ஆறாம் வகுப்பு ‘ஆ’ பிரிவு

– எழில்மதி. G.S.

ஹாய்! நான் நீலு. முழுப்பேரு நீலாமணி. கேக்கவே நல்லால்லல. அதான் சுருக்கி வச்சிக்கிட்டேன். விஷயத்துக்கு வருவோம். நான் உங்கக் கிட்ட என் ஸ்கூல் மெமரிஸ் பத்தி பேசப் போறேன். பள்ளிக்கூடத்து நியாபகத்தத் தோண்டத் தோண்ட வந்துட்டே இருக்கும். முழுசும் சொன்னா வருஷம் பத்தாது. அதனால மூன்று முக்கியமான இன்சிடண்ட்ட சொல்றேன் கேளுங்க.

இன்சிடண்ட் நம்பர் ஒன்

இங்க ரெட்ட ஜடப் போட்டுட்டு, குனிஞ்ச தலை நிமிராம, ஹீரோ பேனால இருந்து வர நீல இங்க்க பேப்பர் பூரா பரவப், பரீட்சை எழுதிட்டு இருக்கேனே. இதான் நான். என் பின்னாடி இருக்குறவ சாருக்குத் தெரியக் கூடாதுனு, ஏதோ ரகசிய சிக்னல் கொடுக்குறா. வாங்க என்னனு கேப்போம்.

“என்னடி ரேவதி சொல்லு” என்றாள் நீலு மெதுவாய்

“கோடிட்ட இடத்துல நாலாவது கேள்விக்கு என்ன பதில்” என்றாள் விரல்களையும் காட்டியபடி உதட்டசைவகளுடன்.

நீலு திரும்பி ஆசிரியர் பார்க்கிறாரா என்று பார்த்துவிட்டு, தனது விடைத்தாளைத் ஒருமுறை திருப்பிவிட்டு “லாக்டோ பாக்டீரியம்” என்றாள் ரேவதியிடம்

“புரியலடி” என்றாள் ரேவதி.

“லா… க்… டோ… பாக்டீரியம்” என்றாள் நீலு மறுபடியும் திரும்பி…

“என்னடி சொல்ற. கொஞ்சம் சத்தமா” என்றாள் ரேவதி தொடர்ந்து…

“இந்தா பாத்து எழுது”, என்று விடைத்தாள் அவள் கண்களுக்குப் புலப்படும்படி வைத்தாள் நீலு…

ம்ம்ம்… ரேவு ஒரு வழியா பாத்து எழுதிட்டா. எக்ஸாமும் கன்டினீயூவா நடக்க, கடைசி பத்து நிமிஷமும் வந்துச்சு. அப்போ தான் மறுபடியும் அந்த 4வது ஃபில் அப்க்கு ஆன்சர யோசிச்சேன். அப்போ தான் ஞாபகம் வந்துச்சு… ஆன்சர் லாக்டோபாக்டீரியம் இல்ல, சூடோமானாஸ்னு.

ச்ச்ச இவ்ளோ கஷ்டப்பட்டு ஆன்சர் சொல்லிட்டோமே. நம்ம பெஸ்ட் ஃப்ரெண்ட் ரேவு நம்மல நம்பி பதில் எழுதிருக்காளே. நம்ம அவள ஏமாத்தக் கூடாதுனு, தப்புனு தெரிஞ்சும் அதே ஆன்சரோடயே பேப்பர சப்மிட்டும் பண்ணிட்டேன்.

பத்து நாள் கழிச்சு ரிசல்ட் வந்துச்சு. நான் அம்பது. அவ அறுபது. ரேவு பேப்பர வாங்கிப் பாத்தப்போ தான் தெரிஞ்சுது. பயபக்கி என் கிட்ட கேட்டது இல்லாம, பக்கத்துல இருக்குற சந்தியா கிட்ட கேட்டு கரெக்ட்டான ஆன்சர் எழுதிட்டானு. என்னவொரு சுயநலமான உலகம். பாத்துக்கோங்களேன்.

