– ஆர். பூமாதேவி

பெண்கள் கல்லூரி விடுதி. மாலை நேர ஸ்டடி டைம். வார்டன் சொன்னபடி அறைக் கதவுகளெல்லாம் திறந்திருக்க, அவரவர் தனித்தனியாக அமர்ந்து, அவரவர் பாடத்தைப் படித்துக் கொண்டிருந்தனர்… எழுதிக் கொண்டிருந்தனர்… சிலர் கையில் புத்தகத்தை வைத்துக் கொண்டு, எங்கேயோ வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.
வளர்மதியின் கையிலும் புத்தகம் இருந்தது… ஆனால் படிக்காமல் எதையோ யோசித்துக் கொண்டிருந்தாள்…
“அம்மா அப்பாவிடம் எவ்வளவோ சொல்லிப் பார்த்து விட்டேன். ஆனால் இந்த முறை அவர்கள் கேட்கப் போவதில்லை. ப்ளஸ் டூ முடித்ததுமே கல்யாணத்திற்கு ஏற்பாடு செய்தவர்கள், இனி விட்டு வைப்பார்களா?… இனி வேறு வழியில்லை, ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால் என் வாழ்க்கையைத் திட்டமிட… வழிநடத்திச் செல்ல… முன்பை விட இப்போது தைரியம் ஏற்பட்டிருக்கிறது. அதை வைத்து சமாளிப்போம்… வேறு என்ன செய்ய?!”
வளர்மதி, பி.காம் படிக்கும் மூன்றாம் ஆண்டு மாணவி. அவள் ப்ளஸ் டூ முடிக்கும் போதே, அவளுடைய பெற்றோர் அவளுக்கு திருமணம் செய்ய நினைத்தனர். ஆனால் வளர்மதி அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை.
“அப்பா…! புஷ்பா அக்கா, பக்கத்து ஊருல இருக்கிற சுப்பு அக்கா, இவங்க நிலைமையெல்லாம் பார்த்துமா… என்னை இவ்வளவு சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்குடுக்க நினைக்கிறீங்க?!”
“அதது அவங்கவங்க தலையெழுத்து. அதுக்காக ஊர் உலகத்துல எந்தப் பொண்ணுக்கும் கல்யாணம் பண்ணக்கூடாதா என்ன?!”
“பண்ணலாம்.. அப்பா…. புஷ்பா அக்கா படிச்சிருந்தாங்கன்னா, தன் பிள்ளைகளைக் காப்பாத்துற தைரியம் அவங்களுக்கு வந்திருக்கும். புருசன் ஏமாத்திட்டான், விட்டுட்டு போயிட்டான்னு பிள்ளைகளை நினைச்சு பயந்து, அவங்களுக்கும் விஷத்தைக் குடுத்து இவங்களும் தின்னு, செத்திருக்க மாட்டாங்க” …
“அவளுக்கு புருசன் விட்டுட்டு போன வருத்தம். அப்பிடிப் பண்ணிட்டாள். அதுக்கும் படிப்புக்கும் என்னம்மா சம்மந்தம்?!”
“சரி, நீங்க சொல்ற மாதிரியே படிப்புக்கு சம்பந்தம் இல்லைன்னே வச்சுக்குவோம்… அவங்களை ஏன் கொஞ்ச வயசுலேயே கல்யாணம் பண்ணிக் கொடுத்தாங்க. எதையும் எதிர்கொண்டு, வாழ்ற துணிச்சல் கூட இல்லையே அவங்களுக்கு?!
பதினாறு வயசு வரைக்கும், அம்மா முந்தானையை பிடிச்சுக்கிட்டு வாழ்ந்த பொண்ணை, சொந்தம் விட்டுறக் கூடாதுன்னு, மாமனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு… பதினெட்டு வயசுல ரெண்டு பிள்ளைகளுக்கு அம்மாவாகிட்டாள். அவளால என்ன செஞ்சு, பிள்ளைகளை வளர்க்க முடியும் பா?! இல்லை, அவ்வளவு சின்ன வயசுல, ஆம்பளை துணையில்லாம எப்படி இருக்க முடியும்?!”
