– முகில் சிவராமன்

எனக்கு தன்னம்பிக்கையை கொடுத்து ஊக்கப்படுத்திய அனைவருக்கும் சமர்ப்பணம்.
வைரம் பாஞ்ச கட்டைங்ற மாதிரி, இவ வைராக்கியம் பாஞ்ச கட்டை. சின்ன வயசுலேயே கொத்தவரங்காய்க்கு கையும் காலும் முளைச்ச மாதிரி… ஒல்லியா நெடுநெடுனு வளர்ந்து இருப்பா. மூணு வயசு முடியும் முன்னே கையால தலைய சுத்தி காத தொட்டுடுவா… அஞ்சு வயசிலேயே பள்ளிக்கூடம் சேர்த்துவிட்டார், அரசாங்க உத்தியோகம் பார்க்கிற அவங்க அப்பா. பதினாறு வயசிலேயே டீச்சர் ட்ரெயினிங் சேர்த்துவிட்ட கையோட அவர் போய் சேர்ந்துட்டாரு.
பொம்பள பிள்ளையாச்சு ஊரு சொல்லுக்கு ஆளாகிட கூடாதுன்னு கண்ணும் கருத்துமா வளர்த்து, படிப்பு முடிச்ச கையோட கல்யாணத்தை வச்சுப்புட்டா அவ அம்மா.
கல்யாணம் ஆகிப் போன இடத்தில புருஷனையும் புகுந்த வீட்டையும் முழுசா பாக்குறதுக்குள்ளேயே தல குளிக்கிறது தள்ளிப் போயிருச்சு. செய்தி கேள்விப்பட்ட சினேகிதிக எல்லாம் கிண்டல் அடிச்சாங்க, உறவுகளெல்லாம் கமுக்கமா சிரிச்சாங்க. கேள்விப்பட்ட உடனேயே பொண்ண பார்த்துட்டு வரலாம்னு, பூவும் பலகாரமும் வாங்கிட்டு வந்த அவ அம்மாக்காரி, மகள பாத்துட்டு பதறி போயிட்டா…
ஆத்தே என் புள்ள தலைதூக்க முடியாமல், தூப்பாக்குழி ஓரத்தில் தொவண்டு கிடக்குதே… ஓடிப்போய் தூக்கி நிறுத்துறா… உவ்வேவ்.. உவ்வேனு குடலுக்கும்பி எல்லாம் வெளியில வர மாதிரி வாந்தி எடுக்கிறா மக. வாங்கிட்டு வந்த பலகாரத்தை மாமியார்கிட்ட கொடுத்துட்டு, புள்ளைய என் வீட்டுக்கு கூட்டிட்டுப்போயி ரெண்டு மாசம் வச்சிருந்து கூட்டி வரேன்னு சொன்னா. தலைகுப்புற கிடக்கிறவ இருந்தா, என்ன போனா என்னன்னு மாமியாகாரியும் சரின்னுட்டா..
அஞ்சு மாசம் ஆகியும் சுத்துற தலை நிக்கல, எடுக்கிற வாந்தியும் குறையல… தட்டுல சோத்தப்போட்டு வெச்சுட்டு போயி வெஞ்சனம் எடுத்துட்டு வர்றதுக்குள்ள, சோத்துத் தட்டு பக்கத்திலேயே மயங்கி கிடப்பா. அஞ்சு முடிஞ்சு ஆறு ஆரம்பிக்கும்போது தலைநிமிர ஆரம்பிச்சா, புருஷங்காரன் வந்துட்டான் கூட்டிட்டுப் போக… அவ புருஷனும் பகலெல்லாம் ரொம்ப நல்லவந்தா… சாயங்காலம் ஆறு மணி ஆச்சுனாதான், மசக்கையில அவப் பொண்டாட்டி கிடைக்கிற மாதிரி மப்புல அவன் கிடப்பான்…
