காத்திருந்த கண்களே..!

– கி. ரவிக்குமார்

அந்த மாதா கோவில் திருவிழா பிரசித்தம்.

சுற்றிலும் உள்ள ஊரில் இருந்து சாதி, மதம் வித்தியாசம் இல்லாமல் வந்து, மாதா பிறந்தநாளை கொண்டாடுவார்கள்.

யார் வந்தாலும், வராவிட்டாலும் ஜெனிபர் வந்து விடுவாள்.

இதோ! இப்போதும் வந்து விட்டாள். தன் குடும்பத்தோடு! ஒவ்வொரு முறை வரும் போதும், ஒரு உறவு அதிகமாக வரும்.

ஆரம்பத்தில் தன் குடும்பத்தோடு வந்தவள், அடுத்து தன் கணவனோடு வந்தாள்… பின் குழந்தையோடு… இப்போது கணவனின் குடும்பத்தோடு…!

சற்றே தீராத ஏக்கங்களும், கொஞ்சம் நிறைவேறிய ஆசைகளுமாக இருக்கும் நடுத்தர வயதை நெருங்கும் ஜெனிபர், விழாவைக் காரணம் வைத்து, குடும்பச் சொந்தங்களோடு, தன் ஆசைகளுடன் இறங்கினாள், கோவில் மண்ணில்.

கோவில் மண்ணில் கால் வைத்ததும், மனதில் அந்த நினைவுகள் நடைப்போட ஆரம்பித்து விட்டன!

வந்ததுமே, கோவில் கூட்டத்தில், ஆங்காங்கே அந்த முகம் ‘தென்படுதா’ என்று அவள் கண்கள் அனிச்சையாக தேட ஆரம்பித்து விடும்.

மனம் சற்றே வேகமாக அடித்துக்கொள்ளும்! ஆனாலும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டாள்!

வெகுநாட்களாகி விட்டது!… அந்த முகம் பார்த்து!… அந்த விழிகள் பார்த்து!…

அவள் எதிர்நோக்கும் அந்த முகம், ‘முருகன்’! சாமி முருகன் அல்ல. இவளை ரசித்த ஆசாமி, முருகன்.

என்ன உறவென்றே தெரியாமல் கடந்து போன முகம் அது!… கடைசிவரை, சொல்லாமலேயே போனப் பார்வை அது!   

‘இப்போதும் கூட..! மாதாவை பார்க்க முடியுதோ இல்லையோ!, முருகனை பார்க்க மாட்டோமா’ என்ற சின்ன ஆசையில் தான் வந்திருக்கிறாள், கைக்குழந்தையோடு!

திருமணமாகி இரண்டு வருடம் ஆகி விட்டது!… கையில் காலத்தின் பரிசாக குழந்தை!…

வேனில் இருந்து இறங்கிய அனைவரும், கோவில் கடைவிதியில் நடக்க ஆரம்பித்தனர்!

குழந்தைக்கு மொட்டை போட சந்தனம், பூ, பழம் வாங்க என… ஆளுக்கொரு திசையில், கடைகளில் மும்முரமாக…  

ஜெனிபருக்கோ, கோவில் கடைவீதியை பார்த்ததும், நினைவு பின்னோக்கி ஓடியது!

அவள் பருவமடைந்த நாளில் இருந்தே, அவளுக்கு முருகனின் முகம் பழக்கம்.

தன் உடல் மாற்றத்தோடு ஏற்பட்ட மனமாற்றத்துக்கு, முதல் பார்வையிலேயே வருடிக்கொடுத்தன, முருகனின் விழிகள்.

அவன் பக்கத்து ஊர் தான். இவள் வசிக்கும் ஊரில் இருக்கும், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தான் படித்தான்.

முருகனுக்கு அழகான, மென்மையான முகம். ‘துருதுரு’ வென்ற கண்கள்! எந்தப் பெண்ணும் ஒரு முறை திரும்பிப் பார்த்து விட்டுத்தான் போவார்கள்.

சைக்கிளில் தான் வருவான். ஆனாலும் அதை ஓரமாக நிறுத்தி விட்டு, தினமும் அவளுக்காக பஸ் ஸ்டாப்பில் காத்திருப்பான்.

பின், பஸ்சுக்கு முன்னாலேயே சென்று, பள்ளிக்கூட வாசலில் காத்திருப்பான். பிறகு மாலை வீட்டுக்கு போகும் போது, பஸ் கூடவே வருவான்!

இப்படியாக, அவன் எந்த இடத்தில், எந்த நேரத்தில், இவளைப் பின் தொடர்ந்து வருவான் என்று கண்டுப் பிடிக்கவே, இவளுக்கு சுவாரஸ்யமாக இருக்கும்.

