“சண்முகா கேட்டரிங் சர்வீஸ்”

–  ச. பிரவீன்

காலையில் எட்டு மணிக்கெல்லாம் வெயில் சுளீரென்று அடித்தது. பஸ் ஸ்டாப்பில் சரியான கூட்டம். இன்றைக்கென்று பார்த்து முகூர்த்த நாள் வேறு. கடந்துப் போன பஸ்களில் எல்லாம் கூட்டம் பிதுங்கி வழிந்தது. பஸ்ஸிற்காக என்னோடு சேர்த்து, ஏறக்குறைய ஒரு முப்பது நாற்பது பேர் காத்திருந்தனர். அநேகமாக அங்கிருந்தவர்களில் முக்கால்வாசி பேர்கள் சுபகாரியத்திற்கு செல்வதாக இருக்க வேண்டும்.

வீட்டில் மனைவியின் நச்சரிப்பு தாங்காமல் தப்பித்து, தான் கட்டியிருந்த ‘ஒட்டிக்கோ கட்டிக்கோ’ வேட்டி எங்கே அவிழ்ந்து விடுமோ என்ற அச்சத்தில் கணவன்மார்கள்….. தான் கட்டியிருப்பதை விட அருகில் நிற்கும் பெண்ணின் புடவையின் பார்டர் அழகாகத் தெரிகிறதே என்று பட்டுப்புடவையை ‘உற்று உற்று’ பார்க்கும் மனைவிமார்கள்….. ஃபர்ஸ்ட் பீரியர்டில் மேக்ஸ் மிஸ் டெஸ்ட் வைப்பதாக சொல்லியிருந்த நிலையில், ஸ்கூல் லீவ் போட்டதில் பரம நிம்மதியுடன் இருக்கும் சிறுவர்கள்….. என உள்ளிருக்கும் பல சிந்தனைகளோடு, அடுத்து வரும் பஸ்ஸிற்காகக் காத்திருக்கும் வெவ்வேறு முகங்கள்.

பஸ்  ஏதாவது வருகிறதா என்று எதேர்ச்சியாக அந்தப் பக்கம்

திரும்பிப் பார்த்தேன். சட்டென்று ஒரு பெண்ணின் முகம் கண்ணில் பட்டது. கல்லூரியில் படிக்கும் வயது தான், நடுத்தர  உயரம், ஒல்லியான தேகம், வட்ட முகம், அதில் சிறகடிக்கும் கண்கள், அளவான மூக்கு, நெற்றியில் அடிப்பட்ட காயத்தின் சின்ன தழும்பு, கண்மை தவிர அலட்டிக்கொள்ளாத அலங்காரம், நடுவில் வாக்கெடுத்து நேர்த்தியாக பிண்ணப்பட்ட கூந்தல். அன்றுதான் முதன்முதலாக தாவணி அணிந்திருப்பாள் போல, தன் ரோஸ் கலர் பட்டுத்தாவணியை அவள் ஒருவித தயக்கத்துடன் பிடித்துக்கொண்டே இருந்தாள். அந்த இளமஞ்சள் வெயிலில் அவளது முகம் பிராகசமாகத் தெரிந்தது. முகத்தில் எப்போதும் ஒரு புன்னகை வேறு. அவள் அம்மாவும் அவளும் கூட்டத்தின் ஓரமாக நின்றிருந்தனர்.

எனக்கு  அவளை இதற்கு முன்  எங்கோ பார்த்தது போன்ற ஒரு உணர்வு. அழகான பெண்ணைப் பார்த்ததும், என்னைப் போன்ற சுமாரான பையன் சொல்லும் முதல்  வார்த்தை இதுவாகத்தான் இருக்கும். ஆனால் உண்மையில் ஏற்கனவே தெரிந்த ஒரு நெருக்கமான உணர்வு எனக்கு  இருந்தது.

அவள் அடிக்கடி தன் பேச்சைக் கேட்காமல் முகத்தில் விழும்  ‘அந்த’ ஒற்றைக் கூந்தலை அனிச்சையாக ஒழுங்கு செய்யும்போது, நான் பார்ப்பதைக் கவனித்து விட்டாள். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. சட்டென்று முகத்தை வேறுபக்கம் திருப்பி கொண்டேன்.