அவ அம்மாக்காரிக்குத் தான் இருப்புக் கொள்ளல.. மனசு பக் பக்கென்று இருந்தது. தண்ணிய போட்டுட்டு மனுசேன் முன்னபின்ன நடந்துகிட்டா, வாயும் வயிறுமா இருக்கிறவ தாங்குவாளா…? பல்ல கடிச்சிக்கிட்டுத்தான் இருந்தா… ஏழு பிறந்தவுடனே வளைகாப்பு வச்சி கூட்டிட்டு வந்துட்டா…
நல்லபடியா பிரசவமும் ஆயிடுச்சு… கொழு கொழுனு ஆம்பள புள்ள, அவங்க அப்பனை மாதிரியே பொறந்திருக்கு. எண்ணி முப்பது நாளு ஆகல, மாமியாக்காரி வந்துட்டா, காய்ச்சி ஊத்திட்டு பேரனையும் மருமகளையும் கூட்டிட்டு போறேன்னு…
ஆத்தி அவ பச்ச வொடம்புக்காரியாச்சே………. பார்த்து பக்குவமா இருக்கணுமே.. அங்கே வந்த ஆகுமா.. துடிச்சுப்போனா ஆத்தாகாரி, மூணு மாசத்துல பிள்ளைக்கு தல நிக்கவும் அனுப்பி வைக்கிறேன் அத்தாச்சினா… முறுக்கிக்கிட்டு போயிட்டா மாமியாகாரி…
எப்பத்தான் வருவேனு பிள்ளையை பார்க்கற மாதிரி… பாத்துட்டு கேக்குற மாதிரி கேட்டாங்க… நாத்தனாரு, சின்ன மாமியாரு, சொந்த பந்தங்கள் எல்லாம்…
ஒவ்வொருத்தரா வந்து… அப்படி இப்படின்னு அதுவும் ஆயிடுச்சு மூணு மாசம் குழந்தையை தூக்கிட்டு புருஷனோட போயிட்டா.
குழந்தை அழுகுது, சிரிக்குது, கண்ண உருட்டுது, புரளுது.. புது உலகமே பிறந்த மாதிரி ஆயிடுச்சு புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும்.. பார்த்து பார்த்து பூரிச்சுப் போயிட்டாங்க… குப்புத்தப் பையன் உடம்பை இழுத்து இழுத்து அப்பாட்ட வர்றான்… தூக்கி கொஞ்சினா அப்பங்காரனுக்குக் கண்ணீர் வழியுது.
அப்படித்தான் ஒரு ஞாயிற்றுக்கிழமை பையன் கூட விளையாடிட்டு இருக்கும்போது, ஒரு கொசு வந்து பையனா கடிக்கவும் வீறிட்டு அழுகுறான்… அதைப்பார்த்த அப்பங்காரன் துடிதுடித்துப் போய் என் பிள்ளையை கொசுக்கடிக்க விடலாமா? இப்பவே போய் கொசுவத்தி வாங்கிட்டு வரேன்னு வண்டி எடுத்துட்டு கிளம்பும்போது, ஏங்க.. கறிசோறு ஆக்கி வெச்சிருக்கே சாப்பிட்டு போங்கன்னா.. இருடி கடை பக்கத்துலதானே இருக்கு… வாங்கிட்டு வந்துரேனு போனான், திரும்பி வரலை… செய்தி தான் வந்துச்சு, ஆக்சிடென்ட் ஆகி ஆஸ்பத்திரிக்கு தூக்கிட்டு போயிருக்காங்கனு…
ஆத்தீனு அலறிக்கிட்டு அம்புட்டு பேரும் ஆஸ்பத்திரிக்கு ஓடினாங்க… தூக்கிட்டு போனவங்க கையை விரிக்க… அவன் சிநேகிதன் ஒருத்தன் வாயில துணிய வச்சு அழவும்.. ஆத்தாக்காரி மார்லயும் வயித்தலயும் அடிச்சுக்கிட்டு, கொசு ரூவத்திலேயா எம்மவனுக்கு யெமே வந்தான்னு அலறவும்… பொண்டாட்டி மயங்கி விழவும்… எல்லாமே முடிஞ்சு போச்சு..