ஏன் வருகிறான் என்று தெரியாது! ஆனால், அவன் வருவது இவளுக்கு பிடிக்கும். தோழிகளிடம் காட்டிப் பெருமை வேறு!   

அதுவும் ஒவ்வொரு வருடமும் விமர்சையாக நடக்கும் மாதா கோயில் திருவிழாவில், தவறாமல் ஆஜராகி விடுவான்.

கடைவீதியில், கடைசி வரை இருந்து பார்த்துவிட்டு தான் போவான்.

அவனுக்காகவே அழகாக உடை உடுத்தி வருவாள். ஆனால், அவனை கண்டுக் கொண்டதாக காட்டிக் கொள்ளவே மாட்டாள்.

ஆனாலும், அவன் பார்க்க வேண்டும் என்று எதிர்பார்ப்பாள்.

ஒருவரிடம் ஒருவர் பேசிக்கொண்டது இல்லை. அவர்கள் பார்த்துக் கொண்டதன் நோக்கம் தெரியாது! ஆனாலும் அது தொடர்ந்து நடக்கும்.

அது வெறும் ரசனையா! பருவ ஈர்ப்பா! பாசமா! காதலா! எதுவென்றே தெரியாத ஒரு உறவு! ஆனால், சுகமான உணர்வு அது! அது ஒரு காலம்!   

இப்படியே பல வருடம் ஓடி விட்டது. ப்ளஸ் டூ-க்குப் பிறகு, முருகனைக் காணவில்லை.

மனம் அவனை தேடினாலும், கொஞ்ச நாள் ஏக்கமாகவும், பின் வருத்தமாகவும், பின் மெல்ல மெல்ல நினைவுகளில் இருந்து ஒதுங்கவும் ஆரம்பித்து விட்டன… அந்த ஞாபகங்கள்!  

இவளும் கல்லூரி, கல்யாணம் என ஐந்து வருடங்களை ஓட்டி விட்டாள்.

ஒவ்வொரு வருடமும் மாதா கோவில் திருவிழாவுக்கு வந்து விடுவாள். ‘ஒரு முறையாவது அங்கு வைத்து முருகனை பார்த்து விட மாட்டோமா’ என்று!

முருகன் அவளைப் பார்க்க மாதா கோவிலுக்கு வந்து போவது போல,  அவள் உள் உணர்வு சொல்லும்! ஆனாலும் அவனைப் பார்க்காமல் தான் திரும்பிப் போவாள்!

மூன்று வருடங்களுக்கு முன், திருவிழாவில் தனியாக முருகனை தேடியதில், கடை வீதியில் தனது ராசியான கைப்பையை தொலைத்து விட்டு, வீட்டில் வாங்கிக் கட்டிக் கொண்டது தான் மிச்சம்.

“அங்கே என்ன வேடிக்கை! குழந்தையை பிடி! மொட்டை போடுபவர் வந்துட்டார்!”…

அம்மாவின் குரல் கேட்டு நிகழ்வுக்கு வந்தவள், மொட்டை போடும் வேலையில் மும்முரமானாள்! 

குழந்தைக்கு விளையாட்டு காட்டியபடி மொட்டை போட்டு, குளிப்பாட்டி தூக்கும் போது தான், அந்த உருவத்தை பார்த்தாள்.

மனதுக்குள் விருட்டென ஒரு மின்னல் அதிர்வு! பழைய பாடலின் ராகம் ஒன்று மனதில் ஓடி மறைந்தது!

நன்கு பரிச்சயமான கண்கள். இவளைப் பார்த்ததும், சட்டென திரும்பி நடக்க ஆரம்பித்தது. ஜெனிபர் குழம்பி போனாள்.

ஏனென்றால் நடந்துப் போனது பெண் உருவம்.

குழந்தையை அம்மா கையில் கொடுத்து விட்டு, நடக்க ஆரம்பித்தாள்.

“என்னடி! எங்கே போற!” அம்மாவின் கேள்வியை காதில் வாங்கமலேயே,

“இதோ வந்துட்டேன்!”, என்று சொல்லியபடி விறு விறுவென ஓட்டமும் நடையுமாக சென்று, அடுத்த கடைத்தெருவில், அந்த உருவத்தைக் கடந்து முன்னால் சென்று, திரும்பி நின்று, அதனை நிறுத்தியே விட்டாள்.

ஜெனிபர் இவ்வளவு தூரம் பின் தொடர்ந்து வருவாள் என்று எதிர்பாராத உருவம் தடுமாறி, பின் முகத்தை மறைத்து திருப்பிக் கொண்டது.

அந்த முகத்தை நினைவிலிருந்து வெளிக்கொண்டு வந்தவள் திடுக்கிட்டாள்!

