வரப்புயர…

– வீரன்வயல் வீ. உதயக்குமரன்

பூபாள ராகம் கேட்க வேண்டிய அதிகாலை நேரத்தில்… ஊருக்குள் கேட்ட பறையொலி, ராமலிங்கத்தை அதிர வைத்தது. படுக்கையை விட்டு எழுந்தவர், மனைவி மீனாட்சியை தேடினார். வாசல் பெருக்கிக் கொண்டிருந்தாள் மீனாட்சி.

“மீனாட்சி… கிழக்கால என்ன தப்பு சத்தம் கேட்குது”.

“அதாங்க தெரியல.. விடிஞ்சதும் விசாரிப்போம்”

கணவனுக்கு பதில் சொல்லிவிட்டு, மறுபடியம் பெருக்கத் தொடங்கினாள் மீனாட்சி.

“சரி.. மணி அஞ்சாயிட்டுது.. டீக்கடை வரைக்கும் போயிட்டு வந்துடுறேன்”.

துண்டைத் தோளில் போட்டுக் கொண்டு நடக்க ஆரம்பித்தார் ராமலிங்கம்.

குப்புசாமியின் தேநீர்க் கடையில், வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது.

“என்னப்பா ஊர்ல சமாச்சாரம்” தேநீர் அருந்திக் கொண்டிருந்த கணபதியிடம் விசாரித்தார், ராமலிங்கம்.

“குப்பண்ணே இதோட பதினாறு டீ.”

அவசரம் அவசரமாக தேநீரை அருந்தி, கணபதி ராமலிங்கத்தை பார்த்து சொன்னான்.

“அத ஏண்ணே கேட்குறிங்க.. நம்ம கணக்கப்புள்ள கனகவேலு மாரடைப்பு வந்து போய்ச் சேர்ந்துட்டார்”

“அடப்பாவமே.. நேத்து காலையில கூடப் பாத்து பேசினானே”

“நல்லாத்தான் இருந்தார்.. நேத்து சாயங்காலம் வயக்காட்டு பக்கம் போயிருக்கார்… ரெண்டு ஏக்கர் வெள்ளாமையும் தண்ணி இல்லாம கருகிப் போனதைப் பார்த்து அதிர்ச்சியாயிட்டார். அப்புறம் என்ன, வீட்டுக்கு வந்தவர் தான்… ராத்திரி சாப்பிடக் கூட இல்லையாம் ”

“இந்த வருஷமாவது.. ஒரே பொண்ண கரை சேக்கனும்னு நெனச்சேன். வட்டிக்கு பணம் வாங்கி, வெள்ளாமை செஞ்சேன். எல்லாம் போச்சேனு பொலம்பிட்டே படுக்கப் போயிருக்கார். நாலு மணிக்கு பால் கறக்குறதுக்காக பொஞ்சாதி எழுப்பி விட்டிருக்கு. பேச்சு மூச்சே இல்லையாம்”

“என்னப்பா இது கொடுமையா இருக்கு… போன வாரம் தான் வயலுக்கு  போன சின்னத்துரை, பயிரை பாத்துட்டு அதே இடத்தில் மயங்கி விழுந்து செத்தாரு..

இன்னைக்கு கனகவேலு.. நம்ம பகுதி தான், வானம் பார்த்த பூமியா போயிருச்சி.. இப்படியே ஒவ்வொரு விவசாயியும் செத்துக்கிட்டிருந்தா.. நம்ம நன்செய் பூமி… பஞ்ச பூமியா மாறிரும்…

“வர்ற அமாவாசை கூட்டத்தில், இதப்பத்தி பேசப்போறதா.. நாட்டாமை சொல்லியிருக்கார்”

தேநீரை மேலும் கீழும் ஆற்றிக் கொண்டே சொன்னார் குப்புசாமி.

அன்று  அமாவாசை… ஊருக்கு ஒதுக்குப்புறமாக இருந்த பிள்ளையார் கோவில் ஆலமரத்தடியில், கிராம சபா கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கிராமவாசிகளுள் சிலர் அரசியலையும், நாட்டு நடப்பையும் அலசிக் கொண்டிருந்தார்கள். ஒருவர் பிள்ளையாரைப் பார்த்து தோப்புக்கரணம் போட்டுக் கொண்டிருந்தார்.

“அப்பா கணேசா.. எம்பையன் எப்படியாவது பத்தாம் வகுப்புல பாஸ் பண்ணிடனும்”

“புள்ளயாரப்பா.. இந்த வருஷமாவது நல்லா மழை பெய்யனும்”
“அடுத்த வருஷம்.. எப்படியாவது கும்பாபிஷேகம் பண்ணிடனும்”
“கோவில் கட்ட சிமென்டும் மண்ணும் போதுமா.. தண்ணி இல்லையே..

