பி.இ. பி.டெக் படிப்புகளில் சேர்வதற்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள தொழில்நுட்ப இயக்குநகரத்தில் இன்று காலை உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பொறியியல் படிப்பில் மாணவர்களை சேர்ப்பதற்கான தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். அதன்படி, ஆகஸ்டு 20ம் தேதிமுதல் ஆகஸ்டு 23ம் தேதி வரை விளையாட்டு, மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்களின் குழந்தைகள், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% உள் ஒதுக்கீடு ஆகிய பிரிவினருக்கான பி.இ கலந்தாய்வு நடைபெறவுள்ளது. அதன் பிறகு பொதுப்பிரிவினருக்கான பி.இ. கலந்தாய்வு ஆகஸ்டு 25ம் தேதி முதல் அக்டோபர் 21ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நடப்பாண்டில் அரசு, அரசு உதவிபெரும் மற்றும் சுயநிதி கல்லூரிகளில் பி.இ,பி.டெக் படிப்புகளில் சேர சுமார் 1,97,627 இடங்கள் காலியாக உள்ளன. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 900 இடங்களும், அரசு மற்றும் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் 10,000 இடங்களும், சென்னையில் உள்ள அண்ணாப் பல்கலைக்கழக வளாக கல்லூரிகளில் 2,270 இடங்களும், பி.ஆர் படிப்புகளில் 106 இடங்களும் உள்ளன. இந்த கலந்தாய்வில் 434 பொறியியல் கல்லூரிகள் இடம்பெற இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் 18 பொறியியல் கல்லூரிகளில் போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாத காரணத்தினால், அந்த கல்லூரிகளுக்கு விளக்கம் கேட்டு 2வது முறையாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அந்த கல்லூரிகள் உரிய விளக்கம் அளிக்காத பட்சத்தில் அங்கு இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெறாது என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