சிறிது நேரம் கழித்து அவள் பார்க்கிறாளா என்ற ஏக்கத்தோடு தலையைத் திருப்பாமல் ஓரக்கண்ணில் நோட்டம் விட்டேன். அவள் அம்மாவின் பின்னால் நின்று கொண்டு அடிக்கடி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கோ வெட்கம் பிடுங்கி தின்றது. அவளுக்கு நான் கல்யாணத்திற்கு கேட்டரிங் வேலை செய்யப்போகிறேன் என்று  தெரிந்தால், இப்படிப் பார்க்க மாட்டாள்.

காலேஜ் தேர்ட் இயர் படிக்கும் எனக்கு எதற்கு இந்த கேட்டரிங் வேலையெல்லாம் என்றால், ஆவரேஜாக படிக்கும் நான் அரியர் வைக்கக்கூடாது என்று நினைக்கும் நல்ல பையன். ஆனால் அரியர் வைத்தால் அதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாத கெட்ட பையன். அதனாலேயே என்னுடைய செமஸ்டர் மார்க்ஸ் பாஸ் மார்க்கிற்கு கீழேயே இருக்கும். ஆக மொத்தம் பதினொரு இடத்தில் சிகப்புக் கோடுகளோடு என் செமஸ்டர் மார்க் ஷீட் லாஸ்ட் பென்ச்சின் அடியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பத்திரமாக இருக்கிறது. ஒரு பேப்பருக்கு இருநூறு ரூபாய் என்றாலும், இரண்டாயிரத்து இருநூறு ரூபாய் வேண்டும். காலேஜ் தேர்ட் இயர் படிக்கும் எனக்கு அவ்வளவு பணம் ஏது…. ஆக இதுபோன்ற ஏதாவது ஒரு வேலையை செய்து பரீட்சைக்கு அப்ளை பண்ணிப் பாஸ் ஆகப் போராடிக்கொண்டிருக்கும் ஒரு சராசரி கல்லூரி மாணவன் ‘நான்’.

’12ஏ’ என்று போட்டு வைத்த டவுன் பஸ் ஒன்று ‘பேம்ம்….. பேம்ம்..’ என்ற ஹாரன் சத்தத்துடன் ‘என் வயிற்றில் இதற்கு மேல் இடமில்லை; உன்னால் முடிந்தால் ஏறிக்கொள்’ என்ற இறுமாப்பில் படியில் பிதுங்கி நிற்கும் பயணிகளுடன் வந்து நின்றது.

“படியில நிக்கிற ஆள்லா எறங்கி ஏறுங்கப்பா… டிக்கெட்.. டிக்கெட்…”  கறாராகச் சொன்னார் கண்டக்டர். வேறு வழியின்றி அங்கிருந்தவர்களில் பாதிப்பேர் எப்படியோ அடித்துப் பிடித்து ஏறிவிட்டார்கள். எனக்குக் கடைசி படியில் ஒற்றைக்காலில் நின்றுக்கொள்ளும் அளவுக்கு இடம் கிடைத்தது. அவளும் அவள் அம்மாவும் எப்படியோ ஏறிக்கொண்டனர்.

கூட்டத்தில்  அவள் எங்கே என்று கண்கள் அலைமோதின. அதோ பெண்களின் கூட்ட நெரிசலில் சிக்கி விழித்துக் கொண்டு பரிதாபமாக நின்றாள். அந்த அப்பாவித்தனமான முகம் என்னுள் ஏதோவொரு இனம் புரியாத தாக்கத்தை ஏற்படுத்தியது.

பக்கத்தில் நிற்கும் ஆள் என் காலை வசமாக வைத்து மிதித்து விட்டார். நேரம் ஒன்பதைத் தொட எத்தனித்தது. லேட்டாகப் போனால் சண்முகம் மாஸ்டர் திட்டித் தீர்த்துவிடுவார். போனமுறை போல அல்லாமல், இந்த முறையாவது திட்டு வாங்காமல் சீக்கிரமாக போகவேண்டும். பந்தி ஆரம்பித்து விட்டால் அவ்வளவுதான். பஸ் பூமார்க்கெட் தாண்டி போய்கொண்டிருந்தது.

