தீருமா மாமனின் காதல்…

– சா. மீனாட்சி
couple
love 
marriage
wedding

காதல். அனைத்தின் மீதும் காதல். இயற்கை, மனிதர்கள், விலங்குகள், பொருட்கள், செயற்கையான விஷயங்கள் என அனைத்தின் மீதும் காதல். இந்த மனிதர்களுக்கு காதல் எப்போது தான் தீருமோ? ஆசை எப்போது தான் குறையுமோ? நாம் குழந்தையாக பிறந்ததிலிருந்து விவரம் தெரியும் வரை, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கலாம். ஏன் என்றால் எதுவும் புரியாது. பக்குவமும் கிடையாது. விவரம் தெரிந்த பின்னர் வாழ்க்கை காட்டும் காட்சிகள் யாவும் விசித்திரமானவையே.

இது ஏன் நடக்கிறது? எதற்கு நடக்கிறது? என்று தெரிந்துக்கொள்ளும் முன்னரே எல்லாம் முடிந்துவிடும். வாழ்க்கையை கணிக்கவே முடியவில்லை என்றாலும், நாள்தோறும் புதுப்புது அனுபவம், இன்பம், துன்பம் இருக்கும். அதில் இன்பம் கொஞ்சம் கூட இருந்தால், வாழ்க்கை அழகானது தானே! அந்த இன்பத்தை பெறத்தான் எல்லாரும் முட்டி மோதுகிறார்கள்.

இதுவும் ஒரு இன்பமான, உண்மையான காதல் கதை தான். அவள் பெயர் இன்பா. அவளுக்கு அப்பா, அம்மா, தாத்தா, பாட்டி, தங்கை தான் அவளுடைய குடும்பத்தார். நல்ல பொண்ணு. சமத்தான பொண்ணு. என்ன கொஞ்சம் அராத்து. எங்கும் வயல் வெளிகள், தென்னை மரங்கள், காற்றடித்தால் மரங்களின் இலைகள் உரசி கேட்கும் அழகிய சப்தம். பறவைகளின் சப்தம் என மிகவும் அமைதி நிறைந்த கிராமம்.

ஒரு ஓட்டு வீடு, இரண்டு திண்ணை, பெரிய வாசல் என அவளுக்கு பிடித்த மாதிரியான வீடு. மிகவும் மகிழ்ச்சியாக இருந்தாள், விவரம் தெரியும் வரை. அதுவரை சில கசப்பாக நடந்த சூழ்நிலைகளும் உண்டு. அது அவளுக்கு நினைவு இருந்தது. ஆனால் புரியவில்லை. காலம் செல்ல, செல்ல புரிந்தது. வாழ்க்கையும் புரிய தொடங்கியது.

அவளுடைய அத்தை வீட்டார் பத்து நிமிடத்தில் சென்றுவரும் தூரத்தில் இருந்தனர். இருவீட்டாரும் எப்போதும் ஒன்றாகத்தான் கலந்து ஆலோசிப்பார்கள் மற்றும் ஒற்றுமையாக இருப்பார்கள். இப்படி இருக்கையில், அத்தை வீட்டில் பிரபாகரன் மற்றும் கனிமொழி என்று இரண்டு பேர் இருந்தாங்க. இந்த இன்பாவுக்கும், பிரபாவுக்கும் ஒரு ஆறு வயசு வித்தியாசம் இருக்குங்க. சின்ன வயசுல இருந்தே எல்லாரும் ஒண்ணு இன்பா வீட்ல இருப்பாங்க. இல்லனா பிரபா வீட்ல இருப்பாங்க. இந்த இன்பாவுக்கும், பிரபாவுக்கும் இடையில ஒரு வேதியியல் இருக்குங்க.

இரண்டு பேருக்கும் எப்போதுமே பயங்கர சண்டை தான். ஆனா பேசாம இருக்க மாட்டாங்க. ஆனாலும் பேசினால் சண்டை தாங்க.

பள்ளிக்கூடத்துல கூட டீச்சர்ஸ் இது உன் சொந்தக்காரப் பொண்ணு தானேனு பிரபா கிட்ட கேட்டா, அவன் இல்லன்னு சொல்லிடுவான்.

இன்பாவோட நண்பர்கள் இவன் உன் அத்தை பையன் தானே என்று கேட்டா, அவன் யாருன்னே தெரியாதுனு சொல்லிருவா. ஒரு ஐந்தாவது படிக்கும் வரைக்கும் இப்படிதான்.

