(பொ) புது சொத்து

– புதுவைப் பிரபா

ராகவனுக்கு ஆச்சரியமாய் இருந்தது. தன் கிராமத்து இளைஞர்களின் பொறுப்புணர்வையும், செயல் வேகத்தினையும் பார்க்கப் பார்க்க, அவருக்குள் பெருமை சுரந்தது. குறிப்பாக சங்கரனைப் பற்றி நினைக்கும் போதெல்லாம் அடிநெஞ்சுவரை அவர் இனிப்பாக  உணர்வார். உச்சக் களிப்பு உணர்வு இனிக்கும் சுவை தரும் என்பார் அவர். சங்கரனின் பேச்சும், சமூக அக்கறையும் பிரமிப்பு அலைகளை அவ்வப்போது ராகவனுக்குள் கடத்திக்கொண்டே இருந்தது.

நான்கைந்து நண்பர்களோடு அவன் செய்திருந்த களப்பணிகளைப் பற்றிய சிந்தனை உதிக்கும் போதெல்லாம், தன் காலத்தில் இப்படிப்பட்ட ஆக்கப்பூர்வமான பணிகளில் இளைஞர்கள் பட்டாளம்  ஈடுபாடு கொண்டிருக்கவில்லை என்ற எண்ணமும், காலத்தின் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ள, காலமே சில மாற்றங்களை சமூகத்தில் சிலர் மூலம் உருவாக்கிக்கொள்கிறதோ என்ற ஐயமும், அவருக்குள் வந்து வந்துப் போகும்.

பசுமையின் பரப்பளவை கிராமங்கள் தோறும் தின்று தீர்த்துக்கொண்டிருக்கும் நீர்ப்பற்றாக்குறை, விழுதியூர் கிராமத்தையும் விட்டுவைக்கவில்லை. ராகவன் – விழுதியூர் கிராமத்தின் முக்கியப்புள்ளி. ஓய்வுபெற்ற அரசு அதிகாரி. பணி ஒய்வு பெற்றப் பிறகு, அரசுத்துறை தொடர்பான அக்கிராம மக்களின் கடித போக்குவரத்திற்கும், நலத்திட்ட மானியங்களை பெற்றுத்தருவதிற்கும் உதவி செய்துவந்த அவரை, சங்கரன் அவனது நண்பர்கள் குழுவோடு வந்து சந்தித்துப் பேசியபோதுதான் அப்படி ஆச்சரியப்பட்டார்.

“சார்… நம்ம கல்குளத்த தூர் வாரி இருவது வருஷத்துக்கு மேலாவுது. அதோட நீர்ப்பிடிப்பு திறன் பாதிக்கு மேல குறைஞ்சிடுத்து.  விவசாயத்துக்கு அத மட்டுமே நம்பியிருக்கும் நம்ம கிராமத்துல, விளை நெலமெல்லாம் கரம்பா மாறிட்டு இருக்கு. மூணு போகம் வெளவிச்சவங்க எல்லாம், ரெண்டு போகத்தோட நிறுத்திக்கிட்டாங்க. நீங்களும் அரசாங்கத்துக்கு மனு மேல மனு கொடுத்து ஓஞ்சிட்டீங்க. அரசாங்கத்தையும் கொற சொல்ல முடியாது. அவங்களோட சட்ட திட்டங்கள்… விதிமுறைகள்… நிதி ஒதுக்கீடுன்னு ஏராளமான கட்டுப்பாடுகள் இருக்கு. இதுல, அவுங்க மூலமா இந்தக் கடைகோடி கிராமத்தில் இருக்கும் கல்குளத்திற்கு விடிவுகாலம் பொறக்கறதுக்குள்ள… அது சுத்தமா தூர்ந்துப்போயிடும். அப்புறம்… இங்க விவசாயம் சுத்தமா அழிஞ்சிபோயிடும். அரசாங்கத்தையே  எல்லாத்துக்கும் நம்பிக்கிட்டு இருக்க முடியாது. அதான்… நாங்க… இந்த ஊரு இளைஞர்கள் எல்லாம் ஒன்னு சேர்ந்து தூர்வாரப்போறோம். நீங்க… வட்டாச்சியர்கிட்ட அந்த வேல செய்ய ஒப்புதல் மட்டும் வாங்கிக் கொடுக்க ஏற்பாடு பண்ணுங்க சார்… போதும்”