“டிக்கெட்….டிக்கெட்…. படில யார்ப்பா அது….”

“எஸ்.கே.பி. மஹால் ஒன்னுண்ணெ..” என்று சட்டைப்பையில் இருந்த இருபது ரூபாய் நோட்டை, எனக்கு மேல் படியில் நிற்கும் ஆளிடம் கொடுத்து டிக்கெட் எடுத்துக் கொடுக்கச் சொன்னேன்.

“அங்கெல்லாம் வண்டி நிக்காது… தேரடி ஸ்டாப்ல எறங்கிக்க…” என்றார்.

தேரடி ஸ்டாப்பில் வண்டி நிற்குமுன்னே வேகத்தடையில் இறங்கி பாதிதூரம் நடக்க ஆரம்பித்து விட்டேன். அடக்கடவுளே… அவசரத்தில் அவள் இறங்கினாளா என்று பார்க்கவே இல்லை. ஹும்ம்.. அவள் ஏன் இங்கு இறங்கப்போகிறாள். அவள் போகவேண்டிய கல்யாணம் எதுவோ, கண்டிப்பாக நான் போகும் இடமாக இருக்காது. இருக்கவும் கூடாது. இருந்தும் மனதில் ஒரு கலக்கம் இருக்கத்தான் செய்தது.

தேரடி வீதியிலிருந்தே சாலையோரங்களில் பெரிய அளவில் திருமண பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. எத்தனை உயரமான பேனர்கள். அரசியல் கட்சிகள் சார்பில் இருந்தப் பேனர்கள் தான் அதிகம். மறைந்தக் கட்சித் தலைவர்களிலிருந்து ஆரம்பித்து, வாழும் கட்சித் தலைவர்களின் முகங்கள் வரைக்கும் பேனரில் போட்டு, ‘தமிழகத்தின் வருங்காலமே… விடியலே…’ போன்ற அடுக்குமொழி வாழ்த்துக்கள். கீழே சொட்டையும் செம்பட்டையுமாய் கட்சி அல்லக்கைகள். பேனரின் கடைக்கோடி மூலையில் சின்னதாக திருமண தம்பதியரின் முகங்கள்.

நம் நாட்டில் பேனர் விழுந்து இன்னும் எத்தனை பேர் பரிதாபமாக இறந்தாலும் நாம் திருந்தப் போவதில்லை. மாறாக பேனர் விழுந்து இறந்தவருக்கு பேனர் வைத்தே அஞ்சலி செலுத்தும் காலக்கொடுமை.

மண்டபம் வந்தாகிவிட்டது. சண்முகம் அண்ணன் ‘அரக்க பரக்க’ வேலை பார்த்துக்கொண்டிருந்தார். வந்ததும் ‘சண்முகம் கேட்டரிங் சர்வீஸ்’ என்று பிரின்ட் செய்த டி சர்ட்டைப் போட்டுக்கொண்டு, நானும் வேலையில் பரபரப்பானேன்.

கேஸரி, லட்டு, பலவகைப் பொரியல், அவியல், சாப்பாடு, சாம்பார், ரசம், மோர், பாயாசம் பிறகு ஸ்வீட் பீடா, ரோஸ்மில்க், ஐஸ் கிரீம் என்று கல்யாண சாப்பாடு ‘தடபுடலாக’ இருந்தது. டேபிளுக்கு பேப்பர் ரோல் போட்டு வாழையிலை வைக்க, தண்ணீர் பாட்டில் வைக்க, சாப்பாடு பறிமார என்று அந்தந்த வேலைக்கு தனித்தனி ஆட்கள். பந்தியில் ஒரு சின்னக் குழப்பம் கூட இருக்கக்கூடாது. சாப்பிட வருபவர்கள் குறை சொல்ல முடியாத அளவுக்கு உணவும், உபசரிப்பும் நிறைவாக இருக்க வேண்டும். இதில் ஏதாவது சிக்கல் வந்தால் அவ்வளவு தான், சண்முகம் அண்ணன் திட்டித்தள்ளிவிடுவார். சண்முகம் அண்ணன் பேச்சு தான் ரொம்ப கோபமாக இருக்கும். ஆனால் உள்ளுக்குள் மிகவும் நல்லவர்.