“வயசுக்கு வந்துட்டால், பிள்ளையை வீட்ல வச்சிருக்கக் கூடாது மா. லவ்… அது இதுன்னு வரும்…. அதுக்குத்தான் சீக்கிரம் கட்டிக்குடுத்து, புருசன் வீட்டுக்கு அனுப்ப நினைக்கிறோம்.”
“அண்ணனுக்கும் இப்படித்தான் பதினெட்டு வயசுல கல்யாணம் பண்ணுவீங்களா அப்பா?!”
“அது எப்படி மா முடியும்?! அவன் படிச்சு வேலைக்குப் போய் சம்பாதிச்சா தானே, அவன் குடும்பத்தைக் காப்பாத்த முடியும்?!”
“அது மாதிரி தானேப்பா நாங்களும். எங்களுக்கான பக்குவம் வந்தா தானே, எதிர்காலத்துல வர்ற பிரச்சனைகளை, எங்களால சமாளிக்க முடியும். பதினெட்டு வயசுல பிள்ளையை சுமக்கும் பெண்ணுக்கு, எத்தனை வலி இருக்கும்….பா….
அதுக்கு, குறிப்பிட்ட வயசு வர்ற வரைக்கும் படிக்க வைக்கலாமே?! சுப்பு அக்கா மாதிரி, பதினைஞ்சு வருச வயசு வித்தியாசத்துல கல்யாணத்தைப் பண்ணி, அந்த மாமா குடிச்சு குடிச்சே ஐம்பது வயசுல செத்துப் போயிட்டாரு.
முப்பது முப்பத்தஞ்சு வயசுல…. கல்யாண வயசுல இருந்த ரெண்டு பிள்ளைகளை வச்சுகிட்டு… வாழ வழி தெரியாம, புருசன் வச்சுட்டு போன கடனையும் கட்ட முடியாம, பிள்ளைகளுக்கும் மருந்தக் குடுத்து… தானும் செத்துப் போனாள்….
இப்படி சீக்கிரமே கல்யாணம் பண்ணிக் குடுக்குறதால, அந்தப் பொண்ணுங்க வாழ்க்கையும் பாழாகி, ஒன்னும் அறியா பிள்ளைகளும் சாகிற நிலைமை தேவையாப்பா?!
நான் பி.காம் படிக்கப் போறேன் பா. மூணு வருசம். அப்புறம் நீங்க என்ன சொல்றீங்களோ, அதைக் கேட்கிறேன்”னு சொல்லி படிக்க வந்தாள், வளர்மதி.
மூன்று வருசம் போனதே தெரியவில்லை வளர்மதிக்கு. பட்டாம்பூச்சியாக அறிவிலும், அழகிலும் சிறகடித்துப் பறந்தாள். சுதந்திரப் பறவையாக கல்லூரியைச் சுற்றிச் சுற்றி வந்தாள்.
சந்தோஷமும், மகிழ்ச்சியும் மனிதனாகப் பிறந்தவர்களுக்கு, திருமண வாழ்க்கையில் தான் நிறைவடையும் என்பது, யார் வகுத்த விதியோ?!… யான் பெற்ற துன்பம், யாவரும் பெறட்டும் என்ற மனிதர்களின் சதியோ?! … உலகத்தைப் படைத்த பிரம்மன் எழுதிய தலையெழுத்தோ… வளர்மதிக்கு திருமணம் செய்ய, பெற்றவர்கள் முடிவெடுத்து விட்டனர்.
பரீட்சை ஆரம்பிக்கும் முன்னரே, ஸ்பெஷல் பர்மிஷனில் வளர்மதியை வீட்டிற்கு அழைத்துச் சென்றார்… அவள் அப்பா.
சொந்தம் பந்தம் கூடியிருக்க, கோவிலில் வைத்து வளர்மதியை பெண் பார்த்தான் சதீஷ். வாட்ட சாட்டமாக, சஃபாரி சூட்டில் டிப் டாப்பாக இருந்தான். அவன் எம்.காம் முடித்திருந்தான். தனியார் கம்பெனியில், தற்காலிக ஊழியனாக வேலையில் இருந்தான். குடும்பம் நடத்த தகுதியான உடல் கூறும், வசதியும் இருந்ததால், அவனுக்கு திருமணம் செய்யத் துடித்தனர் அவன் பெற்றோர்.
