ரணம்…

– வாய்மைநாதன்

யாழினியின் ‘ப்ளஸ் பாய்ண்டே’ அவளது உற்றுநோக்கும் திறன் தான்.  ஒரு விஷயம் விடாமல் பார்வையாலேயே படம் பிடித்து விடுவாள். அப்படித்தான் பள்ளி ஆண்டு விழாவின் முன்னேற்பாடுகளைக் கண்கொட்டாமல் கவனித்திருந்தாள். அங்குத் தோரணத்தில் ஒட்டப்பட்டிருந்த ‘ஜண்டா’ காகிதத்தின் வண்ணங்கள், ஒரே அலைவரிசையில் இல்லாமல் மாறிமாறி இருப்பதைத் தன் தோழி செல்வியிடம் தெரிவித்துக்கொண்டிருந்த வேளையில்,

“யாழினி.. உன்னை ‘ஹெட்மிஸ்’ கூப்பிடுறாங்க..” என்ற சக மாணவி ஒருத்தியின் கூக்குரல் கேட்ட உடனேயே, ‘சட்டென’ ஓட்டமெடுத்திருந்தாள் யாழினி.. அனுமதி கோரிவிட்டு ‘ரூம்’ உள்ளே சென்றவள், ஹெட்மிஸ்க்கு ‘சல்யூட்’ அடித்து, வலப்புறம் நின்றிருந்த ‘தமிழாசிரியை’ காந்திமதியைப் பார்த்ததும், பணிவோடு கைக்கூப்பி வணக்கமிட்டாள்.

பதிலுக்கு புன்சிரிப்பை வணக்கமாக பதிலளித்த தமிழாசிரியை, “நாளைக்கு சாயங்காலம் நாலு மணிக்கு ஆரம்பிக்கற ஆண்டு விழாவுல, நீங்க கவிதை வாசிக்கப் போறீங்க யாழினி..” என்றவுடன் ஆச்சரியத்தில் அவள் கண்கள் “நானா?” என்பது போல விரிந்தன.

“வர்றவங்க எல்லாம் நம்ம பள்ளியில படிக்கிற உன்னப் போல பிள்ளைகளோட அப்பா அம்மாக்கள் தான்மா.. எல்லாரு மனசுலயும் அழுத்தமாப் பதியுற மாதிரி உன் திறமையக் காட்டணும்.. சரியா..” என பேச்சுக்கு உரிமையோடு அதட்டினார் காந்திமதி.

“கண்டிப்பாங்க அம்மா.. கண்டிப்பா..” என பூரித்தவாறே, “என்ன தலைப்புங்கம்மா..?” என்றாள்.

“தலைப்புலாம் ஒன்னுமில்லமா.. உனக்கு என்ன வருதோ அதைச் சிறப்பா பண்ணு.. வந்தவங்க எல்லாருக்கும் உன் திறமை தெரியணும்..” என்றபடி யாழினியின் ஆர்வத்திற்கு மேலும் தீனியிட்டார் ‘ஹெட்மிஸ்’ கங்கா.

உற்சாகம் ததும்பியபடி உள்ளூற கற்பனை வளர்த்தவாறு இருவருக்கும் ‘நன்றி’ சொல்லிவிட்டு புறப்படுகையில், ‘ஸ்கூல் பெல்’ சரியாக அடித்திருந்தது.

தேனியிலுள்ள ‘வெற்றியூர்’ அரசு உயர்நிலைப் பள்ளியில் ஒன்பதாம் வகுப்புப் படிக்கிற அசாத்தியத் திறமைக்காரி யாழினி; இயல்பாகவே அழகுற கவிதை எழுதும் திறன் வாய்க்கப் பெற்றவளாதலால், தான் எழுதுகிற ஒவ்வொரு எழுத்துக்களிலும் எல்லாவற்றையும் எளிதில் காட்சிப்படுத்தக் கூடியவள்; சென்ற இடமெல்லாம் இயன்ற வரிகளால் பிறரின் இதயம் கவர்ந்து பரிசுகளைக் குவித்து விடுபவள் என்பதால், மறுநாளைக்கான ‘கவிதை தலைப்பு’ அவள் எண்ணத்திற்கே விடப்பட்டிருந்தது.

