
டீசல் எரிபொருல் இயங்கும் ஆட்டோக்களுக்கு மாநில அரசாங்கம் திடீர் தடை விதித்துள்ளதை அடுத்து, ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பீகார் மாநிலம் பாட்னாவில் காற்று மாசு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதன்காரணமாக கடந்த 2019-ம் ஆண்டு டீசலில் இயங்கும் பேருந்து, ஆட்டோக்களுக்கு தடை விதிக்க அம்மாநில அரசு முடிவு செய்தது.
ஆனால் அந்தாண்டின் இறுதியில் கொரோனா தாக்கம் நாடு முழுவதும் தொடங்கியது. இதையடுத்து படிப்படியாக கொரோனா பரவல் அதிகரித்து ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அந்த உத்தரவை பாட்னாவில் அமல்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் மீண்டும் இயல்பு நிலை திரும்பியுள்ளதை அடுத்து, டீசலில் இயங்கும் ஆட்டோ, பேருந்துகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இன்று முதல் அமலுக்கு வருகிறது. பீகார் அரசின் இந்த முடிவால் பாட்னாவின் ஆட்டோ மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தடை உத்தரவு தொடர்பாக அறிவிப்பை திரும்பப்பெறும் பொருட்டு, அரசுடன் ஆட்டோ ஓட்டுநர் மற்றும் பேருந்து ஓட்டுநர் சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் டீசல் வாகனங்களுக்கான தடை உத்தரவை நடைமுறைக்கு கொண்டு வருவதில் பீகார் அரசு உறுதியுடன் இருப்பதாக அரசியல் வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
