ஒரு ரூபாய்…

– ஆன்ம ஒளி ஜாகிர் உசேன்

கடைக்கு வந்து பூட்டைத் திறந்தான். பின்னால் ஒரு குரல்… ஐயா ஏதாவது காசு கொடுங்க… சென்ற பின்னர் ஒரு குடிகாரனின் குரல்…   பாக்கெட்டை தடவிப் பார்த்தபோது ஒருவா சில்லறை இருந்தது. அதான் அவன்கிட்ட போட்டபோது, அதை வாங்கி மூஞ்சியில் விட்டெறிந்தான்.

காலையிலேயே, கடை திறக்கையிலே  இப்படியா… கடையை திறந்து சாமானை வெளியே எடுத்து வைத்துக்கொண்டு இருந்தேன். அன்று வியாழக்கிழமை என்பதால், வரிசையாக தர்மம் கேட்டு நிறைய பேர் வந்துக் கொண்டிருந்தனர். பாக்கெட்டில் இருந்த நூறு ரூபாய் நோட்டை எடுத்துக்கொண்டு, பக்கத்து கடையில் சில்லரை மாற்றிக்கொண்டு, கடையில வச்சிட்டு உட்கார்ந்தேன்.

என்ன தம்பி இன்னைக்கு கடை  லேட்டா  தொறந்திங்க போல என்றே, கண்ணன் அங்கு வந்தார். என்ன தம்பி போனி பண்ணீங்களா… டீ சாப்பிடலாமா…  எனக் கேட்டார். சாப்பிடலாம்னு வாங்கிட்டு வரேன் என்று கிளம்பி, பக்கத்துக் கடையில் டீ வாங்கச் சென்றேன்.

ஒரு பார்சல் டி ஒன்னு போடுங்க. 20 ரூபாய்க்கு கப். அஞ்சு ரூபாய் கொடுங்க எனக் கேட்டேன். அவற்றை கட்டிவிட்டு மீதி சில்லறை எடுத்துக் கொண்டிருந்தார். அப்போது மீண்டும் அதே குடிகாரன்… அந்தக் கடையில் வந்து பிச்சைக் கேட்டுக் கொண்டிருந்தார். என்னை பார்த்ததும் அங்கிருந்து சென்று விட்டார். மீண்டும் அவனைப் பார்த்தபோது ஒரு ரூபாய் நாணயம் ஞாபகத்திற்கு வந்தது.

டீ வாங்கிட்டு அப்படியே கடைக்கு போயி கப்புல ஊத்தி குடிச்சேன்.  என்ன தம்பி ஒரு மாதிரியா இருக்கீங்க அப்படின்னு கண்ணன் கேட்க, ஒன்னும் இல்ல அண்ணே… காலையிலேயே கடை திறக்கும்போதே ஒரு குடிகார பய காசு  கேட்டான். சில்லறை இல்லை என்று ஒருவா தா இருக்குனு போட்டேன். அவன் மூஞ்சில தூக்கிப் போட்டு  போயிட்டான். அதான் வருத்தமா இருக்கு  என்று சொன்னேன்.

அதற்கு அவர்… அட விடுங்க தம்பி, அதுக்கெல்லாம் கவலைபட்டுட்டு, போனா போறான் என்று சொன்னார். சில்லறை  மாற்றிய நாணயங்களை கையில் வைத்துக்கொண்டேன்.

அந்த ஒரு ரூபாய் நாணயத்தை பார்க்கும் போதெல்லாம், என் மனதில் பத்தாண்டுக்கு முன் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது. அப்போது இலுப்பூரில் நான் பத்தாவது படித்துக் கொண்டிருக்கும் போது  நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

அன்று பள்ளி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்த போது, தம்பி… தம்பி… என்று ஒரு குரல். திரும்பிப் பார்த்தபோது ஒரு 30 வயது நிரம்பிய ஒரு  கர்ப்பிணிபெண் என்னை அழைத்தாள். என்னக்கா என்று கேட்டபோது, ஆஸ்பத்திரிக்கு வந்தேன் தம்பி, மயக்கத்தில் படுத்திருந்தேன். பர்சை யாரோ எடுத்துட்டு போயிட்டாங்க… இப்ப வீட்டுக்குப் போகணும்… கையில காசு இல்ல… என் வீட்டுக்காரருக்கு கால் பண்ணனும். ஒருவா இருந்தா குடு தம்பி என்று கேட்டாங்க.

பாக்கெட்டில் கைவிட்டு பார்த்தப்ப தேன் முட்டாய் வாங்குறதுக்காக ஒருவா இருந்துச்சு. அதை எடுத்துப் பார்த்துட்டு… குடுக்கலாமா வேணாமா…. என எண்ணவும், சரி பாவமா இருக்குன்னு கொடுத்தேன். அதை வாங்கிப் பக்கத்தில் இருந்த ஒரு ஃபோன் பூத்தில் கால் பண்ணி, அவங்க வீட்டுக்காரருக்கு தகவலைச் சொன்னார்கள். பேசி முடிச்சுட்டு,  நன்றி தம்பி, கவனமா கேட்டுக்குங்க… யாருமே உதவ இல்ல… நல்ல நேரத்துல வந்து நீ கொடுத்த… என சொன்னாங்க.

