நிஷாவின் விலங்கு…

– ராம்க்ருஷ்

ஏன் இவ்வளவு லேட் இனியா… என்றாள் நிஷா கோபத்தில்…

அலுவலகப் பணி இழுத்துவிட்டது, கோபம் கொள்ளாதே நிஷா, என அவன் அவளிடம் குழைந்தான்.

எவ்வளவு நேரமாக நான் காத்திருப்பது… வருவோர் போவோருக்கு நான் காட்சிப் பொருளாவது… எனக் குமுறினாள்.

சாரி டியர், இனி இப்படி நிகழாது.

சரி, சரி ஏதோ சொல்கிறேன் என்றீர்களே, என்னவாம் அது.

நாளைக்கு நாமிருவரும் மாமல்லபுரம் செல்கிறோம்.  நீ வருகிறாய் தானே.

எதற்கு? நான் தான் இதெல்லாம் திருமணத்திற்குப் பின்தான் என்றேனே…

ஏன்? நீ என்னை நம்பவில்லையா…

நம்புகிறேன், ஆனாலும் என் பாதுகாப்பு கருதி நான் இதையெல்லாம் மேரேஜ் நடந்தப் பின்னர் வைத்துக் கொள்ளலாமென நினைக்கிறேன்.  அது தவறா இனியா?…

தவறில்லை, என்றாலும்… நாம் நம் நிலையை ஒரு தனியிடத்தில் ஏகாந்தமாகப் பேசி முடிவு செய்வதற்கு வசதியாக இருக்குமென்றுதான்… என இழுத்தான்…

என் அப்பாவைப் பார்க்கிறேன் என்றீர்களே, என்னாயிற்று…

அதுபற்றி பேசுவதற்கு தான்.  என்னை நம்பு, நாளை என்னோடு வா சரியா…

சரி வருகிறேன். மாலைக்குள் வீடு திரும்ப வேண்டும். சில்மிஷங்கள் ஏதும் கூடாது. அப்படியென்றால் சரி.

சரி, சரி தாயே ஒப்புக் கொள்கிறேன்… என்று உரையாடலோடு இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டே பிரிந்துச் சென்றனர்.

முகநூல் நட்பு வளர்ந்து காதலாகி, இப்போது நேரில் சந்திப்பது வரை தொடர்கிறது.  இருவருமே நல்ல அழகு தான். அவன் ஆணழகன் என்றால், இவள் பேரழகி.

நிஷா மிகுந்த பாதுகாப்போடு இருக்க வேண்டி, அவனோடு நெருங்காமல் காதல் பேச்சுகளோடு மட்டுமே காதலை வளர்த்துக் கொண்டிருந்தாள். அவனும் அவளுக்கிணங்க பொறுமைக் காத்தான்.  அதனாலும், அவன்மீது அவள் மதிப்பு மிகக் கொண்டாள்.

சொன்னவாறே, இருவரும் ஓரிடத்தில் சந்தித்தனர்.  இனியன் கார் கொண்டு வந்திருந்தான். அவனே டிரைவ் செய்து வந்தான். அவள் முன்னிருக்கையில் அவனருகில் அமர்ந்தாள். பேசிக்கொண்டே காரில் பயணித்தனர். 

சிறிது நேரம் சென்றதும், வழியில் இரு இளைஞர்கள் கையசைத்து நின்றனர். 

காரை நிறுத்தப்போன இனியனைத் தடுத்த நிஷா… ஏன் நிறுத்துகிறீர்கள்? வேண்டாத வம்பு என்றாள். அதற்கு அவன், கையசைப்பவர்கள் எனது ஃபிரண்ட்ஸ் மூர்த்தியும், தினேசும் தான்.

வண்டியை நிறுத்தியதும், இருவரும் சொல்லாமலே பின் சீட்டில் ஏறி அமர்ந்தனர். 

என்னப்பா நீங்கள் எங்கே,  நான் தனிமையில் போகலாமென்றால் நீங்கள் ஏறிக் கொண்டீர்களே.

