நீரில் கரையும் பூக்கள்

– முனைவா் ப. கணேஷ்வடிவேல்

பூண்டி ஏரியில் ஒரு நபர் விழுந்ததாக போலீஸாருக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் தீயணைப்பு வீரர்களுடன் போலீஸார் சென்று நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த நபரைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு உயிர் பிழைத்தார்.

அவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவருடைய பெயர் மதன் என்றும், தனியார் நிறுவனத்தில் உதவி மேலாளராகப் பணியாற்றி வருவதாகவும் கூறியுள்ளார். தற்கொலைக்கான காரணத்தை போலீஸார் விசாரிக்கும் பொழுது, தான் இந்நிலைக்கு வருவதற்கான காரணங்களைக் கூற ஆரம்பித்தார்.

அப்பா, அம்மா இருவரும் அடிக்கடிச் சண்டைப் போட்டுக் கொள்வார்கள். அதனால் எனக்கு வீட்டில் இருக்கப் பிடிக்காது. எப்பொழுதும் நண்பர்கள் கூடவே இருப்பேன். இதனால் நண்பர்கள் வட்டம் பெருகியது. சில நண்பர்களின் அன்புக் கட்டாயத்தால் டிரிங்ஸ் சாப்பிடக் கத்துகிட்டேன். நாளாக நாளாக, அதை விட முடியாத நிலைக்கு போய்விட்டேன். இதனால் பெத்தவங்க, மற்றவர்கள் எல்லாம் என்னை கேவலமா பேச ஆரம்பிச்சுட்டாங்க. அந்த அவமானத்தைப் போக்க அதிகமாகக் குடிக்க ஆரம்பிச்சேன்.

இதற்கிடையில் எம்.பி.ஏ. பாஸ் பண்ணிட்டேன். இந்நிலையில் ஒரு கம்பெனிக்கு இன்டர்வியூக்குப் போனேன். அங்குதான் அஞ்சலி எனக்கு அறிமுகமானாள். அவளுடைய அழகு, கணிவான பேச்சு என்னை ரொம்ப கவர்ந்தது. பின்னர் இருவரும் ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்துக் கொண்டோம். அடிக்கடிச் சந்தித்துக் கொண்டோம். அவள் என்னை கண்களால் ஆளுமை செய்து, நாவால் என் இதயத்தைச் சுருட்டி விளையாடினாள்.

அப்பொழுது என்னுடைய குறைகளைச் சுட்டிக்காட்டி அதைத் தவிர்க்கச் சொன்னாள். முதலில் மறுத்தேன். பின்னர் அவளுடைய அன்புக் கட்டளையை மறுக்க மனமில்லாமல் ஏற்றுக்கொண்டேன். இதனால் மாலை நேரங்களில் அவளுடைய அன்பு பிடியில் என்னை இறுக்கிக் கொண்டிருக்கும் வரை, டிரிங்ஸ் அடிக்கனும்னு நினைப்பே இல்லாமா உடம்பெல்லாம் கதகதப்பா இருந்துச்சு. ஆனா அவ என்னை விட்டு விலகிப் போனதும், நரம்புல கத்திய வச்சு வெட்டுன்னா என்ன வலி வருமோ, அதுபோல வலிச்சது.

ஒரு நாள் அவளிடம் என்னுடைய காதலைச் சொல்லி விட்டு, உன்னை திருமணம் செய்ய ஆசைப்படுகிறேன் என்று கூறினேன். அதற்கு அவள் என் கன்னத்தைக் கிள்ளிவிட்டுப் போனாள். மனசெல்லாம் ரோஜாவாக மலர்ந்தது.

ஒரு கம்பெனியில் இருவரும் ஒன்றாக வேலைக்குச் சேர்ந்தோம். இதற்கிடையில் அவ்வப்பொழுது குடித்து வந்தேன். ஒருநாள் அஞ்சலி வந்து, நம்ம விஷயத்தைப் பத்தி அம்மாவிடம் சொன்னேன். அவங்க உங்கள பொண்ணுக் கேட்டு வரச்சொன்னாங்க என்று கூறினாள். பிறகு பெண் பார்க்கும் படலம் நடந்தது. இருவீட்டார் சம்மதத்துடன் விமரிசையாகக் கல்யாணம் நடந்தது. உடனடியாகத் தனிக் குடித்தனம் சென்றோம்.

