கர்நாடகத்தில் வெடிபொருள் ஏற்றிச் சென்ற லாரி விபத்து: 8 பேர் பலி

கர்நாடகாவில் வெடி பொருள் ஏற்றிச் சென்ற லாரி வெடித்து சிதறியதில் 8 பேர் பலியாகினர்.மேலும் சிலர் கவலைக்கிடமாக உள்ளனர்.

கர்நாடகா மாநிலம் சிமோகா தாலுகாவில் உள்ள ஹுனசூரு கிராமத்தில் ரயில் தண்டவாளத்திற்கு தேவையான கற்களை உடைக்கும் கல்குவாரி உள்ளது. நேற்று இரவு அந்த கல்குவாரிக்கு 50க்கும் மேற்பட்ட ஜெலட்டின் குச்சிகள் மற்றும் டைனமைட் வெடி பொருட்களை ஏற்றிக்கொண்டு ஒரு லாரி சென்று கொண்டிருந்தது. ரயில்வே கிரசர் அருகே சென்ற போது சுமார் 10:20 மணியளவில் அந்த லாரி திடீரென வெடித்துச் சிதறியது. இதில், லாரியில் இருந்த அனைத்து வெடி பொருட்களும் வெடித்து சிதறின. இந்த விபத்தில், லாரி ஓட்டுனர் மற்றும் லாரியில் பயணித்து வந்த தொழிலாளர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். ஓட்டுனர் உள்பட 8 பேர் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளனர் என சிமோகா கலெக்டர் சிவக்குமார் கூறினார். உயிரிழந்தவர்கள் பீஹார் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் என கூறப்படுகிறது. இந்த விபத்து குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. வெடி விபத்து ஏற்பட்ட பின்னர் அண்டை மாவட்டங்களான சிக்மகளூர் மற்றும் உத்தர கன்னடாவில் சில பகுதிகளில் லேசான நில அதிர்வு உணரப்பட்டுள்ளது.

Exit mobile version