சங்கரனின் பேச்சில் உண்மையான அக்கறையும், அதை செய்து முடிக்கவேண்டும் என்கிற ஆழமான விருப்பமும் இருந்தது. ஒரு செயல் வெற்றிபெற, விருப்பமும் அக்கறையும் மட்டும் இருந்தால் போதாது. நல்ல திட்டமும் வேண்டும். அந்த வகையிலே சங்கரனிடம் சாத்தியக்கூறுகள் கொண்ட திட்டம் ஒன்றும் இருந்தது. “சரி… ஊரு இளைஞர்கள் சேர்ந்து செய்யப்போறனு சொல்றீங்களே… இது சாத்தியமா? உங்களால முடியுமா?  என்று “ராகவன் கேட்டபோதுதான் அது அவருக்குத் தெரிய வந்தது.

“சார்… மனமிருந்தா மார்க்கமுண்டு. நாங்க ஏற்கனவே கூடி இதப்பத்தி பேசிட்டோம். மொத வேலையா… கல்குளத்தோட நீர்வரத்து வாய்க்கால சரி பண்ணப்போறோம். தெரிஞ்சோ தெரியாமலோ கொளத்தங்கரையில இருக்கிற ஆக்கிரமிப்புகள அகற்றப்போறோம்.  அப்புறம்… நம்ம சந்துரு டவுன்ல பொக்லைன் ஓட்டுறான். அவுங்க மொதலாளிகிட்ட சொல்லி… அத கொறஞ்ச வாடகைக்கு எடுத்து… அத வச்சி, குளத்த தூர்வாரப்போறோம். வேல சட்டுன்னு முடியும். வண்டி வாடக… வண்டிக்கு டீசல்.. இதுக்கெல்லாந்தான் பணம் அதிக அளவுல தேவைப்படுது. ரெண்டு லட்சத்த தொடும்ன்னு எதிர்பார்க்கறோம். நம்ம கிராமத்துல நூத்திநாப்பது குடும்பம் இருக்கோம். வீட்டுக்கு… சராசரியா  ஆயிரத்தி ஐநூறு ரூபா போடவேண்டியதா இருக்கும். எல்லாம் கொடுத்துடுவாங்கனு எதிர்பார்க்கறோம்.”

சங்கரன் சொல்லச் சொல்ல ராகவனுக்கு மெய் சிலிர்த்தது. இவர்களது முயற்சி வெற்றிப் பெறவேண்டும் என்று மனதார வேண்டினார். அவர்கள் கேட்ட அரசு அனுமதியை வாங்கித்தர போராடினார். வட்டாட்சியர் அலுவலக வளாகமே கதி என்று கிடந்த அவர், வெற்றிகரமாக அரசின் அனுமதியை வாங்கிக்கொண்டு வெளியே வரும்போதுதான் சீனுவை பார்த்தார்.

“என்ன சீனு… என்ன இந்த பக்கம்?”

“கொழந்தைக்கு பள்ளிக்கூடத்துல சான்றிதழ் கேட்டிருந்தாங்க ஐயா… அத வாங்கத்தான்…”

“ஓ… அப்படியா? சரி… கல் குளத்த நம்ம சங்கரன் தூர் வாரப்போரதப் பத்தி கேள்விப்பட்டியா?

“சங்கரனே வீட்டுக்கு வந்தான் ஐயா. கேக்க ஒருபக்கம் சந்தோஷமா இருந்தது. இன்னொரு பக்கம் வருத்தமாவும் இருந்தது”

வருத்தம் என்கிற சொல் ராகவனின் முகத்தில் சுருக்கக் கோடுகளை கொண்டு வந்தது. அதிர்ச்சியும் ஆத்திரமும் கலந்து, “எவ்வளவு நல்ல விஷயம் அது… அதுல வருத்தப்படறதுக்கு என்ன இருக்கு?” என்று கேட்டார்.

“இல்ல ஐயா… அது வந்து …” சீனு  இழுத்தான்.