“நீ… நீ… முருகன் தானே!” அதிர்ச்சியின் உச்சிக்கே போயிருந்தாள் ஜெனிபர்.

இவளைப் பார்க்கச் சங்கடப்பட்ட அந்த உருவம், சற்றே.. நெளிந்த படி…

 “ஆமாம்! ஆனால், இப்போது முருகேஸ்வரி!” என்றது!

சேலைக் கட்டி இருந்த அந்த உருவத்தில் இருந்து வந்த குரல், தழுதழுத்தது.

இருவரும் நேருக்கு நேர் பார்த்து அதிர்ச்சியில் உறைந்திருந்தனர்.

“நீ எப்படி! இப்படி! திருநங்கையா!” ஜெனிபருக்கு வார்த்தை வரவில்லை.

தரையை வெறித்துப் பார்த்த முருகன், தயக்கத்தோடு ஆரம்பித்தான்!

“என்னை உனக்கு அடையாளம் தெரியுதா, ஜெனி!”

“உன்னை தெரியாமலா..! நான் இத்தனை காலம் இங்கே வருவதே,  உன்னை ஒரு முறை பார்க்க மாட்டோமா என்று தானே!”

ஜெனிபர் சொல்லவும், முருகனின் கண்கள் கலங்க ஆரம்பித்தது!

“சொல்லு முருகா! இது எப்படி!” குரல் கம்ம கேட்டாள், ஜெனிபர்!

ஒரு கடையின் ஓரத்தில் ஒதுங்கி நின்றான். ஓரிருவர் இவர்களை ஒரு மாதிரி வேடிக்கைப் பார்த்தப்படி சென்றனர்!    

“எனக்கும் உன்னை ரொம்பப் பிடிக்கும் ஜெனி! சின்ன வயதில் தினமும் உன்னை பார்க்காம எனக்கு எதுவும் ஓடாது! உன் பின்னாடியே அலைவேன்!

ஆனா, ஒரு வயசுக்கு மேலே, நான் எனக்குள் ஏதோ மாற்றம் உண்டானதை தெரிஞ்சுக்கிட்டேன். பெண்கள் கூடவே இருக்க விருப்பப்பட்டேன். அவங்களை போலவே டிரஸ் பண்ணிக்க ஆசைப்பட்டேன்!

அப்போது தான் நான் திருநங்கைனு தெரிஞ்சுக்கிட்டேன். வெளியே சொல்ல முடியலை! வீட்டை விட்டு வெளியேறிட்டேன். படிப்பை தொடர முடியலை!”

நிறுத்தி சுற்றும் முற்றும் பார்த்தான்!

“பரவாயில்லை! சொல்லு! என்னை யாரும் தேட மாட்டாங்க!” என்று ஜெனிபர் சொல்லவும், தொடர்ந்தான்!

“ஆனா உன்னை மறக்க முடியல ஜெனி! உன்னைப் பார்க்கவும் சங்கடமா இருந்தது! காலப்போக்கில் நீ எங்க இருக்கேன்னும் தெரியலை!

எப்படியும் மாதா திருவிழாவுக்கு நீ வருவன்னு தெரியும்! உன்னை கண்டும் பிடிச்சுட்டேன்! ஆனா.. எப்படி! உன்னிடம் வந்து பேசுறதுன்னு தெரியலை!

உன்னைப் பார்த்தாலே மனசுக்கு ஆறுதலா இருந்தது! அதுவே போதும்னு, ஒவ்வொரு திருவிழாவுக்கும் வந்து உன்னை தள்ளி நின்னு பார்ப்பேன்.

ஆனால், என்னால் உனக்குக் குடும்பத்தில் பிரச்னை வரக்கூடாதுன்னு, என்னைக் காட்டிக்காமலேயே இருப்பேன்! இந்த நிலையில் நான் எப்படி உன்னிடம் வந்து பேசுவது!” சேலையால் முகம் பொத்தி அழுதான்!

பின் கண்களை துடைத்துக் கொண்டு, 

“ஆனா, உன் நினைவாவே இருக்கேன்! இனிமேலும் இருப்பேன்! இதுக்கு மேலே எதுவும் கேட்காதே ஜெனி!” என்று அழுதபடி, கரகரத்த குரலில்  சொல்லிவிட்டு வேகமாக செல்லும் முருகனின் தோளில்,

மூன்று வருடங்களுக்கு முன் தான் தொலைத்த கைப்பையை பார்த்ததும், அதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை, குமுறிக்கொண்டு வந்தது ஜெனிபருக்கு!

 – கதைப் படிக்கலாம் – 31

இதையும் படியுங்கள்அயல்நாட்டு அகதி

Exit mobile version