கவிதை களத்தைச் சிந்தித்தபடி நடந்தவள், தன் தெருவின் மூலையில் அமர்ந்திருந்த ‘யானை முகனை’ தன் பாணியில் ’உதட்டில் கை ஒத்தியெடுத்து’ கும்பிட்டபடி தன் தெருவுக்குள் நுழைந்தாள். சற்று தூரத்தில் கேட்ட பெரும்கூச்சலுக்கு யாழினியின் முகம் தன் வீடிருந்த திசையை ஏறிட்டது. அவளின் வீட்டைச் சுற்றி கூடியிருந்த கூட்டம், அங்கு பெரிதாக விபரீதம் நடந்திருப்பதை உணர்த்தியது. அவள் இதயத்தின் துடிப்பு வெளியில் கேட்பதாக உணர்ந்தபோது, கால்கள் தன்னிச்சையாக ஓட ஆரம்பித்திருந்தன. ஓட்டம் முடியும் வரை தன் அம்மாவைப் பற்றிய சிந்தனைகளையே மனத்தில் மிகுத்து ஓடவிட்டிருந்தாள்.

வீட்டை நெருங்கியவள், பக்கத்து வீட்டு மீனா அக்காவின் அம்மா தலையில் அடித்து அழுவதைப் பார்த்துப் பொறுக்க மாட்டாமல் வாய்விட்டு கத்தியே விட்டாள்.

”அம்ம்ம்ம்மா… அம்ம்ம்ம்ம்ம்மா…!” அந்த வார்த்தைக்குள் அளவிட முடியாத வலியும், அழுகையும் பீறிட்டிருந்தது.

கூட்டம் யாழினியை பரிதாபப் பார்வை பார்த்தபடி மெதுமெதுவாக விலகி நின்றது..

மீண்டும் வீறிட்டு “அம்ம்ம்மா..” என கத்திக் கொண்டே மிச்சமிருந்த கூட்டத்தை விலக்குவதற்குள்,

”யாழ்ழ்ழ்ழ்ழ்ழே..” என்றபடி அவளின் அம்மா ‘கீதா’ அங்கிருந்தவர்களைக் கிழித்துக்கொண்டு வெளிவந்தார்.

கண்களில் வழிந்த கண்ணீரைக் கைகளில் தோய்த்தவாறே தன் தாயைக் கண்டவள், மீண்டும் ஆனந்தக் கண்ணீரை வடித்தபடி அவளின் தாயை முந்தானையோடு இறுக்கக் கட்டி அணைத்துக் கொண்டு விசும்பி அழலானாள். கொஞ்சம் தேற்றி நிம்மதி பெருமூச்சை விட்டு முடிப்பதற்குள் அவள் கண்ட அடுத்த காட்சி, அவளின் ‘இதயத்துடிப்பை’ பலமடங்கு எகிறச் செய்திருந்தது.

“அது மீனா அக்காவேதான்..” என்பதை மனத்தில் பலமுறை வெறுமனே சொல்லிக் கொண்டவள், தன் தாயின் பிடியிலிருந்து விலகி மீனாவின் அருகில் செல்ல வலுகொண்டு எத்தனித்தாள். அவளது கைகளை இறுக்கிப் பிடித்திருந்த கீதா, “இதையெல்லாம் பார்க்காத யாழ்ழ்ழ்ழு.. உள்ள போம்மா..” எனப் பொருமிக் கொண்டே தன் சீலையால் யாழினியின் முகத்தில் முடிந்தமட்டும் திரையிட முயன்றாள்; முடியவில்லை.

அங்கு திண்ணையாகப் பரவியிருந்த கல் மீது கட்டைபோல சாய்த்து வைக்கப்பட்ட மீனாவின் உடல், தீயால் வெந்து முழுக்கச் சிவந்து கொப்புளித்திருந்தது. இரு கைகளிலும் ஓரமாய் சுருண்டு கறுத்து தொங்கியபடி இருந்தது நிச்சயம் அவளின் கைத்தோல்கள் தான் என உறுதிப்படுத்திய யாழினி, அம்மாவின் கட்டுப்பாட்டிற்குள் இருந்த தன் கையை உதறிவிட்டு மீனாவை நெருங்கியபோது, கீதா அவளைத் தடுத்திருக்கவில்லை.

மீனாவின் வாய் குவிந்து, சுவாசக் காற்றை வேகவேகமாய் உள்ளிழுத்து சிரமத்தோடு வெளிவிட்டுக் கொண்டிருந்தது; வெப்பம் தாளாத அவளின் முனகலாகக் கூட அது இருக்கலாம். கண்கள் மூடியவாறு இருக்க தீ போர்த்திய முழுத் தடத்தை அவளது இமையிரண்டும் சுமந்திருந்தது; கண்ணீர் அதில் இடைவிடாது சுரந்திருந்தது. அவள் கட்டிய ‘பாலிஸ்டர்’ சேலையின் சில பாகங்கள் அவளது உடலோடு ஒட்டி அப்பியிருந்தது.