கொஞ்ச நேரத்திலே அங்கே ஒரு கார் வந்து நின்னுச்சு. அதிலிருந்து ஒரு ஆள் வெள்ளை வேட்டி சட்டையுடன், முரட்டு உடம்போடு வந்து இறங்கினார். என்னமா என்ன ஆச்சு… அப்படினு கேட்டுக்கொண்டே  அந்தப் பெண் அருகே வந்தார். மயக்கத்தில் படுத்திருந்ததைப் பார்த்து, பர்ஸ யாரோ எடுத்துட்டு போயிட்டாங்க என்று அந்த பெண் சொல்ல, பரவால்ல விடு… உனக்கு ஒன்னும் இல்லல என்று அவர் அந்த பெண்ணை பிடித்துக்கொண்டார்.

எனக்கு ஒன்னும் ஆகலங்க. இந்தப் பையன் ஒரு ரூபாய் காசு கொடுத்து எனக்கு ஃபோன் பண்ண உதவலைனா, உங்களுக்கு ஃபோன் பண்ணி இருக்க முடியாது என்று கூறினார்கள். உடனே அந்த முரட்டு ஆள் என் அருகில் வந்தார். தம்பி என்ன படிக்கிற… எந்த ஸ்கூல்… என்று கேட்டார். நான் ஹை ஸ்கூல் தாங்க படிக்கிறேன். பக்கத்துல தான் என் வீடு என்றேன்.

உடனே அவர் பையிலிருந்து ஒரு மஞ்சள் நிற நோட்டை எடுத்து… தம்பி வச்சுக்கோ என்று என் பாக்கெட்டில் திணித்தார். நான் வேணா என்று சொன்னேன். அந்த அக்கா என்னை வாங்கிக்கொள் என்று கட்டாயப்படுத்தினார்கள். வலுக்கட்டாயமாக என் பாக்கெட்டில் அந்த நோட்டை வைத்துவிட்டு சென்றார்கள். அதை எடுத்துப் பார்க்கும்போது தான் தெரிஞ்சுச்சு, ஐநூறு ரூபா நோட்டு என்று.

அப்போதுதான் நான் முதலில் பார்க்கிறேன், அந்த நோட்டை. என்ன செய்வது என்று தெரியாமல், வீட்டுக்கு போய் அம்மா கிட்ட கொடுத்தேன். ஏதுடா இவ்வளவு காசு… யார் கொடுத்தா… என்று   கேட்டாங்க. அதுக்கு நா, இது மாதிரி நான் வர்றப்ப ஒரு அக்கா காசு இல்ல, ஃபோன் பண்ணனும் அப்டினு ஒருவா கேட்டாங்க. நான் கொடுத்தேன். அதுக்குதான் கொடுத்தாங்க மா என்றேன். அதுக்கு அம்மா அத நம்பல. பொய் சொல்லாதடா. ஒருவா கொடுத்ததற்காக உனக்கு ஐநூறு ரூபாய் கொடுக்குறாங்கலா என்று கேட்டாங்க.

ஆமாம்மா அவங்க பணக்காரங்க போல. யாரோ அவங்க பர்ஸ எடுத்துட்டாங்களா, ஆஸ்பத்திரி வந்தப்ப. அப்பப் பக்கத்திலிருந்த யார் யார் கிட்டேயோ கேட்டாங்களாம். யாரும் காசு கொடுக்கலயாம். நான் பாக்கெட்டில் இருந்த ஒரு ரூவாய் எடுத்துக் கொடுத்தேன். அதுக்காக கொடுத்தாங்கமா என்றேன். சரி என்னமோ சொல்ற. அந்தக் காச வாங்கிட்டு வரும்போது, எனக்கு தீனி எல்லாம் வாங்கிட்டு வந்துக் கொடுத்தாங்க.

அப்படி ஒரு 3 மாசம் கழிச்சு அந்த வழி வந்துக் கொண்டிருந்தபோது, ஒரு கார் என் பக்கத்தில் வந்து நின்னுச்சு. நான் யாருன்னு பார்த்தால், மூணு மாசத்துக்கு முன்னாடி நான் பார்த்த அதே அக்கா… கையில ஒரு குழந்தையோட… தம்பி நல்லா இருக்கியா என்று கேட்டாங்க. நான் நல்லா இருக்கேன்… நீங்க எப்படி இருக்கீங்க என்று நான் கேட்டேன். நல்லா இருக்கேன் பா, பாப்பா பிறந்திருக்குனு சொல்லி குழந்தையைக் காட்டினாங்க.

கூடையில் இருந்து ஒரு பெரிய சாக்லெட் எடுத்து எனக்குக் கொடுத்தாங்க, இந்தாப்பா சாப்பிடு என்று. நான் அத வாங்கி வைத்துக் கொண்டேன். இப்ப நீ எங்க போற என்று சொல்லி, என்னைக் கார்ல ஏத்தி எங்க வீட்டில இறக்கி விட்டாங்க. ஒரு நாள் எங்க வீட்டுக்கு வரணும்னு சொல்லிட்டு போய்ட்டாங்க. அப்போது நெனச்சு பார்த்தேன்.

மீண்டும் ஒரு குரல்…. ஐயா காசு கொடுங்க என்று…. 

– கதைப் படிக்கலாம் – 53

இதையும் படியுங்கள்தரிசனம்

Exit mobile version