வந்திருந்தவர்களில் முக்கால்வாசிபேர் அரசியல்வாதிகள். கரைவேட்டி, தன் கட்சி தலைவரின் முகம் தெரியும்படி சட்டைப்பையில் அட்டைப்படம், தலைவர் முகம் பதித்த பேனா, மோதிரம் என பக்கா ஆடம்பரம். ஒருவரை ஒருவர் பார்க்கும் போது “வாங்கத் தலைவரே… வணக்கம்… சௌரியமா..” என்று உரையாடல் வேறு. ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்..’ என்று பாரதியார் சொன்னதை கடைப்பிடிப்பது அரசியல்வாதிகள் மட்டும்தான். இதில் கல்யாணத்திற்கு எம்.எல்.ஏ வருகிறார் என்றும் சிலர் பேசிக்கொண்டனர்.

பந்திக்கு ஆட்கள் வர ஆரம்பித்து விட்டார்கள்.

அவ்வப்போது ‘அவளது’ நினைவாகவே இருந்தது. சில நேரங்களில் யாரைப் பார்த்தாலும் அவளைப் போலவே இருந்தது. ஹும்… எங்கே போயிருக்கிறாளோ…

“டேய்.. பிரவீனு.. மசமசன்னு நிக்காம வேலைய பார்ரா… “அண்ணன் அதட்ட ஆரம்பித்துவிட்டார்.

“பசங்களா.. நல்லா கேட்டுக்கங்க. வர்ற ஆளெல்லாம் கட்சிக்காரங்க, ஒரு மாதிரியான பயலுக. எம்.எல்.ஏ. வேற வர்றாராமா, பாத்துப் பக்குவமா நடந்துக்கனும் என்னா.. ம்ம்… அப்றம், கேஸரி லட்டெல்லாம் கொஞ்சமா வைங்க. திண்ணிப் பயலுவோ கேட்டுக்கிட்டே இருப்பானுவோ.. தீந்துப் போச்சின்னா, தேவக்காரன் ஏந்தாலிய போட்டு அறுப்பான். சரி சரி… ஆளு வருது பாரு.. அந்த சாம்பார் வாளிய தூக்கி இங்கிட்டு வை..” என்று தோளில் கிடந்த துண்டை எடுத்து முகத்தைத் துடைத்துக்கொண்டு சமையலறைக்குள் சென்றார்.

முதல் பந்தி ஆரம்பமானது. எனக்கு சாம்பார் வாளி தான் கிடைத்தது. வேலை அதிகம். அடிக்கடி சாம்பார் தான் கேட்பார்கள். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என எல்லோரும் குடும்பமாக உட்கார்ந்திருந்தனர். அதில் ஒரு அம்மா என்னை அழைத்து “தம்பி.. வத்தக் குழம்பு இருக்கா” என்றார்.

“இல்லீங்கம்மா.. சாம்பார் தான் இருக்கு” என்றேன்.

“சரி, பாப்பாவுக்கு கேஸரி வேணும்மா.. கொஞ்சம் கேஸரி மட்டும் பாப்பாவுக்கு எடுத்து வர்றியா.. ப்ளீஸ் டா தம்பி” என்று கேட்டார்.

சரி சின்னப்பிள்ளைக்கு தானே என்று எடுத்து வந்தால், அதை எடுத்து அந்தம்மா வைத்துக்கொண்டு “பாப்பா வேஸ்ட் ஆக்கிருவா தம்பி.. அதான்” என்று மொக்கைச் சாக்கு சொன்னார். உள்ளுக்குள் மௌனமாக சிரித்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தேன்.

“தம்பி.. அந்த டேபிளுக்கு சாம்பார் வேணுமாம்.. கவனி” என்றவாறு மணப்பெண்ணின் தந்தை அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டிருந்தார். நான் அந்த டேபிளுக்கு போய் ஊற்றும் முன், அடுத்த டேபிளில் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள்.