இல்லை இனியா, உன் தனிமையை நாங்கள் கெடுக்க மாட்டோம்.  ரொம்ப நேரமாக பஸ்சுக்கு காத்திருந்து தான் உன் காரில் ஏறினோம்.  நாங்கள் மகாபல்லிபுர ஆரம்பத்திலேயே இறங்கிக் கொள்கிறோம் சரியா, என்றான்.

மறுக்க முடியாத இனியனும் தலையை ஆட்டினான்.

நிஷா மட்டும் இதை அவ்வளவாக ரசிக்கவில்லை. அவள் மனதுக்குள் நான் மகாபல்லிபுரம் சென்றதும், இறங்கி பஸ் ஏறி வீட்டிற்குப் புறப்படுவேன் என நினைத்துக்கொண்டாள். அமைதிக் காத்தாள்.

சற்றுத் தூரம் சென்றதும், மற்றொரு நண்பனும் பின் சீட்டில் ஏறிக் கொள்ள சிட்டாகப் பறந்தது கார்.  மகாபல்லிபுரம் எல்லையைத் தொட்டதும், கார் ஒரு தனிமையான பங்களாவை நோக்கிச் சென்றது.

இனியா எங்கே போகிறீர்கள்?  இவர்களும் இறங்கவில்லையே  என பீதியடைந்தாள் நிஷா.

இல்லை நிஷா, இது தான் நாம் தங்கப் போகும் இடம்.  என் நண்பர் ஒருவருக்குச் சொந்தமானது.

இவர்களும் இங்கே இறங்குகிறார்களே…

ஆமாம், அவர்களும் இந்தப் பங்களாவில் கீழேயுள்ள அறைகளில் தங்கப் போகிறார்கள். நாம் மாடியிலுள்ள அறைக்குப் போகிறோம் என்றான்.

இனியா என்னை நீங்கள் தயவு செய்து மகாபல்லிபுரத்தில் பஸ் ஏற்றி விடுங்கள்… நான் வீட்டிற்குப் போகிறேன்.

எதற்குப் பயப்படுகிறாய், நானிருக்கிறேனே.  

வேண்டாம் நான் வீட்டிற்குப் போகணும். வாருங்கள் என்னை பஸ் ஸ்டாண்ட் வரைக் கொண்டு விடுங்கள்.

மாட்டேன் என்றால் என்ன செய்வாய்?  ரொம்பத்தான் பயப்படுகிறாயோ…

இங்கே ஆளரவமே இல்லையே. ஆட்டோ கிடைத்தால் நான் போய்க் கொள்கிறேன், என இறங்கி நடக்க ஆரம்பித்தாள்.

பேய் போலப் பாய்ந்து ஓடி வந்து அவள் கையைப் பற்றினான் இனியன்.

உன்னை இப்படி அனுப்புவதற்காகவா இங்கே அழைத்து வந்தேன். உள்ளே வா…

என்ன ஒரு மாதிரியாகப் பேசுகிறாய் இனியா…

வேறு எப்படிப் பேசுவதாம். உன்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்தது, அப்படியே அனுப்பி விடுவதற்கா?  வா… நமது அறைக்குப் போகலாம். பேசிக் கொண்டிருக்கலாம்.

இல்லை இனியா இது நன்றாயில்லை. என்னை விட்டுவிடு…

உன்னை விட்டுவிடுவதா? எவ்வளவு நாள் காத்திருந்து பணி முடித்திருக்கிறேன். உன்னால் எனக்கு எவ்வளவு சொத்து சேர இருக்கிறது… அதையெல்லாம் விட்டுவிட முடியுமா? நில்லடி இங்கே…

என்ன வார்த்தை நீள்கிறது. என்னால் சொத்தா? உனக்கா? என்ன உளறுகிறாய்?

உன்னை ஆளப்போகிறோம். அதைப் படம் பிடிப்போம்… பிறகு அதைக் காசாக்குவோம். இப்போ புரிகிறதா? எனக் கூறிக் கொண்டே, அவளை வேகத்தில் விலங்கிட்டு கட்டிலில் கட்டினான்.

அடப் படுபாவி, உன்னை நம்பினேனே… என்னை என்னச் சொல்ல? தயவு செய்து என்னை விட்டுவிடு இனியா.

