இதில் யார் உண்மையான மிருகம்…

– த. அமுதவாசகன்
man 
shadow
animals

ஒரு அடர்ந்த பசுமையான காடு. அங்கே யார் இந்த உலகத்திலேயே கொடிய மிருகங்கள் என்று மிருகங்களுக்கும், மனிதனுக்கும் இறைவன் முன் வாக்குவாதம் நடந்துக் கொண்டிருக்கிறது. அங்கே ஒவ்வொரு மிருகமும் வரிசையாக மனிதனைப் பார்த்து கேள்வி கேட்கிறது..

இறைவனும் இங்கு நடப்பதை ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருக்கிறார்..

முதலில் புலி கேட்கிறது… நான் பதுங்கி, பதுங்கிச் சென்று இரையை நன்றாக வேட்டையாடுவேன். உன்னால் முடியுமா என்று கேட்க..

என்னால் முடியும் பதுங்கிச் சென்று என்னை நம்பியவர்களை குழியில் தள்ளவும் தெரியும்… அவர்களின் முதுகில் குத்தவும் தெரியும்… என மனிதன் பதில் கூறினான்..

அடுத்து யானை என்னைப்போல் உன்னால் மரங்களை சாய்க்க முடியுமா எனக் கேட்டது.. ஓ முடியுமே… நான்தான் இன்று பலவகையான மரங்களை என் தேவைக்காக வெட்டிச் சாய்த்துக் கொண்டிருக்கிறேனே என மனிதன் கூறினான்.‌.

என்னைப்போல் உன்னால் தாவ முடியுமா என குரங்கு கேட்க… கண்டிப்பாக முடியும். நான்தான் பணத்திற்காக தினமும் இடத்திற்கு இடம் தாவிக் கொண்டிருக்கின்றேன். பிறகு என்ன… என மனிதன் கூறினான்..

என்னைப்போல் உன்னால் நிறத்தை மாற்ற முடியுமா என்று பச்சோந்தி கேட்டது. எனக்கொரு செயல் நிறைவேற வேண்டுமென்றால் நிறத்தை என்ன, மனதைக் கூட என்னால் அடிக்கடி மாற்றிக்கொள்ள முடியும் என மனிதன் கூறினான்…

என்னைப்போல் ராஜாவாக உன்னால் இருக்க முடியுமா என அடுத்து சிங்கம் கேட்டது..

உனக்கு இயற்கையாகவே அந்தக் கடவுள் கொடுத்தப் பட்டம். ஆனால் நான் செல்வத்திற்கு மனிதர்களை அடிமைப்படுத்தியும், அளவில்லா செல்வம் சேர்க்கும் எண்ணத்துடனும், பல காலம் ராஜாவாக ஆட்சி செய்துக் கொண்டிருக்கிறேன் என மனிதன் கூறினான்‌.

என்னைப் போன்ற தந்திரம் உனக்குள் இருக்கிறதா என நரி கேட்க… உன்னை விட எனக்கு அதிகமாகவே இருக்கிறது. என் தந்திரத்தின் பலத்தால் நல்லவர்களை வீழ்த்தவும், கெட்டவர்களை வாழ வைக்கவும் முடியும் என மனிதன் கூறினான்..

சரி நீங்கள் எல்லாரும் இவ்வளவு கேள்விகள் கேட்டீர்கள் அல்லவா… நான் கூறினேன்… உங்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி மட்டும் கேட்கிறேன். நீங்கள் அனைவரும் கூற வேண்டும் என மனிதன் கேள்வி கேட்ட விலங்குகளை பார்த்துக் கேட்டான்…

சரி கேளுங்கள். நாங்கள் பதில் கூறுகிறோம் என விலங்குகள் சொன்னது..

