– ஆதலையூர் சூரியகுமார்

மளிகைக் கடைக்காரர் மாரிமுத்துவின் மனைவி காமாட்சி, பேருந்தில் இறங்கி நடந்து வந்துக் கொண்டிருந்ததைப் பார்த்தப் போது, ஆச்சரியமாக இருந்தது சின்னாச்சிக்கு. மாரிமுத்து மளிகை கடை என்றால் டவுனில் ரொம்பவே பரிச்சயம். டவுனை சுற்றியுள்ள எட்டுபட்டி கிராமங்களிலிருந்தும் இங்குதான் வந்து மளிகை பொருட்கள் வாங்கிச் செல்வார்கள். மொத்தம் மற்றும் சில்லறை வியாபாரம் என்று பெரிய போர்டு வைத்திருப்பார். கிராமங்களில் சின்ன சின்ன பெட்டிக் கடை வைத்திருப்பவர்கள் எல்லாரும், இவரிடம் வந்துப் பொருட்கள் வாங்கிக் கொண்டு சாக்குப்பையில் கட்டி சைக்கிளில் எடுத்துப் போவார்கள். பெட்டிக் கடைக்காரர்கள், மளிகை சாமான் வாங்க வருபவர்கள் என்று எப்போதும் மாரிமுத்து கடையில் கூட்டம் நிரம்பி வழியும்.
‘ஏப்பா எப்படி இருக்கீங்க? வடகுவளவேலியில் விவசாயம் எப்படி இருக்கு?’
‘ஏதோ இருக்கு, இன்னும் ஒரு தடவை வெண்ணாத்துல தண்ணி தொறந்துவிட்டா கதிர் வந்திடும்…. என்ன பண்ண போறாங்கன்னு தெரியலையே’ என்று கடை வாசலில் எப்போதும் ஒரு கலவையான சத்தம் கேட்டுக்கொண்டே இருக்கும்.
ஆனால் இப்போதெல்லாம் முகத்தில் கர்ச்சீப், முந்தானை என்று எதையாவது சுற்றி கட்டிக்கொண்டு வந்து நிற்பதால், யாரையும் யாருக்கும் அடையாளம் தெரிவதில்லை. அவரவர் பாட்டுக்கு பொருட்களை வாங்கிக்கொண்டு போய்விடுகிறார்கள். பேச்சிரைச்சல் குறைந்துப் போய் விட்டிருந்தது.
கூட்டம் குறையும் வரை கால் கடுக்க, தான் கொண்டு வந்த காட்டுப் பீர்க்கங்காய் கூடுகளுடன் நிற்பாள் சின்னாச்சி.
‘சின்னாச்சி நீ கொஞ்ச நேரம் அப்படி ஓரமா உட்காரு, வியாபாரத்தை எல்லாம் முடிச்சுட்டுதான் உன்கிட்ட வாங்க முடியும்’ சிடுசிடுவென்று விழுவார் மாரிமுத்து.
உடனே அவர் மனைவி காமாட்சி தான் கொஞ்சம் புன்னகை பூப்பாள்.
‘சின்னாச்சி நல்லா இருக்கியா? பொண்ணு பள்ளிக்கூடம் போயிட்டு இருக்காளா? கொஞ்ச நேரம் உட்காரு வாங்கிக்கிறோம்’ என்பாள்.
வெண்ணாற்றங்கரையில் காய்த்து, காய்ந்து கிடக்கிற பீர்க்கங்காய்களை பறித்து விற்பதுதான் சின்னாச்சிக்கு வேலை. அதில்தான் பிழைப்பு ஓடிக்கொண்டிருந்தது.
அதிலும் இப்போது ஆற்றங்கரையோரம் கைக்கு எட்டுற மாதிரி இருந்தக் காட்டு பீர்க்கங்காய்களை எல்லாம், ஏற்கெனவே பறித்து விட்டார்கள். இப்போதெல்லாம் பறிப்பதற்கு நெரிசலான மரங்களுக்கிடையில் போக வேண்டி இருந்தது. கல்லும் முள்ளும் கிடந்தது. அடர்த்தியான நீர்முள்ளிச்செடிகள் முளைத்து, காய்ந்து கிடந்தன. ஆற்றை தூர்வாரிய போது புல்டோசர் வைத்து அள்ளிக் கொட்டிய சேறு காய்ந்துப் போய், முட்டு முட்டாய்க் கிடந்தது. சில இடங்களில் மரங்கள் வேரோடு பெயர்ந்து கிடந்தன. இவற்றையெல்லாம் தாண்டிப் போய்தான் காட்டுப் பீர்க்கங்காய்களை பறித்து வர வேண்டி இருந்தது.
