு, கடவுச்சீட்டு சரிபார்த்தலுக்கு வரச்சொன்ன காவல் அதிகாரியை தொடர்புக்கொண்டு பேசினான். அவரோ ஒரு விசாரணை தொடர்பாக மாவட்ட தலைமை மருத்துவமனையில் தான் உள்ளதாக தெரிவித்தார். அத்தோடு தான் வர சற்று தாமதமாகலாம் எனவும் தெரிவித்தார்.
வெளியில் இருவரும் காத்திருந்தோம். சுற்றி பார்த்தேன். ஒரு எண்ணெய் ஏற்றும் சரக்குந்து, துருப்பிடித்து நின்றது. அது மட்டுமின்றி பல இருசக்கர வாகனங்களும் கூட.
கல்லூரி பேருந்துகள், மகிழுந்து, இரண்டு சுமையுந்து என தலை நசுங்கி அதன் பக்கங்கள் எல்லாம் நசுங்கி நின்று கொண்டிருந்தன.
என்ன, என்ன ஆசையில் இவற்றை எல்லாம் வாங்கினார்களோ. எல்லாம் இப்படி சிதைந்துக் கிடக்கிறதே என சற்று மனம் கலங்கியது.
சற்றுப் பார்வையை விசாலமாக்கினேன்.
பெண் காவல் அதிகாரி ஒருவர், கணவன் மனைவிக்கு இடையே உள்ள சண்டையை தீர்த்து வைக்கும் முனைப்போடு பேசிக் கொண்டிருந்தார். சில மணி நேரப் பேச்சுக்குப் பின், இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.
வெள்ளை கருப்பு உடையில் வழக்கறிஞர் ஒருவர், காவல் அதிகாரி ஒருவரை சந்தித்துப் பேசினார். அப்பாவி போல் ஒருவன் அருகில் நின்றுக் கொண்டிருந்தான்.
மதுபோதையில் மகிழுந்தில் இயக்கி, அதன்பின்னர் அந்த மகிழுந்தின் ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அந்த நபர் இரவிலிருந்து அங்கேயே இருப்பதும் எங்களுக்குத் தெரியவந்தது.
காவலதிகாரி பேசிக்கொண்டே சற்று நகர்ந்து, காவல் நிலையத்தின் இடதுபக்கம் சென்றார். அங்கே மூவரும் சில மணித்துளிகள் பேசி, நின்றுக்கொண்டிருக்க வழக்கறிஞர், காவல் அதிகாரியின் பைக்குள் ஏதோ ஒன்றை வைத்தார். சற்று நேரத்தில் கூட்டம் கலைந்து, மகிழுந்து மின்னல் வேகத்தில் எங்களைக் கடந்தது.
அதன்பின்னர் எங்கள் வாகனத்தின் அருகே ஒரு நபரும் வந்து வாகனத்தை நிறுத்தினார். அவர் வாகனத்தில் வழக்கறிஞர்களுக்கான குறியீடு ஒட்டப்பட்டிருந்ததை வைத்து, அவர் வழக்கறிஞர் என முடிவுக்கு வந்தோம்.
பின்னே இரண்டு இருசக்கர வாகனத்தில் நான்கு நபர்கள் வந்து இறங்கினார்கள்.
வெள்ளைத் தாளை எடுத்து வழக்கறிஞர் புகார் மனு எழுதினார்.
ஏதோ பக்கத்து வீட்டுக்காரர்கள் தொந்தரவு இருப்பதாகவும். அதில் தன் மனைவியை அவர் இல்லாதபோது அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறினார். மேலும் கத்தியை காட்டி மிரட்டியதாகவும் முதன்மைக் குற்றவாளி என ஒருவரின் பெயரையும் சுட்டிக்காட்டி எழுதச் சொன்னார்.
வழக்கறிஞர் புகார் மனுவை எழுதிக் கொடுத்துவிட்டு, மனுதாரர் என ஒருவரிடம் கையொப்பம் வாங்க நீட்டினார். கையொப்பமிட்டு உள்ளே சென்றனர், நால்வர். ஒருவர் மட்டும் அங்கே நின்றுக் கொண்டிருந்தார்.
சில கணங்களுக்கு பின்னே நால்வரும் காவல் நிலையத்திற்கு இடது ஓரமாக சென்றனர். அதன் பின்னர் காவல் அதிகாரியும் வந்தார். எனது அருகில் இருக்கின்ற ஒருவர், தன் பையிலிருந்து இரு இரண்டாயிரம் ரூபாய், தாளையும், இரு 500 ரூபாய் தாளையும் எடுத்துக்கொண்டு அருகில் சென்றார்.
இதையெல்லாம் நான் கவனித்துக் கொண்டிருக்க, பாலுவோ யாரிடமோ வெகுநேரமாக பேசிக்கொண்டே இருந்தான்.
இப்போது அந்தப் பணம் மடித்து சுருட்டி, காவல் அதிகாரியின் பைக்குள் சென்றது.
காத்திருந்து வெறுப்படைந்து, “பாலு டைம் ஆகுதுடா” எனக் கூறினேன். பாலு மீண்டும் காவல் அதிகாரியை தொடர்புக்கொண்டான். காவல் அதிகாரியோ தான் காவல் நிலையத்திற்குள் வந்து அரை மணி நேரமாகிறது எனக் கூறினார். உள்ளே பாலு சென்றான். நான் உள்ளே வரவில்லை எனக் கூறிவிட்டேன்.
பத்து நிமிடம் கழித்து பாலு அதே இடதுபுறமாகச் சென்றான். பின்னே காக்கி சட்டையில் ஒருவரும் சென்றார். பாலு தன்னிடம் இருந்த ரூபாயை மடித்து, ஒளித்து அவரின் பைக்குள்ளே வைத்துவிட்டு திரும்பினான். காந்தியும் ஒளிந்து மறைந்தே சென்றார், காவல் அதிகாரியின் பைக்குள்ளே.
அவர்களுக்குத் தெரியவில்லை… அங்கே வெளியில் ஒரே ஒரு கண்காணிப்பு கருவி மட்டுமே உள்ளது என நினைத்துக் கொண்டிருந்தனர். என்னை மறந்துவிட்டனர்.
– கதைப் படிக்கலாம் – 150