அஞ்சலி கிடைத்தது எனக்குச் சொர்க்கமே கிடைத்ததுப் போல உணர்ந்தேன். அவளுடைய அன்பு மழையில் நனைந்து, பாசக் கடலில் மிதந்தேன்.

அவளை இன்ப அருவியில் மிதக்க விடவேண்டும் என்று கற்பனைக் கோட்டைக் கட்டியிருந்தேன். ஆனால் கற்பனைக் கோட்டை, கனவுக் கோட்டையாகவே நிலைத்தது. நானும் அவளை இன்பத்தில் மூழ்கடிக்க வேண்டும் என்று ஒவ்வொரு நாளும் முயன்று, அவை துன்பத்திலே முடிந்தது.

நாளுக்கு நாள், அஞ்சலி என் மீது கொண்ட அன்பு குறைய ஆரம்பித்தது. எதற்கெடுத்தாலும் சண்டைப்போட ஆரம்பித்தாள்.

‘ஏன் அஞ்சலி இப்படி இருக்க’ என்றேன்.

‘எப்படி இருக்கேன்’

‘கல்யாணத்துக் முன்னாடி என்ன, எப்படியெல்லாம் லவ் பண்ணுன… இப்ப எப்பப் பார்த்தாலும், எதுக்கெடுத்தாலும், குத்தம் கண்டுபிடிக்கிற’ என்றேன்.

‘ஆமா தெரியாமப் பாழுங்குழியில வந்து விழுந்துட்டேன். காதலுக்கு கண்ணு இல்லன்னு சொல்வாங்கள, அது என் வாழ்க்கையில சரியாப் போய்டுச்சு’…

‘உன்ன கட்டிக்கிட்டு என்ன சுகத்தைக் கண்டேன். முதலுக்கே மோசம் போச்சு. இனிமேல் என்ன நடக்கப் போவுது. எல்லாம் என் வாழ்க்கையில முடிஞ்சுப் போச்சு’ என்று அழுதாள் அஞ்சலி.

‘ஏன் அஞ்சலி இப்படி பேசுற. நா……….’

‘இங்கப் பாரு ஏதாவது பேசினா, அசிங்கப்பட்டுப் போயிடுவ. ஒருத்திய வச்சுக் குடும்பம் நடத்தத் துப்புள்ள, நீயெல்லாம் பேச வந்துட்ட, உனக்கு என்ன யோக்கியதை இருக்கு. ஒழுங்காப் போயிடு’ என்று கத்திவிட்டு ஆஃபிசுக்குப் போய்விட்டாள்.

‘என் நிலையை நண்பர்களிடம் கூறினேன். அவர்கள் டாக்டரைப் போய் பார்க்கச் சொன்னார்கள். நானும் போய் பார்த்தேன். டாக்டர் என்னைச் செக்கப் செய்துவிட்டு சொன்னார்.

‘மதன் உங்களுக்கு நியூரோ பிராப்ளம் இருக்கு’…

‘என்ன டாக்டர் சொல்லுறீங்க’…

‘அதாவது உங்களுக்கு நரம்பு தளர்ச்சி வந்திருக்கு… டிரிங்ஸ் சாப்பிடுவிங்களா என்று கேட்டார் டாக்டர்.

‘ஆமா டாக்டர். தினமும் சாப்பிடுவேன். அதுவே பழக்கமாப் போயிடுச்சு, அதைச் சாப்பிடமா என்னால இருக்க முடியாது. கை, கால் எல்லாம் ஒரு ஸ்டிரென்த் இல்லாமப் போய்விடும். அதைச் சாப்பிட்டாதான் இயல்பாக இருக்கும் என்றேன்.

‘எதை நீங்க ஸ்டிரென்த்னு நினைச்சு சாப்பிட்டீங்களோ, அதுவே உங்க தாம்பத்ய வாழ்க்கையில ஸ்டிரென்த் இல்லாம பண்ணியிடுச்சு. உங்களால அவங்களுக்கு நிம்மதியில்லாம போயிருக்குமே’ என்றார் டாக்டர்.

‘ஆமா சார், இதனால என் மனைவிக்கும், எனக்கும் அடிக்கடி சண்டை வருது சார்’ என்று கண் கலங்கினான்.