“எங்களுக்குப் பெண்ணைப் பிடிச்சிருக்கு. பையனும் சரினு சொல்லிட்டான். மத்த விசயக்களைப் பேசி முடிப்போம்” என்ற திருமண பேரம் ஆரம்பமானது.
ஒரு வழியாக, இரு வீட்டாருக்கும் லாப நஷ்டக் கணக்கு டேலியாகி, திருமணத் தேதி குறிக்கப்பட்டது. வளர்மதிக்கும் பையனை பிடித்திருந்தது… ஆனால் நிரந்தர வேலை இல்லை என்பதால் யோசித்தாள்.
“அப்பா…. நிரந்தர வேலை இல்லையே?!
“அதனாலென்னம்மா…. நல்லா படிச்சிருக்காரு… இந்த வேலை இல்லைன்னா… வேற வேலை.”
“நான் சொன்னதை அவங்க வீட்ல பேசிட்டீங்களா?!”
“அதெப்படி மா பேச…. யார் இதுக்கு ஒத்துக்குவாங்க. கல்யாணம் ஆன பிறகு, நீங்க ரெண்டு பேரும் பேசி முடிவு பண்ணிக்கோங்க.”
“அவர் ஒத்துக்கலைன்னா… பிரச்சனையாகுமே அப்பா?!
“நீ சொல்ற மாதிரி, கதைகளில் படங்களில் தான் நடக்கும். நிஜத்துல சாத்தியமே இல்லை. அம்மா சொல்றதைக் கேளு… நல்ல இடம். ஒத்துக்கோ, எல்லாம் நல்லா நடக்கும்”…
வளர்மதியின் அம்மா, பாட்டி, சித்திகள், அவளிடம் பேசி அவளை சம்மதிக்க வைக்கின்றனர்.
இந்தியாவில்… அதுவும் தமிழ்நாட்டில் பிறந்த ஒரு பெண்ணால்… இதுக்கு மேல கல்யாண விசயத்துல எதுவும் பேச முடியாது.
வளர்மதி மற்ற பெண்களைப் போல இல்லை. சிறு வயதிலிருந்தே, குடும்பத்தில் வெளியில் நடப்பவைகளைப் பார்த்து, நல்லது கெட்டதைத் தெரிந்து, அதற்கேற்ப தன்னை மாற்றிக் கொள்வாள்.
வயசுப் பிள்ளைகளுக்கு இருக்கிற ஆசையும், கனவும் இருந்தாலும்… குடும்ப வாழ்க்கையின் ஏற்ற இறக்கங்களைப் பார்த்து… தன்னை கட்டுப்படுத்திக் கொள்வாள்.
அவள் ஊரிலும், படிக்கும் இடத்திலும், சில பையன்கள் அவளை காதலிப்பதாக சொன்ன போது, அதை மறுத்திருக்கிறாள். ஏன்… சொந்த அத்தை பையனிடம் கூட, அளவாகத்தான் பேசுவாள்.
சொந்தத்தில் திருமணம் என்பதை நினைத்தே பார்க்காதீர்கள் என்று, அப்பா அம்மாவிடம் கண்டிப்பாகச் சொல்லி விட்டாள்.
முதலிரவில் பாலை சதீஷிடம் கொடுத்து விட்டு, அவன் காலில் விழுந்து நமஸ்கரித்தாள்.
ஆசையாக பேச வந்த சதீஷிடம், “என்னங்க, ஒரு முக்கியமான விசயம் பேசணும். நாம கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருக்கலாமே?!”
“பேசு வளர்…. நானும் உன்னிடம் கேட்கணும்னு நினைச்சேன். என் பெரியப்பா பொண்ணு வீட்டுப் பக்கத்து வீடு தான், உன் ப்ரெண்ட் மீனா வீடும். ரெண்டு பேரும் ஒன்றாக படிச்சவங்க. அந்தப் பொண்ணுக் கிட்ட விசாரிச்சு தான், உன்னைப் பெண் பார்க்க முடிவு பண்ணினாங்க எங்க வீட்ல”
“ஆமா…. நிச்சயதார்த்தம் நடந்தப்ப மீனா சொன்னாள்”
“நீ மேல படிக்கணும்னு நினைச்சியாமே?! இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லையா?!”
