தனிமை என்னை தாலாட்டுகிறது…

– கு. ரூபேஷ்

ஊர் பார்த்து வியந்த வண்ணம் நாளின்றி, பொழுதின்றி, நகையாடி  உறவாடிய நட்பு, இன்று அதில் ஒன்று  தவிக்கிறது, (தன் வாழ்வை வாழ) மற்றொன்று ரசிக்கிறது, (தன் வாழ்வை எண்ணி). பிரிவு காதலர்களுக்கு மட்டும் அல்ல, நட்புக்கும் உண்டு என்று உணர்ந்த தருணம் அது. நட்பில் பேதம் இல்லை என்பார்கள்… உண்மை தான். ஆனால், ஒரு கை மட்டுமே ஒலியெழுப்ப முடியாதல்லவா. அப்பொழுது தான் நான் உணர்ந்தேன், இங்கு ஒரு மனம் மட்டுமே துடித்திருந்ததைக் கண்டு. அது ஒரு கரிநாள். இதுவும் கடந்துப் போகும் என்று முற்பட்டேன், என் வாழ்வை தேடி.

வாசகர்களுக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம்.,

இக்கதையில் வரும் இளைஞன், நடுத்தர குடும்பத்தில் பிறந்து,  வளர்ந்து நன்கு படித்து பட்டம் பெற்ற ஒரு பொறியாளன். கனவோ மருத்துவம், நிகழ்வோ பொறியியல், எதிர்காலம்???

முதுகெலும்பு இல்லாத இச்சமூகத்தில் தன் முயற்சியும் சிறுபங்கு இருக்க வேண்டும் என்று, அவன் நாளுக்கு நாள் தன் திறமைகளை கொண்டு பல அனுபவங்களை பல துறைகளின் மூலம் கற்றுத் தேர்ந்தான். இருந்தபோதும் அவன் பழைய நினைவுகளும் அவ்வப்போது வந்துப் போவதும் உண்டு.

அவற்றில் ஒரு சில, பகைவராயினும் தன்னிடம் யாசகம் கேட்டு வருகையில் வருவோர்க்கு, மனக்குறைவின்றி நிறைவோடு உதவிசெய்யும் மனப்பாங்கு மிக்க ஓர் இளைஞன். பின்பு தனக்கென்ன நேரும் என்று அறியாத அவன் மனம், உதவும் நோக்கம் ஒன்றே குறிக்கோளாய் இருந்தது.

முன்னர் கூறியது போல் அது ஒரு கரிநாள். அன்று அவன் குடும்பநிலை, காரிருள் சூழ்ந்த அடர்கருமேகங்களாய் பலதுயரங்கள் அவனை ஆட்கொண்டன. அவன் தன் வாழ்வை தொடங்கும் முன்னரே, அதில் இருந்து இன்னும் மீளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தப்போதிலும் அவன் முயற்சிகள் முடிவடையவில்லை என்பது தான் வியப்பைத் தரவல்லது. இவையெல்லாம் கண்டும் காணாதவாறு இவனுக்கே எதிர்மறையாய் செயல்புரியும் இவன்கண் பயனடைந்தோர். தெரிந்தும் அவர்களிடம் பகைமைக் கொள்ளாது, பழகிய நல்லுள்ளங்கள் என்றும் வாழ்க என வாழ்த்தி தனித்து நின்றான்.

பிறர் தூற்றுதலின் மத்தியில் தான் கற்ற கல்வி என்றேனும் ஓர் நாள் பயன்பெறும், இன்று நமக்கு அவை கை கொடுக்கவில்லை என்றாலும். கற்ற ஞானமும், பெற்ற போதனைகளும் நம்மை நல்வழிப்படுத்தியே ஆகும் என்று முனைப்புடன் தன் இலக்கை நோக்கிய பயணமாய், அவன் எழுதுகோல் அவனை செம்மைப்படுத்திக் கொண்டு இருக்கிறது.

வெறுக்கை (பணம்) தான் பெரிதென்று இந்த வெறுங்கையோனின் மனதைப் புண்ணாக்கி, பழகியோர் பகைத்து நிற்க. தனக்கென தானே பாதையமைத்து, தளராது நாளும் உழைத்து படைத்தவன் எங்கிருந்தோ நம்மை ஆட்கொண்டிருக்க விழுந்தவன் எழுவது கடினம் என்று காக்குரலிட்டு கரைந்து கொண்டிருக்கும் காகங்களாய், இவனைச் சுற்றி வட்டமிட்டு பறக்கிறார்கள்.

