– மு.பாலா சுப்பிரமணியம்
ஒரு கிராமத்தில் விவசாயி ஒருவர், விதைகளை விற்பனை செய்து வந்தார்.
ஒருநாள் தன்னிடம் இருந்த விதைகளையெல்லாம் சந்தைக்கு எடுத்துச் செல்லும்போது, ஒரேயொரு விதை மட்டும் தவறிப் பாதையின் ஓரத்தில் விழுந்தது.
நாட்கள் செல்லச் செல்ல மெதுவாக முளைவிட்டு வளர ஆரம்பித்தது, அந்த விதை.
அந்த வழியே சென்ற ஆடு, மாடுகளின் கால்களில் மிதிப்பட்டு நசுங்கிப் போக ஆரம்பித்தது. மீண்டும் கொஞ்ச நாளில் துளிர்த்து வளர ஆரம்பித்தது.
மறுபடியும் கோழிகள் இரை தேடக் கிண்டியபோது, மீண்டும் அந்தத் துளிர் நசுங்கிப் போனது. இன்னும் சிறிது காலம் சென்றபிறகு, மீண்டும் வளர ஆரம்பித்தது.
இனி நம்மை யாரும் அழித்துவிடக்கூடாது என்று எண்ணிய அந்த விதை, அந்த வழியே சென்ற விவசாயியை அழைத்து உதவி கேட்டது.
அந்தச் செடியின் மீது இரக்கப்பட்டு, அதை எடுத்துக் கொண்டுபோய் தனது வீட்டின் அருகில் நட்டு, வளர்த்து வந்தார் விவசாயி.
ஆண்டுகள் பல சென்றன. செடி வளர்ந்து மரமானது. கோடைக் காலத்தில் நல்ல நிழல் தந்தது. விவசாயியின் வீட்டிலுள்ள கழிவு நீரையெல்லாம் எடுத்துக்கொண்டது.
சிறு குழந்தைகள் அந்த மரத்தினடியில் விளையாடி மகிழ்ந்தனர். அங்கே எப்போதும் தூய்மையான காற்று வீசியது. விவசாயி காட்டிய இரக்கத்துக்கு நன்றியாக அந்த மரம் அவர்களுக்கு உதவியது.
ஒருநாள் விவசாயி, தன் நிலத்தையும் வீட்டையும் விற்றுவிட்டு நகர்ப்குதிக்குக் குடியேறினார். அவர் இருந்த வீட்டை வாங்கியவர்கள், அந்த மரத்தை வெட்டி விற்றுவிட்டனர். இதனையறிந்த விவசாயி மிகவும் வருத்தப்பட்டார்.
ஒருநாள் கடற்கரையில் அமர்ந்து, கடல் அலைகளை ரசித்துக் கொண்டிருந்தார் அந்த விவசாயி. அப்போது அவர் அருகில் இருந்த படகு தன்னை அழைப்பதை உணர்ந்தார்.
அதன் அருகில் சென்று பார்த்தப்போது, அந்தப் படகு சொன்னது, “நான் இன்னும் சாகவில்லை. உங்கள் வீட்டு மரம்தான். இப்படிப் படகாக மாறியிருக்கிறேன்’ என்றது.
– கதைப் படிக்கலாம் – 161