தடை செய்யப்பட்ட பகுதி (எதிர்காலம்)

– ஆன்ம ஒளி ஜாகிர் உசேன்

புரோகிராம் லோடிங்…  என்று வர, கருவியின் மேல் பாகத்தின் செய்தியை டைப் செய்துக் கொண்டிருந்தேன்.

மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்! எதிர்காலம் உங்கள் கையில்… அடுத்தச் சந்ததியின் வாழ்க்கை சாவி உங்களிடம் உள்ளது… இயற்கையை காத்து, நாளைய சமுதாயத்திற்கு அதை விட்டு வையுங்கள். நம் தேவைக்கு அதிகமான உபயோகம் அடுத்த தலைமுறையின் உரிமை திருட்டாகும்.

நீர், நிலம், காற்று, உணவு… இவை மனித வாழ்க்கையின்  அத்தியாவசியமாகும். இதைப் பாதுகாப்பது, அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பது, பேணிக் காப்பது எப்படி என எடுத்துரைப்பது முன்னோர்களாகிய உங்கள் கடமை. அதை தவற விட்டால், அதன் விளைவு, எங்கள் எதிர்கால அழிவு. திருத்திக் கொள்ளுங்கள்… உங்கள் முன்னோர்கள் விட்டுச்சென்ற இயற்கையை நாளைய தலைமுறையான  எங்களுக்கு… உங்கள் கடமை என டைப் செய்ய, அம்மா குரல் ஒலித்தது.

அரவிந்த் மணி ஆயிடுச்சு. ஸ்டேஷன்ல லைட்டாக இடம் வந்து சாப்பிடு என்றார். கூடாரத்தில் மாட்டியிருந்த கடிகாரத்தைப் பார்த்தேன்.  

இரவு 10: 49… நாள் 27.7.2145…

நாளை முக்கியமான நாள் சீக்கிரமா  தூங்கு என்று அம்மா கூற, அப்படியே அந்த மெசேஜை சேவ் செய்து, சாப்பாட்டு மாத்திரையை எடுத்துத்  தண்ணீர் பாக்கெட்டைத் தேடினேன்.

டேபிளில் இரண்டு  50 ml  பாக்கெட் மட்டும் தான் இருந்தது. அம்மா தண்ணி பாக்கெட் ரெண்டு தான் இருக்கு எனக்  கூற,  நீ ஒன்னும் எடுத்துக்கோப்பா. நைட்டு அப்பாவுக்கு ஒன்னு போதும். ஒரு நாளைக்கு 100 ml பாக்கெட் வாங்கலாம் எனக் கூறினார். அந்த பாக்கெட்டை ஒன்றை குடித்துவிட்டு, அப்பாவின் அருகே வந்து படுத்தேன். பொழுது விடிந்தது. காலை ஆறு மணி. புற ஊதாக் கதிரை பாரபட்சமில்லாமல் அள்ளி இறைத்தது.

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அரவிந்த் குட்டி. என அம்மா ஆசையோடு என் அருகே வந்தார். தூக்கம் கலையாதவனாய் அம்மாவை கட்டிப்பிடித்தேன். கையில் மறைத்து வைத்திருந்த கலர் ஜரிகை சுற்றிய பரிசை என் கையில் தந்தார். ஓ.கே. டா செல்லம் சீக்கிரம் ரெடி ஆகு. வேலைக்குப் போகணும் சொல்ல, ஒரு அபாய மணி ஒலித்தது.

கூடாரத்தை விட்டு வெளியே வந்தேன். எங்கள் பகுதியிலுள்ள கூடாரங்களில் ஆங்காங்கே நெருப்புப் பரவ, அவசர பறக்கும்தட்டு அங்கும் இங்கும் அலைமோதிக் கொண்டிருந்தது.

எல்லோரும் கவனமா கேளுங்க! இன்னும் கொஞ்ச நேரத்துல என்னிடம் உள்ளதே விஷமாகிப் பரவப்போகுது. அதனால உங்க கூடாரத்தை காலி பண்ணிட்டு சென்னை 3791Z போர்ட் பகுதிக்கு போயிடுங்க… எனப் பறக்கும்  தட்டிலிருந்து அறிவிப்பு வர,
நாங்கள் ஆக்சிஜன் உடையணிந்து ஆயத்தமானோம்.

