காங்கிரசில் முட்டல்-மோதல்..புதிய தலைவரை தேர்ந்து எடுக்குமா காரிய கமிட்டி?

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவரை தேர்ந்து எடுப்பது தொடர்பாக, ஆன்லைன் மூலம் இன்று நடைபெற உள்ள அக்கட்சியின் காரிய கமிட்டிக் குழுவில் விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்ததை தொடர்ந்து, கட்சியின் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். அதைத்தொடர்ந்து, மோசமான உடல்நிலை காரணமாக கட்சிப் பணியில் இருந்து விலகி இருந்த அவரது தாயார் சோனியா காந்தி மீண்டும் கட்சியின் இடைக்கால தலைவராகப் பொறுப்பேற்றார்.

ஓராண்டிற்கும் மேலாக அப்பதவியில் சோனியா நீடித்து வரும் நிலையில், கட்சிக்காக களத்தில் சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய முழுநேர தலைமை தேவை என காங்கிரஸ் கட்சியின் 23 மூத்த தலைவர்கள் அவருக்கு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. குறிப்பாக குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, கபில் சிபல் போன்ற மூத்த தலைவர்களும் இதே கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

இதைதொடர்ந்து, சோனியா காந்தி முத்த தலைவர்களுக்கு ஒரு கடிதம் எழுதியதாகவும் அதில், கட்சித் தலைமை பொறுப்பில் நீடிக்க விரும்பவில்லை எனவும், நேரு குடும்பத்தை சேராத ஒருவர் தலைமை பதவிக்கு வரவேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், புதிய தலைவரை தேர்ந்து எடுப்பது தொடர்பான முக்கிய முடிவுகளை எடுக்க, அக்கட்சியின் காரிய கமிட்டி இன்று கூடுகிறது.

கூட்டத்தில், கட்சிக்காக சுறுசுறுப்பாக களத்தில் இறங்கி வேலை செய்யக்கூடிய, காங்கிரசை விட்டு விலகியுள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கக் கூடிய தலைவர் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும், எதிர்கட்சிகளை வலுவாக எதிர்கொள்ள கூடிய நிலையான தலைமை, காரிய கமிட்டி உட்பட கட்சியின் அனைத்து மட்ட தேர்தல்களும் வெளிப்படைத்தன்மையுடன் நடைபெற வேண்டும்,கட்சிக்கு கூடுதல் துணை தலைவர்களை நியமிக்கப்பட வேண்டும், தலைவரை உள்ளடக்கிய ஆட்சிமன்ற குழுவை ஏற்படுத்த வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்படும் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் சோனியாவே பதவியில் நீடிக்க வேண்டும் என மூத்த தலைவர்கள் சிலரும், மாநில காங்கிரஸ் தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சித் தலைவராக ராகுல்காந்தி மீண்டும் பதவியேற்க வேண்டுமென, கட்சியின் இளம் தலைவர்கள் விருப்பம் தெரிவித்து வருகின்றனர். கட்சிக்குள் ஏற்பட்டுள்ள இந்த பிளவு மூத்த உறுப்பினர்கள் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் சோனியா காந்தியின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டு, அதற்குள் புதிய தலைவரை தேர்ந்தெடுக்கும் பணிகள் நிறைவேற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.`

Exit mobile version