“எல்லோரும்.. அமைதியாயிருங்க… நாட்டாமை வந்துட்டார் ”

நாட்டாமை பேச்சிமுத்து வந்ததும், எல்லோரும் மெளனமானார்கள். கூட்டத்தைப் பார்த்து சிறு புன்னையை சிதறவிட்ட நாட்டாமை… மீசையை முறுக்கிக் கொண்டு… தொண்டையை கணைத்தபடி… தன் பேச்சைத் தொடங்கினார்.

“தண்ணி பிரச்சனைக்கு நிரந்தரமான தீர்வு காணறதுக்காக, இந்த கூட்டத்துல பேசப் போறோம். தண்ணிப் போட்டுட்டு வந்து, இங்கே யாரும் உளறக்கூடாது. எந்த வருஷமும் இல்லாத அளவுக்கு, இந்த வருஷம் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை.. ஆடு, மாடு குடிக்கக் கூட தண்ணி இல்லாம, குளம் குட்டையெல்லாம் வத்திப் போச்சு. காசு கொடுத்து தண்ணி வாங்க வேண்டிய சூழ்நிலை.. இதுக்கெல்லாம் காரணம் நாம தான்.”

நாட்டாமை இவ்வாறு சொன்னதும் ஒருவரை ஒருவர், திரும்பிப் பார்த்துக் கொண்டார்கள். நாட்டாமை தொடர்ந்தார்.

“குன்று இருக்கிற இடமெல்லாம், குமரன் இருப்பார். குளம் இருக்கிற இடமாய் பார்த்துதான், அவர் அண்ணன் இருப்பார். ஆனா இந்த குளத்தை பாருங்க.. வருஷம் முழுவதும் தண்ணி வத்தாத குளம்.. இப்ப மோடாகி, வயல் மாதிரி ஆயிடுச்சி… ஊருக்கு வடக்கால கடல் மாதிரி கெடந்த ஏரியும், வத்திப் போச்சி.. வருண பகவான் தன் கடமையை சரியாத்தான் செஞ்சுட்டிருக்கார். நாம தான் மழை நீரை சேமிக்காம விட்டு விடுறோம்.

பன்னிரெண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னாடி, கரிகாலன் மகராசன், ஒரு கல்லணை கட்டின மாதிரி…. இடையில ஒரு தடுப்பணைக் கட்ட யாருமே நினைக்கல. மழைக் காலத்து எல்லாத் தண்ணியும், வீணா கடலுக்குத்தான் போகுது. அந்த தண்ணியை சேமிச்சி, தண்ணீர்ப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்றது தான், இந்தக் கூட்டத்தோட நோக்கம். நம்ம விவசாயத்தையும் விவசாயிகளையும் காப்பாத்த, ஒரே வழி தான் இருக்கு… அதுக்கு எல்லோருமே ஒத்துழைக்கனும்..” கூட்டத்தைப் பார்த்து உரக்கச் சொன்னார் நாட்டாமை.. மறுபடியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள்.

“சொல்லுங்க நாட்டாமை, என்ன பண்ணலாம்”

“நாம எடுக்குற முடிவு.. மத்த கிராமங்களுக்கும் முன் மாதிரியா இருக்கனும். மழை நீரை வீட்டில மட்டும் சேமிச்சா போதாது.. கடலுக்குப் போற மழை நீரை.. ஊருக்குள்ள திருப்பிவிடலாம். அதுக்கு நம்ம ஏறி குளங்களை, ஆழமா தூர் வாரணும். அப்பத்தான் விவசாயத்தைக் காப்பாத்த முடியும். இந்த வெள்ளாமையை நம்பி தான், ஒவ்வொரு வீட்டிலேயும் சுபகாரியம் நடக்குது, இந்த வருஷம் மட்டும் எல்லோருமே சுபகாரியங்களை நிறுத்தி வைப்போம். தலைக்கு ஆயிரமோ ரெண்டாயிரமோ வசூல் பண்ணி… ஏரியையும், இந்த புள்ளையார்க் குளத்தையும் தூர்வாருவோம்.

கடலுக்குப் போற ஆத்து தண்ணியை, ஏரிக்கு திருப்பி விட்டாலே போதும். ரெண்டு போகம் விவசாயம் பண்ணலாம். அடுத்த வருஷம் நல்லபடியா வெள்ளாமை பண்ணி, நம்ம புள்ளக் குட்டிகளுக்கு காதுகுத்து, கல்யாணம்னு சுபகாரியங்கள் செய்வோம். இந்த வருஷம் நம்ம ஊர்ல திருவிழா கூட வேண்டாம். என்னப்பா நா சொல்றது சரி தானே. எல்லோரும் தங்களது சம்மதத்தை மெளனமாய் தலை அசைத்து வெளிப்படுத்தினார்கள்.

கனகவேலின் மரணத்துக்குப் பின், எவ்வித வருமானமும் இன்றி விசாலாட்சியும் மகள் கனகவல்லியும் வறுமையில் வாடினர். பொறுமையை இழந்த விசாலாட்சி, தவறான அந்த முடிவுக்கு வந்தாள்.

“சாப்பாட்டுக்கே கஷ்டம்… இதுல என் பொண்ணுக்கு எப்படி கல்யாணம் பண்ணி வைப்பேன்.”