அப்புறம் அவளுக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கும்போது, எல்லா பெரியவர்களும் பிரபாவ மாமான்னு கூப்பிட சொல்லி, அவ கல்லூரி முடிக்கிற வரைக்கும் மாமா… மாமா… மாமா… தான் கூப்பிடுவாள். பழகியும் போச்சு அவளுக்கு. கூப்பிடுறது மட்டும் தாங்க மாமா, மத்தபடி எல்லாருமே அவங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுதான் பார்த்து இருக்காங்க. இதுல ஒரு விசித்திரம் என்னனா, அவங்க ரெண்டு பேருக்குமே கூட, சண்டை போடாம எப்படி பேசறதுனு தெரியாது.

உதாரணத்திற்கு,

இன்பா – (ஃபோன்ல பிரபாகிட்ட) உங்க மாமா உன்ன வீட்டுக்கு வர சொன்னாங்க… மாமா வா…

பிரபா – அதை நீ எல்லாம் சொல்லி வரமாட்டேன். ஃபோன வை…

எதிர்மறையாக

பிரபா – என்ன பண்ணிக்கிட்டு இருக்க இன்பா…

இன்பா – நான் என்ன பண்ணா உனக்கு என்ன மாமா. உன் வேலையை பாரு…

இப்படி தான் அவங்களுக்கு பேசிக்கவே தெரியுங்க. அவளும், கல்லூரி முடிச்சுட்டா. அவனும் வேலைக்குப் போய்ட்டான்.

இதுவரைக்கும் அவங்களுக்கு உள்ள இருந்தது என்னனா, பேசினால் சண்டை தான். ஆனால், பேசாமல்  இருந்ததில்லை.

பார்த்தாலே முறைப்பு தான். ஆனால், பார்க்காமல் இருந்ததில்லை.

சேர்ந்தாலே அடி, உதை தான். ஆனால், சேராமல் இருந்ததில்லை

ரெண்டு பேருக்கும் ஒருவரையொருவர் பிடிக்காது. இவர்களுடைய செயலால் அந்த ஊருக்கே அது தெரியும். இன்பாவுக்கும் கல்யாண வயசு ஆயிடுச்சு. வீட்டில கல்யாண பேச்சு எடுத்தாங்க. இன்பாவின் விருப்பத்தைக் கேட்டாங்க. அவளும் ஓ.கே. சொல்லிட்டா. இவ காதல் பண்ற அளவுக்கு எல்லாம், பிரபா விட்டதில்லை. இவளும் அப்படிதான், எந்தப் பொண்ணு பிரபா கிட்டப் பேசினாலும், அத்தை கிட்ட சொல்லி வச்சிருவாள். இருந்தாலும் பிரபாவ கல்யாணம் பண்ணிக்கிறியானு கேட்க… இன்பா, என்னது அந்த மூஞ்சி எல்லாம் யாரு கல்யாணம் பண்ணிப்பானு வேணான்னு சொல்லிட்டாள்.

பிரபா கிட்ட இன்பாக்கு மாப்பிள்ளை பார்க்கிறோம் என்று சொல்ல, அவனும் முதல்ல அவள வீட்டைவிட்டு துரத்துங்கனு சொல்லிட்டான். அப்புறம் ஒரு தூரத்துச் சொந்தக்கார பையன் பொண்ணு பார்க்க வந்தான். இரண்டு பேருக்குமே பிடிச்சு இருந்துச்சு. ரெண்டு பேரும் ஓகே-ன்னு சொல்லிட்டாங்க. ஃபோன் நம்பரும் வாங்கிக்கிட்டாங்க. எல்லாம் நல்லபடியா முடிஞ்சு, கல்யாணத்தை மூணு மாசம் கழிச்சு வச்சிருந்தாங்க.

அதுக்கப்புறம் அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க, உன் மாமா என்ன சொல்கிறார் என்று இன்பாவிடம் கேட்க… அவன் என்ன சொல்லுவா, வீட்ல ஏதாவது உருட்டிக்கிட்டு இருப்பானு அவள் சொன்னதுக்கு… அவங்க நாங்க பிரபாவ கேட்கல, உன் மாமா உன்ன கட்டிக்க போகிறவர் என்ன சொல்கிறார் என்று கேட்டோம்னு சொன்னாங்க. அவள் எதுவுமே பேசாமல் வீட்டுக்குப் போய்ட்டா.