ரெண்டாந் நாளு காடாத்துக்குப் போயிட்டு வந்தப்புறந்தான் நடந்தத சொன்னான் கூடப்போன சிநேகிதன். வண்டிய எடுத்துட்டு கிளம்பயில நாலு வீடு தள்ளி இருக்கிற சிநேகிதன் வாசல்ல நின்னிருக்கான்… வரியாடானு வண்டில ஏத்திட்டு போயிருக்கான். கடையிலப் போயி கொசுவத்தி வாங்கிட்டு காசக் கொடுத்துருக்கான், கடைக்காரன் சில்லரை இல்லைனு சொல்லவும், ரெண்டுக் கடை பக்கத்துல இருக்க டாஸ்மாக் அவன் கண்ணுல பட்டிருக்கு… கூடவே பொண்டாட்டி கறிசோறு ஆக்கி வச்சிருக்கேன்னதும் ஞாபகத்துக்கு வந்துச்சு. எவ்வளவு நாளாச்சுனு உள்ள பாருக்குள்ள நுழைஞ்சிட்டான். ரெண்டு பேரும் சியர்ஸ் சொல்லி சோலியமுடிச்சு, வண்டிய எடுத்து, நீ போய் கொசுவத்திக்கு காசு கொடுத்துட்டு வா… நான் வண்டிய திருப்பிட்டு வாரேனு போனவன், பேலன்ஸ் தவறி எதுக்க வந்த கார்ல விட்டுட்டான்….
அய்யோ… இந்தக் குடி எம்மவங் குடிய கெடுத்துடுச்சே…. மறுபடியும் ஒப்பாரி வைத்தாள்.
எட்டாம் நாள் காரியத்த முடிச்சுட்டு, சுத்துபத்தெல்லாம் கிளம்பிடுச்சு. இனியும் எத்தனை நாள்தான் மகக்கூட இங்கேயே இருக்கிறது, அம்மா கிளம்புறேன்றா மக கிளம்ப விடல.. இனி நான் எப்படி இந்த வீட்டுல இருப்பேன், என்னையும் கூட்டிட்டு போயிடுனு..
ஏற்கெனவே எம்மகனப் பிரிஞ்சிட்டேன்… இனி பேரன பிரிய முடியாது… வேணும்னா அவப் போகட்டும் அவ அம்மாக்கூட, எம்பேரன விடமுடியாது… கண்டிசனா மாமியாரு சொல்ல, கொஞ்ச நேரம் கசமுசாவானது. அப்புறம் பெரியவங்க எல்லாம் சேர்ந்து பேசி, தாயையும் பிள்ளையையும் பிரிச்சப் பாவத்துக்கு ஆளாகக்கூடாது… ரெண்டு பேரையும் அவ அம்மா கூடவே அனுப்பி வைச்சிறலாம்னு முடிவு எடுத்துட்டாங்க..
மூனு வருசம் ஓடிப்போச்சு, குழந்தையே உலகம்னு இருந்தவளுக்கு வெளியே ஒரு உலகம் இருக்குறத பார்க்குறதுக்கே. சொந்த வீடும், அப்பாவின் பென்ஷனுலயும்தான் அவ அம்மாவே வண்டிய ஒட்டிட்டிருந்தா, அதுல இன்னும் ரெண்டு டிக்கெட் சேர்ந்தவுடனே செலவுக்குப் பத்தாம வீட்டின் ஒரு பகுதியை வாடகைக்கு விட்டுருந்தாங்க… ஆனால் இனி இது பத்துமா? புள்ளைய ஸ்கூல்ல சேர்க்கணும், அதுவும் ஒரு பெரிய ஸ்கூல்ல சேர்க்கக் கேட்டு இருந்தா.. டொனேஷன் மட்டுமே ஒரு பெரிய அமௌன்ட் சொல்லிட்டாக..
எப்படிக் கஷ்டப்பட்டாவது பிள்ளையை பெரிய ஸ்கூல்ல சேர்த்து, பெரிய படிப்பு படிக்கவச்சுறனும்னு பிரயாசப்பட்டா.. அதுக்கு அவளும் வேலைக்குப் போயி சம்பாதிக்க வேண்டிய நேரம் வந்துடுச்சு. பையன சேர்த்த ஸ்கூல்லே கேட்டுப் பார்த்தா வேக்கன்சி இல்லைன்னுட்டாங்க… இன்னொரு ஸ்கூல்ல சேந்துட்டா…
புள்ளப் படிக்கிறது வடக்கால மூணு கிலோமீட்டர்னா, அவ ஸ்கூல் தெக்கால நாலு கிலோமீட்டர்… அவள் வைத்திருந்த பழைய சைக்கிள் வீட்டில் சும்மா இருந்தது. பிள்ளைக்கு சாப்பாடு, ஸ்நாக்ஸ் புத்தகப்பையுடன் ரெண்டு மூட்டை கட்டிக்கொண்டு பிள்ளையையும் ஏத்திக்கிட்டு, அவளுக்கு ஒரு சின்ன டப்பால சோறக் கட்டிக்கிட்டு காலையிலேயே மாங்கு மாங்குன்னு சைக்கிளை மிதித்து, ஸ்கூல்ல பையனை விட்டுட்டு, அவ வேலைக்குப் போய், மறுபடியும் சாயங்காலம் ஸ்கூல் வந்து பையனை கூப்பிட்டு வீட்டுக்கு வரதுக்குள்ள ஓடா தேஞ்சு போயிட்டா… ஆனா அதைப் பத்தி எல்லாம் அவளுக்கு கவலையில்ல. அவ நெனப்பு, கவலை, உலகம் எல்லாமே அவ புள்ள தான். சோறு போடுற அம்மாவைக் கூட கண்டுக்கறதில்ல…
இப்படி அவ வாழ்க்கை போயிட்டு இருக்குறப்பதான், ஒருநாள் அவன பாத்தா. இவ வேலைப் பாக்குற ஸ்கூல்ல கணக்கு வாத்தியாரு. ஸ்கூல்ல சேர்ந்தப்போ, அப்புறம் ஒன்னு ரெண்டு தடவை பார்க்கும்போது சிரிச்சான், ஆனா இவ தலைய குனிஞ்சுக்கிட்டு போயிடுவா.