இங்கேயே நால்வர் இருக்கிறோம். இங்கே இன்னும் ஒரு ஃபிரண்டு கூட வரவேண்டும். அவனும் வந்தப் பிறகு தான் ஆட்டம் ஆரம்பமாகும். வீடியோ ஆள், அதோ அந்த அறையில் இருக்கிறார்.

வரவேண்டிய ஃபிரண்டுதான் உனக்கு முதல் பூஜை போடப் போகிறவர். அவன் வருகிறவரை காத்திரு கண்ணே.

இனியா, உனது பெயருக்கும் உனக்கும் துளிக்கூட சம்பந்தமில்லையாடா… தயவுசெய்து என்னை விட்டுவிடு.

இயலாமையால் அழத் தொடங்குகிறாள். பயம் அவளை ஆட்கொள்கிறது.

கார்த்தி இன்னும் ஏன் தாமதமடா?  உனக்காக நாங்கள் இங்கே காத்திருக்கிறோம். அலைபேசியில் அழைத்தான் இனியன்.

கொண்டு வந்துவிட்டீர்களா? இதோ இன்னும் அரை மணியில் நான் அங்கிருப்பேன். சரியா.

எங்கேயிருந்து அழைத்து வந்திருக்கிறாய் இனியா…

மந்தைவெளியிலிருந்து தான். ஏன்?

சிக்கலாகாதல்லவா?

ஏன் பயப்படுகிறாயா? அவர்கள் வீட்டில் அவள் இன்னும் சொல்லவில்லை. அதனால் தெரிய வாய்ப்பில்லை. காரியம் முடிந்ததும்தான் எல்லாம் முடிந்துவிடுமே…

பெயர் என்ன தெரியுமா?

நிஷா என்று தான் சொன்னாள்.

என்ன சொல்கிறாய்…  நிஷாவா?

ஏய் அதையெல்லாம் கேட்டுக் கொண்டு, விரைந்து வாடா நீ…

சரி… சரி…

என்றுமில்லாமல் இன்று மனம் குழப்பமாகிறதே என்று குழப்பமடைந்தான் கார்த்தி.

கார்த்தி, இனியன், மூர்த்தி மற்றும் தினேஷ் நால்வரும் கூட்டாளிகள். இளைஞர்கள். எல்லா கெட்டப் பழக்கங்களுக்கும் சொந்தக்காரர்கள்.

முதலில் கார்த்தி தான் பெண் பழக்கத்தைத் தொடங்கியவன்.  அதன்மூலம் அதைப் படம்பிடித்து அனுப்பும் உத்தி தந்தவன் மூர்த்தி.  இப்படியாக இப்போது இதுவே அவர்களுக்குத் தொழிலானது.  இன்பமான தொழில்.

மந்தைவெளி என்கிறான்… நிஷா என்கிறானே… என மிகுந்த குழப்பத்தில் ஆழ்ந்த கார்த்தி… அந்தக் குழப்பத்தோடேயே பங்களாவை அடைந்தான்.  இனியன் காத்திருந்தான். அவனை அழைத்துச் சென்றான்.

அறையில் அழுதழுது ஓய்ந்திருந்த நிஷா, அரை மயக்கத்திலிருந்தாள்.

அவளைப் பார்த்த கார்த்தி, தொடர்ந்து தலையில் பத்து இடிகள் இறங்கியது போலானான்.  உடனே அவளின் விலங்கை நீக்கி அவளை இழுத்துக்கொண்டு ஓடத் தொடங்கினான்.

இனியன், கார்த்தி என்ன செய்கிறாய் என்று அவன் பின்னால் ஓடினான்.

பின் கதவைத் திறந்துக்கொண்டு ஓடிய கார்த்தி அதை அடைத்தான்.  ஆனால் ஒன்றை மறந்திருந்தான்,  பின் கதவிற்குப் பின் ஒரு தடியனை துப்பாக்கியோடு நிறுத்தியிருப்பார்கள் என்பதை..