என்னைப் போல் உங்களால் பேச முடியுமா? என்னைப் போன்ற வாழ்க்கை வாழ முடியுமா? என மனிதன் கேட்க… அங்கே சில நிமிடம் நிசப்தமானது. எல்லா பெரிய விலங்குகளும்  அமைதியானது…

சிறு முயல் குட்டி வந்து மனிதனிடம் நின்றது…

நீ வாழும் இந்த வாழ்க்கையால் தான், எங்களின் மனதின் மொழி உனக்கு புரியாததால் தான், இன்று நான் என் பெற்றவர்களைத் தொலைத்து அநாதையாக நிற்கிறேன், என கண்களில் கண்ணீரோடு அந்த முயல் குட்டி பதில் கூறியது…

மனிதன் ஒன்றும் புரியாதவனாய் இறைவனைப் பார்த்தான்…

இறைவன் சிரித்தப்படி தன் தீர்ப்பைக் கூறத் தயாரானார்..

மனிதா உன்னிடம் கேள்வி கேட்ட விலங்குகள் எல்லாம், உன் ஆறறிவுக்கு கீழேதான் அறிவாற்றல் பெற்றிருக்கிறது..

அந்த விலங்குகள் எல்லாம் உன்னைப் போல் ஆறறிவு குணங்களைப் பெற முடியாது. எல்லாம் அதற்கு நான் கொடுத்த அறிவைக் கொண்டே வாழ்கிறது. அதைப் பொறுத்தே உன்னிடம் கேள்விகளும் கேட்டது. ஆனால் நீயோ ஆறறிவு போதாமல், ஐந்து… நான்கு… மூன்று… இரண்டு… ஒன்று… என எல்லா அறிவிலும் நடந்துக் கொள்கிறாய்…

தனக்கு ஏதேனும் ஆபத்து வந்தால் மட்டுமே அவை மிருகங்களாக நடந்துக்கொள்கிறது .ஆனால் நீயோ நொடிக்கு நொடி பல மிருகங்களின் வேடம் தரித்து இப்பூமியில் நடமாடிக் கொண்டிருக்கிறாய்… விலங்குகள் அதற்குரிய குணங்களை மட்டுமே பெற்றிருக்கிறது. மனிதனான நீயோ, எல்லா விலங்குகளின் குணங்களையும் ஒருவனே பெற்றிருக்கிறாய்..

பேராசை… சுயநலம்… துரோகம்… ஏமாற்றுதல்… எல்லா கெட்ட குணங்களும் உனக்குள் இருக்கிறது.

விலங்குகள் இயற்கையாகவே இறந்து விடுகிறது. ஆனால் ஆறறிவு கொண்ட நீயோ, வாழ இயலாமல் தற்கொலை முடிவை தேடிக் கொள்ளும் ஈனப் பிறவியாக இருக்கிறாய்… நோய்களும் விலங்குகளால் உனக்குப் பரவும் காலம் போய், இப்பொழுது உன்னால் அதற்கு பரவிக் கொண்டிருக்கிறது…

இப்பூமியே எனக்கு சொந்தம் என்று வாழ்ந்த உனக்கு, இப்பொழுது ஒரு புது நோயின் மூலம் உனக்குப் பாடம் கற்பித்தேன். விலங்குகளை இப்பூமியை உரிமை கொண்டாட வெளியில் வரச் செய்தேன். இந்த பூமி அவைகளுக்கும் சொந்தம்…

மனிதா இன்றைய சூழ்நிலையில் இவ்வுலகம் உன்னால் தான் அழிவை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கிறது. ஆகவே அந்த மிருகத்தினும் கொடிய பயங்கரமான ஆறறிவு மிருகம் நீதான்… என்று தன் தீர்ப்பைக் கூறி முடித்தார் இறைவன்…

இவற்றையெல்லாம் கேட்டு முடித்ததும், தனக்குள் சிந்திக்கத் தொடங்கினான் மனிதன்… இந்த சிந்தனை மூலம் அவன் மனிதனாவதும், மாமனிதனாவதும், மீண்டும் மிருகமாவதும் அவனுடைய கையில்……

– கதைப் படிக்கலாம் – 147

Exit mobile version