– அபிராமி கண்ணன்

ப்ரியா… டைம் ஆச்சு… எவ்ளோ நேரம்… ப்ப்ப்ச்ச்ச்ச்ச்… என பொறுமையிழந்தான் திவா என்கிற திவாகர்…
ம்ம்ம்ம்… ஆச்சு திவா…
ஒரு டூ மினிட்ஸ்…
என் செல்லக்குட்டி… புஜ்ஜூம்மா… இன்னிக்கு சமத்தா இருந்துக்கனும்..
டைம்க்கு மம்மு சாப்ட்டுக்கனும்… ஓக்கேவா…
மம்மி உனக்கு ஈவ்னிங் சாக்கோ வாங்கித் தருவேனாம்… என்றவாறே
தூக்கம் பிரியாத கண்களைத் தேய்த்துக்கொண்டிருந்த தியா குட்டியிடம் ப்ரியா அடுக்கிக்கொண்டே போக…
ஓ… ஷிட்.. ப்ரியா… என்று பரபரப்பாய் உள்ளே வந்த திவா… ப்ரியா கையிலிருந்த தியாவைப் பார்த்ததும் பொங்கி வந்தக் கோபத்தை கொஞ்சமாய் அடக்கியவாறே…
இன்னிக்கு மீட்டிங்க்கு சீஃப் வர்ராரு… மறந்திட்டியா… டீம் ஹெட் நான்… பாரு டைம் என்னன்னு… எனக் கடிந்துக்கொண்டே… அம்பியையும் அந்நியனையும் மாறி மாறிக் கண்களில் காட்டினான்…
சாரி… சாரி திவா… தியா இப்பதா எழுந்தா… என்றபடி ஹேண்ட் பேக், தியாவின் கிட்ஸ் பேக், லஞ்ச் பேக் சகிதம்… மூவரும் லிஃப்ட்டை நோக்கி விரைய… வெய்ட்டிங்கில் இருந்தது…
ஓ… காட் என்றபடி படிகளில் தடதடத்தான்… எஜமானன் பின் செல்லும் நாய்க்குட்டியாய் படபடத்து தொடர்ந்தாள் ப்ரியா… இது எதையும் சட்டை செய்யாமல், தியா மம்மியின் லாங் இயர் ரிங்கை தொட்டுப்பார்த்தபடி வந்தது…
கெட் இன்… கெட் இன் பாஃஸ்ட் என்றவாறு… காருக்குள் மூவரோடு சேர்த்து கோவத்தையும் அவசரத்தையும் திணித்துப் பறந்தான் திவா…
கிட்ஸ் கேரில் தியாவை இறக்கிவிடும்போது சொல்லும் வழக்கமான கொஞ்சல்கள், இன்று காணாமல் போனது…
ஒரே அலுவலகத்தில் ஒன்றாய் வேலை பார்த்தப்போதும், அன்றைய பொழுது முழுதும் எதையோ தொலைத்தவளாய்… லேசான குற்ற உணர்வோடு… சிஸ்டத்தில் மூழ்கினாள் ப்ரியா…
மணி 7-ஐ தொட்டதும்.. தியா நினைவுக்கு வர பரபரப்பாய் கிளம்பினாள்… கேபினை நெருங்கும்போதே திவாவின் சோர்வும், அதைத் தாண்டிய டென்ஷனயும் ப்ரியாவால் உணர முடிந்தது…
திவா… போலாமா… தியாவ பிக் அப் பண்ணனும்.. என்றவளை வெறித்துப் பார்த்தபடி… பையை எடுத்துக்கொண்டு கிளம்பினான்…
அடுத்த அரைமணி நேரமும் காருக்குள் நிசப்தமே நிலவியது… அனிச்சை செயலாய் கிட்ஸ் கேரில் கார் நின்று கிளம்ப… ப்ரியாவின் பயணம் தியாவோடு தொடர்ந்தது…
மம்மு சாப்டீங்ளா செல்லம்.. இன்னிக்கு என்ன பண்ணீங்க…
ஏன் குட்டிமா கோவமா இருக்கீங்க என்று தியாவை சிரிக்க வைக்கும் முயற்சியில் இறங்கினாள்…
அபார்ட்மென்ட் வந்தது… கூடவே பசியும் வந்திருந்தது…
சூடான காஃபியும், மால்ட்டும் கலந்துவிட்டு, புலாவ்க்கு ரெடி செய்தாள்…
ஆயிற்று…
புஸ்…. என்ற குக்கரின் சத்தம் கேட்டு மம்மி… என்று ஓடி வந்த தியாவை அள்ளியெடுத்தவாறே… அச்சச்சோ செல்லம் பயந்திட்டீங்ளா… குக்கர்டா.. பாப்பாவுக்கு மம்மு சாப்டனுமில்ல என்றவளிடம்…
மம்மி அது என்ன…
அது குக்கர் டா….