நகரத்தில் தான் திருமணம் போன்ற நல்லக் காரியங்களில் சாப்பாடு போடுவதற்கு ‘கேட்டரிங் பாய்ஸ்’ என்று சமையல்காரர்களே சிலரை பணம் கொடுத்து வைத்திருப்பார்கள். ஆனால் கிராமங்களில் உள்ள  வீட்டில் சுபகாரியங்களோ துக்கமோ என்று எதுவாக இருந்தாலும், சாப்பாடு பறிமார பந்தியில் ‘மாமன், மச்சான், அங்காளி, பங்காளி’ என்று குடும்பத்தினரே இருப்பது தான் வழக்கம்.

எங்களைப் போன்ற ‘மூன்றாவது’ மனிதன் பந்தியில் இருந்தால் பெண்வீட்டார்கள் யார், மாப்பிள்ளை வீட்டார்கள் யார், பெண் எடுத்த சொந்தம் யார், பெண் கொடுத்த சொந்தம் யார் என்று எதுவும் தெரியாமல், கேட்டால் பறிமாரி இல்லை என்றால் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவோம். இதுவா திருமணம். இதுவா விருந்து. உப்பு சப்பில்லாத உபசரிப்பு. எங்கே போனதோ ‘அந்தப் பண்பாடு’.

“தம்பி… சாம்பார்”

“ஆங்.. இதோ, வந்துட்டேன்…ண்ணே”

எதிர் டேபிளில் இருந்த இரு ‘பெரும் புள்ளிகள்’ பேசிக்கொண்டன;

“தலைவரே… வணக்கம், வணக்கம். பாத்து ரொம்ப நாளாச்சு…. சௌரியமா?”

“ஆங்.. வணக்கம், தங்கமணி. நலம்… நீ எப்படி இருக்க?”

“ஏதோ, உங்க புன்னியத்துல இருக்கேன் தலைவரே”

“ம்ச்.. இத ஒன்னு சொல்லுங்கய்யா. அப்றம், வேறென்ன விசேஷம்?”

“வேறென்ன தலைவரே, உங்ககிட்ட பேசுனது தான் இன்னக்கி விசேஷம்…”

எனக்குச் சிரிப்பு பொத்துக்கொண்டு வந்தது. இப்படியெல்லாம் பேச இவர்களால் மட்டும் தான் முடியும்.

கல்யாணத்திற்கு எம்.எல்.ஏ. வரப்போகிறார் என்று மண்டபமே பரபரப்பானது. கடைசி நேரத்தில் அவர் தம்பி தான் வந்தார். வேறு வழியில்லாமல், அவருக்கு வாங்கிய மாலைகள், சால்வைகள், பூங்கொத்துகள் என எல்லாம் அவர் தம்பிக்கு போடப்பட்டது. அவர் தம்பிக்கு மட்டும் தனியாக கெஸ்ட் ரூமில் உயர்தர சமையல் விருந்து.

ஏழெட்டு பந்தி முடிந்து விட்டது. ஹும்.. இந்நேரம் அவள் எங்கிருப்பாளோ. வீட்டிற்கே போயிருப்பாள்.

இப்போதுக் கூட அந்த நான்காவது வரிசையில், ஆறாவது டேபிளில் அவளும் அவள் அம்மாவும் உட்கார்ந்து சாப்பிடுவது போன்ற ஒரு பிரம்மை. ஒரு நிமிடம்.. போன முறை அவள் தானே தெரிந்தாள். இப்பொழுது அவள் அம்மா எப்படி வந்தாள். இது நிழலா? நிஜமா? அய்ய்யோ…. நிஜம்தான். கிள்ளிப்பார்க்கத் தேவையே இல்லை. கிள்ளாமலேயே வலிக்கிறதே. அது அவளேதான். அதே முகம். மறக்கக் கூடிய முகமா அது. என்னால் நம்பவே முடியவில்லை.

அவள் இருந்த வரிசையில் முத்து தான் சாம்பார் வாளி வைத்திருந்தான். அதில் ஒரு சிக்கல். வயதுப் பெண்கள் சாப்பிட வந்தால், கேட்டரிங் பையன்கள் எல்லோரும் அந்த டேபிளுக்கு தான் பறிமார ஓடுவார்கள். அதில் பெரிய யுத்தமே நடக்கும். நான் போய் முத்துவிடம் காலில் விழாத குறையாகக் கெஞ்சினேன்.

