ஒரே வாரத்தில் $12.42 பில்லியன் அதிகரிப்பு; தங்கத்தின் மதிப்பும் $2.8 பில்லியன் உயர்ந்தது
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய வரலாற்று உச்சத்தை எட்டியுள்ளது. ஆகஸ்ட் 21-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு 12.422 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரித்து 729.328 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதற்கு முந்தைய வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 9.905 பில்லியன் டாலர் அதிகரித்து 716.907 பில்லியன் டாலராக இருந்தது. இதற்கு முன்பு கடந்த பிப்ரவரி மாதத்தில் 728.494 பில்லியன் டாலரை எட்டியதே இந்தியாவின் அதிகபட்ச அந்நியச் செலாவணி கையிருப்பாக இருந்தது. தற்போது அந்த அளவையும் கடந்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு நாணய சொத்துகள் அதிகரிப்பு
இந்தியாவின் மொத்த அந்நியச் செலாவணி கையிருப்பில் முக்கியப் பங்கு வகிக்கும் Foreign Currency Assets, கடந்த வாரத்தில் 9.482 பில்லியன் டாலர் அதிகரித்துள்ளது.
இதன்மூலம் வெளிநாட்டு நாணய சொத்துகளின் மதிப்பு 591.333 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. டாலர் மட்டுமின்றி யூரோ, பவுண்ட், யென் உள்ளிட்ட பிற வெளிநாட்டு நாணயங்களின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களும் Foreign Currency Assets மதிப்பீட்டில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
தங்கத்தின் மதிப்பும் உயர்வு
ரிசர்வ் வங்கியிடம் உள்ள தங்க இருப்புகளின் மதிப்பும் கடந்த வாரத்தில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளது.
தங்க இருப்புகளின் மதிப்பு 2.801 பில்லியன் டாலர் உயர்ந்து 114.218 பில்லியன் டாலராக உள்ளது. அதேபோல், சர்வதேச நாணய நிதியத்தின் Special Drawing Rights 112 மில்லியன் டாலர் அதிகரித்து 18.852 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. IMF-ல் இந்தியாவின் Reserve Position 26 மில்லியன் டாலர் அதிகரித்து 4.925 பில்லியன் டாலராக உள்ளது.
ஏன் இந்த உயர்வு?
இந்தியாவுக்குள் வெளிநாட்டு நாணய வரவை அதிகரிப்பதற்காக ரிசர்வ் வங்கியும் மத்திய அரசும் சமீப காலங்களில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
குறிப்பாக வெளிநாடு வாழ் இந்தியர்களின் FCNR(B) வைப்புத் தொகைகளை ஈர்க்க அறிமுகப்படுத்தப்பட்ட சலுகை அடிப்படையிலான swap நடவடிக்கைகள் மூலம் கணிசமான அளவில் வெளிநாட்டு நாணயம் இந்தியாவுக்குள் வந்துள்ளது.
இதனுடன் வெளிநாட்டு நாணய சொத்துகள் மற்றும் தங்கத்தின் மதிப்பு உயர்ந்ததும் இந்தியாவின் ஒட்டுமொத்த அந்நியச் செலாவணி கையிருப்பு புதிய உச்சத்தை எட்ட உதவியுள்ளது. அந்நியச் செலாவணி கையிருப்பு ஒரு நாட்டின் வெளிநாட்டு வர்த்தகம், இறக்குமதிக்கான பணத் தேவைகள் மற்றும் சர்வதேச நிதிச் சந்தைகளில் ஏற்படும் அதிர்வுகளை எதிர்கொள்வதில் முக்கிய பாதுகாப்பாக கருதப்படுகிறது.
