கல் உருண்டை!

ஏ. ஆர். முருகன் மயிலம்பாடி

கதிரவன் வாரி இறைத்த நடுமத்தி வெயில் படர்ந்து கிடந்தது!

“ச்சூ, இப்பொ கரெக்டாப் போடுறேன். இதுல ஜெயிச்சுட்டா, மூனு தபா ஆச்சு!”

கொத்தாக அள்ளி இருந்த அழுக்குக் கற்களைக் குலுக்கி மேலே வீசினாள்…

உயரப் போய் திரும்பிக் கீழே வந்து, அவளின்  புறங்கையில் விழுந்தன.

அவற்றை அனாயசமாக உள்ளங்கையில் சுழற்றிக் கொண்டாள். ஒன்று கூடக் கீழே சிதறாததால், இந்த முறையும் அவளே வென்றாள்.

“ஐ!, வின்னாயிட்டேன், லட்சுமாயி தோத்தாங்கோழி ஆயிட்டா!”

எழுந்து எம்பிக் குதித்தாள்.

அஞ்சாங்கல் ஆட்டம், களை கட்டி இருந்தது. காலையில் டப்பாவைத் தூக்கிக் கொண்டு வந்து, வெட்டவெளியில் உட்கார்ந்தது. நேரம் போனதே தெரியவில்லை. உச்சிக் காலம் வந்தும், உற்சாகம் குறையவில்லை.

“அசக்கு, புசக்கு,  ராமாயி கொட்டுக்கு நான் சிக்க மாட்டேனே”

ஓடியவளைத் துரத்தினாள். மலையாய் குவிந்திருந்த குப்பைக் கிடங்கின் மீது ஏறினாள். பின்னால் துரத்தி வந்தவள், நைந்த சட்டையை எட்டிப் பிடித்தாள்.

“ஒழுங்கா வாங்கிக்கோ!”

மண்டையில் நங்கென்று விரல் முட்டியை மடக்கிக் குட்டு வைத்தாள்.

வேகமாக ஓங்கும் போது, லட்சுமாயி விக்கித்தாள். ராமாயின் வீச்சு தலையில் இறங்கும் போது அழுத்தம் குறைந்தது.

உடன் பிறந்த பாசத்தால் உதிரத்தின் வேகம் சரிந்து விட்டது.

தன் முடியைத் தானே பிடித்துக் கொண்டாள். வலிப்பதாகப் பாவ்லா காட்டினாள்.

“ஊ,  ஊங், ஓங்கிப் போட்டுட்டே, ஈ, இ, ஈ”

“ச்சூ, ச்சூ, நா மெதுவா வச்சேன், சின்னப் புள்ளையாட்டம் அழுவுறே”

“அடுத்த வாட்டி, நாஞ் ஜெயிச்சு உன்னை வச்சுக்கிறேன், பொறுடி!”

“லட்சுமாயி, அது நடந்தாப் பாக்குலாம்”

“நடக்கும், அந்தக் கல்லுரண்டையத் திட்டீட்டு வர்றேன்”
திரும்பி ஓடினாள். விளையாடிய டப்பாக்கள் கவிழ்ந்து கிடந்தன. அதில் தன்னுடையதை எடுத்துக் கொண்டாள்.

குவியலாய் கிடந்த உருண்டைக் கற்களை அள்ளி உள்ளே போட்டாள்.

அவற்றைக் கோபமாய் பார்த்தாள்.

“கல்லுரண்டே, அடுத்த வாட்டி வின் பண்ண வைக்கனும், இல்லீனா உங்களோட ‘டூ’ போட்டுடுவேன்”

குலுக்கி மேலே மூடியை அமுக்கினாள்.

ராமாயி ஓடி வந்தாள். அருகில் கிடந்த இன்னொரு டப்பாவை எடுத்துக் கொண்டாள்.

இன்னும் கிடந்த அவள் பங்குக் கற்களைப் போட்டு மூடியைப் போட்டாள்.