ம்.. ம்.. அது… புஸ்ஸூ….
அதுவா… அது பேரு வெயிட்டு டா… உள்ள மம்மு சூடா இருக்கும்ல… அது அப்டியே இருந்தா ப்ரஷர்ல டமால்ன்னு வெடிச்சிடும்… அப்புறம் பாப்பா சாப்பாடு கெட்டுப்போய்டும்… அதான்… அப்பப்ப புஸ்ஸுன்னு சத்தம் போட்டு புகை வரும் பாரேன்… என்று சொல்லி முடிக்கவும்… குக்கர் உள்ளிருக்கும் ப்ரஷரை விசிலாய் வெளியே தள்ளவும் சரியாக இருந்தது… பயம் அகலாத கண்களோடு ஒரு காதை மூடியவாறே அம்மாவின் தோளில் சரிந்துக் கொண்டாள் தியா…
தட்டிலிருந்த உணவை பேருக்கு கொறித்துவிட்டு, யோசனையோடே மீண்டும் சோஃபாவில் சாய்ந்தான் திவா…
டாடீ… டாடீ…
என தியா ஷார்ட்ஸை இழுக்கவும், அப்போது தான் சுயநினைவுக்கு வந்தவனாய்…
ஏண்டா செல்லம் என்றான் திவா…
டாடீ… கத சொல்லு…
இல்லடா… இன்னிக்கு டாடீ டயர்ட்… மம்மிய சொல்ல சொல்றேன்…
ம்ஹூம்.. நீ தா சொல்லனும்.. என அடம்பிடித்தாள்..
தியாம்மா, இன்னிக்கு டாடீக்கு கொஞ்சம் மெண்ட்டல் ப்ரஷர்…. ஓ சாரிடா… டாடீக்கு இன்னிக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லடா… ஓடுங்க மம்மிகிட்டப் போங்க என்றான் திவா…
ஒரு நிமிடம் அப்பாவை உற்று நோக்கிய தியா… தன் கிட்ஸ் பேக்கை திறந்து எதையோ தேடலானாள்…
என்ன செல்லம் தேடற… போங்க மம்மிகிட்ட போங்க… என்றவனிடம்…
தேடியது கிடைத்த சந்தோஷத்தில், உள்ளிருந்து வெடுக்கென இழுக்க கையோடு விசில் வந்தது…
டாடீ… இந்தா விசில் என்றாள்…
இது எதுக்குடா….
ம்… ம்… ப்ரஷர் இருந்தா நீ டமால்னு வெடிச்சு கெட்டுப்போயிடுவ… விசில் ஊது… சரியாயிடுவ… என்று தன் குட்டிக்கண்களை சிமிட்டிக் கூறியதும் அதிர்ந்து போனான் திவா… ச்சே… ஆமால்ல…. என அக்கணமே தன் தவறை உணர்ந்தவனாய்… ப்ரஷரை தூக்கியெறிந்துவிட்டு, வாரியணைத்துக் கொண்டான் தியாவை…
– கதைப் படிக்கலாம் – 82
இதையும் படியுங்கள் : மாடர்ன் மாமியார்!