இதுவும் சமையலுக்கு பயன்படக்கூடிய பீர்க்கங்காய்தான். ஆனால் அதிக கசப்பாக இருக்கும் என்பதால், யாரும் சமையலுக்கு பயன்படுத்துவது இல்லை. ஆடு மாடுகளும் சாப்பிடாது. அதுவாக ஆற்றங்கரைகளில் முளைத்து, வளர்ந்து கொடியாக படர்ந்து கிடந்தது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு இதனை யாரும் சீண்டிக் கூட பார்க்க மாட்டார்கள். அருகில் உள்ள தொடக்கப் பள்ளிக்கு ஐந்தாம் வகுப்புக்கு புதிதாக பாடம் எடுக்கவந்த ராமமூர்த்தி வாத்தியார்தான், காட்டு பீர்க்கங்காய் பற்றி ஊர் மக்களுக்கு எடுத்துச் சொன்னார். இந்த காட்டு பீர்க்கங்காய் நார்களைத்தான் நகரங்களில் பாத்திரம் தேய்த்து கழுவ பயன்படுத்துகிறார்கள். கம்பியால் செய்யப்பட்ட நார்கள், நைலான் நார்கள் ஆகியவற்றிற்கு பதிலாக இப்போது இந்த காட்டுப் பீர்க்கங்காய் நாருக்குத்தான் நகரங்களில் மவுசு அதிகம், வெளிநாடுகளில் ஒரு பீர்க்கங்காய் கூடு ஐந்நூறு ரூபாய், ஆயிரம் ரூபாய் என்று விலை போகிறது.
காட்டுப் பீர்க்கங்காயில் உள்ள ஓடுகளைப் பிரித்து எடுத்து விட்டு, உள்ளே உள்ள விதைகளை எடுத்து விட்டால் போதும். ஒரு கூடு ஐந்து, ஆறு ரூபாய்க்கு விற்கலாம். தஞ்சாவூர், திருச்சி மாதிரி நகரங்களில் இதை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு இயற்கையான நார், ஆர்கானிக் நார் என்று சொல்லி, ஒரு கூடு இருபது ரூபாய்க்கு விற்கிறார்கள்.
இந்த ஊர்க்காரர்களுக்கு இதன் மதிப்பு தெரியாததால் இப்படி வீணாக விளைந்துக் கிடக்கிறது. கடைகளில் விற்கிற பிளாஸ்டிக் நார்களில் சோற்றுப் பருக்கை மற்றும் சோற்று துணுக்குகள் அப்படியே ஒட்டிக்கொண்டிருக்கும். அதில் பூஞ்சைகள் வளரும். அந்த பிளாஸ்டிக் நாரை வைத்து திரும்பத் திரும்ப தேய்க்கும்போது, பாத்திரத்தில் மீண்டும் கிருமி ஒட்டிக் கொள்ளும். ஆனால் உங்கள் ஊரில் இப்படி அனாமத்தா காய்ச்சித் தொங்குகிற பீர்க்கங்காய் கூடுகள் இயற்கையாகவே கிருமிகளைக் கொல்லக் கூடியவை.
இது எவ்வளவு பெரிய விஷயம்? என்றார்.
ஊர்மக்கள் அப்போதுதான் இந்த காட்டுப் பீர்க்கங்காய்கள் விலை போகும் என்ற விவரத்தையே தெரிந்துக் கொண்டார்கள். வெண்ணாற்றுக் கரைக்கு போய் பீர்க்கங்காய்களை பறித்துக்கொண்டு வந்து, அருகில் இருக்கிற டவுனில் விற்க ஆரம்பித்தார்கள்.
ஆனால் காட்டுப் பீர்க்கங்காய்களை பறித்து வருவது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை. ரொம்பவே சிரமப்பட்டார்கள். காட்டு மரவட்டைகள், பூச்சிகள் இவற்றையெல்லாம் தாண்டிப்போய் தான் சேகரிக்க வேண்டியிருந்தது. வெளியூர் கொண்டுபோய் விற்க முடிவதில்லை.
