ஆந்திரா: மர்ம நோயால் அடுத்தடுத்து சுருண்டு விழுந்த 600 பேர்.. காரணம் இதுதானா?

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியில் பொதுமக்கள் அடுத்தடுத்து, மயங்கி சுருண்டு விழுந்ததற்கான காரணம் தெரியவந்துள்ளது.

மேற்கு கோதாவரி மாவட்டம், எலூரில் கடந்த சனிக்கிழமை முதல், சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தவர்கள் உட்பட பலர் திடீர் திடீரென மயங்கி விழுந்தனர். பெரும்பாலானோருக்கு வலிப்பு நோயுடன், நுரை நுரையாக வாந்தி எடுப்பது இதன் அறிகுறிகளாக காணப்படுகிறது. அடையாளம் தெரியாத இந்த மர்ம நோயால், அந்த மாவட்ட மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த மர்ம நோயால் இதுவரை 600க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 3 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். பாதிக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பியுள்ளனர்.

இதனிடையே, இந்த மர்மநோய் தொடர்பாக மாநில மற்றும் மத்திய அரசால் அமைக்கப்பட்ட சிறப்புக்குழு மட்டுமின்றி, உலக சுகாதார அமைப்பின் மருத்துவர் குழுவினரும் அந்த மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆந்திர மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்ட, சுற்றுப்புற காற்றின் தரம் மற்றும் நீர் குறித்த ஆய்வில், தண்ணீரில் ஹெவி மெட்டல் இல்லை என்பது தெரியவந்துள்ளது.

இதனிடையே, பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளில், ஈயம் மற்றும் நிக்கலின் தடயங்களைக் டெல்லி எய்ம்ஸ்  மற்றும் இந்திய வேதியியல் தொழில்நுட்ப நிறுவனம் கண்டுபிடித்துள்ளன. ஆனால் அவர்கள் தண்ணீரில் எத்தையும் கண்டுபிடிக்கவில்லை.

அதேசமயம், எலுரு நகரில் இருந்து நீர், இரத்தம், உணவு மாதிரிகளை  சேகரித்த ஹைதராபாத் தேசிய ஊட்டச்சத்து நிறுவன  (என்ஐஎன்) வல்லுநர்கள் அரிசியில் கலந்திருக்கும் பாதரசமும் காய்கறிகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் இருந்த பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் தான் காரணம் என்று தெரிவித்துள்ளனர். மேலும் இந்த நிறுவனம், இரத்தத்தில் உள்ள ஆர்கனோபாஸ்பரஸின் எச்சங்களையும் கண்டறிந்தது. பாதிப்பிற்கு இந்த கலப்படமே காரணமாக இருக்கலாம் என கூறப்படுகிறது.

Exit mobile version