இரண்டு தட்டுகளில் சாப்பாடு போட்டாள், விசாலாட்சி… மீன் குழம்பு மணம் வீசியது… அழுதுக் கொண்டே விஷத்தை கையில் எடுத்தாள்… இரண்டு தட்டுகளிலும் ஊற்றினாள்… மனதைக் கல்லாக்கிக் கொண்டாள்… மகளை அழைத்தாள்…

“கனகவல்லி வாம்மா சாப்புடுவோம்”

திண்ணையில் பூ கட்டிக்கொண்டிருந்த கனகவல்லி,

“இதோ வாரேம்மா” என்று குரல்கொடுத்து விட்டு, கைகழுவப் போனாள். சற்று தூரத்தில் ஊர் மக்கள் தன் வீட்டை நோக்கி வருவதை கவனித்தாள். வீட்டிற்குள் ஒடினாள்.

“அம்மா சாப்பாட்டை மூடிவை. ஊர்க்காரங்க நம்ம வீட்டுப் பக்கம் வந்துட்டிருக்காங்க”

“பஞ்சாயத்துப் போர்டு எலக்சனுக்கு, ஓட்டுக் கேட்க வர்றாங்களோ என்னவோ”

சாப்பாட்டை மூடிவைத்த விசாலாட்சி, மகளுடன் வாசலுக்கு வந்தாள்.

“வாங்க எல்லோரும் எதுக்காக…. வந்துருக்கீங்கன்னு தெரிஞ்சிக்கலாமா”

நாட்டாமை பேச்சிமுத்து, வெற்றிலைப்பாக்கு எச்சிலை கீழே துப்பிவிட்டு பேசினார்.

“இந்த வருஷம் நம்ம ஊர்ல வெள்ளாமையில அமோக வெளைச்சல்… போன வருஷம் பறையொலி கேட்டக் கிராமத்துல, இந்த வருஷம் மேளச்சத்தமா கேட்கப்போகுது.”

“விசாலாட்சி தேம்பினாள்.”

“எல்லோரும் விவசாயம் பண்ணிட்டு சுபகாரியம் பண்ணப் போறிங்க… என் புருஷன் இறந்ததால், விவசாயம் பண்ண முடியாம, நிலத்தை தரிசா போட்டுட்டோம்… சாப்பாட்டுக்கே சிரமப்படுறோம்.” சொல்லிவிட்டு மறுபடியும் அழுதாள் விசாலாட்சி.

“அழாதேம்மா…. இந்த வருஷத்தில இருந்து, உன் நிலத்தையும் நாங்களே சாகுபடி பண்ணித் தர்றோம்… உழைப்பு, கூலி போக மீதி நெல்லை உன் கிட்டயே கொடுத்துடுறோம்…”

“அதுமட்டுமில்ல….எல்லோரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்திருகோம். தலைக்கு ஆயிரம் போட்டு, மூணு லட்ச ரூபா வசூல் பண்ணி இருக்கோம், இந்தப் பணத்தை, உன் பொண்ணு கல்யாணத்துக்கு வச்சுக்க”

நாட்டாமையின் பேச்சு, விசாலாட்சியின் அழுகைக் கண்ணீரை, ஆனந்தக் கண்ணீராக மாற வைத்தது.

“ஏரியையும், குளத்தையும் ஆழப்படுத்தினோம்… வாய்க்காலையும், வரப்பையும் உயர்த்தினோம்… ஒளவையோட வாக்குப்படி, வரப்புயர நீர் உயர்ந்தது… நீர் உயர, நெல் உயர்ந்தது… இப்போ நம்ம ஊரு கிணறுகளில், ஊருணியும் அதிகமாச்சு… காசு, பணத்தை சேமிக்கிற மாதிரி, வான் மழையையும் சேமிச்சா இந்த பூமி பொண்ணு வெளையுற பூமியா மாறிடும்.”

உபதேசம் செய்த நாட்டாமை, விசாலாட்சியிடமிருந்து விடைபெற்றார். விசாலாட்சி வானத்தை நிமிர்ந்து பார்த்தாள். நகர்ந்து சென்ற கருமேகக் கூட்டத்தில், கடவுளின் உருவம் தெரிந்தது. அவசரமா உள்ளே ஓடினாள். மூடி வைத்திருந்த சாப்பாட்டு தட்டுகளை வெளியே எடுத்து வந்தாள். அவைகளை குழி தோண்டி புதைத்தாள் கனகவல்லி. ஒன்றும் புரியாமல் விழித்தாள். அவளுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது.

“அம்மா பசிக்குதம்மா…”

“கொஞ்சம் பொறுத்துக்க, மறுபடியும் சமைச்சித்தாரேன்”

சமையலறைக்குள் நுழைந்தாள் விசாலாட்சி…

– கதைப் படிக்கலாம் – 27

இதையும் படியுங்கள்கீதாவின் வாழ்க்கை பயணம்

Exit mobile version