தேவையான சாப்பாட்டு மாத்திரைகள், ஆக்சிஜன் பாட்டில்கள் என  அனைத்தும் 10 நிமிடத்தில் ரெடி. போற இடத்துல கிடைக்க எத்தனை நாள் ஆகுமோ என எங்களை தயார்படுத்திக் கொண்டோம். கூடாரத்தை விட்டு வெளியே வந்தோம்.

10619P என்ற பறக்கும் தட்டு எங்கள் முன் வந்து நிற்க… அதில் ஏறி நான் உள்ளே சென்று, என் நண்பன் கார்த்தி அமர்ந்திருக்க அவன் அருகே அமர்ந்துக் கொண்டேன்.

அம்மா, அப்பா அருகில் அமர்த்தினேன். தட்டுகள் கதவுகள் மூட பழக்க தொடங்கியது. கண்ணாடி வழியே என் கண்ணை நோக்கிப் பார்க்க, எங்கும் விஷ வாயுவால் கூடாரங்கள் எறிய.. பாலித்தீன் குப்பைகளால் உருவான ராட்சச உடல் போல காட்சியளித்தது.

நரகத்தின் வாயில்கள் திறந்துவிட்டதோ? என்று அந்த நெருப்பு என் கண்களில் காட்சிகளைப் பற்ற வைத்தது. விழிமூடி அதன்  தாக்கத்தைத் தடுத்தவனாய், அக்காட்சியில் இருந்து விடுபட்டு சென்ற அரைமணி நேரம் புகை மண்டலத்தில் ஒரு பயணம்.

சென்னை 3791Z  போர்ட் பகுதியை அடைந்தது தட்டு. மெல்ல கதவு திறக்க, வெளியே நடந்து வந்தோம்.

டேய் மச்சான்! அங்கப் பாருடா தேர்தல் அறிக்கை விட்டுட்டாங்க என்று கார்த்தி கூற…மின்விளக்கு காட்சிக் பலகையில் அந்த வசனங்கள் ஓடிக் கொண்டிருந்தன. மரம் வளர்ப்போம்! மழை பெறுவோம்!  என்ற வாசகத்தோடு அந்தத் தேர்தல் அறிக்கை பட்டியல் அனைவர் கண்ணில் தொற்றிக்கொண்டது.

1)அனைவருக்கும் ஒரு லிட்டர் இலவச குடிநீர் வழங்கப்படும்.

2) மாதந்தோறும் மலிவு விலையில் சாப்பாடு மாத்திரைகள் வழங்கப்படும்.

3) வீடுகள் தோறும் இரண்டு மணி நேரம் அதிகமாக மின்சாரம் லைட் ஸ்டேஷனிலிருந்து வழங்க வழிவகை செய்யப்படும்.

4) முககவசம், ஆக்சிஜன் உடை, நோய் எதிர்ப்பு மாத்திரைகள் வழங்கப்படும்.

5) அனைவருக்கும் இலவச பறக்கும்தட்டு பாஸ் வழங்க மத்திய அரசிடம் கோரிக்கை வைக்கப்படும்.

6) இலவச கூடாரம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்க வழிவகை செய்யப்படும்.

7) சுத்தமான ஆக்ஸிஜன் பாட்டில்கள் 50 சதவீதம் மானியத்துடன் வழங்கப்படும்.

என அறிக்கைகளை தெளித்த வண்ணம் இருக்க… அவற்றின் கண்களில் ஏற்றியபடி போர்ட் வாசலை நோக்கி நடந்தேன். இரு இயந்திர கைகள் எங்கள் மீது சுத்திகரிப்பு நீரை தெளித்து உள்ளே அனுப்பியது. நுழைவாயில் அதிகாரி எங்களை வரிசையில் நிறுத்தி பரிசோதித்து எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்திற்கான  கூடாரத்தைக் கொடுத்தார்.

சார் ஒரு ரெண்டாயிரம் ரூபாய்  எக்ஸ்ட்ரா கொடுத்தால், ஒரு எமர்ஜென்சி லைட் 100 ml தண்ணீர் பாக்கெட், வரி  இல்லாமல் இலவசம் என சொல்ல… என் தந்தை அதைப் பெற்றுக் கொண்டார். 