அவளுடைய தங்கை அவங்க அத்தைக்கிட்ட, எங்க மாமா கிட்ட ஃபோன் பேசறனு சொல்ல… இன்பா பிரபா மாமாவா எங்கிட்ட கொடுனு சொல்ல… அவள் பிரபா இல்ல நம்ம மாமா பாலாகிட்ட என்று கூறினாள். அதற்கு அவள் அத்தை, நடக்கட்டும்டி என்று கூறி எழுந்துச் சென்றார்.

இன்பாவும், பாலகுமரன் கிட்ட ஃபோன் பேசும்போது… என் மாமா பிரபா என்று கூறினாள். அதற்கு அவர், இனிமேல் நான் தான் உனக்கு மாமா. இனிமேல் அவன பிரபானே கூப்பிடு என்று சொன்னாரு. சரி என்று ஃபோனை வைத்துவிட்டாள்.

ஒரு இரண்டு நாட்களாக யாரிடமும் சரியாக பேசவில்லை இன்பா. ஒரு மாதிரி சோகமாகவே இருந்தாள். எல்லோரும் கவலையாகவே இருந்தார்கள். அப்புறம் எல்லாரும் பிரபா கிட்ட சொல்லி, அவன பேச சொன்னா, சண்டை போட்டாவது பேசுவானு நெனச்சு, அவன் கிட்ட சொல்லிப் பேச சொன்னார்கள்.

பிரபாவும் வந்தான். இன்பா பேசவே இல்லை. பிரபாவிடம் என்ன இன்பா… உன் மாமா என்ன சொன்னாரு… அடக்க ஒடுக்கமா இருக்க சொன்னாரா… ரொம்ப அமைதியான புள்ளையா இருக்கயாமே என்று கூறினான்.

பளாரென்று ஒரு அரை. நீதாண்டா என் மாமா. ரோட்ல போறவன், வரவன் எல்லாம் எனக்கு மாமானு சொல்லுவிங்களானு சொல்லி அழுதுக்கிட்டே அவனை கட்டி அணைத்தாள். அங்கிருந்த அனைவருக்கும் அதிர்ச்சியாக இருந்தது. பிரபாவிற்கு பேரதிர்ச்சி.

இங்கிருந்து எல்லாரும் போறீங்களா. நான் என் மாமா கிட்ட தனியா பேசணும்.(எல்லாரும் போயிட்டாங்க)

இன்பா – நீ தானே என் மாமா. உன்ன என்னால யார்கிட்டயும் விட்டுத்தர முடியாது. உன்னை யாரும் உரிமைக் கொண்டாடவும் விட முடியாது. நான் உன்னையே கல்யாணம் பண்ணிக்கிறேன் மாமா. யோசிச்சு சொல்லு என்று திமிரா பேசினாள்.

பிரபா – அமைதியாகவே இருந்தான்.

இன்பா – திரும்பவும் பிரபா பக்கத்துல போய்… மாமா என்னயே கல்யாணம் பண்ணிக்கோயே என்று கெஞ்சினாள்.

பிரபா – அவளின் தலையை கொட்டி, கட்டிப்பிடித்து, என் கள்ளி என்று கூறினான்…

பின்பு என்ன டும்… டும்… டும்… தான்…

பாலகுமரனுக்கும் புரிய வச்சாச்சு.

எந்த ஒன்னுமே நம்ம கூட இருக்கிற வரைக்கும் அதனுடைய மதிப்பு தெரியாது. கொஞ்சம் நம்மைவிட்டு விலகுற மாதிரி இருந்தா, மனசு கிடந்து தவிக்கும். அப்போதுதான் புரியும். அது நமக்கு எவ்வளவு முக்கியம்னு. அதுக்கப்புறம் நம்ம அத பத்திரமா பார்த்துக்கரதும், பார்த்துக்காம இருக்கறதும், நம்ம கையில் தான் இருக்கு. இது அவங்க ரெண்டு பேருக்கும் மட்டும் இல்ல, நமக்கும் இது  பொருந்தும். அந்த அழகான உறவு பொக்கிஷத்த, அவுங்க இரண்டு பேரும் இன்னொரு விலைமதிப்பற்ற அவர்களுடைய குழந்தையோட, ரொம்ப பத்திரமாவே பார்த்துக்குறாங்க.

– கதைப் படிக்கலாம் – 152

Exit mobile version