டெல்லி எல்லையில் 12 வது நாளாக நடக்கும் விவசாய போராட்டத்தை டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இன்று நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
புதுடெல்லி:
மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் மசோதாக்களையும் ரத்து செய்யக்கோரி பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லி எல்லையில் தொடர்ந்து 12 வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து நடக்கும் இந்த போராட்டத்தினை தீர்வு கொண்டுவர மத்திய அரசு 5 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியும் இதற்கான முடிவு இன்றுவரை எட்டப்படவில்லை.6ம் சுற்று பேச்சுவார்த்தை நாளை மறுநாள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில்,போராட்டம் நடைபெறும் இடங்களிலேயே கூடாரம் அமைத்து கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தங்கியுள்ளனர்.அவர்களுக்கு மாநில அரசு சார்பில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை கெஜ்ரிவால் இன்று ஆய்வு செய்தும்,விவசாயிகளை சந்தித்து தனது ஆதரவையும் தெரிவித்தார்.அதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறியதாவது:
விவசாயிகளின் அனைத்து கோரிக்கைகளையும் நாங்கள் ஆதரிக்கிறோம். அவர்களின் பிரச்சினையும் கோரிக்கைகளும் விரைவில் நிறைவேற்றப்பட வேண்டும். நானும் எனது கட்சியும் ஆரம்பத்தில் இருந்தே அவர்களுடன் நின்றோம். அவர்களின் போராட்டங்களின் ஆரம்பத்தில், டெல்லி காவல்துறை ஒன்பது அரங்கங்களை சிறைகளாக மாற்ற அனுமதி கோரியது. எனக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது ஆனால் அனுமதிக்கவில்லை, என்றார்,.மேலும் அவர் “எங்கள் கட்சி, எம்.எல்.ஏக்கள் மற்றும் தலைவர்கள் விவசாயிகளுக்கு ‘சேவையாளர்களாக’ பணியாற்றி வருகின்றனர். நான் இங்கு முதல்வராக வரவில்லை, ஆனால் ஒரு ‘சேவையாளராக’ வந்து இருக்கிறேன். விவசாயிகள் இன்று சிக்கலில் உள்ளனர், நாங்கள் அவர்களுடன் துணை நிற்க வேண்டும். ஆம் ஆத்மி கட்சி டிசம்பர் 8 பாரத் பந்த் வேலைநிறுத்தத்தை ஆதரிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
இந்த போராட்டத்தின் காரணமாக,தேசிய நெடுஞ்சாலை-44 இருபுறமும் மூடப்பட்டுள்ளது.மேலும் சிங்கு, ஆச்சண்டி, பியாவோ மணியாரி, மங்கேஷ் எல்லை பகுதிகள் மூடப்பட்டு,முகர்பா மற்றும் ஜி.டி.கே. சாலையில் இருந்து போக்குவரத்து திருப்பி அனுப்பப்பட்டு வருகிறது.