பாலித்தீன் சாலைகள் வழியே எங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தை அடைந்து கூடாரத்தைக் கட்டினோம்.

புதிதாக ஏற்பாடு செய்யப்பட்ட இடமாக இருக்கும் போல, பாலித்தீன் பைகள்  பணிவை மேற்கொள்ளாமல் தலையை தூக்கி நின்றுக் கொண்டிருந்தது. ஆங்காங்கே நாளுக்கு ஒரு நூறு மிதிகள் வாங்கினால் மடங்கிப் போகும்.

நான் கார்த்தியுடன் புதிய இடத்தை சுற்றிப் பார்ப்பதாக அம்மாவிடம் கூறி கிளம்பினேன். கால் வைத்த இடமெல்லாம் கண்ணாடி துகள்களும், பிளாஸ்டிக் குப்பைகள் ஆன சாலைகளே காண முடிந்தது. 

டேய் அரவிந்த் என்னோட ஆக்சிஜன் டப்பாவுல 29 சதவீதம் தான் இருக்கு. இங்கே எங்க இருக்கான்னு பாரு எனக்கூற, நான் சுற்றி முற்றி பார்த்தேன். கண்ணில் ஏதும் தென்படவில்லை. இருவரும் போர்ட் நுழைவாயில் அலுவலகம் சென்றோம். அங்கு இருந்த போர்ட்  ஸ்டேஷன் சுற்றுவரைபடம் இருந்த ஃபோட்டோவை என் மொபைலில் ஏற்றிக்கொண்டேன். ஃபோன் திசைகாட்டி மூலம் 3791Z போர்ட் ஸ்டேசன் ஆக்சிஜன் பங்க் உங்களை அன்புடன்  வரவேற்கிறது பலகையின் முன் போய் நின்றோம்.

நீண்ட வரிசை கூட்டத்தில் நாங்கள் ஒவ்வொருவராக தங்கள் அடையாள அட்டை ஸ்கேன் செய்து, ஆக்சிஜன் நிரப்பிக் கொண்டிருந்தோம். கார்த்தி ஆக்சிஜனை நிரப்பினான். டேய் நீயும் ஃபுல் பண்ணிக்கடா என என்னிடம் கூறினான். சரி டா என நான் காலை நீட்டினேன். இன்றுடன் உங்களுக்கு 25 வயது பூர்த்தியாகி விட்டதால், நீங்கள் அதிகபட்சமாக 200 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்  என இயந்திரத்தில் இருந்து ஒரு குரல் ஒலிக்க, நான் சரி என்ற பட்டனை அழுத்தினேன். ஆக்சிஜன் நிரப்பப்பட்டது.

செல்ஃபோன் ஒலித்தது. அம்மா அழைத்தார்கள். அரவிந்த் கண்ணா வரும்போது தண்ணீர் பாக்கெட் வாங்கிட்டு வா என்றார். நாங்கள்  மொபைலை பார்த்துக்கொண்டு வாட்டர் ஸ்டோர் நோக்கி நடந்தோம்.

ஆராய்ச்சி எதுவரைக்கும் இருக்கு என கார்த்தி கேட்க, அதுவாடா! ஒரு 80% முடிஞ்சிருச்சு. மீதி தான் என்ன பண்றதுன்னு ஒரே குழப்பமா இருக்கு. இப்ப ரெடி பண்ணி இருக்க கருவிக்கு அதிக பவர் சப்ளை தேவைப்படுது. அது மட்டுமில்லாமல், எந்த வருஷத்துல… யாருக்கு இந்த மெசேஜ் அனுப்புறது தெரியல.

ஒண்ணும் கவலைப்படாதடா. எங்க அப்பாட்ட சொல்லி ஒரு பவர் பாக்ஸ் ரெடி பண்ணி தரேன். அது உனக்கு யூஸ்புல்லா இருக்கும் என்றான் கார்த்தி. ரொம்ப தேங்க்ஸ் டா எனக்கூற, உன்னுடைய பர்த்டே கிஃப்ட்டா… கார்த்திக் கூறினான்.

நாங்கள் பேசிக்கொண்டே நடந்து வந்துக் கொண்டிருக்கையில், எங்கள் எதிரே ஒரு பெண்மணி தண்ணீர் பாக்கெட்டுகள் எடுத்துக் கொண்டிருந்தார். காலம் மாறினாலும் இவர்கள் நிலை மாறாதுபோல என நினைத்து, ஒரு 50 ml தண்ணீர் பாக்கெட்டை அவளிடம் கொடுத்து விட்டு, கூடாரம் நோக்கி நடந்தேன்.

