கொரோனா- வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 124 பேருக்கு தொற்று உறுதி

கொரோனாவின் புதிய வகை திரிபு உலகெங்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கக்கூடிய நிலையில் கடந்த டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் சமீப நாட்களாக புதிய கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதையடுத்து வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் டிசம்பர் 24-ம் தேதி முதல் ஜனவரி 3-ம் தேதி வரை வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த 19,227 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 124 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் இரத்த மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதில் 40 பேருக்கு 11 வகையான புதிய கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதில் 14 பேருக்கு எக்ஸ்.பி.பி (xbb) வகை கொரோனா தொற்று, 9 பேருக்கு பி.க்யூ (bq) வகை கொரோனா தொற்று, ஒருவருக்கு சீனாவில் பரவி வரும் புதிய வகை பி.எப்7 (BF7) கொரோனா தொற்று உள்ளிட்ட கொரோனா தொற்றுகள் கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

Exit mobile version