“டேய் மச்சான்.. ப்ளீஸ் டா. என் லைனுக்கு நீ போடா”

“ம்ச்… அண்ணன் பாத்தார்னா திட்டுவார்றா. நா மாட்டேம்பா..”

“முத்து, என் நெலமைய புரிஞ்சிக்கோடா…”

அவன் சிறிது நேரம் யோசித்து விட்டு சொன்னான், “ம்ம்ம்.. அப்பன்னா. என் பஸ் காசு நீ தான் போட்டுக்கணும், சரியா.”

அவனுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு, அவன் மனம் மாறுவதற்கு முன், வாளியைக் கை மாற்றினேன் .

சாம்பார் வாளியை எடுத்துக் கொண்டு அவள் முன் போக மனம் ஏனோ தயங்கியது. அதற்குள்ளாக அருகில் இருந்தவர்கள் “தம்பி.. சாம்பார்” என்று கூப்பிட அவள் என்னைப் பார்த்துவிட்டாள். தேடிய பொருள் சட்டெனக் கிடைத்த மகிழ்ச்சி அவள் முகத்தில்.

உண்மையில் நான் தேடியது போல அவளும் தேடியிருப்பாளோ. இருக்காது. நான் சாம்பார் ஊற்றி விட்டு அவளைக் கடக்கும் போது என்னைப் பார்த்து புருவத்தை உயர்த்தி ‘என்ன’ என்பது போல சைகை செய்து, வாய்க்குள்ளேயே  சிரித்தாள். எனக்கு உடம்பெல்லாம் புள்ளரிக்க ஆரம்பித்துவிட்டது. அடுத்து ரசம் எடுத்து வந்தவனிடம் போய், அதை வாங்கி ஊற்றி வந்தேன்.

இந்த முறை நான் விடுவதாக இல்லை. அவளுக்கு ரசம் ஊற்றம் போது நானும் புருவத்தை உயர்த்தி, அதோடு விடாமல் கண்ணடித்து விட்டேன். உடனே  சுருங்கிய முகத்துடன், அவள் அம்மாவின் காதில் ஏதோ சொல்ல ஆரம்பித்து விட்டாள். எனக்கோ ‘போச்சே எம்பொளப்பு’ என்று அடி வயிறு கலங்க ஆரம்பித்துவிட்டது. அங்கிருந்து வேகமாக கிளம்பினேன்.

“யேய்…. தம்பி. இங்க வா” என்றாள் அவள் அம்மா.

“போச்சி.. மாட்டிவிட்டுட்டாள்.” என்று நினைத்தவாறு உடல் நடுக்கத்துடன் அருகே சென்றேன்.

“யேம் பொண்ணுக்கு, ரசம் வேணாம்மா. போயி, மோர் எடுத்துட்டு வா..” என்று சொல்லிவிட்டு, என் பதிலுக்கு காத்திராமல் சாப்பிடுவதில் முழு மூச்சில் இறங்கி விட்டாள்.

ஸ்.. ஸப்பா… ஒரு நிமிடம் பதறவைத்து விட்டாள். மோர் எடுத்து வந்து ஊற்றும் போது மீண்டும் புருவத்தை உயர்த்தி கண்ணடித்து ‘சும்மா’ என்று சத்தமில்லாமல் கூறினாள். எனக்கு இன்னும் கூட நடுக்கம் நிற்கவில்லை.

“அம்மா.. டிரெஸ்ல சாம்பார் பட்டிருச்சு. நான் போய் வாஷ் பண்ணிட்டு வரேன்” என்று சொல்லி, என்னைப் பார்த்துவிட்டு எழுந்துப் போனாள்.

“பாத்துப் போ. இல்ல, நா வரவா” என்று எழுந்த அவள் அம்மாவை கையமர்த்தி விட்டு அவள் வாஷ்ரூமிற்கு சென்றாள். இவையெல்லாம் அதுவாகவே நடந்தது போல எனக்குத் தோன்றவில்லை. அதைத் தெரிந்துக் கொள்ள நானும் பின்தொடர்ந்தேன். மோர் வாளியை டேபிளில் வைத்துவிட்டு சென்றேன்.

