– பார்த்தி

என் பெயர் விஷ்ணு. இன்று மதியம் என் வாழ்வில் நடந்த ஒரு அருவெருக்கத்தக்க சம்பவத்தை உங்களிடம் கொட்டித் தீர்க்க விழைகிறேன். நானும் என் அப்பா அம்மாவும் சேர்ந்து, அடுத்த வாரம் வரப்போகும் தீபாவளிக்கு புதுத்துணி எடுக்க மாம்பலம் பாண்டி பஜாருக்கு செல்ல முடிவு செய்தோம். தனிப்பட்ட முறையில் எனக்கு துணிகள் மீது ஆர்வம் இல்லை, அது புதிதாக இருந்தாலும் சரி, பழைய துணியாக இருந்தாலும் சரி.
எங்கள் வீடு சிங்க பெருமாள் கோவிலுக்கு அருகே இருக்கிறது. பேருந்தில் பயணம் செல்வதை விட மின்சார ரயிலின் மூலம் செல்வதே எனக்குப் பிடிக்கும். இன்று மதியம் சுமார் மூன்று மணி அளவில் எங்கள் பயணத்தைத் தொடங்கினோம்.
ரயிலில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் உட்கார இடம் ஏதுமில்லாமல் அம்மாவின் மடியில் அமர்ந்துக் கொண்டு ரயிலின் ஜன்னல் வழியாக வேடிக்கைப் பார்த்துக்கொண்டே சென்றேன். பயணத்தின் போது ரயில் ஒடும் சத்தத்தைத் தாண்டி, உள்ளே இருவரின் உரத்தக் குரலைக் கேட்க முடிந்தது. அது சமோசா மற்றும் கைக்குட்டை வியாபாரியின் குரல். சிறிது நேரத்தில் தாம்பரம் ரயில் நிலையத்தை அடைந்தோம். பலர் இறங்கினர், சிலர் ஏறினர்.
தாம்பரம் தாண்டி சில நிமிடத்திலேயே நல்ல ஆழ்ந்த உறக்கம். அதைக் கெடுக்கும் வகையில் சுர்ரென்று நல்ல பசி வயிற்றைக் கில்லியது. காலை எட்டு மணிக்கு சாப்பிட்டது. சாப்பிட்டவுடன் நல்ல உறக்கம். முந்தின இரவு முழுக்க துளிக்கூட தூக்கமில்லை. பகலில் தூங்குவதே என் வழக்கம், மற்றும் பிடித்தம் கூட. இப்படி செய்வது என் அப்பாவிற்கு சுத்தமாகப் பிடிக்காது.
“இவன் என்ன இரவு முழுக்க ஆட்டம் போடுறான்” என்று என் அம்மாவிடம் புலம்பிக்கொண்டே இருப்பார். என் அம்மாவோ அவர் பேச்சைக் கொஞ்சம் கூட மதிப்பதில்லை. அவளுக்கு என் மீது அம்புட்டு பாசம்.
பயணத்தின் போது ஒருவேளை எனக்குப் பசித்தால், நான் சாப்பிட அம்மா என்ன கொண்டு வந்திருப்பாள் என்று எனக்கு நன்றாகவே தெரியும். அதைக் கேட்ட போது
“இன்னும் கொஞ்ச நேரத்துல இறங்கப் போறோம், இப்ப என்ன அவசரம்” என்று அதட்டினார். அவர் இரு கண்கள் உருட்ட. அடி வயிறு வலிக்கத் தொடங்கியது. பசி பொறுக்க முடியவில்லை. மடியில் படுத்து இருந்த நான் திடீரென்று வீள் என்று கத்தினேன்.
“என்ன கண்ணு தூங்கி முடிச்சாச்சா, பசிக்குதா” என்று அம்மா கேட்க
“அவன் இப்ப உன் கிட்ட பசிக்குதுன்னு சொன்னானா?.. நீயே ஏன் அவன உசுப்பேத்திவிடுற” என்று அப்பா கடுகடுத்தார்.
அம்மா “ஆமா! ஆறு மாச குழந்த வாயத் தொறந்து, ‘எனக்குப் பசிக்குது அம்மானு’ சொல்லுமா…?” என்றாள்.
ஒரு முக்கியமான செய்தி உங்களிடம் சொல்ல மறந்து விட்டேன்… நான் பிறந்து ஆறு மாதம் ஆகிவிட்டது.. பெரும்பாலும் என் வயசு என்னவென்று யார் கேட்டாலும் யாருக்கும் சொல்ல மாட்டேன். ஆனா உங்கக் கிட்ட சொல்லித்தான் ஆகனும்.
சில ரயில் நிலையங்கள் தாண்டின. பசி தாங்க முடியாமல் அழ ஆரம்பித்தேன். என்னை மடியில் போட்டு தாலாட்ட ஆரம்பித்தாள். நான் விட்டுக்கொடுப்பதாக இல்லை. ‘வீள்’ என்று அழுகையின் அழுத்தத்தை அதிகறித்தேன். அப்பா “ஆரம்பிச்சிடானா இவன்” என்று சலித்துச் சொல்லும்போது, வண்டி திரிசூலம் வந்தது. தாஜா பண்ணியும் மாரில் தட்டிக் கொடுத்தும் என் அழுகையை நான் நிறுத்தவில்லை.
அப்பா என்னை தூக்கிக்கொண்டு ரயில் கதவு அருகே நின்று எங்களை கடந்துச் செல்லும் மரங்களையும், வீடுகளையும், மாடுகளையும் காண்பித்து என் பசியின் போக்கை திசைத் திருப்பப் பார்த்தார். நானோ அம்மாவின் கண்ணையும் கனிவையும் தேடினேன்.