சீனு பற்றி சொல்ல வேண்டுமானால், அவனுக்கென்று நிரந்தர தொழில் கிடையாது. விழிதியூர் கிராமத்தில் யார் வீட்டிற்கு எந்த வேலைக்கு அழைத்தாலும் போவான். வயல்வெளி வேலைகளிலிருந்து வயரிங் வேலை வரை அவனுக்கு அத்துப்படி. எந்த வீட்டு நல்லது கெட்டதுகளிலும் அவனை பார்க்கலாம். சொல்லும் வேலையை தட்டாமல் செய்யக் கூடியவன். அதேபோல, செய்யும் வேலைக்கு இவ்வளவு கொடு, அவ்வளவு கொடு என்று கேட்க மாட்டான். கொடுப்பதை வாங்கிக்கொண்டு சந்தோஷமாக போகக்கூடியவன்.

“இழுக்காத சீனு… சொல்லு… எங்கிட்ட சொல்ல உனக்கு எதுக்குப்பா தயக்கம்?” ராகவன் சற்று மென்மையாக கேட்டார்.

“இல்லீங்க ஐயா… குளம் வெட்டறதுல எனக்கொன்னும் வருத்தமில்லீங்க… தலைக்கு ஆயிரத்தி ஐநூறு ரூபா போடணும்னு சொன்னாங்க ஐயா… நான் செய்யற வேலைக்கு, வர்றது, வாயிக்கும் வயித்துக்குமே சரியாயிடுதுங்க ஐயா… இதுல… நான் தரமாட்டேனு சொல்லலீங்க. எனக்குக் கொஞ்ச கால அவகாசம் கேட்டிருக்கேன் ஐயா. இது சம்பந்தமா நீங்களும் கொஞ்சம் அவுங்ககிட்ட பேசி… ”

“அடச்சே! இதானே. நான் வேற என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன். சங்கரன்கிட்ட நான் பேசறேன்”

இப்படி சொல்லிவிட்டு போன ராகவன், இதைப்பற்றி மறந்தே போய்விட்டார்.

நல்ல நாள் பார்த்து பூஜை போட்டு, கல்குளத்தில் தூர் வாரும் பணிகள் தொடங்கியது. சங்கரன் குழு மட்டுமல்ல, பாதி கிராமமே அந்த குளத்து வேலைகளை முன்னின்று செய்தது.

காலம், இரண்டு வாரத்தினை கிழித்துப்போட்டிருந்தது. அதற்குள் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியும், வரத்து வாய்கால்களை சரி செய்யும் பணியும் முடிந்திருந்தது. இதே வேகத்தில் போனால், இன்னும் இரண்டு வாரத்தில், கல்குலத்தின் பிரம்மாண்டமான உருவம் தன் ஆழ அகலத்தோடு அனைவரது கண்களையும் அகல விரியச்செய்வது உறுதியெனபட்டது, ராகவனுக்கு.

பூரிப்போடு குளக்கரையில் நின்றிருந்த ராகவன், “சார்…” என்ற குரல்கேட்டு திரும்பினார். அவரது பூரிப்புக்கு காரணமான சங்கரன் அவரை நோக்கி வந்துக்கொண்டிருந்தான்.

“சார்… வேலைய பார்த்தீங்களா? ரொம்போ சந்தோஷமா இருக்கு சார். உங்களுக்குத்தான் மொதல்ல நன்றி சொல்லணும்.

“எனக்கெதுக்குப்பா? நான் என்ன செய்தேன். ஆயிரத்து ஐநூறு ரூபா கொடுத்தேன். அவ்வளோதான். இந்தக் கிராமம் தான் உனக்கு நன்றி சொல்லணும்”

“ஐயோ.. பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதீங்க சார். இதுல நான் ஒரு துளி. இந்த ஊர்ல இருக்க ஒருத்த ஒருத்தவங்களும் எவ்வளவு பொறுப்பா… தானே முன்வந்து கொளக்கரையில இருந்த ஆக்கரமிப்ப அகற்றினாங்க… கேட்டப் பங்களிப்பு தொகைய என்னை… என் வீட்டுக்கே தேடி வந்துக் கொடுத்தாங்க… பணத்தக் கொடுத்ததோடு போய்டாம, அவுங்களால என்னென்ன முடியுமோ… பொருளுதவி… உழைப்புதவி… உணவுதவின்னு… செய்து தொடர்ந்து ஆதரவு கொடுத்துக்கிட்டு இருக்காங்க. இப்போ நீங்ககூட.. அலைஞ்சி திரிஞ்சி எவ்வளவு சீக்கிரம் அரசாங்க அனுமதி வாங்கி கொடுத்தீங்க சார்? ஒரு கை ஓசை தராது சார்.”

