மருத்துவ கலந்தாய்வில் கலந்தாய்வில் பங்குபெற்ற மாணவர்கள், நாளையே தேர்வு செய்யப்பட்ட கல்லூரிகளில் சேர வேண்டும் என்ற அரசின் உத்தரவு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நீட் தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து ஆன்லைன் மூலம் மாணவர்களிடம் விண்ணப்பம் பெறப்பட்டு, மருத்துவ படிப்பிற்கான தரவரிசை பட்டியல் கடந்த 16ம் தேதி வெளியிடப்பட்ட்டது. அதைதொடர்ந்து, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள்ஒதுக்கீட்டுடன் இன்று மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது. இந்த கலந்தாய்வில் கலந்து கொண்டு மருத்துவ இடத்தை பெற்றவர்களுக்கு, முதலமைச்சர் அதற்கான சான்றிதழையும் வழங்கினார்.
இந்நிலையில், மருத்துவ இடத்தை பெற்ற மாணவர்கள் நாளையே சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும் என மருத்துவக்கல்வி இயக்குனரகம் அறிவித்துள்ளது. இதனால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவர்கள் ஊருக்கு செல்ல முடியாத நிலையில் தவிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.
வழக்கமாக கலந்தாய்வு முடிந்த ஒருவாரத்திற்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படும். இதனால் கல்லூரிகளில் சேரும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வரும் 20-ம்தேதி, மருத்துவ கலந்தாய்வு தொடர்பான வழக்கு விசாரணைக்கு வருவதன் காரணமாக, அதற்குள் மாணவர்கள் கல்லூரிகளில் சேர உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.