“நல்ல கல்லுரண்டே, என் புஜ்ஜி!, இந்தா உம்மா”

பிஞ்சு உதட்டைப் விரித்துப் ‘பச்சக்’ எனப் பதித்தாள்.

மண் அப்பிக் கொண்டது.

“த்தூ, ராமாயி மூஞ்சி, மூக்காத்தா ஆயிடுச்சு”

தன்  இதழ்களைக் குவித்துப் பழிப்புக் காட்டிய உடன் பிறந்தவளை, வெள்ளந்திச் சிரிப்போடு பார்த்தாள்.

“கொழுத்துற பொழுதுலயும் அஞ்சாங்கல் ஆட்டம் முடியலையா? வாங்கடி, அப்பன் தேடுது”

“ம்மா!, அடிக்கிறா”

“தோத்துட்டுத் தப்புச்சு ஓடுறாம்மா,”

“ம், அடிச்சாம்மா”

“வேனுனே குன்னுமாயம் போடுறாம்மா”

“விளையாடுனது போதும், வாங்கடி!”

அம்சலாவின் அதட்டலுக்கு அடிப் பணிந்து பின்னால் ஓடினார்கள்.

குடிசையில் கணேசன் இருவரையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.

மதியச் சோத்துக்கு வந்திருந்தான். வட்டிலில் கிடக்கும் சாதத்தைப் பொடுசுகளுக்கு ரெண்டு வாய் ஊட்டி விட்டால் தான், அவன் வயிறு நிரம்பும்…

“ப்பா, லட்சுமாயி இன்னிக்கும் எங்கிட்டெக் கவுந்துட்டா”,

“அப்புடியாடா செல்லம், ரெண்டு பேருமே ஒசத்தி, ஆட்டத்துல யாரு வந்தா என்ன?”

இருவரையும் இழுத்து மடி மேல் உட்கார வைத்துக் கொண்டான்.

“புழுதி மேட்டுக்குப் போகாதீங்கனாக் கேக்கறதில்லே, ஒடம்பு பூராத் தூசு. வாங்கக் கழுவி விடுறேன்”

அம்சலா இழுத்துக் கொண்டு போனாள்.

“அங்கெல்லாம் பூச்சி புழுவு திரியும், பக்கத்திலையே விளையாடுங்க”

சளி ஒழுகி இருந்த முகங்களை நீர் விட்டு அலம்பினாள். சோப்புப் போட்டு இருவரையும் குளிக்க வைத்தாள்.

கந்தல் ஆடைகளைக் கழற்றினாள். வேறு அணிவித்தாள். தலை வாரி விட்டாள்.

சோக்கு சுந்தரிகளாய் தகப்பனிடம் தாவினார்கள்.

“ராசாத்திக மாதிரி இருக்கீங்க,”

வாரி அணைத்துத் தழுவிக் கொண்டான்.

“ப்பா, ராத்திரி சாக்லெட் வாங்கி வா!”

“அசுத்தம் படாம வீட்டோட இருங்க, சாயந்திரம் வரும் போது நிறைய வாங்கியாறேன்”

“நல்லப்பா!”

சிறுசுகளின் ரவுசுகளைச் சுவைத்தவாறு பசியாறி எழுந்தான்.

கணேசன், குப்பை மைதானத்தை ஒட்டிய புறம்போக்கில் குடிசைப் போட்டுக் குடித்தனம் பண்ணினான்.

பெற்றோரைச் சின்ன வயசிலேயே இழந்தவன். மாமன்காரனின் பராமரிப்பில் வளர்ந்து வாலிபத்துக்கு வந்தான்.

குடிகாரனான மாமனின் இம்சை தாங்காமல், பஞ்சாயத்து வேலையில் சேர்ந்தான்.

தானுன்டு தன் பாடுண்டு என, எந்த வம்பு தும்புக்கும் போகாமல் பொழப்பே கதியாய் கிடந்தான்.

அம்சலா தந்தை இல்லாமல், தாயின் ஒத்தைப் பாட்டில், சிரமப்பட்டு வளர்ந்தாள்.