அவள் கைகளைப் பிடித்துக் கொண்டு, “என்னைப் பிடிச்சிருக்கா?!” என்று சதீஷ் கேட்டதும், “பிடிச்சிருக்கு. ஆமா படிக்கணும்னு ஆசைப்பட்டேன். ஆனால் நம்ம வீடுகளில் இதையே கால தாமதம்னு சொல்றாங்களே?!”
“ஆமா வளர். என் தங்கச்சிக்கு ப்ளஸ் டூ முடிச்சதும் கல்யாணம்”
“அவங்க படிக்கணும்னு சொல்லலையா?!”
“சொன்னாள். ஆனால் கல்யாணத்தை மறுக்கலை.”
“நான் ஒன்னு சொன்னால்…… தப்பா நினைக்க மாட்டீங்களே?!”
“சொல்லு…… மா. இனி மேல் நீங்க சொல்றதைத் தானே கேட்கணும்?! எனக் கண்ணடிச்சு சதீஷ் சிரிக்க, வளரும் அழகாக சிரிக்கிறாள்.
“அதில்லங்க. நாம ரெண்டு பேரும், ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுகிட்டு, அன்பா அக்கறையா வாழ ஆரம்பிக்கிற வரைக்கும்…… நமக்கு குழந்தை வேண்டாமே?!
நமக்குள்ள புரிதல் வர்றதுக்குள்ள, நான் கன்சீவ் ஆகி, ஆஸ்பத்திரி…. டாக்டர் செக்கப்…. வாந்தி, மயக்கம்னு…… எனக்கு நானே பாரமாகி இருப்பேன். உங்களை கவனிக்கவோ, உங்கக் கூட டைம் ஸ்பெண்ட் பண்ணவோ முடியாது.”
“ஆனால் ரெண்டு, மூணு மாசத்துல பெரியவங்க கேட்க ஆரம்பிப்பாங்களே?!”
“நாம நினைச்சா அதை சமாளிக்கலாமேங்க?!”
வளர்மதியின் பேச்சு, அதற்குப் பிறகு எடுபடவே இல்லை.
குளத்துக்குள்ள இறங்கிட்டு, சேறு ஒட்டக் கூடாதுன்னு கவனமா இருக்க முடியுமா?!
வளர்மதி நாலாவது மாதம் வாந்தி எடுத்தாள்.
மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்னு, தன் ஆசை அடங்கியதும், தன் பிராஜக்டை முடித்து விட்டவன் போல, வேறு வேலைகளில் மூழ்கிப் போனான் சதீஷ். இரவு வீட்டிற்கு வர தாமதமானது. பார்த்த வேலை போரடிக்கிறதுன்னு, வேறு வேலை தேடி வெளியூர்களுக்குச் சென்றான்.
வளர்மதிக்கு வாழ்க்கைப் புரிய ஆரம்பித்தது. இது தான் பல குடும்பங்களில் எதார்த்தமாக இருக்கிறது. இதற்காக நான் அவரிடம் எதுவும் கேட்க மாட்டேன். ஆனால் பிறக்கப் போகும் என் பிள்ளையை, ஒரு போதும் தவிக்க விட மாட்டேன் என முடிவு செய்தாள்.
“உங்களுக்கு ஒரு வேலை கிடைக்கும் வரை, நான் வேலைக்குப் போகிறேன்.”
“என்ன விளையாடுறியா, இப்ப உனக்கு ஐந்து மாதம். வாந்தி கூட இன்னும் சரியா நிக்கலை.”
“இல்லை பரவாயில்லை… கணக்கெழுதுற வேலை தான், எனக்குத் தெரிஞ்சவங்க கடையில். காலையில பத்து மணிக்கு போனால் போதும்.. சாயங்காலம் ஐந்து மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்துடுவேன்”
“ஏன் கஷ்டப்படணும்?! எங்க அப்பா அம்மா, உங்க அப்பா அம்மா இருக்காங்களே?!”