அன்னைக்கு ஒருதடவ சைக்கிள்ல மாங்கு மாங்குன்னு ஓட்டிட்டு வரும்போது, திடீர்னு சைக்கிள் செயினு கழண்டு போயிருச்சு. அதை மாட்டிட்டு வரதுக்குள்ள ஸ்கூலுக்கு பத்து நிமிஷம் லேட் ஆயிருச்சு. எல்லா ஸ்டாஃப் முன்னாடியும் பிரின்ஸ்பல் கண்டபடி திட்டிட்டாரு, டீச்சரே லேட்டா வந்தா அப்புறம் ஸ்டூடண்ட்ஸ்கு எப்படி டிசிப்லின் வரும்னு. அவளுக்கு கண்கலங்கி போயிருச்சு. சார் இவங்க எப்பவும் லேட்டா வர்றவங்க இல்ல, இதுதான் முதல் தடவை… பாவம் சைக்கிள்ல ஏதோ பிரச்சனைபோல…ன்னு குரல் கேட்க, நிமிர்ந்து முன்னால நிக்கிறவன் முகத்தை முழுசா பார்த்தா. இத்தன வருஷங்கள்ல அவளுக்கான ஆறுதல் வார்த்தை வெளியிலிருந்து கிடைக்கிறது, அவ மனசுக்கு எதமாத்தான் இருந்துச்சு.
சாயங்காலம் வீட்டுக்கு கிளம்பும்போது அவன்கிட்ட நன்றி சொல்லப் போனாள். அப்பதான் தெரிஞ்சது அவனுக்கு இவள முன்னமே தெரியும், இவ தெருவுக்கு அடுத்த தெருவில் தான் அவனோட வீடும்னு. ஏதாவது உதவி வேணும்னாலும் கேட்கச் சொல்லி நம்பர் கொடுத்திருந்தான். இவளுக்கு என்ன உதவி தேவைப்படப் போகுது? தேவைப்பட்டாலும் கேட்கவா போறா மனுஷி? அவ்வப்போது பார்க்கும்போது சிரிச்சிக்குவாங்க, எப்பயாவது பேசிக்குவாங்க அவ்வளவு தான்.
ஆனா நேரங்காலம் ஒன்ன நெனச்சுருச்சுனா, அத செஞ்சு முடிக்காம அப்படியே அம்போன்னா விடப்போகுது? ஒரு தடவை ஸ்கூல் விட்டு கிளம்பும்போது, அவ சைக்கிள் பஞ்சராயிடுச்சு. அய்யையோனு கையை பிசைஞ்சிட்டு இருக்கறப்பதான் வந்தான். சைக்கிள நிப்பாட்டிட்டு என்கூட வாங்க… வண்டியில போயி தம்பியைக் கூட்டிட்டு வீட்டுக்கு போயிடலாம். நான் வந்து சைக்கிளை ரிப்பேர் பண்ணிக் கொண்டு வரேன்னான்.