“வேலாயி நீ ஆம்படையான் இல்லாதவ, காலாகாலத்துல பெத்தவளை ஒருத்தனுக்குப் புடிச்சுக் குடுத்துப், பாரத்தை ஒழிச்சுக்கனும்”

சிங்காரியக்கா சொன்னதில் நியாயம் இருந்தது.

“நல்லவனாக் கிடைச்சா முடிச்சுடலாம்”

“மாமனூட்ல மல்லுக் கட்டீட்டுக் கிடக்கிற கணேசன், இவளுக்கு ஏத்தவனா இருப்பான்”

“அவனுக்கு இருக்கக் கூட இல்லிடம் இல்லையே?”

“உனக்கு மட்டும் வாழுதாக்கும்!, பொறந்தவனோட பொடக்காளி இடத்துல, கூரை போட்டுக் கொடுத்திருக்கான்.”

அவள் வாயை அடைத்துச் சம்மதிக்க வைத்தாள். கணேசன் முறைப்படி பெண் கேட்டான்.

கல்யாணத்துக்குப் பிறகு, பிரசிடென்ட் ஐயாவின் ஒத்தாசையோடு ஊருக்கு ஒதுக்குப் புறத்தில் குடியேறினான்.

பஞ்சாயத்தில் தற்காலிகப் பணியாளராய், சுவீப்பர் வேலையில் வந்த வருமானத்தில், சிக்கனமாய் வாழப் பழகிக் கொண்டான்.

அம்சலாவுக்கு நான்கு பன்றிகள் வாங்கி விட்டிருந்தான். அதில் வந்த வருமானம், மத்த செலவுக்குக் கடன் வாங்காமல் தப்பிக்க வைத்தது.

திருமணமான முதல் வருடமே முழுகாமல் இருந்தாள். பத்தாவது மாதத்தில் இரட்டையைப் பெற்றுப் போட்டாள்.

“கருப்பை வீக்காய் இருக்கு, கருத்தடை ஆபரேசன் பண்ணீட்டா நல்லது”

“இல்லை டாக்டரம்மா, பையன் ஒன்னு இருந்தா,??”

“நம்ம நாதாரிப் பொழப்புக்கு, இதுகளைக் காப்பாத்துனாலே போதும், அவ கிடக்கிறா, நீங்க பண்ணுங்கம்மா!”

“நல்லா யோசிச்சுச் சொல்லுங்க, பெண் குழந்தைகள் மட்டும் இருந்தால், அரசாங்கத்துலயும் பணம் கிடைக்கும்”

“சரீங்க!, அவரு இஸ்டப்படியே செஞ்சிடுங்க”

அரசு மருத்துவமனையில் உடன் இருந்து பார்த்துக் கொண்டதோடு, டிஸ்சார்ஜ் ஆகிக் கூட்டி வந்து, கண்ணும் கருத்துமாகத் தாயையும், சேய்களையும் பார்த்துக் கொண்டான்.

குழந்தைகள் தவழ்ந்து, நடந்து, வளர்ந்து கொண்டே செய்யும் சேட்டைகளை ரசிப்பதில், அவனுக்கு அலாதிப் பிரியம்.

வேலாயி அவ்வப்போது வந்து போவதுண்டு. அவள் உதவி எதையும் அம்சலா எதிர்பார்த்து இருக்கவில்லை. எல்லாவற்றையும் இழுத்துப் போட்டுக், கணேசனே செய்துக் கொடுத்தான்.

“கணேசன் புருசனா வர நீ கொடுத்து வச்சிருக்கனும்டி, அள்ளுறது குப்பைன்னாலும், அவன் மனசு கோபுரம்டி”

சிங்காரியக்கா வாயெல்லாம் பல்லாகச் சொன்ன போது, அம்சலாவுக்குப் பெருமை பிடிபடவில்லை.

வயித்துக்கும், வாய்க்கும் போக, மிச்சம் பிடித்துப் பஞ்சாயத்து மேஸ்திரியிடம் சீட்டுப் போட்டு வந்தான்.