“யாழினீ… எம்புள்ளைய நான் இப்பிடியாப் பாக்கணும்.. அய்யோ! என் தெய்வமே..” என கத்திக் கொண்டே யாழினியை ஓடிவந்து கட்டியணைத்து கதறியழுதாள், மீனாவின் அம்மா பரிமளம். அந்த மனம் மீனாவை விட பெரிதாய் ரணப்பட்டிருந்தது; மீனாவிற்கு நிகரான வெப்பத்தை ஏந்தியிருந்தது. கட்டுப்படுத்த முடியாத துக்கத்தால் கூட்டமே கண்ணீர் சிந்திய கணத்தில், யாழினியும் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள்.

தூரத்தில் ‘ஆம்புலன்ஸ்’ வரும் சத்தம் கேட்டு மீனாவை மெதுவாகத் தொட்டு தூக்கி வைக்க சிலர் தயாராயிருந்தனர். “அக்கா நீ நல்லாயிடுவக்கா.. நாங்க இருக்கோம்க்கா.. எதுக்கும் கலங்காதீங்கக்கா..” எனப் பதறியவாறே மீனா காதில் விழுமளவில் கத்தினாள் யாழினி. மீனாவின் உடலில் சிறு அசைவு…. வீட்டின் வெளிப்புற ஓரமாய் அழுதுக் கொண்டிருந்த மீனாவின் குழந்தைகளை மீனா சுட்டிக் காட்டுவது போல இருந்தது. யாழினி புரிந்துக் கொண்டவளாய், “நான் அவங்களைப் பத்திரமா பாத்துக்குறேன்க்கா.. நீங்க சீக்கிரமா திரும்பி வாங்க..” அப்போதும் யாழினி அழுவதை நிறுத்தியிருக்கவில்லை.

“பிள்ளைங்கள அனாதையா விட்டுட்டுப் போய்டாதடீ.. மீனா..” என பரிமளத்தின் கதறல் ஓங்கி ஒலித்தப்போது ‘ஆம்புலன்ஸ்’ அவ்விடத்தை விட்டுக் கிளம்பியிருந்தது. ‘அனுதாப’ வார்த்தைகள் பேசி கூட்டம் கலைந்துச் செல்ல, பரிமளம் மீனாவின் குழந்தைகளை அழைத்துச் செல்ல ஆயத்தமானாள்.

“அம்மா அந்தக் கொழந்தைங்கள நாமலே இப்போதைக்கு பார்த்துக்கலாம்.. போய் கேளுமா..” என்ற யாழினியின் நல்ல மனசு யாருக்குத்தான் வரும்.. மனம் முழுக்க பேரன்பு நிறைந்தவள்.. “நம்மகிட்ட ஏதுமா வசதி?.. நம்மள விட அவங்க நல்லாப் பாத்துக்குவாங்க.. நீ எதையும் நினைக்காம உள்ள வா..” என மூக்கைச் சிந்தி வெளியே உதறிவிட்டு உள்ளே சென்றாள் கீதா.

யாழினிக்கு தன் வீட்டுநிலை தெரிந்தாலும், அந்தக் குழந்தைகளை விடுவதற்கு மனமில்லை.. சமயோசிதமாய், பேனா டப்பாவுக்குள் சேர்த்து வைத்த இரண்டு ஐந்து ரூபாய் தாள்களை எடுத்து பரிமளத்தின் கைகளில் வலுக்கட்டாயமாக திணித்து விட்டு, குழந்தைகளின் முகத்தைக் கூட பார்க்க சகியாமல் வீட்டிற்குள் ஓடி கதவைச் சாத்திக் கொண்டாள். என்ன நினைத்தாலோ தெரியவில்லை.? ஓலம் ஓவென ஓங்கியிருந்தது.

அன்றிரவெல்லாம் தன் தாயிடம் நடந்ததைக் கேட்டறிய தன் மெளனத்தை மெல்லமாய் கலைத்தாள் யாழினி.. “எல்லாம் நமக்கிருக்கிற அதே கடன் பிரச்சனை தான் பாப்பா.. உங்கொப்பன் நம்மல ஏமாத்தி ஊர் சுத்துனாலும், நைட்டுக்கு பூனையாட்டம் வந்து வீட்டுக்குள்ள இருந்துட்டு, பகல்ல மறுபடியும் ஊர் சுத்த போயிடுறான். ஆனா அவ புருஷன் எங்க போனான்னே இவ்ளோ நாளா தெரியலயேமா…. இதைச் சாதகமா வெச்சுட்டு, எவன் எவனோ வந்து அவளை நாக்கூசாம பேசிட்டு போறானுங்க.. அவ புள்ளைப்பூச்சிடீ.. என்னை மாதிரி எத்தனை நாளைக்குத் தான் தாங்கிட்டுப் பொறுத்துப்பா.. நம்மலவிட ரொம்ப பாவம்டீ அவ..” என்றவாறே அவளின் நிலையையும் எண்ணி, உள்ளுக்குள் கண்ணீர் வடித்துக் கொண்டாள் கீதா. அம்மாவைத் தேற்றியபடியே உறங்கிப் போன யாழினி, மறுநாள் பள்ளிக்குச் சாப்பிடாமல் கிளம்பியிருந்தாள்.

