படிப்பை மறைத்து பியூன் வேலைக்கு சேர்ந்த பட்டதாரி.. உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு

படிப்பை மறைத்து பொதுத்துறை வங்கியில் வேலைக்கு சேர்ந்த வழக்கில், பியூன் பணிக்கு பட்டதாரி தேவையில்லை என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தை சேர்ந்த அமித் குமார் தாஸ் என்பவர், தனது பட்டப்படிப்பை மறைத்து பொதுத்துறை வங்கியில் பியூன் வேலைக்கு சேர்ந்துள்ளார். ஆனால், சில ஆண்டுகள் கழித்து வங்கி நிர்வாகம் அவரது சான்றிதழ்களை ஆய்வு செய்ததில், பட்டப் படிப்பை மறைத்து வேலையில் சேர்ந்தது உறுதிெசய்யப்பட்டதால், அமித் குமார் தாசை பணியில் இருந்து நீக்கியது. வங்கியின் நடவடிக்கையை எதிர்த்து அமித் குமார் ஒடிசா உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், அவருக்கு மீண்டும் பணி வழங்க வங்கி நிர்வாகத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து வங்கி நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் அசோக் பூஷண் தலைமையிலான அமர்வு, வங்கி நிர்வாகம் பியூன் வேலைக்கு சேர்ந்த மனுதாரரை நீக்கியது சரியானது. அவர் தனது பட்டப்படிப்பை மறைத்து வங்கியில் சேர்ந்தது தவறு.
இது தொடர்பாக  ஒடிசா உயர்நீதிமன்றம் அளித்த இரண்டு தீர்ப்புகளும் தவறானது. விண்ணப்பதாரர் பட்டதாரியாக  இருக்கக் கூடாது என்று வங்கி நிர்வாகம் வெளியிட்ட விளம்பரத்தில் தெளிவுபடுத்திய போதிலும், கல்வித்  தகுதியை அமித் குமார் தாஸ் மறைத்துள்ளார்.

மேலும், மனுதாரர் தனது  பட்டப்படிப்பு குறித்த தகவல்களை வேண்டுமென்றே மறைத்துள்ளார் எனவும், பியூன் வேலைக்கு பட்டதாரி தேவையில்லை என்று வங்கி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. எனவே, ஒரு நபரை தகுதி நீக்கம் செய்வதற்கு, அவரது உயர் கல்வித் தகுதிகள் அடிப்படையாக இருக்க முடியாது என்ற வாதத்தை ஏற்க முடியாது’ என்றும் உத்தரவிட்டனர்.

Exit mobile version