கட்டி முடியும் போது, பெரிய தொகை வரும், துளியூண்டு இடம் வாங்கிக் கிரையம் பண்ண வேண்டும் என்பது அவனுடைய ஆசை.

அதுவரைக்கும் நாற்றத்துக்குள் மாரடித்து ஆக வேண்டும். அது அவர்களுக்குப் பழகிப் போய் விட்டது. பன்றித் தொழுவமும், கொசுக் கடியும் சகித்து வாழும் மனநிலை வாய்த்து இருந்தது.

அன்று கணேசனுக்கு இருப்புக் கொள்ளாமல், உள்ளம் கிடந்து அடித்துக் கொண்டது.

“திடீர்னு நம்மளைக் காலி பண்ணச் சொன்னா, நாம் என்ன செய்யுறது?, இந்த இடத்துல குப்பைக் கிடங்கு கட்டப் போறாங்களாம்”

“என்ன சொல்லுறீரு?”

“சம்பளம் வாங்கப் போனப்ப, ஆபீஸ்ல கிளர்க்கு சொன்னாரு, கேட்டதில் இருந்து கையுங் காலும் ஓடலை!”

“மகமாயி புண்ணியத்துல, ஏதோ நாலு காசு சம்பாதிச்சு வஞ்சனை இல்லாமப் பொழப்பு ஓட்டீட்டு இருக்கையிலே, இப்படிப் பொசுக்குனு புலம்புறீரே?”

“ஆமா, அம்சு! சிறுசுகளை வச்சுட்டு சிவனேனு பொழுதைப் போக்கீட்டு இருந்தோம். இடியாச் சொல்லிப் புட்டாங்க. இனிப் போக்கிடத்துக்கு எங்கே போவோம்?”

“எங்கம்மாவோட போயி ஒட்டிக்கலாமா?”

“அதுவே ஒண்டுக் குடிசையில, ஒதுங்கிக் கிடக்குது, தம்பி பசங்க குடியும், குடித்தனமும் ஆனா, எந்திரிக்கச் சொல்லிடுவாங்களோனு மூக்கைச் சிந்துது, இதுல நாம எங்கே நடுவுல போறது?”

“என்ன செய்யுறதுனே தெரியலையே?”

அவர்களின் புலம்பலில் பங்கெடுத்துக் கொள்ளாமல், மழலைகள்  துள்ளாட்டம் போட்டுக் கொண்டிருந்தன!.

நவீன மையம் கட்டி மக்குவது, மக்காதது எனத் தனித் தனியாகப் பிரித்து வளாகம் உருவாக்க, ஊராட்சிக்கு அனுமதி கிடைத்து இருந்தது.

ஏற்பாடுகள் துரிதமாக நடந்தன…

கணேசனும், அம்சலாவும் துக்கம் தொண்டையை அடைக்க, சோறு தண்ணி இறங்காமல் தவித்தனர்.

ஒன்றியப் பொறியாளர் வி.ஏ.ஓ.-வோடு வந்து சர்வே செய்தார்.

“ஒரு வாரம் டைம் தர்றோம், குடிசையைப் பிரிச்சுடுங்க, இல்லீனா நாங்களே தூக்க வேண்டி இருக்கும்”

“இவ்வளவு கறாராப் பேசுனா எப்படீங்கய்யா?, நாங்க எங்கே போவோம்!”

“நான் என்ன கணேசா செய்ய முடியும்?, டூட்டியைச் செஞ்சுத் தானே ஆகனும்!”

“வெளியில் போறதுக்கும் இப்பொ ஒன்னும் துப்பு இல்லீங்ளே சார்!”

“காலனிப் பகுதியிலே யாருதாச்சும் வீடு இருக்கானு விசாரி!”

“அவனவனே புள்ளைக் குட்டிக்கு, இடம் போதலைனு, சர்க்காருல மனுப் போட்டுக் காத்திருக்கான், இடம் எங்கியும் இல்லீனு தாசில்தாரு சொல்லீட்டாராம், இதுல நான் எங்கே தேடுவேன்?”