பாவம், பழமையை உணராத மனிதர்கள். அவர்கள் மேல் தவறில்லை பணம் என்னும் மாயை அவர்களை ஆட்கொண்டு உள்ளது. என்றேனும் ஓர் நாள் இந்நிலை மாறும். துயில் கொண்ட பின்னும் துளிர் விடும் நெல் மணியாய், எந்நிலை வந்தாலும் தன்நிலை மாறப்போவதில்லை. இதையறிந்தும் இவனிடம் பகைமை கொண்டு நிற்கிறான் என்றால், அவன் நன்கு பழகியவனாக தான் இருத்திருக்க வேண்டும். ஆம், ஈரைந்து ஆண்டுகள் தாண்டிய மூவைந்து ஈற்றின் மத்திம ஆண்டுகால நட்பு அது.

இடர்களும், வலிகளும் வழிநெடுங்கில் வலுத்து நிற்க… எள்ளலும், எச்சமும் வெகுமதியாய் காலம் எனக்கு பெற்றுத்தந்தது. செய்நன்றி மறந்தாரை துச்சமாய் எண்ணி, அவர் வழி வரும் இடையூறுகளை புறந்தள்ளி புணரும் புதுக்காலையாய், காளை நான் அவர்கள் முன் புறமுதுகிட்டு ஓடாது என் மதிகளம் கொண்டு மதியாதாரை கதிகலக்கம் செய்து வெற்றி காண்பேன். அதுவரை நான் ஓயப்போவதில்லை.

என் மதி பிறரின் வாழ்வில் நிதியாய் வளர்கிறது என்றால், அது என்னை மட்டும் தவிக்கவிடுமா! என்ன? இல்லை, நாளுக்கு நாள் இன்னும் பன்மடங்கு தன்னை தானே தனக்காக மெருகேற்றிக் கொண்டு தளராமல் நடைப்பழகுகிறேன். தன் முயற்சிகள் என்றேனும் ஒரு நாள் தன் வேதனைகளை எல்லாம் மாற்றி, எம்மை நல்லதோர் நிலைக்கு இட்டுச் செல்லும் என்ற ஒன்றுதான், என் மனதில் பசுமரத்தாணிப்போல் வேர் ஊன்றி என்னை தினந்தினம் புதுப்புது ஆர்வங்களோடு, ஆர்ப்பாட்டம் இல்லாத புணரி போல் அமைதி காக்கிறது. என்னை வீழ்த்தியவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள், நான் நிமிர்ந்து நிற்க பாதை அமைத்ததற்க்கு. நான் நிமிர என் எழுதுகோல் சாய்கிறது, என்னையும் வாழவைப்பதற்காக.

பல நேரம் நினைப்பதுண்டு, தன் வலியை விட தனக்கு உருவம் கொடுத்து கருவோடு வலிதாங்கி, ஈரைந்து திங்கள் பல இடர்களையெல்லாம் கடந்து, இவ்வுலகில் பணி செய்ய வாடா மகனே! என்று அழைத்த அந்த தாயின் அழுகுரலும், தன் மூச்சுள்ளவரை எந்நிலை வந்தாலும் உன்னைக் காப்பேன் என்ற தந்தையின் ஆழ் மனக்குமுறலையும் விடவா, இவர்கள் நமக்கு வலியைத் தரப்போகிறார்கள் ஆஹ… இல்லை. என்னைத் தாங்கி தவழவைத்த அந்த அன்புக்கரங்களை இன்று நான் தாங்கிப் பணியும் சிறுதுலாபாரமாய் இருக்க வேண்டும் என்று முனைப்புடன் முயல்கிறேன்.

எது நடந்தாலும், எவர் தடுத்தாலும், தன் முயற்சி இனி தனக்கானது என்று உரிதாக்கிக்கொண்டு, தனித்து நின்று தன் பயணத்தை தானே பயணித்து, தன் சுவடுகளை இனியாராலும் அழிக்க முடியா வண்ணம், இன்னுமின்னும் ஆயிரம் மடங்கு வேகத்துடன் விவேகமாய் செயல்புரிந்துக் கொண்டிருக்கிறேன். என்னைப் படைத்தவன் என்னையும், என்னை சார்ந்தவர்களையும் காப்பான் என்ற அசட்டுத்தனமான நம்பிக்கையுடன்.

என் இலக்கை நோக்கிய பயணம் தொடரும்…

– கதைப் படிக்கலாம் – 135

இதையும் படியுங்கள் : (பொ) புது சொத்து

Exit mobile version