அவப் புருஷன் வண்டியில கூட அவ போனதில்லை. இவன் இப்படி பொசுக்குன்னு கேட்கவும் ஒரு நிமிஷம் பக்குன்னு ஆயிடுச்சு. ஆனாலும் சுதாரிச்சுக்கிட்டு, திருத்தக் கொண்டுவந்த நோட்டுப் புத்தகங்களையும், அவ ஹேண்ட்பேக்கையும் கொடுத்து, நீங்க பையனக் கூட்டிட்டு வீட்டுக்குப் போயிடுங்க, பக்கத்துலதான் கடை… நான் ரிப்பேர் பாத்துட்டு வந்துட்றேனுட்டா…
வீட்டில் அவளுக்காக அவன் காத்திருந்தான். ரொம்ப நாளைக்கு அப்புறம் முதல்முறையா ஒரு விருந்தாளி, அதுவும் அவளுடைய விருந்தாளி… என்னமோ சந்தோஷமா இருந்துச்சு அவளுக்கு.. பையனும் சார் சார்னு நல்லா ஒட்டிக்கிட்டான்.
அப்புறமென்ன அவ்வப்போது வீட்டிற்கு வர்றது, சனி ஞாயிறு பையனை வெளியேக் கூட்டிப் போறதுனு, வீட்டுல ஒரு ஆளாவே மாறிட்டான். வருஷம் பாட்டுக்கு ஓடிட்ருந்துச்சு…
கவலைகளில்லாத வாழ்க்கைய அனுபவிக்க ஆரம்பிச்சிருந்தா… பையன ஆளாக்கி ஒரு பொறுப்புல ஒக்கார வைக்கிற வரைக்கும் இப்படியே போனா நல்லா தான் இருக்கும்னு நெனச்சா… நெனச்சது எந்த எமகாதுக்கு கேட்டுச்சோ… நேரமும் காலமும் அவ நெனப்புல மண்ண அள்ளிபோட வந்துடுச்சு.
ஒரு ஆம்பள புருஷன் இல்லாதவொரு பொண்ணு வீட்டுக்கு வந்துட்டுப்போனா, கேடுகெட்ட ஊரு என்ன வாயை பொத்திக்கிட்டு சும்மாவா இருக்கப்போகுது?… கண்ணு காது வச்சுப் பேச ஆரம்பிச்சுருச்சு.
கணக்கு வாத்தியாரு கண்ணியமான மனுஷந்தான்….. இவளை சொல்லவே வேண்டாம, வெளுத்த பாலு… அப்படியிருந்தும் ஊரும் உலகமும் பல்ல போட்டு பேசுச்சு. அரச புரசலா கேள்விப்பட்ட அம்மாக்காரி மகக்கிட்ட சொன்னா. இவளும் அவன் கிட்ட சொன்னா. அவன் பதட்டப்படல… நம்ம யாருன்னு நமக்கு தெரியும், வீண் பேச்சுக்கு காதுகொடுத்தா, கொஞ்சநஞ்ச நிம்மதியும் இல்லாம போயிடும்னான்.
அவனோட பதில் அவளுக்கு சந்தோஷமா இருந்துச்சு, ஆனா அது ரொம்ப நேரம் நீடிக்கல்ல. என்னைக்கு இருந்தாலும் ஒருநாள் நான் கல்யாணம் பண்ணிக்க தான் போறேன். உங்களுக்கு விருப்பம்னா, நான் உங்களயே கல்யாணம் பண்ணிக்கிறேன்… எந்தக் கட்டாயமும் இல்ல, யோசிச்சு சொல்லுங்கனு பட்டுனு சொல்லிட்டான்.
என்னத்த சொல்லுவா பாவிமக.. பதிலேதும் சொல்லாமல் வந்துட்டா. உண்மைய சொல்லனும்னா… அவன் அவ வாழ்க்கையில வந்ததுக்கு அப்புறம் தான், அவளுக்னு ஆசைகள் கனவுகள் எல்லாம் வந்துச்சு. இன்னும் சொல்லப் போனா அவன பாக்காத நாட்கள் எதையோ இழந்ததுபோல உணர்ந்திருக்கா… ஆனா இப்படி பட்டுனு கேட்பான்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கல.