“வேறு ஏதாச்சும் முயற்சி பண்ணு, நீயும் விண்ணப்பம் கொடுத்து வையி”

“முன்னமே ஏகப்பட்ட பெட்டிசன் கொடுத்தாச்சு, பட்டா வாங்குனவங்களும், பசங்களுக்குனு மறுபடியும், மறுபடியும் கேட்கிறாங்க, அதனால இப்போதைக்கு இடம் தர்றது நடக்கவாப் போகுது?”

“வாடகைக்குக் கீடகைக்குப் பாரு”

“மத்த சனங்க சுத்தமில்லாத எங்களைப் பாத்தாலே பத்தடித் தள்ளிப் போவாங்க, இதுல, குடியேற ஒத்துப்பாங்களா?”

பேசிக் கொண்டே குப்பை மேட்டருகில் வந்த பொறியாளர், அங்கு ராமாயி லட்சுமாயியோடு விளையாடிக் கொண்டிருப்பதைக் கவனித்தார்.

டப்பாவைப் பலமாகக் குலுக்கினாள்.

“சூ பூம்பா, இப்பொ என்னோட ஆட்டம்”

கடகடனு கற்கள் உருண்டன.

“ராமாயி, இன்னிக்கு உன் நெத்தி பொடைக்கப் போவுது, மூனு வாட்டில ஒன்னு கூட நீ வர்ல”

“எப்பவும் முன்னால ரவுண்டு நீ வருவே, அப்புறம் குப்புற விழுந்துடுவே”

“இன்னிக்குப் பாரு!, பழிக்குப் பழி வாங்குறனா இல்லையானு”

அவர்களுக்கு அருகில் சென்றார்.

“பாப்பா, அந்தக் கல்லைக் கொடு!”

அதிகாலையிலேயே குளிப்பாட்டிப் புதுச் சொக்காய் மாட்டிக் கொண்டு, தங்களைத் தாங்களே பார்த்துக் கொண்டனர்.

“என் கண்ணே பட்டுடுன்டா செல்லங்களா!”

ஒவ்வொருத்தியையும் தூக்கிக் கொஞ்சி விட்டு இறக்கி விட்டான்.

“பளிச்சுனு  இருக்கனும், துணியைப் பெரட்டக் கூடாது”

“செரீப்பா, சுத்தமா வெச்சிருக்கிறோம்”

கழுத்தைத் தோள் வரை சாய்த்து லட்சுமாயி சொன்னாள். ராமாயி அதை ஆமோதித்தாள்.

அம்சலா சாயம் போகாத சேலையைக் கட்டிக் கொண்டாள்.

கணேசன் வெள்ளையும் சொள்ளையுமாய் ரெடியாகி இருந்தான்.

ஜீப் வந்து நின்றது!

“கணேசா, வந்து ஏறுங்க”

டிரைவர் கதவைத் திறந்து விட்டார்.

“பாத்து ஏறுங்கடாக் குட்டிகளா?”

பொறியாளர் வாண்டுகளைத் தூக்கி ஏற்றி விட்டார்.

கணேசனும், அம்சலாவும் ஓரங்களில் உட்கார்ந்து  நடுவில் இருத்திக் கொண்டனர்.

ஆக்சிலெட்டரை உசுப்பி உர்ர் ஓசை எழுந்தது.

முன் சீட்டில் எஞ்சினியர் ஏறிக் கொண்டார்.

எஞ்சினைப் போலவே, இரண்டு பேரின் இருதயமும் உற்சாகத்தில் வேகமாக அடித்துக் கொண்டன.

அதிகபட்சமாக டவுன் ஆஸ்பத்திரிக்கு பஸ்ஸில் போய் வந்து இருக்கிறார்கள்.

ஏதோ ஒருமுறை, வேலாயி பாட்டியின் தங்கச்சி வீட்டு விசேஷத்துக்குத் தூரமாய் கூட்டிப் போய் வந்தார்கள்.

