உறவினர்கள் கண்ணீருடன் வரவேற்பு; நேபாளத்தில் சுமார் 400 தமிழர்கள் இருந்ததாக புதிய தகவல் – 90 பேரை தொடர்புகொள்ள தொடர்ந்து முயற்சி
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி பாதுகாப்பாக மீட்கப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 21 பேர் டெல்லி வழியாக சென்னை திரும்பினர். சென்னை விமான நிலையத்தில் அவர்களை தமிழக அமைச்சர்கள் மற்றும் குடும்பத்தினர் வரவேற்றனர்.
நேபாளத்தின் ரசுவாகதி பகுதியில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய தமிழக சுற்றுலாப் பயணிகளில் இந்த 21 பேரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டு காத்மாண்டுவுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
அங்கிருந்து வெள்ளிக்கிழமை பிற்பகல் டெல்லி வந்த அவர்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சந்தித்தார். மீட்புப் பணிகளை மேற்கொண்ட நேபாள ராணுவம் மற்றும் நேபாள அரசுக்கும், அவர்களின் இந்தியப் பயணத்தை ஒருங்கிணைத்த காத்மாண்டுவில் உள்ள இந்தியத் தூதரகத்திற்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
பின்னர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட 21 பேரும் வெள்ளிக்கிழமை இரவு சென்னை வந்தடைந்தனர்.
சென்னை விமான நிலையத்தில் அமைச்சர்கள் என்.ஆனந்த், டி.சரத்குமார் ஆகியோர் அவர்களை வரவேற்றனர். நீண்ட நேரக் காத்திருப்புக்குப் பிறகு பாதுகாப்பாக திரும்பியவர்களைக் கண்ட குடும்பத்தினர் நெகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
103 அல்ல… சுமார் 400 பேர்?
நேபாள வெள்ளம் ஏற்பட்டபோது தமிழகத்தைச் சேர்ந்த 103 பேர் அங்கு இருப்பதாக முதலில் தகவல் வெளியானது.
ஆனால் தற்போது கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில், வெள்ளம் ஏற்பட்ட நேரத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 400 பேர் நேபாளத்தில் பயணம் மேற்கொண்டிருக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
இந்த எண்ணிக்கையில் மேலும் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
140 பேர் பாதுகாப்பு; 90 பேருடன் தொடர்பில்லை
தற்போதைய தகவலின்படி தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 140 பேர் பாதுகாப்பான இடங்களில் இருப்பது தெரியவந்துள்ளது.
21 பேர் தற்போது தமிழகம் திரும்பியுள்ளனர்.
அதேநேரத்தில் சுமார் 90 பேருடன் இன்னும் தொடர்பு ஏற்படுத்த முடியவில்லை என்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
நேபாளத்தில் வெள்ளத்தால் தொலைத்தொடர்பு சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதும் அவர்களை தொடர்புகொள்வதில் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
அவர்களின் இருப்பிடத்தைக் கண்டறிந்து பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசு மற்றும் சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் தமிழக அரசு தொடர்ந்து ஒருங்கிணைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தின் பல பகுதிகளில் தொலைத்தொடர்பு சேவைகள் படிப்படியாக மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள நிலையில், தொடர்பு கொள்ள முடியாத மற்ற தமிழர்கள் குறித்த தகவல்களும் விரைவில் கிடைக்கும் என்று தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
