டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியாவுக்கு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆம் ஆத்மி கட்சியின் ஆட்சி நடைபெறும் டெல்லியில், கடந்த ஆண்டு மதுபான ஆயத்தீர்வை கொள்கை வகுத்ததிலும், அமல்படுத்தியதிலும் முறைகேடுகள் நடந்ததாக புகார் எழுந்தது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த சிபிஐ, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா, ஆயத்தீர்வை கமிஷனர் அரவா கோபிகிருஷ்ணா வீடு உள்ளிட்ட 31 இடங்களில் சோதனை நடத்தியது. நாடு முழுவதும் 7 மாநிலங்களில் நடைபெற்ற இந்த சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் டிஜிட்டல் பதிவுகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த ஆவணங்களையும், மின்னணு சாதனங்கள் மற்றும் வங்கி பரிமாற்றங்களையும் ஆய்வு செய்து வருகிறோம். அந்த பணி முடிந்ததும், வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்படும் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா வெளிநாடு செல்வதை தடுக்க சிபிஐ, லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது.
முன்னதாக, மணிஷ் சிசோடியா செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கும் போது: வருகிற 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல், எங்கள் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடி இடையிலான மோதலாகத்தான் இருக்கும். கெஜ்ரிவாலின் வளர்ச்சியை தடுக்க இந்த சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. அடுத்த 3 அல்லது 4 நாட்களில் சிபிஐ அல்லது அமலாக்கத்துறை என்னை கைது செய்யலாம். அதற்கெல்லாம் நாங்கள் அஞ்சமாட்டோம். நாங்கள் பகத்சிங்கை பின்பற்றுபவர்கள் என்று கூறியிருந்தார்.