இரண்டு நாளா பள்ளிக்கூடத்துக்கே போகல. யோசிச்சா… யோசிச்சிட்டே…. இருந்தா.. மகன் படிப்பில சுட்டி.. மற்ற விஷயங்களிலும் தெறமையா வந்துட்டு இருக்கான்.. இந்நேரத்துல எனக்குனு ஏதாவது செய்யப் போயி அத அவன பாதிச்சா…. கல்யாணமாகி நாளைக்கே இன்னொரு குழந்தை பிறந்திருச்சுனா… இவன் ஏத்துக்குவானா… பிள்ள மனசுவிட்டுட்டா… ஏதேதோ யோசித்தாள்… வாத்தியாரும் ரொம்ப நல்லவரு… அவர் கொடுக்குறேன்ற வாழ்க்கை என்னத் தங்கத்தட்டில் தாங்குற மாதிரித் தானிருக்கும். ஆனால் பையன் எனக்கு அதைவிட ரொம்ப முக்கியமாச்சே….
பெண்கள் என்னைக்கு தனக்காக முடிவெடுத்து இருக்கிறார்கள்? தன் வாழ்க்கை, தன் சந்தோஷம்னு இருந்ததே இல்லை. கல்யாணம் ஆகுறதுக்கு முன்னாடி வரைக்கும் அம்மா சந்தோஷம், அப்பா சந்தோஷம், அண்ணன் தம்பிக சந்தோஷம்னு இருப்பாங்க, கல்யாணத்துக்கு அப்புறம் புருசன் சந்தோஷம், புள்ள சந்தோஷம்னுதா முடிவெடுப்பாங்க.. இது நம்ம பொம்பளைகளுக்கே எழுதப்படாத தலையெழுத்தா இருக்கும்போது, இவ மட்டும் விதிவிலக்கா என்ன…
மறுநாள் ஒரு தெளிவான, தீர்க்கமான முடிவுடன் பள்ளி சென்றாள். அவனைப் பார்த்து கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்ல, அதுக்காக நம்ம பிரெண்ட்ஷிப்ப விடத் தேவையில்லை. நீங்க கேட்டதுல எனக்கு எந்த வருத்தமும் இல்லேன்னு சொல்லிட்டா.
அப்புறம் ஏன் மேடம் ரெண்டு நாள் ஸ்கூல் வரலையாம்னு கேட்டான்.
இதுநாள் ஓட்ன படத்துக்கு இடைவேளை வேனும்ல… அதான்… இருவரும் கலகலவெனச் சிரித்தார்கள்.
பிறகு… கிட்டத்தட்ட இருபது வருஷமாயிப் போச்சு…
அவள் வளர்க்குற நாயைக் குளிப்பாட்டிட்டு இருந்தா. அவ வீட்டு பின் போர்ஷனில் வாடகைக்கு இருக்கும் பெண் ஓடி வந்து அக்கா… அக்கா.. டி.வி.ல உங்க பையனக் காட்டுறாங்கன்னா. நாயை கூண்டுக்குள் விட்டுவிட்டு டி.வி.யைப் போட்டாள். மகன் சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருது வாங்கிக் கொண்டிருந்தான். அம்மாவை கூப்பிட்டு காட்டுறா, பாட்டி பேரனை பார்த்து நெகிழ்ந்து சாரை சாரையா கண்ணீர ஊத்துறா. இவளுக்கு கடந்தக்காலம் கண் முன்னே படம் ஓட்டுச்சு…
கணக்கு வாத்தியாரு எப்பொழுதும் போல் அவள் வீட்டற்கு வந்து போயிட்டு இருந்தார். இரண்டு வருஷம் கழிச்சு அவருக்கும் கல்யாணமாயிடுச்சு…
இவளுக்குத்தான் ஏதோ ஒரு இனம்புரியாத பாரம் மனசுல இருந்துச்சு… எப்படியோ வெளிக்காட்டாம சமாளிச்சுட்டா… அப்புறம் ஒரு வருஷம் எப்பவும்போல போச்சு.. ஆனா வாத்தியாரு சம்சாரம் தங்கமான புள்ள… எதையும் விகற்பமா எடுத்துக்கல… ஒரே குடும்பமா வந்துப்போயி இருந்தாங்க..
அதுக்கப்புறம், ஒருநாள் மாமனாருக்கு உடம்பு சரியில்லைனு, பக்கத்துல இருந்தாதான் கவனுச்சுக்க முடியும்னு குடும்பத்தோட வாத்தியாரு ஊர் மாரிப் போயிட்டாரு.