‘டோன்ட் வொரி… நான் டாப்லெட் எழுதித் தரேன். அதை தொடர்ந்துச் சாப்பிடுங்க. டிரிங்சை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைச்சிட்டு, பின்னர் நிறுத்திடுங்க. இல்லைன்னா உங்க ஹெல்த் ரொம்ப பிராப்ளமா ஆயிடும். பி கேர்புல்’, என்றார் டாக்டர்.

‘ஒ.கே. சார்’ என்று தலையாட்டி விட்டு அங்கிருந்து வீட்டுக்கு வந்தேன்.

நாள் ஆக ஆக அஞ்சலியின் நடவடிக்கையில் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்தது.

அஞ்சலி வீட்டிலும், ஆஃபீஸிலும் என்னிடம் பேசுவதைத் தவிர்த்தாள். ஆனால் ஆஃபீஸிலுள்ள மற்ற ஆண்களிடம் நெருக்கமாகப் பேசிப் பழகி வந்தாள். இது எனக்குப் பிடிக்கவில்லை. வீட்டில் இதைப் பற்றி கேட்டபொழுது, இருவருக்குமிடையே சண்டையும், விரிசலும் அதிகமாயின.

ஒரு நாள் காலையில் தூங்கி எழுந்துப் பார்த்தேன். அஞ்சலியைக் காணவில்லை. எல்லா இடமும் தேடிப்பார்த்தேன். எங்கும் காணவில்லை.

ஆஃபீஸில் சென்று விசாரிக்கப் போனேன். அங்கு எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது. என் மனைவியின் பக்கத்து சீட்டிலிருந்த அகிலேசும் வரவில்லை. சந்தேகப்பட்டு விசாரித்தேன். அப்பொழுது தான் உண்மை தெரியவந்தது. அஞ்சலி அகிலேசுடன் ஒடிப்போன விஷயம் தெரியவந்தது. ஆஃபீஸில் உள்ளவர்கள் அனைவரும் என்னைக் கேவலமாக பேசினார்கள்.

இதனால் மனம் வெறுத்துப்போய் அளவுக்கு அதிகமாகக் குடிக்க ஆரம்பிச்சேன். இந்த அவமானத்தோடு உயிர் வாழ்வதற்கு பதில் சாவதே மேல் என்று முடிவு செய்து ஏரியில் குதித்தேன் சார் என்றான்.

‘என்னை ஏன் சார் காப்பாத்தினீங்க. நான் சாகணும் சார். நான் உயிரோடு இருக்குறதுக்குத் தகுதியில்லாதவன் சார். குடியால என் உடம்பும் போச்சு, என் மனைவியும் போயிட்டா, இனி நா மட்டும் இருந்து என்ன செய்யப்போறேன். என்ன விட்டுங்க சார்’ என்று அழுதான்.

ஓவ்வொரு பொண்ணும் தனக்கு புருஷனா வரவனிடம் காசு, பணம், பொருளுன்னு எதையும் எதிர்பார்க்கிறதில்ல. உடல் அளவிலேயும், மனதளவிலேயும் தன்னை சந்தோஷமாக பார்த்துக்குவான் என்ற நம்பிக்கையில அவன் கையைப் பிடிச்சுக்கிட்டு புகுந்த வீட்டுக்கு வராங்க.     ஆனா அவங்க ஆசையில மண்ணப்போடுற மாதிரி சில வீணாப் போனவங்க நடந்துக்கிறாங்க.

இதனாலதான் பலப் பொண்ணுங்கத் தவறான பாதையைத் தேர்ந்தெடுத்ததால், தங்களையும், தங்கள் வாழ்க்கையையும், குடும்பத்தையும் தொலைச்சிட்டு நிக்குறாங்க. இதுக்கெல்லாம் காரணம் இந்த மதுதான். இதைக் குடிக்கிறவன் வாழ்க்கைப் பூ, கருகித்தான் போகுமேத் தவிர… மணம் வீசாது சார்.

‘சார் நான் திருந்தி வாழ எனக்கு ஒரு வழிகாட்டுங்க சார் என்று இன்ஸ்பெக்டர் காலைப் பிடித்து கதறி அழுதான் மதன்’.

மதனின் கண்களிலிருந்து கரைந்து ஒடியது கண்ணீர் மட்டும் அல்ல… அவனைப் பிடித்திருந்த மது என்னும் அரக்கனும், அவன் மனதை விட்டு ஒடினான்.

– கதைப் படிக்கலாம் – 98

இதையும் படியுங்கள் : கடைசி காலம் ???

Exit mobile version