அருகில் இருக்கிற நகரத்தில் மாரிமுத்து மளிகை கடையில்தான் விற்க வேண்டியிருந்தது. அவர் ஒரு நாரை மூன்று ரூபாய்க்கு எடுத்துக் கொள்வார். ஆனால் அதே நாரை அவரே சுத்தம் செய்து ஃப்ளாஸ்டிக் பையில் போட்டு பத்து ரூபாய்க்கு விற்றுவிடுவார். இது தெரிந்தாலும் ஒன்றும் சொல்வதில்லை. நிறைய பேர் காட்டு பீர்க்கங்காயை பறிக்க முடியவில்லை என்று விட்டு விட்டார்கள்.
ஆனால் சின்னாச்சிக்குதான் வேறு வழி இல்லை. தனியாளாய் நின்று ஐந்தாம் வகுப்பு படிக்கும் தன் மகளை வளர்க்க வேண்டிய சூழல். கிராமத்தில் வேறு வேலைக்கும் வாய்ப்பு இல்லை. கட்டிட வேலைகள் எல்லாம் செய்ய அவள் உடல் ஒத்துக்கொள்வதில்லை. தேடித் தேடிப் பிடித்து ஒவ்வொரு பீர்க்கங்காயாக கொண்டுவந்து சேர்ப்பாள். கோடையாக இருந்தால் ஒரே இடத்தில் நின்று இருபது காய்களை பறித்து விடலாம். ஆடி பிறந்துவிட்டது. அங்கொன்றும் இங்கொன்றுமாக பழுத்து தொங்கியது.
இரண்டு மூன்று கிலோ மீட்டர்கள் நடந்தால்தான் இருபது காய்களை சேகரிக்க முடிந்தது.
அன்று அப்படித்தான் பழுத்துக் காய்ந்து கிடந்த பீர்க்கங்காய்களை கூடை நிறைய பறித்துக்கொண்டு, களத்திலேயே வைத்து உரித்தாள். விதைகளை நீக்கி சுத்தம் செய்வதற்குள் பொழுது சாய்ந்துவிட்டது. எடுத்துக்கொண்டு மாரிமுத்து மளிகை கடைக்கு ஓடினாள். ‘பீர்க்கங்காய் நார்களை விற்றுவிட்டு, அரிசி வாங்கிக்கொண்டு போய் சமைக்க வேண்டும். மகள் பசியோடு காத்துக் கிடப்பாள்.
நீடாமங்கலத்தில் ரயில்வே கேட் போட்டிருந்தார்கள். நீண்ட தூரத்திற்கு சாலை நிரம்பி வழிந்தது.
‘மாரிமுத்து என்ன மனநிலையில் இருக்கிறார் என்று தெரியவில்லையே!
பயந்துக் கொண்டே போனாள் சின்னாச்சி.
நினைத்த மாதிரியே மளிகைக் கடையில் கூட்டம் நிரம்பி வழிந்தது. பலமுறை மாரிமுத்துவின் முகத்திற்கு முன்னால் நின்று, தான் வந்திருப்பதை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தாள் சின்னாச்சி.
மாரிமுத்து கண்டுகொள்ளவே இல்லை.
காமாட்சி அம்மாள் ஒரே ஒருமுறை பார்த்து சிரித்துவிட்டு, சீட்டை எழுதுவதில் மும்முரம் ஆகிவிட்டார்.
பொழுது சாய்ந்து இருள் கவிந்து விட்டது. ‘மகள் வீட்டில் தனியாக இருப்பாளே’ என்று நினைத்தப் போது கண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது.
ஏழு மணிக்குதான் இவள் பக்கம் திரும்பினார் மாரிமுத்து.
‘ஆத்தா நீ ஏற்கனவே கொடுத்த பீர்க்கங்காய் எல்லாம் அப்படியே கிடக்கு’, ரெண்டு ரூபா போட்டு எடுத்துக்கிறேன்….. இருபது நார் இருக்கா, இந்தா நாற்பது ரூபாயை பிடி’ என்று சொல்லிக்கொண்டே இரண்டு இருபது ரூபாய் நோட்டுகளை எடுத்து நீட்டினார் மாரிமுத்து.
‘ஐயா எப்போதும் மூணு ரூபாய்க்கு வாங்குவீங்க ஐயா, ஒரு எட்டணா சேர்த்து அம்பது ரூபாயா கொடுங்கய்யா…’
எவ்வளவோ கெஞ்சி பார்த்தாள் சின்னாச்சி.