கூட்டவுட்டு வந்த நத்தை மறுபடியும் தன் உலகத்தை கூட்டுக்குள்ளேயே திணித்துக்கொண்டது போல, யாருகூடவும் பேசாம சிரிக்காம, அவ உண்டு அவ வேல உண்டுனு இருந்தவ, கொஞ்ச நாள்ல தண்ணிக்குள்ள கிடந்த நாய் எப்படி உடல் சிலுப்பி வருமோ… இலையுதிர் காலத்தில் இலையெல்லா உதிர்த்திட்டு மொட்டையா இருக்குற மரம் எப்படி தன்னைத்தானே புதுப்பிச்சுக்கிட்டு அரும்புமோ.. அது மாதிரி தன்னைத்தானே புதுப்பிச்சுகிட்டா… யாரு இருந்தா என்ன? இல்லைனா என்ன? எனக்கு எம்புள்ள இருக்கான்… காலத்துக்கும் என்கூடவே இருப்பான்… என்னை அவங் கண்ணுல வச்சிப்பாத்துக்குவான்… நினைப்புகளோடு எழுந்தாள்… வாழ்ந்தாள்..
ஆனா, அம்மா அம்மானு மகன் சுத்தி வந்ததுலாம் அவன் பத்தாங்கிளாஸ் படிக்கிற வரைக்கும்தான்… அதுக்கப்புறம் கொஞ்சங் கொஞ்சமா பேசறதக்கூட கொறச்சுட்டான்… காலேஜு முடிச்சு சென்னைக்குப் போனவன்தா… இந்த ஏழெட்டு வருஷத்துல நாலஞ்சு தடவ பேசியிருப்பான்… நம்பர மாத்திட்டே இருக்குறதால அவளாலயும் பேச முடியுறதுல. இதோ இப்போ டி.வி.யிலதான் பாக்குறா…. நினைவுகளிலிருந்து மீண்டு நிகழ்காலத்துக்கு வந்தா…
இதுவரைக்கும் அவள சுத்தி இருந்த யாருமே அவளுக்கான முகவரியா இருந்தது இல்ல.. அது எப்படிப்பட்ட உறவா இருந்தாலும்.. ஏன் மகனை ஆனாலும்… ஒரு சமயத்துல அவங்களுக்கான வாழ்க்கைய தேடிப் போயிறாங்க… இத தப்புனும் சொல்ல முடியாது.. ஆனா தன் வாழ்க்கைய வாழாமல்.. அடுத்தவங்க வாழ்க்கைய தன் வாழ்க்கையா நினைச்சு, அவங்களுக்காகவே தன் வாழ்க்கையை அர்ப்பணிக்கிறவங்களுக்கு, கடைசியில ஏமாற்றமும் விரக்தியுந்தா கிடைக்குது…
அம்மாவும் தன்னை மாதிரி தனக்குனு முகவரியே இல்லாமதான், இத்தன நாள் எல்லாத்தையும் கடந்து வந்துருக்காங்க… இனியாவது யாரையும் எதிர்பார்க்காம நமக்கான முகவரிய நாமேதான் ஏற்படுத்திக்கனும்… வெந்தத தின்னுட்டு விதியேனு போகாம… வாழுறவரைக்கும் ரசிச்சும்.. ரசிக்கவச்சும் வாழனும்… தெளிந்தாள்…
வேலையை ராஜினாமா செய்தாள். கிடைத்த பி.எப். பணம் சேவிங்ஸ் எல்லாம் போட்டு, வீட்டுலேயே மெஸ் ஆரம்பிக்க ஆயத்தமானாள்…
காலம்போன காலத்தில இதெல்லா எதுக்குமானு கேட்ட அம்மாட்ட… நீ நல்லா சமைப்பேனு என்னத்தவிர வேற யாரு சொல்லிர இருக்காங்கன்னா… யாருமில்லைனு அம்மா உதட்ட சுழிச்சுக்காட்டவும்… இனி நிறைய பேரு சொல்லப்போறாங்க… சமையல் நம்ம அடையாளமாகப் போகுது… அப்போ நமக்கே நமக்குனு முகவரியும் கிடைக்கப்போகுது….
அதுநாள் வரைக்கும் வார்த்தைகளை எண்ணியெண்ணி பேசுறவ, இன்னைக்கு கண்கள் விரியப் பேசுறதப் பார்த்து பூரித்து தலையாட்டின அவள் அம்மாவுக்கு, அவள் முழுமதியாய் தெரிந்தாள்.
– கதைப் படிக்கலாம் – 60
இதையும் படியுங்கள் : மயக்கத்தில் ஒரு மாணவன்