“நம்ம பிள்ளைக்கு நாம் தான் பொறுப்பு. யாருகிட்டயும் எதிர்பார்த்து காத்திருக்க முடியாது”
ஐந்து மாதக் கர்ப்பத்தைச் சுமந்துக் கொண்டு வேலைக்குப் போனாள், வளர்மதி. ஏழாவது மாதம் வளைகாப்பு முடிந்ததும் வேலைக்குச் சென்று விட்டாள். இடுப்பு வலி வரும் வரை வேலைக்குச் சென்றவள், பிள்ளை பிறந்து மூன்று மாதம், அம்மா வீட்டில் இருந்தாள்.
பிள்ளைக்குச் சீராக நகை வேண்டாம் எனக் கூறி, லேப்டாப் வாங்கி வந்து, வீட்டிலிருந்தே வேலைப் பார்க்கத் தொடங்கி விட்டாள்.
சதீஷ்…. பெரியவர்களின் கட்டாயத்திற்காக, ஏதோ வேலைக்குச் சென்றான். கிடைத்தப் பணத்தை குடித்தே காலியாக்கினான்.
சேரக் கூடாத நண்பர்களுடன் சேர்ந்து, பிஸினஸ் செய்கிறேன் என்று, லட்சக்கணக்கில் பணத்தை இழந்து, கடன்காரனாகி விட்டான்.
“வளர்.. உன் நகையை விற்றுக் கடனை அடைப்போம். நான் வேறு வேலை தேடிக் கொள்கிறேன்”
“நம் பிள்ளை சுகனின் படிப்புக்கு, அது ஒன்று தான் ஆதாரமாக இருக்கு. என் சம்பளம் வீட்டு வாடகை, மளிகைக்கே சரியாகிடுது. வேண்டாங்க நகையை விற்க வேண்டாம்”
பிடிவாதமாகத் தடுத்தும், கேட்காமல் அத்தனை நகைகளையும் எடுத்துச் சென்று விட்டான்.
“நான் அப்பவே சொன்னேனே அப்பா. பார்த்தீங்களா, இப்ப என் நிலைமையை?!”
“கவலைப்படாத மா….. அண்ணன்கிட்ட கேட்டு, ஏதாவது உதவி பண்றோம்.”
“இருக்குற நகையெல்லாம், பொம்பளைப் பிள்ளைக்கு குடுத்து கல்யாணம் பண்ணிட்டீங்க. எங்களுக்குன்னு இருக்குறது இந்த வீடு ஒன்னு தான். அவர் சம்பளத்துல நாம் நாலு பேரு சாப்பிடணும்… துணி மணி… ஆஸ்பத்திரி செலவு செய்யணும்… எதை வச்சு உங்க பொண்ணுக்கு உதவி பண்ணுவீங்க?!” அப்படின்னு வளர்மதியின் அண்ணி கேட்க,
பதில் பேச முடியாமல், தலை குனிந்து நின்ற பெற்றவர்களைப் பார்க்கச் சகிக்காமல், அம்மா…. அப்பா… கவலைப்படாதீங்க. என் வாழ்க்கையை நான் பார்த்துக்குறேன். அவங்களைத் தொந்தரவு பண்ண வேண்டாம் என்று கூறி விட்டு, வீட்டிற்கு வருகிறாள்.
“போனது போகட்டும். புருசன் சரியில்லைன்றது தெரிஞ்சு போச்சு. அதுக்காக சண்டை போட்டு ஆகப் போகிறது எதுவுமில்லை.
நான் சண்டை போட்டால், புருசன் அடங்குறவனும் இல்லை. எதுக்கு வீணாக பிரச்சனை?! அவன் கிட்ட எதுவும் கேட்க வேண்டாம்.
அவனாக வந்தால் வரட்டும். அதுவரைக்கும் நான் பார்க்குற வேலையை பார்த்து, என் பிள்ளையை நான் சந்தோசமாக வச்சுக்கப் போறேன்.