டிசர்ட்டில் ஒட்டியிருந்த சாம்பார் கறையை எச்சில் தொட்டு துடைத்து கொண்டு, கையால் தலையை சீவிவிட்டு உள்ளே சென்றேன்.

“ஹோய்…”

“என்ன, பயந்துட்டீங்களா…”

“ம்ம்.. லைட்டா. என்ன தெரியுமா உனக்கு?”

“ஓ தெரியுமே. உங்க பேரு ப்ரவீன். காலேஜ் தேர்ட் இயர். மேக்ஸ் டிபார்ட்மெண்ட் பிரசிடென்ட். கரெக்டா…?”

“ஆமா… ஆனா.. இதெல்லாம் உனக்கு எப்படி..?”

“தெரியும்னு கேக்குரீங்களா..? நான் நீங்க படிக்கிற அதே காலேஜ் தான். கெமிஸ்ட்ரி ஃபர்ஸ்ட் இயர். ஜூனியர் பொண்ணு. காலேஜ் கல்ச்சுரல்ஸ்ல நீங்க டான்ஸ் ஆடினதப் பத்தி, எங்க ஹாஸ்டல்ல அடிக்கடிப் பேசுவோம். எங்க க்ளாஸே உங்களோட பிக் ஃபேன். ப்ரவீன் அண்ணான்னா எல்லார்க்கும் தெரியும்”

“ஏது, அண்ணாவா….?”

“இல்ல… யேன் கிளாஸ்ல அப்டி தான் எல்லாரும் சொல்லுவாங்க.”

“அப்போ, நீ எப்டி சொல்லுவ….?

“………ம்ம்……” அதே குறும்பு சிரிப்பு.

“ஆமா. ஒம் பேர் என்ன சொன்னே..”

“பேரா, எதுக்கு…?”

“இல்ல, சும்மா தான்”

“நான் கெளம்புறேன். எங்கம்மா தேடுவாங்க”

“பேர் சொல்லாம போறியே, ஹோய்….”

“நீங்க அப்டியே கூப்பிடுங்க” என்று புன்னகைத்தவாறு சொல்லிக்கொண்டே கிளம்பிவிட்டாள்.

ஏதோ கனவில் நடந்ததுப் போல இருந்தது. எங்கிருந்தோ வந்தாள். என்னைப் பற்றி சொல்கிறாள். பித்துப் பிடித்ததைப் போல நான் வாளியை எடுத்துக்கொண்டு வந்தேன்.

“தம்பி, சாம்பார் ஊத்து” என்று ஒருவர் கேட்க, நான் மோர் வாளியை வைத்துவிட்டு சாம்பார் வாளியை எடுத்து வந்தேன். சாம்பார் வாளி வேறு நன்றாக கொதித்தது. சாம்பாரில் கரண்டியை விட்டு கலக்கி, நான் ஊற்றப் போகும் நேரத்தில் அவர் அதற்குள் யாரையோ பார்த்து திரும்ப, ‘சுட சுட’ சாம்பார் அவர் கையில் ஊற்றி விட்டது.

“ராஸ்கல், கண்ணெ எங்கப் பின்னாடியா வச்சிருந்த அறிவில்ல.. உனக்கு” என்று திட்டிக்கொண்டே என் கன்னத்தில் அறைந்து விட்டார்.

நான் அதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர் அடித்த அதிர்ச்சியில்

கையில் இருந்த சாம்பார் வாளி நழுவி என் காலில் பொத்தென்று விழுந்து, கொதித்துக்கொண்டிருந்த சாம்பார் சுட்டு பொசுக்கியது. கால் எரிச்சலில் அலறித்துடித்த என்னைப் பக்கத்தில் இருந்தவர்கள் தாங்கிப்பிடித்தனர். அவருக்கே இது உறுத்தியிருக்க வேண்டும். ஏதும் சொல்ல முடியாத தர்ம சங்கடத்தோடு அவர் நின்றிருந்தார்.

சண்முகம் அண்ணன் அங்கிருந்து ஓடிவந்து, பதட்டத்துடன் என்னைப் பார்த்து நடந்ததைப் புரிந்துக்கொண்டு “சனியனே, இதான் நீ வேல செய்யுற லட்சணமா..?” என்று  திட்டிக்கொண்டே துண்டால் அடிக்க, என்னை அறைந்தவர் தடுத்து “எம்மேல தான் தப்பு. நாந்தாங்க திரும்பிட்டேன். அவன அடிக்காதீங்க…” என்றார்.