தன் பங்களிப்பு துளியும் இல்லாமல், யார் யாரோ செய்த நல்ல காரியங்களையெல்லாம் தான் செய்ததாக பொய் சொல்லி, வீண் விளம்பரம் செய்யும் மனிதர்கள் இருக்கும் இதே பூமியில், சங்கரன் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்று ராகவனுக்குள் எழுந்த எண்ணத்தை பின்னுக்குத் தள்ளிவிட்டு, வேறொன்று வந்து நின்றது. உடனே ராகவன்,

“ஆ… சங்கரா… நான் உன்கிட்ட ஒரு விஷயம் சொல்ல மறந்துட்டேன். நம்ம சீனு இருக்கானில்ல… அவன் அந்தக் காசு… ஆயிரத்து  ஐநூற கொடுக்க கொஞ்சக் கால அவகாசம் கேட்டான்.” என்றார்.

“சார்… சீனுவா? நம்ம ஆல்-இன்-ஆல் சீனுவையா சொல்றீங்க? அவன் போன வாரமே ஆயிரத்து ஐநூறையும் கொடுத்துட்டானே சார்…” சங்கரன் சிறிதும் சந்தேகமின்றி சொன்னான்.

உண்மையிலேயே சீனு கொடுத்தானோ…. அல்லது சங்கரன் ஞாபக மறதியாய் சொல்கிறானோ என்ற குழப்பத்துடன், ராகவன், “அப்படியா?” என்ற கேள்வியை மட்டும் கேட்டுவிட்டு அங்கிருந்து  நகர்ந்தார்.

மறுநாள் குளக்கரையிலேயே சீனுவை பார்த்தார்.

“சீனு… பணத்தக் கொடுத்துட்டியாமில்ல?”

“ஆமாங்க ஐயா. ரொம்போ நாளா எங்க அப்பாவோட ஞாபகமா அவரோட வாட்ச், நரிப்பல்லு டாலர், கைத்தடியெல்லாம் வச்சிருந்தேன். போன வாரம் டவுனுக்குப் போய் பழைய பொருளா வாங்கி வாங்கி சேக்கற ஒருதவர்கிட்ட, இதெல்லாத்தையும் கொடுத்தேன். ஆயிரத்து அறநூறு கொடுத்தாருங்க. அதான்..”

“என்ன சீனு இப்படி பண்ணிட்ட? ஆச ஆசையா.. பத்திரமா.. வச்சிருந்த அப்பாவோட பொருளு.. உன்னோட சொத்துப்பா… அதப்போய்…?”

“ஐயா..காலகாலமா நம்ம ஊருக்கு நீர் கொடுத்து.. உயிர் கொடுத்துவந்த கல் குளத்த.. இந்த ஊரோட நீராதார பொக்கிஷத்த… இந்த கிராமத்தோட சொத்த.. மீட்டெடுக்க, என் ஒருத்தனோட பொக்கிஷத்த.. சொத்த… இழக்கறது தப்பில்லன்னு மனசுக்குப் பட்டுது. அதான் வித்துட்டேன். பொது சொத்த பாதுகாக்கறதுலேயும், அத மீட்டெடுக்கறதுலேயும் ஒவ்வொருத்தனோட பங்களிப்பும் நிச்சயம் இருக்கணும்னு நெனச்சித்தான்…..”

ராகவனுக்கு மெய்சிலிர்த்தது.

முப்பது நாட்கள் கழித்து, பெய்த முதல் மழைக்கே, தண்ணீரோடு சிரித்தக் கல் குளத்தை, ராகவன் எட்டிப்பார்த்தபோது, அதில் சங்கரனின் முகத்தோடு சீனுவின் முகமும் தெரிந்தது.

– கதைப் படிக்கலாம் – 136

இதையும் படியுங்கள் : பூங்கொத்து

Exit mobile version