இன்னைக்கு ரேவதி எங்க இருக்கானு கூட எனக்குத் தெரியாது. இதான் நான் நட்போட நம்பிக்கைய காப்பாத்துறேன்னு, ஆறாம் வகுப்புல பல்ப் வாங்குன கதை.

அன்னையோட பிட் காட்றதே விட்டுட்டேன். இந்தப் பிட் அடிக்கறவங்களாம் எப்டி அதிக மார்க் எடுக்குறாங்கனு உங்களுக்கு இப்போ புரிஞ்சுருக்கும். வாங்க அடுத்த ஆக்சிடன்ட்டப் பாக்கலாம்.

இன்சிடண்ட் நம்பர் டூ

இதோ சைக்கிள் ஓட்டிட்டுப் போயிட்ருக்கறது நானு. நான் ஏன் இவ்ளோ சோப்லாங்கியா மெதுவா போறேனு பாக்குறீங்களா. என் வினோத் பின்னாடி வந்துட்டு இருக்கான். பாருங்க எவ்ளோ வெள்ளையா இருக்கானு. என்ன சட்டுனு கிராஸ் பண்ணிட்டான். அடக் கடவுளே வேகமாப் போகணும், வேகமாப் போகணும்.

அய்யய்யோ போஸ்ட் மரம்… போச்சு… செத்தேன் இன்னைக்கு… வாங்கக் கூட்டத்தத் தாண்டி, நான் எங்க சைக்கிளோட மல்லாந்து கிடக்கிறேன்னு… எட்டிப் போப்போம்.

சந்தியா கூட்டத்தை விலக்கி உள்ளே வந்துப் பார்த்து கத்துகிறாள். “விழுந்திட்டியாடி நீலா, எழுந்திரு… எழுந்திரு…”

“விழுந்துட்டேன். கைல ரத்தம்” என்று நீலு மூக்கை உறிஞ்சி அழுது கொண்டு இருந்தாள்.

“நான் போய் மிஸ்ஸ கூட்டிட்டு வரேன்” என்று வினோத் விரைந்தான்.

“பாத்து வர வேண்டியது தான” என்றாள் ரேவதி. அவளை ஒரு பக்கமாய் தூக்கிக் கொண்டு,

“ஏன்மா என்னாச்சு. சரி அழாத. ரத்தத்த கிளீன் பண்ணணும். இங்க உக்காரு” என்றார் ரீட்டா மிஸ் நீலுவை…

“ஆ… எரியுதே” என்று நீலு புலம்பிக்கொண்டு இருக்க…

ரேவதியும், சந்தியாவும் வினோத்திடம் விசாரணை நடத்திக்கொண்டு இருந்தனர்.

“அவளுக்கு ஒழுங்கா சைக்கிள் எட்டல. அதான் விழுந்துட்டா” என்றான் வினோத்.

அவன் அவ்வாறு சொன்னதில் மனம் கூன, மேலும் நீலுவின் அழுகை அதிகமானது.

ஏய் நீலு அழுகு மூஞ்சு. போயும் போய் அவன் முன்னாடி அழுதுருக்கியே, வெக்கமா இல்ல.

இதாங்க நான் என் வெத்து வேட்டு ஸ்கூல் கிரஷ் முன்னாடி அசிங்கப்பட்ட மொமண்ட். இப்போ வினோத் எங்க ஊர்ல, ஏதோ ஒரு காலேஜ்ல குப்பை கொட்றான். எனக்கு எஃப்.பி.-ல ஃப்ரெண்ட் ரெக்வஸ்ட் வந்துச்சு போன வாரம். அது இன்னும் அக்செப்ட் பண்ணாமலே கிடக்கு.

அவன் ஒரு ஆளுனு… நான் அவன் பேரயும், என் பேரயும் ஃப்ளேம்ஸ்லாம் போட்டேன். ஃப்ளேம்ஸ்ல லவ்வு வர்லனு, என் பேரோட ஸ்பெல்லிங்கல்லாம் மாத்திப் போட்டுப் பாத்தேன்.

இப்போ நினைச்சுப் பாத்தா சிரிப்பா இருக்கு. அடுத்தக் கொழப்பத்தப் பாப்போம் வாங்க.