பைக்கில் கூட இதுவரை போனதில்லை. சொந்தக்கார அண்ணன்கள் டுர்ர்ரு-னு விடும் போது, ஏறிக் கொள்ள வேண்டும் என மனம் அடித்துக் கொள்ளும்.

“ப்பா, நீயும் இப்புடி வாங்கிக்க, நாமளும் சவாரி விடலாம்”

“பன்னிக் குட்டிகளை நல்லாப் பாத்துக்குங்க, வித்து டீ.வீ.எஸ். பைக்கி வாங்கி, உங்களைக் கூட்டீட்டுச் சுத்துறேன்”

கணேசன் சொன்னதில் இருந்து, அவைகளை ஆசையாய் பார்த்துக் கொண்டனர்.

இப்படிப்பட்ட பயணம் இப்போது வரை வாய்க்கவில்லை.

நகரம் வந்ததும் நல்ல ஓட்டலுக்கு முன் நின்றது.

“நல்லாச் சாப்பிடுங்க, இதுக கேட்கிறதை வாங்கிக் கொடுங்க”

ருசியாகக் காலை டிபன் சாப்பிட்டனர்.

பொறியாளர் புதுப் புது ஐட்டமாக ஆர்டர் செய்தார்.
ஐஸ்கிரீம் வந்த போது, ஸ்டிக்கில் வழித்து நாக்கில் வைத்தனர். கணேசன் அடிக்கடி வாங்கித் தருவதுண்டு, அதனால், ருசிப்பதில் நல்ல பரிச்சயம் இருந்தது.

“வேறு ஏதாச்சும் வேணுமாப்பா,”

“போதும் சார்”

லட்சுமாயி, அப்பனின் காதுக்குள் கிசுகிசுத்தாள்.

“என்ன சொல்லுது”

“டெய்ரிமில்காம், அது இப்பொ வேணாம், திரும்பும் போது வாங்கிக்கலாம், விரலு கறையாயிடும்”

“ப்பா, அப்பொ நெறைய”

“கேட்குற அளவுக்கு வாங்கித் தர்ரேன். ஏறுங்கம்மா, சுட்டிப் பொண்ணுகளா”

“குறும்பு செஞ்சா, ஐயா அடிச்சுப் போடுவாரு”

அடக்க ஒடுக்கமாய் ஏறிக் கொண்டனர்.

ஆட்சியர் அலுவலகம் பெரியக் கட்டிடமாய் இருந்தது.

முதல் தளத்தில், மாவட்ட ஆட்சித் தலைவர் தன் அறையில், அவர்களுக்காகக் காத்துக் கொண்டிருந்தார்.

கணேசன் கை கட்டி நின்று கொண்டான். அம்சலா ஒடுங்கி நின்றாள்.

“இவுங்க தான் உன் பொண்ணுகளா?”

“ஆமாங்கைய்யா, ராமாயி, லட்சுமாயி”

“இதுக விளையாடீட்டிருந்த கற்கள் அபூர்வமானவை, பட்டை தீட்டிப் பார்த்ததில் விலை மதிப்புள்ள வைடூரிய வகையைச் சேர்ந்ததுனு தெரிய வந்திருக்கு, அந்த ஏரியாவை ஆய்வு செஞ்ச கனிம வளத் துறையினர், அங்கு நிறையக் கிடைக்க வாய்ப்பிருக்குனு சொல்லி இருக்காங்க!, இதைக் கண்டுப் பிடித்ததற்காக, இந்தக் குழந்தைகளைப் பற்றி அரசாங்கத்துக்குத் தெரியப் படுத்தி இருக்கேன்!”

கலெக்டரின் அருகில் சென்ற ராமாயி, அவரின் கையிலிருந்த கல்லைப் பிடுங்கினாள்.

மொக்கை மொழியில், வெடுக்கென்று கேட்டாள்.

“இது என்னூடக் கல்லுரண்ட, அஞ்சாங்கல் ஆட்லாமா???”

– கதைப் படிக்கலாம் – 11

இதையும் படியுங்கள்மன ஊனம்!!

Exit mobile version