நீதித்துறையின் சுமையை குறைக்கும் வகையில் 1 லட்சம் சிறுவழக்குகள் வாபஸ் பெறப்படும் என்று அசாம் மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா தெரிவித்துள்ளார்.
அசாம் தலைநகர் கவுகாத்தியில் நாட்டின் 76வது சுதந்திர தினம் நேற்று கொண்டாடப்பட்டது. அப்போது தேசியக்கொடியை ஏற்றிவைத்து அம்மாநில முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா பேசினார்.
அவர் பேசியதாவது: அசாம் நீதித்துறையில் சுமார் 4 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், சர்ச்சைக்குரிய சமூக வலைதள பதிவுகள் உள்பட 1 லட்சம் சிறு வழக்குகள் வாபஸ் பெறப்படும். இது பலாத்காரம், கொலைகள் போன்ற கொடூரமான குற்றங்களில் நீதித்துறை கவனம் செலுத்த உதவும். அசாம் எப்போதும் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. இறையாண்மை என்பதை பேரம் பேசமுடியாது. கடந்த 3 நாட்களாக தேசியக் கொடியின் மீது மக்கள் காட்டிய அன்பு, அசாம் எப்போதும் இந்தியாவுடன் இருப்பதை நிரூபிக்கிறது என்றார்.
முன்னதாக, அசாமில் தடை செய்யப்பட்ட சில கிளர்ச்சி அமைப்புகள் முழு வேலை நிறுத்தம் மற்றும் சுதந்திர தின புறக்கணிப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதனால் பலத்த பாதுகாப்புடன் சுதந்திர தினவிழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்ட நிலையில், முதல்வர் ஹிமந்தா பிஸ்வா இவ்வாறு தெரிவித்தார்.