அம்மாவிடம் மீதி பாக்கெட் நீரை கொடுத்துவிட்டு, என் கண்டுபிடிப்பை மீண்டும் வடிவமைத்துக் கொண்டு, அதிலுள்ள ஏற்கனவே சேவ் செய்த பக்கத்தில் சென்று வார்த்தைகளை பதிக்க ஆரம்பித்தேன்.

காலங்கள் மாறினாலும் ஏழையின் கவலை மாறவில்லை. ஏழ்மை என்ற நோய் ஏழைகளை இன்னும் தாக்கிக் கொண்டுதான் உள்ளது. நாளைய தலைமுறையாவது இந்த நோயிலிருந்து விடுபடட்டும்.

இருப்பவர்கள் இல்லாதவர்களுக்கு உதவி  செய்யுங்கள். அன்பை விதையுங்கள். மனிதநேயத்தை போற்றுங்கள். எங்கள் வாழ்க்கையில் ஒளி ஏற்றுங்கள். இப்படிக்கு உங்கள் நாளைய  தலைமுறையிலிருந்து அரவிந்த்.

என் உரையை  முடித்தேன். மணி 9 ஆக சாப்பாடு மாத்திரை போட்டுக்கொண்டு போர்வைக்குள் ஐக்கியமானேன். அம்மாவின் பரிசு ஞாபகம் வர, பையிலிருந்து அதை எடுத்துப் பிரித்தேன்.

என்ன ஒரு அற்புதம்… யாருக்கும் கிடைக்காத பொக்கிஷம்… காகிதத்தால் ஆன புத்தகமொன்று இருக்க, நிழல் பிம்பங்கள் என்ற தலைப்புடன் புத்தகத்தில் நுழைந்தேன்.

11 கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு செல்ஃபோன்களில். கதை முழுவதும் என் மூளையில் பதிய வைத்துக் கொண்டிருந்தேன். பொழுது விடிந்தது.

கார்த்தி குரல் வெளியே ஒலிக்க கூடாரத்தின் கதவைத் திறந்து உள்ளே அனுமதிக்க. இந்தாடா அரவிந்த் நீ கேட்ட பவர் பாக்ஸ் என நீட்டினான். அந்தப் பவர் ஃபாக்ஸ்-ஐ என் கருவியில் இணைக்க ஆயத்தமானேன். அருகில் இருந்த அந்தப் புத்தகம் கார்த்தியின் கையில் கிடைக்க… டேய் இது என்னடா ஆச்சரியமா இருக்கு என கேட்டான்.

அதற்கு அம்மா, உங்க  காலத்துல தான் இது ஆச்சரியம். எங்கக் காலத்தில் இது ஒரு சாதாரண காகிதம்.  அப்போ பொழுது போகலைன்னா மரங்களை வெட்டி திரிந்தார்கள். இப்ப பொலப்பாவே மரங்களை வளர்க்க நினைச்சாலும் முடியல எனக் கூறிவிட்டு, அம்மா வேலைக்குச் சென்றார்.

இயற்கையின் மதிப்பை அறியாதவர்களுக்குச் சரியான தண்டனை வழங்கப்பட்டிருந்தால், நாங்கள் இந்த நிலை அடைந்திருக்கமாட்டோம் என்று என் மனதில் நினைத்தவாறு, கருவியின் ஒயர்களை சேர்த்துக் கொண்டிருந்தேன்.

கருவி தயாரானது progress completed.

அனுப்ப வேண்டிய முகவரி உள்ளிடுக எனக் கேட்க… என் விழிகள் புத்தகத்தின் வழியே பாய்ந்தது. புத்தக வெளியீடு 2005 புத்தக தேவைக்கு தொடர்புக்கு :sanjeevidoss@gmail.com என்று குறிப்பிட… அதை  என் கருவியில் பதிவேற்றி தகவலை அனுப்பினேன். messge sending…… 

– கதைப் படிக்கலாம் – 102

இதையும் படியுங்கள் : கனவு நனவாகுமா?

Exit mobile version