வேளாண் சட்டங்கள் தொடர்பான பேச்சுவார்த்தைக்கு முன்பாக, அரசு வழங்கிய உணவை விவசாயிகள் ஏற்க மறுத்துள்ளனர்.
வேளாண் சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தும் விவசாயிகளுடன் 2வது கட்டமாக மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அப்போது, அரசு சார்பில் அளிக்கப்பட்ட மதிய உணவை ஏற்க மறுத்த விவசாய சங்க பிரதிநிதிகள், தாங்கள் கொண்டு வந்த உணவை சாப்பிட்டனர்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக, ஆயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லி- ஹரியானா எல்லையில் 8வது நாளாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுடன் கடந்த 1ம் தேதி மத்திய அரசு முன்னெடுத்த பேச்சுவார்த்தையில், எந்த முடிவும் எடுக்கப்படாததால் இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடக்கிறது.
இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக வந்த, விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு, அரசு சார்பில் மதிய உணவு வழங்கப்பட்டது. ஆனால், இதனை ஏற்க மறுத்த அவர்கள், தாங்கள் கொண்டு வந்த உணவை சாப்பிட்டனர். அரசு எங்களுக்கு அளித்த உணவு மற்றும் தேநீரை நாங்கள் ஏற்கவில்லை. எங்களுக்கான உணவை நாங்களே கொண்டு வந்தோம் என தெரிவித்தனர்.
தங்களது கோரிக்கை தொடர்பாக பேசிய விவசாய சங்க பிரதிநிதிகள், குறைந்தபட்ச ஆதார விலையை மட்டும் சட்டப்பூர்வமாக்குவது என்பது பிரச்னைக்கு தீர்வு ஏற்படாது. வேளாண் சட்டங்களை உடனடியாக திரும்ப பெற வேண்டும் . அதுவரை நாங்கள் போராட்டத்தை கைவிட மாட்டோம் என தெரிவித்தனர்.