இன்சிடண்ட் நம்பர் த்ரீ

எல்லா கவர்மெண்ட் ஸ்கூல்லயும் வர மாதிரி, டீச்சர் ட்ரெயினிங் ஸ்டாஃப் வந்துருந்தாங்க ஸ்கூலுக்கு. அதுல ஒரு சார்… எங்க தமிழ் சார் மணி சார மட்டும் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.

அங்கப் பாருங்க… போர்டுக்கு பக்கத்துல எவ்ளோ அழகா அவரு பாடம் எடுத்துட்டு இருக்காரு, கைல நோட்ஸ் வச்சிட்டு. அவரு ஷர்ட் கைய மடிச்சு விட்டுட்டு, அயர்ன் பண்ணி டக் இன் பண்ண வொய்லட் ஷர்ட்டப் போட்டு, அப்டியே முடியக் கோதி விட்டுட்டு, செமயா பாடம் நடத்துராருல்ல.

அவரு அதிகமா பாக்குற இடம், நான் உக்காந்து இருக்குற இடம் தான். பக்கத்துல சந்தியா ஏதோ சொல்றா, வாங்கக் கேப்போம்.

“சார் இன்னைக்கு நல்லா இருக்காருல்ல” பாக்கறதுக்கே என்றாள் சந்தியா…

“ஆமாடி. அவரு எப்பயும் சூப்பரா தான் இருப்பாரு. செமயா தான் நடத்துவாரு. அவருக்காக தான் இன்னைக்கு மழைல நனைஞ்சிட்டே ஸ்கூலுக்கு வந்தேன்” என்றாள் நீலு, மணி வாத்தியாரைப் பார்த்துக் கொண்டே…

“அவரப் பாத்துட்டே ஏன்டி பேசுற. மாட்டிக்கப் போறோம் அப்புறம்” என்றாள் சந்தியா

“பாத்தியா என் பேரு கூட நீலு… அவரு பேரு மணி… சேத்தா நீலாமணி… எப்புடிடி” என்றாள் நீலு.

“அவரு நம்மள தான் மொறைக்கிறாருடி. வாய மூடு” என்றாள் சந்தியா குனிந்துக்கொண்டே…

“நீலாமணி என்ன அங்கப் பேச்சு உனக்கு” என்றார் மணி திடீரென்று குரலை உயர்த்தி…

“ஒன்னும் இல்லங்க அய்யா” என்றாள் நீலு எழுந்து நின்றபடி…

“நீ கெட்டுப் போறதும் இல்லாம. நல்லாப் படிக்கிறப் பொண்ணயும் கெடுக்குற. போய் பின்னாடி பெஞ்ச்ல உக்காரு” என்று அதட்டினார் மணி.

அப்போ என் மூஞ்சுப் போனதப் பாக்கணுமே. ஒரு புள்ளைய எப்போவாச்சும் அசிங்கப்படுத்தலாம். அதுக்குனு வாழ்க்கையே அவமானமா இருந்தா எப்புடி தான் பொழப்பு நடத்துறது. நான் என் பேக்க தூக்கிட்டு பின்னாடி பெஞ்ச்க்கு போயிட்டேன்.

ஆனா மணி சார் இன்னும் நான் உக்காந்துருந்த இடத்த தான் பாத்துட்டு இருந்தாரு. அப்போ தான் தெரிஞ்சுது, அவரு பாத்தது இந்த எண்ண வடிஞ்ச மூஞ்சு இல்ல, பான்ட்ஸ் பவுடர் போட்ட சந்தியா மூஞ்சனு.

என்னையே நான் திரும்பிப் பார்த்ததுல, நான் கடந்து வந்தப் பிரச்சனைகள் தான் கண்ணு முன்ன நிக்குது. அதெல்லாம் தான் இன்னைக்கு என்னோட பலங்களா மாறி இருக்கு. ஸ்கூல்னா ஸ்வீட் மெமரிஸ் மட்டுந்தானா. பிட்டர் மெமரிஸும் தான். 50-50… இதாங்க வாழ்க்கை.

– கதைப் படிக்கலாம் – 129

இதையும் படியுங்கள் : அனுமன் ஜி

Exit mobile version