கூடையோடு தூக்கி வெளியே வைத்தார்.
‘ஒண்ணும் வேணாம் எடுத்துட்டுப் போ’ -கோபமாக சொன்னார் மாரிமுத்து.
‘ஏங்க, பாவம் அவ, இன்னொரு அஞ்சு ரூபாயாச்சும் சேத்துக் கொடுங்க, அவ பிள்ளைக்கு தின்பண்டம் ஏதாச்சும் வாங்கிட்டு போவா’
-சின்னாச்சிக்காக காமாட்சி அம்மாள் பரிந்துப் பேசினார்.
‘பொம்பள இரக்கப்பட்டா பொன்னெல்லாம் பொசுங்கிப் போய்டும், நீ வேலையை பாரு’
காமாட்சியம்மாளை அதட்டினார் மாரிமுத்து.
‘சரி சின்னாச்சி நீ கிளம்பு, புள்ளைக்கு ஏதாச்சும் வாங்கிட்டுப் போ’
-காமாட்சி அம்மாள் சொல்லி அனுப்பினார்.
ஏய் சின்னாச்சி, உன்னை பார்க்கத்தான் வந்தேன், நீ என்னமோ கனவுல இருக்க? காமாட்சி அம்மாள் சொன்னார்.
‘என்னை தேடி வந்து இருக்கீங்களா? வாங்கம்மா வீட்டுக்குப் போகலாம். கொஞ்சம் காபி போட்டுத் தாரேன்’ – சின்னாச்சி மகிழ்ச்சியிலும், பரபரப்பிலும் படபடப்பாக பேசினாள்.
‘இல்ல சின்னாச்சி நான் உடனே கடைக்குப் போகணும், வர்ற டவுன் பஸ்ஸ விட்டா வேற பஸ் கிடையாது’
‘இந்தா நீ அன்னைக்கு கொடுத்த பீர்க்கங்காய்க்கு காசு’
நூறு ரூபாய் தாளை சின்னாச்சி கையில் வைத்துத் திணித்தார் காமாட்சி அம்மாள்.
அன்னைக்கு நான் அவ்வளவு சொல்லியும் கேட்காமல் உனக்கு காசு குறைச்சு கொடுத்தார் இல்லையா என் வீட்டுக்காரர். அன்னைக்கு ராத்திரி மெழுகுவர்த்தி வச்சு பீர்க்கங்காய் நாடுகளை பிளாஸ்டிக் பையில் போட்டு பேக் பண்றபோது, திடீர்னு தீ பிடிச்சி எரிஞ்சி போச்சு. நல்ல வேளை, பெரிய ஆபத்து இல்லை. நூறு நார்களுக்கு மேல் எரிஞ்சு போச்சு… ஆயிரம் ரூபாய்க்கு விற்கலாம், அவ்வளவும் நஷ்டம். அப்பத்தான் உணர்ந்துப்பார்த்தார். பேசாம உன்கிட்ட ஒரு பத்து ரூபாய் சேர்த்து கொடுத்திருக்கலாம்னு சொன்னார்.
‘அதான் உன்கிட்ட உன்கிட்ட பத்து ரூபாய் அநியாயமா குறைச்சதுக்கு நாங்க நஷ்டத்தை, தண்டனையை அனுபவித்து விட்டோம். அதற்கு பரிகாரமாகத்தான் காசு கொடுக்க உன்னை தேடி வந்து இருக்கேன், அவரே கொடுத்துவிட்டு வர சொன்னார். நீ எப்ப வேணாலும் நார்களை எடுத்துட்டு வா சின்னாச்சி…
இனிமே காசு குறைக்க மாட்டார், நான் குறைக்கவும் விடமாட்டேன், கையில் ரூபாய் நோட்டை திணித்துவிட்டு காமாட்சி அம்மாள் பேருந்துக்காக நடந்தார்.
காமாட்சி அம்மாள் கண்களில் கருணையும், உதட்டில் புன்னகையும் வழிந்தது.
-காசை வாங்கி தன் கண்களில் ஒத்திக்கொண்டாள் சின்னாச்சி. அந்தப் பணத்தில் உழைப்பின் வாசம் வீசியது.
– கதைப் படிக்கலாம் – 63
இதையும் படியுங்கள் : நிறைய மாற்றங்கள்…