சண்முகம் அண்ணன் அவரிடம் “மன்னிச்சிருங்க சார், ஏதோ சின்னப் பையன், தெரியாம செஞ்சிட்டான்” என்றார்.

“இல்ல, பரவால்ல…” என்றார் அடித்தவர்.

எனக்கு அழவேண்டும் போல் இருந்தது. செய்யாத தப்பிற்காக அடிவாங்கியது எனக்கு உறுத்திக்கொண்டே இருந்தது. சுற்றியிருந்த எல்லோரும் என்னைப் பரிதாபமாகப் பார்த்தனர். என் கண்கள் அவளைத்தான் தேடியது. மெல்ல சண்முகம் அண்ணனைப் பிடித்து எழுந்தேன். என்னைச் சுற்றியிருந்தவர்களின் ஊடே தேடினேன். அவ்வளவுப் பெரியக் கூட்டத்தில் அவளைக் காணவில்லை. 

சண்முகம் அண்ணன் என் கையை அவர் தோளில் போட்டு, என்னைத் தாங்கி பிடித்தவாறு அழைத்து வந்தார். கூட்டம் மெல்லக் கலைய ஆரம்பித்தது. அவள் அங்குதான் இருந்தாள். அவள் கண்ணீரோடு என்னைப் பார்த்து நின்றதை நான் எப்படி வார்த்தையால் விவரிப்பது. அவள் எதற்காக அழுதாள். எனக்காகவா அழுதாள்….? என்னைச் சுற்றியிருந்த கூட்டம் எதுவும் எனக்கு தெரியவில்லை. என் நினைவில் இருந்ததெல்லாம், கண்களில் கண்ணீரோடு அவள் பார்த்த அந்த ஒரு பார்வை தான்.

துண்டை வைத்து என் காலைத் துடைத்துக்கொண்டே, “அயோக்ய பய, தட்டி விட்டுட்டு சவுடாலா சொல்றான் பாரு, ‘பரவால்லயாம்’. எரியுதாடா..?” என்றார் வாஞ்சையாக.

“இல்லண்ணே….”

“ம்ம்… என்னா மயிருண்ணே, நீங்கலாம் எதுக்குடா படிக்காம இந்த  வேலைக்கு வர்றீங்க. நாங்கதான் படிக்காம இப்டி கஸ்டப்படுறோம். நீங்க ஏன்டா கண்டவங்கிட்டல்லாம் அடி வாங்கனும். இனிமே இந்தப் பக்கமே வரக்கூடாது. ஓடு…” என்று என் சம்பளம் முன்னூறு ரூபாயோடு பஸ்ஸிற்கு ஐம்பது ரூபாய் சேர்த்து சட்டைப்பையில் திணித்து அனுப்பிவைத்தார்.

தேரடி ஸ்டாப்பில் அதே ’12ஏ’ பஸ் திரும்பி வந்தது. பஸ்ஸில் ஏறி டிக்கெட் எடுத்துவிட்டு ஜன்னல் ஓரமாக உட்கார்ந்துக்கொண்டேன். ‘அந்தக் காட்சி’ மட்டும் சங்கிலித்தொடராய் வந்து நெஞ்சை அடைத்தது. பஸ்ஸில் “பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா….” என்ற பாடல் ஒலித்தது. என்னையறியாமல் வழிந்தக் கண்ணீர் கன்னம் கடந்து கையில் விழுந்தது. எங்கிருந்தோ வந்த இளந்தென்றல்  மெல்ல வீசியது. பஸ் நான் இறங்க வேண்டிய இடம் தாண்டி சென்றது. ஜன்னலில் தலைசாய்த்து கண்களை மூடிக்கொண்டேன். பாடல் தொடர்ந்தது,

“யாப்போடு சேராதோ பாட்டு… தமிழ்ப்பாட்டு… “

– கதைப் படிக்கலாம் – 75

இதையும் படியுங்கள் : சூழ்நிலைகள்

Exit mobile version