பெரிய ஸ்கூலில் பணம் கட்டி படிக்க வைக்க முடியாது. அதனாலென்ன கார்ப்பரேசன் ஸ்கூலில் படிக்கட்டுமே?! என் பிள்ளைக்கு உதவியாக நான் இருப்பேன், அவனைப் பசியோடு வாட விடாமல் பார்த்துக்குவேன்” என நினைத்தவளாக, தான் வேலை பார்க்கும் இடத்திற்கு பக்கத்திலேயே, பிள்ளையை பள்ளிக்கு (ப்ளே ஸ்கூல்) அனுப்பி, இடைவேளை நேரமெல்லாம் சென்று பார்த்துக் கொள்கிறாள் வளர்மதி.
ஆறாவது மாதம் திரும்பி வந்த சதீஷ், மன்னித்து விடுமாறு கெஞ்சுகிறான். பிள்ளைக்காக அவனை மன்னித்து ஏற்றுக் கொள்கிறாள்.
ஆடுன காலும், பாடுன வாயும் சும்மா இருக்குமா?! மறுபடி சதீஷ் தன் வேலையைக் காட்ட ஆரம்பிக்கிறான்.
நிலைமையை உணர்ந்த வளர்மதி, உடனடியாக அவனை வீட்டை விட்டுத் துரத்துகிறாள். சதீஷின் பெற்றோர் உதவுவதாகக் கூறியும் ஏற்க மறுக்கிறாள்.
“தயவு செய்து, என்னையும் என் பிள்ளையையும், விட்டு விடுங்கள். உங்கள் பிள்ளைக்கு நீங்கள் என்ன உதவி வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்” என்று சொல்லி விட்டு, சட்டப்படி விவகாரத்து செய்துக் கொண்டு, தன் பிள்ளையின் எதிர்காலத்திற்காக வாழ்கிறாள்.
இவ்வளவு தான் என் வாழ்க்கை. அந்த புஷ்பா அக்கா, சுப்பு அக்கா வாழ்க்கையை, சின்ன வயசுலேயே பார்த்து தெரிஞ்சுக்கிட்டதனால தான், என் வாழ்க்கையில் எத்தனையோ குழப்பம் வர்றப்ப எல்லாம், என் பிள்ளைக்காகன்னு யோசிச்சு வாழ முடியுது.
எந்த ஒரு பெண்ணும் கதாநாயகியாக நம்மளை நினைச்சுக்கிட்டு வாழ்க்கையை ஆரம்பிக்காமல், எதார்த்தத்தை புரிஞ்சு… அக்கம் பக்கம் நடக்குறதை தெரிஞ்சு, தெளிவா வாழ ஆரம்பிச்சுட்டால், இன்னைக்கு தினசரி பேப்பர்ல வர்ற செய்தி மாதிரி, பிள்ளைகளுக்கு மருந்து குடுத்து… தானும் குடிச்சு சாகுற நிலைமை, எங்கேயும் நடக்காது.
படிக்கிற படிப்பு வாழ்க்கைக்கு வசதியை மட்டும் தந்தால் போதாது… வாழுகிற தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் தரணும்.
ஒரு பெண், தெளிவா தைரியமா இருந்தால் மட்டும்தான், அனாதை இல்லங்களும்… பிச்சை எடுக்கும் பிள்ளைகளும்… தன் கனவுகளையெல்லாம் விட்டுவிட்டு, வாழ வேண்டிய வயதில் தாயுடன் தந்தையுடன் சாகும் பிள்ளைகளும், ஒழுக்கம் கெட்ட திருட்டு, கொலை, கொள்ளையடிக்கும் பிள்ளைகளும், உருவாகாமல் இருப்பார்கள்.
என் பிள்ளையை நல்ல பிள்ளையாக வளர்ப்பேன். ஏக்கங்களை சுமந்து வாழாமல், எதார்த்தத்தை எதிர்க்கொண்டு வாழப் பழக்குவேன் என்று உறுதி செய்துக் கொள்கிறாள்.
அம்மா…..! என அழைத்துக் கொண்டு, தத்தக்கா பித்தக்கான்னு பிள்ளை ஓடி வர…. குழப்பமில்லாத தெளிந்த மனதோடு, நேராகச் சென்று தன் பிள்ளையை அணைத்துக் கொள்கிறாள், வளர்மதி.
– கதைப் படிக்கலாம் – 19
இதையும் படியுங்கள் : நீதி பிறழேழ்!