“அவன என் கிட்ட கொடுங்க” என்று என்னை வாங்கி, என் வயிறு பசிப்போக்க அவள் ரவிக்கையின் ஊக்கை திறந்தாள். மடியில் என்னை படுக்கப் போட்டு அவள் மாரின் காம்பை என் இரு உதட்டின் இடையே பிதுக்கித் திணித்தால். பசியாற பால் குடிக்க ஆரம்பித்தேன். அப்பா எங்கள் அருகே வந்து அமர்ந்து, என்னைப் பார்த்து “நினச்சத சாதிச்சுருவடா நீ” என்று சொல்லி முடிப்பதற்குள், நான் குதுகளத்துடன் என் இரண்டு கால்களையும் மேலே கீழே ஆட்டிக்கொண்டே அப்பாவின் இடுப்பில் ஒரு இடி இடித்தேன்…
பாதி வயிறு நிரம்பியது. மங்கிய பார்வை மலர்ந்தது. திடீரென்று அப்பா அம்மாவிடம் ‘போதும் மூடு’ என்று அதட்டினார். “ஏன்! இப்ப என்ன” என்று அம்மா கேட்க, “உச்சு” என்று முனகலுடன் அருகே நின்ற சில ஆண்களைக் கண் காமித்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை. அம்மாவோ பதட்டத்துடன் என் முகத்தை தன் புடவையால் மூடி மறைத்தாள். அருகே இருப்பவர்கள் நான் குடிக்கும் பாலின் அளவைக் கண்டு, என் மீது கண் வைத்து விடுவார்கள் என்று எண்ணி, அம்மா அப்படி செய்து இருப்பாளோ என்று யோசித்தேன்.
வேடிக்கைப் பார்த்துக்கொண்டே பால் குடிப்பது என் வழக்கம். அதனால் மூடியப் புடவையை ஒதுக்கி விட்டு மறுபடியும் கால் ஆட்டிக்கொண்டே அப்பாவை சீண்டினேன். அப்பா சுத்திப் பார்த்து சுதாரித்துக் கொண்டு, அம்மாவிடம் “’ம்ம்ம்” என்று கண்கள் விரிக்க, மறுபடியும் புடவையால் மறைக்கப்பட்டேன்.
புரியாத புதிராகவே இருந்தது. புரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஆவல் அதிகரித்தது. அம்மாவுக்கு தெரியாமல் புடவையை சற்று விலக்கிப் பார்த்தேன். எதிரே இரண்டு ஆண்கள் நின்று கொண்டும் மற்றும் ஒரு ஆண் கதவு அருகே கீழே அமர்ந்துக்கொண்டும் நான் உண்ணும் உணவின் பாகத்தை பாரபட்சம் பார்க்காமல் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
கொதித்தெரிந்த என் புருவங்கள் அவர்களின் பார்வையின் கருவிழிகளை பொசுக்கும் அளவிற்கு கோபம் வந்தது. எனக்கு வேடிக்கை பார்த்துக்கொண்டே பால் கூடிப்பது பிடிக்குமே தவிர, நான் குடிப்பதை யாரேனும் வேடிக்கைப் பார்த்தால் சுத்தமாக பிடிக்காது.
அவர்கள் கண்கள் மீது காரப்பொரியை தூவ வேண்டும். கட்டெறும்புகள் விட்டு கண்ட இடத்தில் கடிக்க விட வேண்டும், இந்தக் காட்டுமிராண்டிகளை. முகத்தின் மீது என் மூத்திரத்தை பீச்சி அடிக்க வேண்டும்.
நான் உண்ண கடவுள் கொடுத்த இயற்கை உணவு அம்மாவின் பால், அதில் காமத்துப்பாலை கலக்க முயற்சிக்கின்றனர். நிமிர்ந்து அம்மாவின் முகம் பார்க்க முடியவில்லை. அவளுக்கு மிகவும் தர்மசங்கடமான நிலைமை… அதில் கொஞ்சம்கூட தர்மமே இல்லாத கொடுமை.
வயித்துப்பசி போயி வயிற்றெரிச்சல் வந்தது. அப்பாவை உதைப்பதை விட்டுவிட்டு அவர்களை எட்டி உதைக்கவேண்டும் என்று தோன்றியது. ரயில் வண்டி நின்றும் பின்பு நகர்ந்தும்… அவர்கள் நகரவில்லை. பசி இன்னும் மீதி இருந்தும், ‘போதும்’ என்று உதறிவிட,
‘போதுமா சாமி!.. பசி போயிருச்சா புள்ளைக்கு..’ என்று என்னை அள்ளிக்கொண்டு, என் நெற்றியில் முத்தம் கொடுத்தாள். ரத்தத்தின் மூலம் பால் கொடுத்து, பின்பு முத்தத்தின் மூலம் பாசம் கொடுத்தாள்.
சைதாப்பேட்டை வந்தது. ஜன்னல் வழி கோவில் கோபுரம் தெரிந்தது. கோவிலில் வீற்றிருக்கும் காரணீஸ்வரிடம் நான் சில கோரிக்கைகளை விடுக்க விரும்புகிறேன். அவை
1. இனி எல்லா அம்மாக்களின் கைக் கட்ட விரலில்தான் காம்பு வளர வேண்டும்.
2. இல்லையெனில் பிறந்தப் பத்து நாட்களுக்குள் குழந்தைக்கு பல் வளர வேண்டும்.
3. எல்லாவற்றையும் விட மிக முக்கியமானது வக்கிர மனதுடைய ஆண்களுக்கு, கொஞ்சாமவது அறிவு வளர வேண்டும்.
ஆண்பால் – பெண்பால் – மற்றும் குழந்தைக்கான பால்…
– கதைப் படிக்கலாம் – 127
இதையும் படியுங்கள் : செயல் அறம்