நேரங்கள் காற்றை விட வேகமாய்க் கடந்திருக்க, யாழினி ஆண்டு விழாக்கான கவிதை வாசிக்க வேண்டிய தருணம் வந்தது. ”கலை நிகழ்வின் முதல் நிகழ்வாக, கவிதை வாசித்தல்.. நம் பள்ளியின் ஆகச் சிறந்த கவிதாயினி – ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி அ.யாழினி அவர்களை மேடைக்கு அழைக்கிறோம்..” என ‘மைக்’கில் அவள் பெயர் வாசித்தப் பின்னரே, அவள் தன் சுய நினைவை எட்டியிருந்தாள்.. மனம் முழுக்க ரணங்களைப் பார்த்த வலியோடு  மேடைக்குச் சென்றவள், அமைதியாய் ஒருநிமிடம் நின்று நடந்ததை மனத்தில் இருத்திக் கொண்டாள்.. முகம் முழுக்க கவலை பூசியிருந்தாள்.. கையில் குறிப்புச் சீட்டெதுவும் இல்லை.. அரங்கம் அவளை ஒரு எதிர்பார்ப்போடு பார்ப்பதை உணர்ந்தவள், உள்ளத்தின் வேதனையைக் கூட்டி கவிதையைத் தலைப்பின்றி நேரடியாகத் தொடங்கினாள்.

“சிறகொடிந்த பட்டாம்பூச்சி கண்ணீர் சிந்தப் பார்த்தேனே..!”

வரிகளை அவள் நிறுத்தி நிறுத்தி உணர்வு கலந்து வாசிக்க, அமைதியாய் இருந்தக் கூட்டம் பேரமைதி பூண்டது.. அந்த செருமியக் குரலின் சீற்றத்தை அங்கிருந்த எவரும் எதிர்பார்த்திருக்கவில்லை.

“சின்னஞ்சிறிய கூடு ஒன்னு செதஞ்சிப்போகப் பார்த்தேனே..!”

முடிவாகிவிட்டது.. அவள் கண்களைத் துடைத்துக்கொண்டு அழுதவாறே கவிதை வாசிக்கலானாள்.. அவளின் கண்ணீரைக் கண்ட கூட்டத்தினரிடையே படபடப்பும் சலசலப்பும் மிகுந்திருந்தது.

“அம்மாப்பூச்சு கொல்லிவச்சு குறுகிப்போவப் பார்த்தேனே..!”

“உசுறமட்டும் தேக்கிவச்சு உருவம்அழியப் பார்த்தேனே..!”

அங்கிருந்தோரின் உடல் அதிர்ந்து உள்ளம் உடைந்து சில்லுகளாய் நொறுங்கிப் போனது.. பெரும்பாலானோரின் கண்கள் ‘குளம்’ போல மாறின.. யாருடைய உணர்ச்சியையும் கட்டுப்படுத்த முடியாத வண்ணம், யாழினியின் அழுகுரல் வார்த்தைகள் வளர்ந்திருந்தது. அதன்பின் சற்று இடைவெளிவிட்டு அவளை அவளே தேற்றியவாறு,

“உள்ளமட்டும் உதவி செஞ்ச உள்ளங்களைப் பார்த்தேனே..!”

“பொழைக்கவச்சு புரியவச்சுப் போன வழியப் பார்த்தேனே..!”

கவிதையோடு குரலும், குரலோடு சூழலும் மாறி மக்களிடம் நிம்மதி நிலவத் தொடங்கியது.. சிலர் அப்போதுதான் தன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்தனர்.. யாழினி தொடர்ந்தாள்.

“ரணத்தையெல்லாம் ஒதுக்கிவச்சு ஒசரம் ஒசரம் பறந்துச்சாம்..!”

”நம்பிக்கையோட வாழ்ந்துக்காட்டி எடுத்துக்காட்டா இருந்துச்சாம்..!”

என யாழினி சொல்லி முடிப்பதற்குள் அரங்கம் முழுக்க இருந்த மக்கள் தம் விழித்துளிகளோடு கைத்தட்டல்களையும் பரிசாக்க, அந்த வரிசையில் தலைமையாசிரியரோடு, தமிழாசிரியையும் கலந்திருந்தார்.

– கதைப் படிக்கலாம் – 68

Exit mobile version