நிஷாவின் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு ஓடியவன், தன் கார் நின்றிருக்கும் இடத்திற்கு ஒடினான். அதற்குள் சுதாரித்துக் கொண்ட தடியன் கார்த்தியைப் பார்த்து சுட்டான். முதல் குண்டு கார்த்தியின் கணுக்காலில் பட்டது.  அந்த வலியோடும் அவன் நிஷாவை பிடித்த பிடியை விடாமல், காரருகே சென்றிருந்தான். காருக்குள் அவளைத் தள்ளியவன், காரை நெருங்கும்போது தடியன் மறுபடியும் சுட அது கார்த்தியின் நெஞ்சை நோக்கிப் பாய்ந்தது.  தடாலென்று அவன் அடியற்ற மரம்போல் தொப்பென்று விழுந்தான். உயிர் பிரிந்திருந்தது. 

அரை மயக்கத்திலிருந்து மெல்ல விலகிக் கொண்டிருந்த நிஷா, கண்டவைகள் கனவாகத் தோன்ற, தன் அண்ணன் தான் தன்னைக் காப்பாற்ற வந்திருக்கிறான் என மகிழ்ந்தவள், அவன் உயிரிழந்ததைப் பார்த்ததும், பதறி கீழே விழுந்து அழத் தொடங்கினாள்.

வெடிச்சத்தம் கேட்ட ரோந்துப் போலீசார், சைரன் அடித்துக் கொண்டு அங்கு விரைந்தனர். தடியன் பங்களாவிற்குள் ஓடி மறைந்தான்.

மற்றவர்களும் பங்களாக்களின் அறைகளில் பதுங்கினர்.

வெடிச்சத்தம் வந்த திசை நோக்கி வந்த ரோந்துப் போலீசார், அங்கு நிஷா கார்த்தியின் மீது விழுந்த அழுது கொண்டிருந்ததைப் பார்த்தனர். அவளை நெருங்கி வந்து அவளை எழுப்பி ஆசுவாசப்படுத்தினர்.  என்னாயிற்று என்று கேட்டனர்.

அவள் தனக்கு நிகழ்ந்தவை பற்றிக் கூறி தன் அண்ணன் தன்னைக் காப்பாற்ற வந்ததாகவும், தடியன் அவனைச் சுட்டு விட்டதாகவும்.  அந்த பங்களாவின் அறைகளில் தான் அவர்கள் பதுங்கியிருக்கக்கூடும் என்றும் சொன்னாள்.  சுதாரித்துக்கொண்ட போலீசார், அருகிலுள்ள காவல் நிலைய போலீசாரையும் துணைக்கு அழைத்தனர். காவலர்கள் வந்ததும் அனைவரும் பிடிக்கப்பட்டனர்.

பிடிபட்ட நால்வரணி, கார்த்தியும் எங்களில் ஒருத்தன் தான் எனக் கூறி, அவனோடு சேர்ந்து செய்த சதிகளின் ஆவணங்களையும் வீடியோக்களையும் காவலரிடம் ஒப்படைத்தனர்.

நீதிமன்றத்தில் நால்வரின் வக்கீல்… கார்த்தியும் குற்றமிழைத்தவனே, அவனே முதல்வன்… எனவே நால்வரையும் விடுவிக்க வேண்டுமென்று வாதிட்டார்.

ஆனால் நீதிபதி அளித்த தீர்ப்பில். “கார்த்தி தீயவனானாலும், தன் தங்கைதான் பாதிக்கப்படப் போகிறவள் என்றதும், மனம் திருந்தி தன் நண்பர்களைக் காட்டிக்கொடுக்க முன் வந்ததாலும், அவன் தற்போது உயிரிழந்து விட்டதாலும், குற்றப்பட்டியலிலிருந்து நீக்கப்படுகிறான்.  மற்றவர்கள் குற்றமிழைத்திருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிவதால், அவர்களுக்கு 10 வருட காலத்திற்கு கடுந்தண்டனை வழங்கப்படுகிறது” என்றார்.

– கதைப் படிக்கலாம் – 65

இதையும் படியுங்கள் : 3 நோக்கங்கள்…

Exit mobile version